வாஷிங்டனில் “புறநானூறு: பன்னாட்டு மாநாடு”- சிவகாமியின் சபதம் நாடகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வாஷிங்டனில் புறநானூறு- பன்னாட்டு மாநாடு வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

வாஷிங்டன் வட்டாரத்தில் வாழும் தமிழர்கள் சிலர் 2003ம் ஆண்டு தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து படித்து வருகிறார்கள். அவர்கள் 2003ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை திருக்குறளை முறையாகப் படித்தனர்.

இதையடுத்து 2005ம் ஆண்டு வாஷிங்டன் வட்டாரத்தில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை வெகுசிறப்பாக நடத்தினார்கள். மேலும் அமெரிக்கத் தலைநகரத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலையையும் நிறுவினார்கள். திருக்குறள் படித்து முடித்ததும் புறநானூறு படிக்கத் தொடங்கினார்கள். படிப்பதற்குப் புறநானூறு சற்று கடினமாக இருந்தாலும், நவில்தொறும் நவில்தொறும் அதன் அருமையும் பெருமையும் வாஷிங்டன் வட்டாரத் தமிழர்களை மிகவும் கவர்ந்தன.

அவர்களின் உள்ளத்தைக் கவர்ந்து, சிந்தனையைத் தூண்டிய இந்தச் சிறப்பான நூலைப் பிறரும் படித்துப் பயன்பெற வேண்டும், புறநானூற்றுக் கருத்துக்களை வட அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்களிடமும், இளைஞர்களிடமும், மற்றவர்களிடமும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு "புறநானூறு" என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டு மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

மான்ட்கோமரி கல்லூரி கல்ச்சுரல் ஆர்ட்ஸ் சென்டரில் வரும் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து நடத்துகின்றன. மாநாட்டில் அறிஞர்களின் சொற்பொழிவுகளும், மாணவர்களுக்கான புறநானூறு தொடர்பான போட்டிகளும், "முத்தமிழ் முழக்கம்" என்ற புறநானூறு சார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சியும், "சிவகாமியின் சபதம்" வரலாற்று நாடகமும் நடைபெறவிருக்கின்றன.

International Conference on Purananuru in Washington

புறநானூற்றின் பெருமையை உலகறியச் செய்யும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்படும் இந்த மாநாடு உலக வரலாற்றிலேயே மேலைநாடுகளில் நடைபெறும் புறநானூறு சார்பான முதல் பன்னாட்டு மாநாடு ஆகும். வட அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சங்க இலக்கியத் தேன் துளியைப் பருகிச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது குறித்து மேலும் விபரம் அறிய என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது முனைவர் இர. பிரபாகரன் 443-752-0238 அல்லது ஜான் பெனடிக்ட் 703-942-8232 ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
International Conference on Purananuru will be held in Washington on august 31st and september 1st. For more details visit www.classicaltamil.org

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற