For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீண்ட ஆயுளும், நிம்மதியான வாழ்க்கையும் வேண்டுமா?.. இருக்கவே இருக்கு ’இகிகாய்’!

By Gowtham
Google Oneindia Tamil News

சில சமயங்களில் உலகமே ஒரு விஷயத்தின் பின்னாடி கண்ணை மூடிக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கும். இப்போ அந்த மாதிரி உலக நெட்டிசன்கள் ஒட்டுமொத்தமா ஒரு விஷயத்தை பற்றிதான் மும்முரமா தேடிக்கிட்டு இருக்காங்க. இப்படி எல்லாரையும் சுத்தலில் விட்ட அந்த ஒத்த வார்த்தைதான் 'இகிகாய்'

'இகிகாய்' என்பது ஜப்பானிய சொல். இதற்கு ஒன்றிரண்டு வார்த்தைகளில் பொருள் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இகிகாய் என்ற சொல்லுக்கு பின்னால் அவ்வளவு பெரிய விஷயம் ஒளிஞ்சிருக்கு. இகிகாய் என்றால் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும் வாழ்க்கைமுறை என்று வேண்டுமானால் குத்துமதிப்பாக பொருள் சொல்லலாம்.

Know your ikigai and live peacefully

Ikigai: The Japanese Secret to a Long and Happy Life என்ற புத்தகம் இப்போது புத்தக பிரியர்கள் மத்தியில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை 54 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது, இது நாங்களே எதிர்பார்க்காத மெகா ஹிட் என்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியரான ஹெக்டர் கார்சியா. இவரும் இவர் நண்பரான மிரால்சும் சேர்ந்து இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள்.

நம்ம ஊர் அரசியல் ஸ்டைலில் சொல்வதானால் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எழுதாமல், ஆதாரத்துடன் எழுத வேண்டும் என்பதற்காக ஜப்பானுக்கே போய்விட்டார்கள். ஜப்பானில் உள்ள ஒகிமி என்ற கிராமத்தில் தான் உலகிலேயே அதிக வயதுடைய முதியவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அதுவும் நோய் நொடியின்றி, அவர்கள் வேலையை அவர்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு செயல் துடிப்புடன் இருக்கிறார்கள். அந்த ஊரில் 100 வயதைத் தாண்டுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணம்.

இந்த தாத்தா, பாட்டிகளின் இளமையின் ரகசியம் என்ன என்பதை தெரிந்துகொள்ளப்போய்தான் இகிகாய் பற்றி அறிந்து வந்திருக்கிறார்கள் இந்த நூலாசிரியர்கள் இருவரும். அந்த சீக்ரெட்டை சீக்கிரம் சொல்லுங்க பாஸ் என்று நீங்கள் பரபரப்பது புரிகிறது. விஷயம் என்னவோ ரொம்ப சிம்பிள் தான்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள் என்று கண்டுபிடியுங்கள் என்கிறார்கள் ஒகிமி தாத்தா, பாட்டிகள். அதாவது நாளைக்கு காலையில் எழுந்து இதை செய்யணும், செஞ்சு பிரமாதப்படுத்திபுடனும் என்று எந்த விஷயம் உங்களை ஆர்வமுடன் ஓட வைக்கிறது என்று முதலில் கண்டுபிடியுங்கள். காலையில் எழுந்து வழக்கம்போல் வேலைக்கு ஓடுவதை அவர்கள் சொல்லவில்லை. எதை செய்தால் உங்களுக்கு மனநிறைவும், நிம்மதியும் கிடைக்கிறதோ, எதை செய்யாவிட்டால் உள்ளம் பதைபதைக்கிறதோ அதை தான் அவர்கள் சொல்கிறார்கள்.

உதாரணத்திற்கு, சிலருக்கு ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்கும் போது, கண்ணும் மனமும் ஒருசேர நிறைந்துவிடும். சிலருக்கு மணக்க மணக்க சமைப்பது மனதிற்கு இதமானதாக இருக்கும். சிலருக்கு படிப்பது, சிலருக்கு எழுதுவது, சிலருக்கு விளையாட்டில் அடுத்தடுத்த இலக்குகளை அடைந்துகொண்டே போவது. இப்படி ஒவ்வொருவரின் இயல்பும், விருப்பமும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று உங்களின் ஆழ்மன விருப்பமாக இருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள். அதற்கென நேரம் செலவிடுங்கள் என்கிறார்கள்.

