For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரான்சு கம்பன் கழகம் சார்பில் முனைவர் மு.வ.நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

பிரான்ஸ்: பிரான்சு கம்பன் கழகம் சார்பில் மு.வ.நூற்றாண்டு விழா கடந்த 19ம் தேதி வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது.

பிரான்சு கம்பன் கழகம் சார்பில் மூத்த தமிழ்அறிஞர் முனைவர் மு.வ.நூற்றாண்டு விழா, பிரான்ஸ் நாட்டில் கடந்த 19ம் தேதி கொண்டாடப்பட்டது. மு.வ.நூற்றாண்டு விழாவுடன், தமிழ் புத்தாண்டு, தைப் பொங்கல் உள்ளிட்ட விழாக்களும் சேர்ந்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

தமிழ் மரபுப்படி குத்துவிளக்கை செல்வா ஏற்றி வைக்க விழா துவக்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஸ்டார்ஸ்பேர்ன் நகரை சேர்ந்த முனைவர் ராஜராஜேஸ்வரி பரிசோ இறைவணக்க பாடலை பாடினார். மு.வ. குறித்து கவிஞர் கி.பாரதிதாசன் இயற்றிய பாடலுக்கு, இசை பாடியது அனைவரையும் கவர்ந்தது. அதன்பிறகு கம்பன் கழக இளையோர் அணியினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

கம்பன் கழகத்தின் பொருளாளர் தணிகா சமரசம் வரவேற்றார். கழகத்தின் துணைத் தலைவர் கி.அசோகன் விழாவிற்கு தலைமை தாங்கி, முனைவர் மு.வ குறித்து உரையாற்றினார். அதன்பிறகு கம்பன் இலக்கண இலக்கியத் திங்கள் இதழ் சார்பாக அ.நாகராஜன், மு.வ.நூற்றாண்டு விழா மலர், அன்னை தெரெசா மலர், கவிஞர் தமிழ்ஒளி மலர் ஆகிய 3 நூல்களை வெளியிட்டார்.

இவ்விழாவில் 3 வயது சிறுவன் செல்வன் யுவராஜன் என்னும் ஆதவன்செங்குட்டுவன், ஓளவையாரின் ஆத்திசூடி பாடலின் 108 வரிகளை பிழை இல்லாமல், மழலை மொழியில் கூறியது அனைவரையும் கவர்ந்தது.

பிரான்சு கம்பன் கழகத்தின் செயலாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ விழாவில் சிறப்புரை ஆற்றினார். அப்போது நகைச்சுவை கலந்த நடையில், முனைவர் மு.வ. குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அதன்பிறகு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் தலைமையில் பொங்கல் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்கள் அருணாசெல்வம், பாரீஸ் பார்த்தசாரதி, பாமல்லன், சிவப்பிரகாசம், லிங்கம் மாமல்லன், சிவஅரி ஆகியோர் தங்களின் பொங்கல் கவிதைகளை படைத்தனர்.

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, ஊழ் குறித்து திருவள்ளூவர் கூறும் கருத்துகள் இக்காலத்தில் கொள்ளத்தக்கனவே - தள்ளத்தக்கனவே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியர் பெஞ்சமின் லெபோ நடுவராக அமர, கொள்ளத்தக்கனவே என்று எலிசபெத் அமல்ராசு, சுகுணா சமரசம், கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வாதிட்டனர்.

தள்ளத்தக்கனவே என்று லூசியா லெபோ, ஆதிலட்சுமி வேணுகோபால், அருணா செல்வம் ஆகியோர் வாதிட்டனர். பட்டமன்றத்தின் முடிவில், ஊழ் குறித்து வள்ளூவர் கூறும் கருத்துகள் இக்காலத்துக்கும், அறிவுக்கும் பொருத்தமானது அல்ல என்று போராசிரியர் பெஞ்சமின் லெபோ தீர்ப்பு கூறினார்.

விழாவின் முன் நடத்தப்பட்ட ஓவியப் போட்டி, கோலப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நூல், குறுந்தகடு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் பங்கேற்ற மகளிருக்கு, பட்டு மேலாடையும், இளைஞர்களுக்கு துண்டுகளும், பெரியவர்களுக்கு நூல்களும் வழங்கப்பட்டன.

விழாவில் சுகுணா சமரசம், சிவகாமி சிவகுமார் நிகழ்ச்சிகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர். விழாவின் முடிவில் கம்பன் கழகத்தின் துணைப் பொருளாளர் பழ.சிவஅரி நன்றி கூறினார்.

English summary
Kamban Kazhagam celebrated grand triplet programme including that of Mu. Va. centenary celebration on february 19 in France.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X