தாழப் பறக்கும் காக்கைகள்- 6: மக்களின் அவசரம் அரசுக்குத் தெரியவில்லை!

Subscribe to Oneindia Tamil

-கதிர்

வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்பார்கள் கிராமத்தில். ஒருமுனை அல்லது மறுமுனை. எக்ஸ்ட்ரீம் பொசிஷன் எடுப்பது இன்றைய வெகுஜன ஊடகக் கலாசாரம்.

ஆளும் கட்சிக்கு ஒரேயடியாக ஜால்ரா அடிப்பது. அல்லது தப்பித் தவறி நல்லது செய்தாலும் கண்டுகொள்ளாமல் கடித்துக் குதறுவது. ஏன் எப்படி என்ற தர்க்க ரீதியான கேள்விகளுக்கு ஊடகர்கள் இடம் கொடுப்பதை நிறுத்திக் காலமாயிற்று.

மோடி அலையில் தடம் தெரியாமல் அழிந்தன எதிர்க் கட்சிகள் என்று தலைப்பு கொடுத்தன பத்திரிகைகள். இரண்டாவது அலை என்றது ஒரு நாளிதழ். இவர்களே அலை என்று நாமகரணம் சூட்டிய பிறகு கட்சித் தலைவர் இன்னொரு படி ஏற வேண்டாமா. மோடி அலை அல்ல, சுனாமி என்றார் அமித் ஷா.

அட, அவர் அரசியல்வாதி. கட்சியின் தலைவர். கவிதைக்கு பொய்யழகு என்று வைரமுத்து சொன்ன மாதிரி, அரசியல்வாதி மிகையாக பேசுவதும் அங்கீகரிக்கப்பட்ட சமூக இலக்கணம். ஊடகங்களுக்கு என்ன வந்தது?

அலை என்றால் என்ன? காற்றின் வேகத்தில் கரையை வந்து மோதும் கடல்நீர் தொகுப்பு. அரசியலுக்கு மொழி மாற்றம் செய்தால், மக்களின் ஆதரவால் வேகமாக பெரும்பான்மை இலக்கை அடைந்த தேர்தல் முடிவு.

ஹரியானாவை விடுங்கள். 90 தொகுதிகள் கொண்ட சிறு மாநிலம். மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற்றதா, இல்லை. மொத்த இடங்களில் பாதிக்கும் 22 இடங்கள் குறைவாகத்தான் பெற முடிந்திருக்கிறது பிஜேபியால். தனிப்பெரும் கட்சியாக வர முடிந்ததே தவிர, ஆளும் கட்சியாக உருவாக இயலவில்லை. இதில் அலை எங்கிருந்து வரும்?

modi

வெற்றி வெற்றிதான். அதைக் குறைத்து மதிப்பிட எண்ணம் கிடையாது. வெறும் 3 ஓட்டு வித்தியாசத்தில் ஒருவர் ஜெயித்திருக்கிறார். ஆயிரத்துக்கு குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்து மகாராஷ்டிர சட்டசபைக்குள் நுழைந்திருப்பவர்கள் 12 பேர். அதையெல்லாம் விமர்சிக்க முடியாது. பிஜேபி பெற்றிருப்பது நிச்சயம் வெற்றிதான். அமோகமோ அபாரமோ இல்லாத சாதா வெற்றி.

சரி, இது எப்படி சாத்தியமானது?

சிவசேனாவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதால் பிஜேபிக்கு மக்கள் ஆதரவு பெருகியது என்கிறார்கள். ஆனால், கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் கூடுதலாக 21 இடங்கள் கிடைத்திருக்கும் என்று கணக்குக் காட்டுகின்றனர் ‘நிபுணர்கள்'.

காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - என்சிபி - கூட்டணி அரசின் ஊழல்களால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு பிஜேபிக்கு ஆதரவாக திரும்பியது என்று ஒரு வாதம். அப்படியானால், 166 தொகுதிகளில் வாக்காளர்கள் அதை ஏன் ஆதரிக்கவில்லை?