நாம் ஒரு காலகட்டம் வரை நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். பின்னர் வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும் செய்ய எதுவும் இல்லாமல் முடங்கிவிடுகிறோம். இந்த இரண்டுமே தவறு என்கிறது இகிகாய். வாழ்வில் ஓட்டமும் தேவையில்லை, ஓய்வும் தேவையில்லை என்பதே இகிகாய். கடைசி மூச்சு உள்ளவரை மனதிற்கு பிடித்த எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். அதேசமயம் எதையும் கட்டாயத்தின் பேரில் பிடிக்காமல் செய்யக் கூடாது.

Know your ikigai and live peacefully

நீண்ட ஆயுளுக்கு என்ன சாப்பிடலாம் என்று கேட்டால், எதை வேண்டுமானாலும் சாப்பிடு, ஆனால் வயிறு முட்ட சாப்பிடாமல், முக்கால் வயிறு நிறையும் போதே நிறுத்திவிடு என்கிறார்கள் ஒகிமி பெரியவர்கள். இதைக் கேட்ட போது எனக்கு ஒரு கதை நியாபகம் வந்தது.

100 வயதைத் தாண்டிய ஒரு முதியவரை பேட்டி எடுக்க ஒரு செய்தியாளர் வந்திருந்தாராம். முதியவர் தன்னுடைய ஒழுக்கமான வாழ்க்கைமுறை, மது அருந்தாமை, அசைவ உணவுகளை தவிர்த்தது என தனது நீண்ட ஆயுளுக்கான காரணத்தை அடுக்கிக் கொண்டே போனாராம். பேட்டிக்கு இடையில் மாடியில் இருந்து அடிக்கடி சத்தமான பாட்டு ஒலியும், யாரோ வாய்விட்டு சிரிக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்ததாம். பேட்டி முடிந்து கிளம்பிய செய்தியாளரிடம் அந்த முதியவர் சொன்னாராம், நீங்கள் தவறாக நினைக்காதீர்கள், மாடியில் என் அப்பா இருக்கிறார், இப்படித்தான் தினமும் குடித்து கூத்தடித்துக் கொண்டிருப்பார் என்று.

ஆயுளும், ஆரோக்கியமும் மனதில் இருந்தே தனக்கான சக்தியைப் பெறுகிறது. 90% சதவீதம் பேர், 40-50 வயதுகளில் தங்களுக்கு ஏற்ற வேலை இதுவல்ல என்று உணர்ந்து துறையை மாற்றிக் கொள்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். வெறும் 10% பேர்தான் படித்த துறையிலேயே வேலை செய்கிறார்களாம்.

அதெல்லாம் சரி, இகிகாய் என்பதை நாம் எப்படி செயல்படுத்திப் பார்ப்பது. இதற்கு ஜப்பானியர்கள் மூன்று வழிகளை சொல்கிறார்கள்.
முதல் வழி, இயற்கையோடு இயைந்து இருப்பது. எழுந்ததும் வெளியில் வந்து சூரியனைப் பார்த்து நன்றி சொல்வது முதல் இரவு நிலவைப் பார்த்துவிட்டு படுக்கைக்கு போவது வரை முடிந்தபோதெல்லாம் இயற்கையோடு கை கோர்த்துக் கொள்ளலாம். தோட்டங்களில் நடக்கலாம், மரங்களை வேடிக்கை பார்க்கலாம்.

இரண்டாவது வழி, டீ அருந்துவது. டீ குடிப்பது என்பது ஜப்பானியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு சடங்கு. டீயை கப்பில் ஊற்றி, மடக்கென குடிப்பதல்ல. டீயின் நறுமணத்தை நுகர்வது முதல் அதன் சுவையை முழுமையாக உணர்ந்து அனுபவித்து அருந்துவது.

மூன்றாவது வழி, உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கில் மனம் லயிப்பது. இதற்கென தினமும் சிறிது நேரத்தை செலவிடுவது. உங்கள் பொழுதுபோக்கு என்பது சமையல் வேலையோ, தோட்ட வேலையோ எதுவாக இருந்தாலும் அதை ரசித்து ரசித்து செய்வது.

இந்த வழிமுறைகள் நம்மை இயற்கையுடனும், நமது ஆதி இயல்புடனும் நெருங்கச் செய்யும். இதுவே நீண்ட ஆயுளுக்கும், ஆழமான மன அமைதிக்கும் வழிவகுக்கும் என்பதே இகிகாய். இகிகாய் பழகுவோம்... இனிமையாய் வாழுவோம்.

- கௌதம்

English summary
Know your Ikigai and live peacefully. Here it is how to follow Ikigai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X