For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாழப்பறக்கும் காக்கைகள் 4 : தொட்டால் சுடுவது நெருப்பு மட்டுமல்ல

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது மழை. ஊரே வெள்ளத்தில் மிதந்தது. இவன் வழக்கம் போல 11 மணிக்கு கண் விழித்தான். டீ கோப்பையுடன் ஜன்னலை திறந்தவன், ‘நைட்ல மழை பேஞ்சுருக்கு போல' என்றான்.

Did the legal team botch up Jaya plea?

என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா முதல் பக்க செய்தியின் தலைப்பைப் பார்த்தபோது அவன் ஞாபகம் வந்தது.

ஜாமீனில் வெளியே வர வேண்டியது அம்மா. தமிழ்நாட்டில் பிரளயம் நிகழ்த்தப்படுவது அதற்காக. மனுவில் அவர் வயது, உடல் நிலை, ஊரில் அவருக்குள்ள மரியாதை, சட்டத்துக்கு அவர் அளிக்கும் மதிப்பு எல்லாவற்றையும் சொல்லி இருந்தார்கள். உத்தமம்.

மற்ற மூன்று பேருக்கும் அதே மாதிரி அதே நேரத்தில் மனு போட்டு ஜாமீன் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

அவர்களுக்காக பிரளயம் நடத்தப்படுகிறதா? அவர்கள் வயதானவர்களா? உடல் நலம் இல்லாதவர்களா? அம்மா அளவுக்கு ஊரில் மதிப்பு மிகுந்தவர்களா? அம்மா மாதிரியே சட்டத்தை மதிப்பவர்களா?

ஆம் என்று அவர்களே சொல்ல மாட்டார்கள். அம்மா முதலில் வெளியே வருவதுதான் முக்கியம் என்று தெரியும். அதையே முன் உதாரணமாகக் காட்டி சில நாட்களில் தாங்களும் வந்து விடலாம் என்பது தெரியும்.

வக்கீல்களுக்குத் தெரியாமலா இருக்கும். ஆனால் 4 பேருக்கும் ஜாமீன் கேட்டு மனுப் போட்டிருக்கிறார்கள்.

எங்கள் ஏரியா கடைக்கார அண்ணாச்சி ரயில் டிக்கெட் ரிசர்வ் பண்ண போனால் ஏமாந்து திரும்புவதே கிடையாது. என்ன ரகசியம் என்று கேட்டேன்.

‘ஊருக்கு போணும். அஞ்சு பேர்'

‘எந்த ரயில், என்ன தேதி?'

‘எந்த ரயினாலும் பரவால்ல. எண்ணைக்கு கிடைக்குமோ அன்னைக்குப் போடுங்க"

‘லோயர் பெர்த், மிடில், அப்பர் எதுனா சாய்ஸ்?'

‘எதுன்னாலும் சரிங்க..'

'ஒரே கம்பார்ட்மெண்ட்ல அஞ்சு கெடைக்காது. பிரிச்சு போட்டா பரவால்லையா?'

‘பரவால்ல, ஏறிட்டு அங்கன இருக்கவுககிட்ட ரிக்கொஸ்ட் பண்ணா மாத்திக்க மாட்டாகளா, என்ன?'

இதுதான் பட்டறிவு. என்றும் தோற்காதது.

அண்ணாச்சியை விட்டிருந்தால் எப்படி வாதாடி இருப்பார்?

‘ஏதோ நடந்துருச்சு. அப்பீல் போவோம். அது இப்ப முக்கியம் இல்ல. அவங்க பெரிய லீடர். சமூகத்துல ரொம்ப நல்ல பேர் இருக்கு. வயசு அறுவத தாண்டிருச்சு. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் அது இதுன்னு கஷ்டப்படுறாங்க. நல்லா வாழ்ந்தவர் ஜெயில்ல அவதிப்படக்கூடாது. மனிதாபிமான அடிப்படைல அவர் ஒரு பெண்மணிங்கறதையும் மனசுல வச்சு ஜாமீன்ல விடணும்னு கேட்டுக்குறேன்'

ஆனால் சட்டறிவு அல்லவா வாதம் செய்தது!