வாதப் பிரதிவாதம் முடிவில்லாதது. இதுதான் என்று உறுதியாக குறிப்பிட முடியாத பல காரணங்கள் இருக்கலாம். சர்வ நிச்சயமாக சொல்லக்கூடிய காரணம் ஒன்று இருக்கிறது.

அடுத்தடுத்து மூன்று தேர்தல்களில் வென்று 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கூட்டணியின் மேல் மக்களுக்கு உண்டான சலிப்பு.

அதேபோல, ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி பத்தாண்டுகள் நீடித்தது.

ஒரு ஆளும் கட்சி பிடிக்கவில்லை என்றாலும், அதற்கு மாற்றாக வரக் கூடியது யார் என்பதைப் பார்த்ததும் மக்கள் மனம் மாற வாய்ப்பிருக்கிறது. தெரியாத தேவதையை காட்டிலும் தெரிந்த சைத்தானே மேல் என்று நம்மில் எத்தனை பேர் அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழ்கிறோம்.

ஜெயித்த இடங்களை தாண்டி ஓட்டு சதவீதத்தைப் பார்க்கும்போது வேறொரு உண்மை புலப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை காட்டிலும் காங்கிரஸ் ஓட்டு சதவீதம் வெகுவாக குறைந்துவிடவில்லை. 21ல் இருந்து 18, அவ்வளவுதான். ஆனால் 40 சீட் குறைந்துவிட்டது.

பிஜேபியின் சதவீதம் அப்போது 14 ஆக இருந்தது இன்று 28 ஆக உயர்ந்துள்ளது. சீட் எண்ணிக்கை 76 அதிகம். என்சிபி, சிவசேனா ஆகியவற்றின் ஓட்டு சதவீதங்களிலும் மாற்றம் அதிகமில்லை. ராஜ் தாக்கரேயின் எம்என்எஸ் உள்ளிட்ட உதிரிக் கட்சிகள் எல்லாம் கிட்டத்தட்ட காணாமல் போனது இந்த தேர்தலின் முக்கியமான ஒரு ஹைலைட்.

மற்றொரு ஹைலைட் மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லமீன் (எம்ஐஎம்) கட்சியின் சட்டசபைப் பிரவேசம்.

இது ஹைதராபாத் கட்சி என அறியப்பட்ட முஸ்லிம் கட்சி. பழைய ஹைதராபாத் நிஜாமின் ஆளுகையில் இருந்து பின்னர் மகாராஷ்டிராவுடன் இணைக்கப்பட்ட நந்தத் பிராந்தியத்தில் இதற்கு சில ஆதரவாளர்கள் இருந்தனர். கடந்த தேர்தலில் அங்கு மட்டும் போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை. இம்முறை மும்பையின் பைகுல்லா, அவுரங்காபாத் சென்ட்ரல் ஆகிய இரு தொகுதிகளில் வென்றுள்ளது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி, இரண்டில் வென்றதோடு, 11 தொகுதிகளில் 2வது அல்லது 3வது இடத்தை பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக முஸ்லிம் ஓட்டுகளைக் கைப்பற்றி வந்த காங்கிரஸ், என்சிபி ஆகியவையும் உ.பி.க்கு வெளியில் தன்னை முஸ்லிம்களின் காவலனாக காட்டிக் கொள்ள முயன்ற முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கும் இது அதிர்ச்சியான நிகழ்வு. இந்து - முஸ்லிம் இடைவெளி அதிகரிக்குமோ என்ற கவலையில் இருந்தவர்களுக்கு அதை ஊர்ஜிதம் செய்யும் தகவல்.

இரு மாநில தேர்தல் முடிவுகளால் நாட்டுக்கு என்ன லாப நஷ்டம்? பொருளாதார சீர்திருத்தங்களில் தயக்கத்தை விட்டு மோடி அரசு வேகம் காட்டும் என்பது சில ஊடகர்களின் எதிர்பார்ப்பு.

