For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள்- 3: மோடியின் அமெரிக்கப் பயணம்: வெற்றியா... தோல்வியா?

By Shankar
Google Oneindia Tamil News

- கதிர்

நரேந்திரமோடி டெல்லி திரும்பிவிட்டார்.

'ஸ்வாச்பாரத்' திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்த இரண்டு வாக்கியங்களை அடித்து முடிப்பதற்குள் கேள்விகள் துள்ளுகின்றன.

திரும்பி வரமாட்டார் என்று யாரும் சொன்னார்களா? சொல்லவில்லை. ஆங்கிலப் பத்திரிகைளும் செய்திச் சேனல்களும் அடித்த கொட்டத்தைப் பார்த்து எழுந்த சந்தேகம் அது.

'மோடி கான்கர்ஸ் அமெரிக்கா' என்று ஒரு நாளிதழில் கொட்டை எழுத்து அலறல்.

'போகும் இடமெல்லாம் மோடிக்குக் கூடும் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து உலகத் தலைவர்கள் எல்லாம் உஷ்ணப் பெரு மூச்சுவிடுவதாக'ச் சொன்னது ஒரு பத்திரிகை.

'ஒரு இந்தியத் தலைவருக்கு இந்தநாட்டில் இப்படி வரவேற்பா' என்று அமெரிக்க அமைச்சர்களும் கவர்னர்களும் எம்.பி.க்களும் கிள்ளிப் பார்த்ததாக உச்சஸ்தாயி விமர்சனம் செய்தார் ஒருசேனல் ஆங்கர்.

'ராக்ஸ்டார் மோடி டேக்ஸ் அமெரிக்கா பை ஸ்டார்ம்' என்பது இன்னொரு பத்திரிகை கொடுத்த தலைப்பு.

கண்ட நொடியில் காதலில் விழுந்தவன் அவள் போகிறேன் என்றால் விடுவானா? அப்படி வந்த டவுட்தான் மேலே சொன்னது.

அமெரிக்காவைக் காப்பியடிப்பது நமது சினிமா துறையினர் பழக்கம் மட்டுமல்ல. செய்தித் துறையும் அதைத்தான் செய்கிறது. வாசிக்கும் செய்தியில் உப்பு உறைப்பு இருக்கிறதோ இல்லையோ சத்தம் பெரிதாக இருக்க வேண்டும்.

வீட்டில் அவரவர் கையில் வைத்திருப்பதைக் கீழே தவற விட்டுப் பதறியடித்து டீவியை நோக்கி ஓடி வர வேண்டும். இதுதான் அமெரிக்க ஸ்டைல். அவர்களுக்கு எல்லாமே ஷோ டைம். கூசாமல் நமது சேனல்களும் கூச்சலைக் காப்பியடிக்கின்றன.

'ஸ்வாச் பாரத்?' சுத்தமான இந்தியா என்பதன் இந்தி.

முன்பெல்லாம் மத்திய அரசின் திட்டங்களுக்குச் சூட்டப்படும் பெயரை அந்தந்த மாநில மொழியில் மாற்றி விளம்பரம் கொடுப்பார்கள். பிஜேபி அரசு அதை மாற்றி விட்டது. மொழி மாறினாலும் பெயர் இந்திதான்.

தினத்தந்தி செய்தி வாசித்து தமிழ் கற்றுக் கொண்டேன் என்று நடிகைகள் பேட்டி கொடுப்பதுண்டு. இனி தந்தியில் மத்திய அரசின் விளம்பரங்கள் வாசித்து இந்தி கற்றுக் கொண்டோம் என நாம் பெருமைப்படலாம்.

யார் என்ன விமர்சனம் செய்தாலும் சரி, இந்திக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறையப் போவதில்லை. பெரும்பான்மையான மக்களின் தாய் மொழி; வேறு தாய்மொழி கொண்டவர்களிலும் பெரும்பான்மையானவர்கள் புரிந்து கொள்ளும் மொழி; ஆகவே இந்தியைப் பொதுமொழி ஆக்குவதில் தவறில்லை என்று ஆட்சியாளர்கள் நம்புகின்றனர்.

வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் அனைவரும் அறிந்த பொதுமொழி ஒன்றைக் கொண்டிருக்கும் நாடுகளே சீரான முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த நீரோட்டத்தில் கலக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு.

உலகத்தின் பொது அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையில் மோடி இந்தியில் உரை நிகழ்த்தியிருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர், இலங்கை அதிபர் போன்றவர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். தெரியாது என்றால் பரவாயில்லை. ஆங்கிலம் பேசத் தெரிந்த மோடி அவர்களைப் பின்பற்றி இருந்தால் இந்தியாவின் புதிய முகம் உலகத் தலைவர்களின் மனதில் சிறப்பாகபி பதிந்திருக்கும்.

சிறிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்றும் போது இருந்ததைக் காட்டிலும் மோடி பேசிய போது கூட்டம் குறைவாக இருந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஒரே நேரத்தில் பல மொழிகளில் மொழி பெயர்க்க வசதிகள் இருந்தும் பலன் குறைவு. இந்தியப் பிரதமர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் மரபு இருந்தது. ராஜீவ், மன்மோகன் பேசினர். மோடிக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. என்ன காரணம் என்று இரு தரப்புமே தெளிவுபடுத்தவில்லை. மொழியாக இருக்காது.

கிரேட் சக்சஸ் என்று அமெரிக்கப் பயணத்தை மோடி வர்ணிக்கிறார். காங்கிரஸ் கிண்டல் செய்கிறது. 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கும் நாட்டில் கலை நிகழ்ச்சிக்கு 18,000 பேரை திரட்டுவது பெரிய சாதனையா என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர். இந்தியாவுக்கு சாதகமான ஒரு ஒப்பந்தமாவது கையெழுத்தானதா என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங் காலத்தில் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு சாதித்த அணுசக்தி உடன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை எதையும் மோடி பயணத்தின்போது பார்க்கவில்லை.

இந்திய கம்பெனிகளின் அமெரிக்க கிளைகளில் வேலை செய்யச் செல்லும் ஊழியர்களுக்குத் தரப்படும் எச்1பி விசா பெறும் வழிமுறைகளை சமீபத்தில் அமெரிக்கா கடுமையாக்கியது. அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியா. மோடி பயணத்தில் அதற்கு ஏதாவது தீர்வு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நடக்கவில்லை.

கையெழுத்தான ஒப்பந்தங்களில் ஒன்று, கண்ணி வெடியாலும் மறைந்திருந்து நடத்தும் கொரில்லா தாக்குதலாலும் சிதறாத வாகனங்களை நமக்குத் தருவது. விலைக்குதான். நக்சலைட், மாவோயிஸ்ட் தாக்குதல்களால் போலீஸ்காரர்கள் கொத்துக் கொத்தாகப் பலியாகும் பரிதாபத்துக்கு இதன் மூலம் முற்றுப் புள்ளி வைக்கலாம்.

காற்றை மாசுபடுத்தாத சுத்தமான எரிசக்தி உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பத்தை வழங்க அமெரிக்கா சம்மதித்திருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். உண்மையில் இது முக்கியமான ஒப்பந்தம். மேக் இன் இந்தியா என்று மோடி எழுப்பும் கோஷத்துக்கு செயல் வடிவம் கொடுக்க இன்றியமையாத தொழில்நுட்பம்.

இன்று நமது தொழிற்சாலைகளிலும் வீடுகளிலும் பயன்படுத்தும் எந்திரங்கள், கருவிகள், சாதனங்கள் அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டவை என்பதை அறிந்தால் முக்கியத்துவம் விளங்கும்.

வர்த்தகத்தில்தான் மோடி அதிக ஆர்வம் காட்டியுள்ளார். தொழிலதிபர்களுக்கு அவர்விடுத்த அழைப்பு துணிச்சலானது.