‘ஸ்பெஷல் கோர்ட் ஜட்ஜ் இந்த கேஸ்ல பல விஷயங்களை பார்க்கவே தவறிவிட்டார். நிறைய தகவல்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் தண்டித்து விட்டார். நீதிபதி மாதிரி நடக்காமல், பிராசிகியூஷன் தரப்பு வக்கீல் மாதிரி செயல்பட்டிருக்கிறார்...'

-- இது குன்ஹாவுக்கு.

‘இந்த வழக்கில் ஜாமீன் கொடுத்தே ஆக வேண்டும். அதற்கான அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இது தெரியாமல் லாலுவுக்கு ஒரு ஐகோர்ட் நீதிபதி ஜாமீன் கிடையாது என்று சொல்லி விட்டார். சுப்ரீம் கோர்ட் அது தப்பு என்று சொல்லி ஜாமீன் கொடுத்தது. அதனால் நீங்களே கொடுத்து விடுங்கள். ஸ்பெஷல் கோர்ட் தீர்ப்பு சரியல்ல. அதை நிறுத்தி வையுங்கள்...'

-- இது ஐகோர்ட் நீதிபதி சந்திரசேகராவுக்கு.

போதாது என்று, ‘என் கட்சிக்காரர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். அவர்களால் ஒரு பிரச்னையும் வராது' என்று ஒரு சர்டிபிகேட்.

18 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் ஒரு வக்கீல் இவ்வாறு சொல்லும்போது நீதிபதியை விட்டுத் தள்ளுங்கள், பாமரனுக்கே நெஞ்சு அடைக்கும். தலை சுற்றும்.

மதிப்புக்கும் மரியாதைக்கும் பேர் போன பிராசிகியூஷன் வக்கீல் பவானி சிங்கும் தனது பங்களிப்பை செவ்வனே நிறைவேற்றினார்.

‘ஜெயலலிதா செல்வாக்கு மிகுந்தவர். அவரை ஜாமீனில் வெளியே விட்டால், தேவையான நேரத்தில் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவது கஷ்டம்' என்று இன்னொரு நீதிபதி முன்பு சொல்லியிருந்த பவானி, ‘ஜாமீன் வழங்குவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை' என்று பல்டி அடித்தார். அதிர்ந்து போன நீதிபதி, பவானியின் செயல் வேடிக்கையாக உள்ளது என்று தன் உத்தரவில் பதிவு செய்தார். ஃபேஸ்புக் கமெண்ட் ரேஞ்சுக்கு கோர்ட்டில் எதுவும் பேசவோ எழுதவோ முடியாது அல்லவா.

சட்ட ஷரத்து என்ன சொல்கிறது என்பது கிடக்கட்டும். ஊழல் வழக்குகளில் ஜாமீன் வழங்குவது நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரமாக மதிக்கப்படுகிறது. அவருக்கு டென்ஷன் ஏறும் அளவுக்கு வாதங்களையும் வாணவெடிகளையும் கொளுத்திப் போட்ட பிறகு சாதகமான தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்ப்பது ஆப்டிமிசத்தின் அத்தனை பரிமாணங்களுக்கும் அப்பாற்பட்டது.