சட்டசபைதி தேர்தலுக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியுடன் மத்திய அரசு துணிந்து செயல்படலாம். தடுப்பது எதுவென்று புரியவில்லை.

அறிவிப்புகளும் கவர்ச்சியான கோஷங்களும் வந்த வண்ணம் இருக்கிறதே தவிர, மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சீர்திருத்தங்கள் எதையும் காணோம்.

மேல்சபையில் - ராஜ்யசபா - மெஜாரிட்டி இல்லாததால் அதிரடியான நடவடிக்கைகள் எடுக்க, சட்டம் கொண்டுவர மோடி அரசு தயங்குகிறது என அவரது அபிமானிகள் கூறுகின்றனர். அந்த வாதத்தில் ஆழம் இல்லை.

மக்களுக்கும் நாட்டுக்கும் பயனுள்ள சட்டங்கள் இயற்ற ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் முட்டுக் கட்டை போடுமானால், அந்தக் கட்சிகளின் முகமூடிகளை கிழித்தெறிந்து நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட அதைவிட நல்ல சந்தர்ப்பம் அரசுக்கு வாய்க்காது.

ஊழல் ஒழிப்பு, நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் என்ற தாரக மந்திரத்துடன் மக்கள் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தவர் மோடி. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அவர் பொறுப்பு.

சட்டசபை தேர்தல்கள் எங்காவது எப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கும். அதில் கட்சியை ஜெயிக்க வைக்கப் பாடுபடுவது முதல் கடமை என்று மோடி செயல்பட்டால் வாக்குறுதிகளை அவரால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.

பலனை எதிர்பாராமல் கடமையை செய் என்று கூறும் பகவத் கீதையை உலகத் தலைவர்களுக்கு பரிசாக அளிப்பவர், அதன் பாதையில் பயணிப்பதுதான் முறை.

என்னதான் இந்த நாடு ஹீரோ ஒர்ஷிப்புக்கு பழகிப் போயிருந்தாலும் ஒரு தனி மனிதன் நாட்டையே தோளில் சுமப்பது சாத்தியமல்ல என்பதை மோடி உணர வேண்டும். அவர் ஆர்ப்பாட்டமாக தொடங்கி வைத்த திட்டங்கள் எதுவும் தமிழகம் போன்ற பல மாநிலங்களில் சிறு தாக்கத்தைக்கூட ஏற்படுத்தவில்லை.

அரசு நிர்வாகத்தில், அதிகாரிகள் அணுகுமுறையில் மட்டுமல்ல. அவரது கட்சிக்காரர்களிடம்கூட உற்சாகம் உத்வேகம் எதையும் காண இயலவில்லை. ஒற்றைக்காலில் தவமிருந்தும் பெறமுடியாத வரம் நீதியின் தயவில் தானாகக் கிட்டிய நிலையிலும் தமிழகத்தில் அவரது கட்சி நிர்வாகிகள் அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் டெலியில் இருந்து வரும் ஆனால் வராத கட்டளைக்காக காத்திருப்பது பரிதாபமாக இருக்கிறது.

காலத்தை பின்னோக்கி சுழற்ற இயலாது. ஆட்சியில் அமர்ந்து 152 நாட்கள் ஓடிவிட்டன. 5 மாதங்கள். ஒரே மாதத்தில், 100 நாட்களில் என்றெல்லாம் முன்னறிவித்த எந்தத் திட்டமும் பூர்த்தியாகவில்லை. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை கொண்டுவரும் ஒரு திட்டம் போதும் சாம்பிளுக்கு.

பட்டியலை கையில் வைத்துக் கொண்டு நிதியமைச்சர் சொல்கிறார், ‘இதை நான் அம்பலப்படுத்தினால் காங்கிரஸ் தலைவர்களுக்கு தர்மசங்கடம் உண்டாகும்' என்று.

மக்கள் கேட்கிறார்கள்: ‘அதனால்தான் தயங்குகிறீர்களா?' என்று!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+