இன்று நீங்கள் பார்க்கும் இந்தியா முற்றிலும் புதியது. உங்கள் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுங்கள். நவீன தொழில் நுட்பத்தில் ஆலைகளைத் தொடங்குங்கள். உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எங்கள் மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதற்கு இடைஞ்சலாக இருக்கும் தொழிலாளர் நல, ஆலைப் பாதுகாப்பு, காப்பீடு, இழப்பீடு சட்டங்களை என் அரசு மாற்றியமைக்கத் தயாராக இருக்கிறது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் என் அரசு வழங்கும். மற்றநாடுகளின் தொழிலதிபர்கள் கியூவில் வந்து நிற்பதற்குள் முந்திக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் என்று மோடி பேசிய போது செம அப்ளாஸ்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் தயவில் கூட்டணி அரசுக்கு தலைமை வகித்த மன்மோகன் சிங்கால் கனவில் கூட பேச முடியாத வார்த்தைகள்; கொடுக்க முடியாத வாக்குறுதிகள். பன்னாட்டு கம்பெனிகளையும் தனியாரையும் ஊக்குவிக்கும் அதே நேரத்தில், பொதுத் துறை நிறுவனங்களின் கதி என்னாகும் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். பிசினஸ் பண்ணுவது கவர்மென்டின் பிசினஸ் அல்ல என்ற வலது சாரி சித்தாந்தத்தை அவர் கொள்கை முழக்கமாக அமெரிக்க தொழிலதிபர்கள் மத்தியில் எதிரொலித்து செய்திருக்கிறார்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal - 3

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மிக விரைவில் இழுத்து மூடப்படும்; மற்ற நிறுவனங்களின் கணிசமான பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்ற பேச்சுக்கு புத்துயிர் கிடைத்திருக்கிறது.

ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதுதான் ஒரு பயணத்தின் வெற்றிக்கு அடையாளம் என்றில்லை. அரசுகள் மட்டத்திலும் மக்கள் தரப்பிலும் பரஸ்பர நல்லெண்ணம் உருவாக்குவதே வெற்றிகரமான பயணத்தின் முத்திரை. மோடி அதில் தோற்கவில்லை. தனக்கு வழங்கிய விசாவை ரத்து செய்த ஒரு நாட்டுக்கு அவர் மேற்கொண்ட வெற்றிகரமான பயணம் இது. மனதில் படிந்திருக்கக் கூடிய கசப்புகள் எதையும் அவர் வெளிக் காட்டவில்லை. போனதுபோகட்டும்; இனிபோகும் பாதையில் கவனம் செலுத்துவோம் என்ற எதார்த்தமான அணுகு முறையால் அங்கு பலருடைய மனதையும் கவர்ந்திருக்கிறார்.

அறிவும் செல்வமும் நிறைந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களை ஒரே பேரமைப்பாக ஒருங்கிணைத்து அங்கிருந்தபடியே இந்தியாவின் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்று மோடி ஆலோசனை வழங்கியிருக்கிறார். அமெரிக்க இஸ்ரேலியர்களை மனதில் நினைத்து மோடி இதைசி சொல்லியிருக்கிறார். அவர்கள் யூதர்களாக மட்டுமே தங்களைப் பார்க்கிறார்கள். ஆனால் அங்குள்ள இந்தியர்கள் ஒருவரை ஒருவர் தெலுங்கர், மலையாளி, தமிழன், குஜராத்தி, பெங்காலி என்று பார்க்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் நான் நேரில் கண்டு வருந்திய அந்த நிலைமை இன்னும் அப்படியே நீடிப்பதாக நண்பர்கள் கூறுகின்றனர். மோடிக்கு அது தெரியாமல் இருக்காது. ஆனாலும் செங்கோட்டை உரையைப்போல இந்தியன் என்ற பொது உணர்வை ஊட்டி விட முயன்றிருக்கிறார்.