அதிமுகவின் சட்ட மேதைகள் பெங்களூரில் இந்த பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அடுத்த கட்ட நிலையில் உள்ள வக்கீல்களும் கட்சி நிர்வாகிகளும் தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

நீதிபதிகள் சதி, கர்நாடக அரசு சதி, அங்குள்ள வக்கீல்கள் சதி, காங்கிரஸ் சதி, கருணாநிதி சதி, சோனியா சதி என்று சதிராடினார்கள். கர்நாடகாவுக்கு இந்த வழக்கை மாற்றியதில் இருந்தே சதி தொடங்கிவிட்ட்து என்று டீவியில் தோன்றி கர்ஜித்தார் மேயர். ‘கர்நாடகா எப்படிப்பட்ட மாநிலம்? தமிழ்நாட்டின் எதிரி மாநிலம். கன்னடர்கள் நமது பகைவர்கள். அங்குள்ள நீதிபதியிடம் வேறென்ன தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்?' என்று கேட்டார்.

நீதிபதி குன்ஹா கேவலமாக விமர்சிக்கப்பட்டார். இந்திய நீதித்துறை அதன் நெடிய வரலாற்றில் இதுவரை காணாத தாக்குதலை எதிர்கொண்டது. தமிழகத்தில் வாழும் கன்னடர்களை சிறைபிடிப்போம், நீதிபதிகளை தண்டிப்போம் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதிமுகவினர் இதையெல்லாம் அம்மா மீதுள்ள பாசத்தில் அறியாமையில் செய்துவிட்டார்கள் என சிலர் சமாதானம் சொல்கின்றனர். அப்படியே இருந்தால்கூட இந்த விஷயங்கள் உள்ளூருடன் முடிந்து விடும் என நம்புவது இன்னும் மோசமான அறியாமை. இது சமூக ஊடகங்களின் காலம். எங்கே என்ன நடந்தாலும் மறுநொடி உலகம் அறிந்து விடும்.

தமிழகத்தில் எழுந்த கோஷங்கள், எழுதப்பட்ட வாசகங்கள், வரையப்பட்ட கேலிச் சித்திரங்கள், விடுக்கப்பட்ட மிரட்டல்கள் ஒன்றுவிடாமல் மொபைல்போன்கள் மூலம் இந்தியாவின் அனைத்து நீதிபதிகள், வக்கீல்களைச் சென்றடைந்தன. எதிர்க் கட்சியினருக்கு இதில் பெரும் பங்கு இருப்பதாக அதிமுக கூறுகிறது. இருக்கலாம். அதை ஆட்சேபிக்க மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அரசியல் செய்யும் உரிமை அனைவருக்கும் பொதுதானே.

'போலீஸ்காரன் மேலேயே கைவச்சிட்டியா, இப்ப பாரு போலீஸ்னா யாருன்னு காட்றோம்' என்ற வசனத்தை அடிக்கடி கேட்டிருக்கிறோம்.

‘நீதிபதி மேலயே தாக்குதலா, இப்ப பாரு நீதிபதின்னா யாருன்னு காட்றோம்' என்பது கேள்விப்படாத வசனம். ஆனால் பேசப்படாத வசனம் என்று அடித்துச் சொல்ல யாராலும் முடியுமா?

பலரும் நினைப்பதுபோல பிரதமர் பதவியில் இருப்பவரைச் சரிக்கட்டி நீதியை வளைக்கக் கூடிய காலம் மாறிவிட்டது என்றே தோன்றுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களின் முறைகேடுகளைhd பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன மக்கள், அதற்கு முடிவுகட்ட வேண்டிய பொறுப்பு மூன்றாவது தூணான நீதித்துறையை சார்ந்தது என நம்புகின்றனர். நீதித்துறை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா... றாதா என்று பார்க்கக் காத்திருக்கின்றனர். பெரும்பாலான நீதிபதிகள், நேர்மையான வக்கீல்கள் இந்த உண்மையை உணர்ந்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தவறுகளுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் புதிய தவறுகள் புரிந்து அதிலிருந்து விடுபட முனைவது பலன் அளிக்காது. நேர்வழிக்கு மாற்றுப்பாதை நிச்சயமாக கிடையாது!

English summary
The 4th article of Kathir's thazha Parakkum Kaakkaigal series discusses why Jayalalithaa was not granted bail in wealth case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X