மோடியின் பயணத்தை இந்திய ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பதை இதழியல் மாணவர்கள் ஆய்வு செய்தால் சுவையாக இருக்கும். மோடி & தி மீடியா & தி மேனியா என்ற தலைப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அதன் வாஷிங்டன் நிருபர் கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு கலாட்டா நடந்திருக்கிறது.
அமெரிக்காவுக்கு சொந்த செலவில் சென்ற இந்திய மீடியா குழுவினரை மோடி கண்டு கொள்ளவில்லை.ஆனால் அங்குள்ள இந்தியச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அந்த கூட்டத்தில் இந்தியப் பத்திரிகைகளின் நிருபர்கள் சிலரும் உண்டு. ஆனால் பேசப்பட்ட விஷயங்கள் எதையும் அவர்கள் வெளியே சொல்லக் கூடாது என்று மோடி தடை விதித்திருந்தார். செல்போன், கேமரா, பேனா, பேப்பர் கொண்டு செல்லக் கூட அனுமதி இல்லை.

சந்திப்பில் பங்கேற்க முடியாமல் வெளியே விடப்பட்ட இங்கிருந்து சென்ற இந்தியச் செய்தியாளர்களில் ஒருவர், ‘தேன் நிலவு முடியட்டும். எங்கள் உதவி எவ்வளவு அவசியம் என்பது அப்புறம்தான் மோடிக்கு உறைக்கும்' என்று கூறியிருக்கிறார். அந்த கமென்டோடு செய்தியை முடிக்கிறார் ராஜ் கட்டா.

முன்பெல்லாம் பிரதமர் அல்லது ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது இந்தியச் செய்தியாளர்கள் குழு உடன் செல்லும். விமானக் கட்டணம், ஓட்டல் ரூம் வாடகை, சாப்பாடு, போக்குவரத்து, ஊர் சுற்றிப் பார்த்தல், இந்தியாவுக்கு படம் செய்தி அனுப்பும் கட்டணம் என்று எல்லாச் செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும். காலப்போக்கில் அரசின் சிக்கன நடவடிக்கையால் விமானக் கட்டணம் தவிர மற்ற செலவுகளை அவரவர் ஏற்க வேண்டியதாயிற்று. இதனால் அநேக பத்திரிகைகளின் சார்பில் அவற்றின் முதலாளிகளே செய்தியாளர் அட்டையுடன் பயணங்களில் பங்கேற்கும் நிலை உருவானது. விவிஐபியுடனும் அதிகாரிகளுடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அவர்களுக்கு இந்த வாய்ப்பு பயன்பட்டது.

மோடி இதை விரும்பவில்லை. அவர் எப்போதுமே ஊடகர்களைதி தவிர்த்து வந்துள்ளார். குறிப்பாக குஜராத் கலவரத்துக்குப் பின்னர் மீடியா பற்றிய அவரது பார்வையே மாறிப் போனது. அதன் தொடர்ச்சியாகத் தான் இப்போது அவர் செல்லும் பயணங்கள் எதிலும் மீடியாவைச் சேர்ப்பதில்லை.

அமெரிக்கா ஒரு ஓப்பன் சொசைட்டி. இங்கே மீடியாவிடம் காட்டும் கெடுபிடியை அங்கு செயல்படுத்த முடியாது என்ற நம்பிக்கையில், பெரும் செலவில் இந்திய மீடியா குழுக்கள் முன்னதாகவே அங்கு சென்றன. ம்ஹூம். அங்கேயும் மோடியின் இரும்புத் திரையை அவர்களால் கிழிக்க இயலவில்லை. அந்த ஏமாற்றம்தான் தேன்நிலவு சாபமாக வெளிப்பட்டுள்ளது.

மோடி மட்டுமல்ல. ஜெயலலிதா, மம்தா போன்ற வேறு சில வெகுஜன தலைவர்களுக்கும் மீடியாவுடன் நல்லுறவு கிடையாது. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் அலசலாம்.

English summary
The third chapter of Kathir's Thaazha Parakkum Kaakkaigal is discusses about the recent US visit of PM Narendra Modi and its after effects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X