• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம்

|
Pavalareru S.Balasundaram - a memoir
- முனைவர் மு. இளங்கோவன்

திருப்பனந்தள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை மாணவனாகப் பயின்றபொழுது (1987-90) கரந்தைக்கோவை என்னும் பனுவலைப் பாடமாகப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இந்த நூலை இயற்றியவர் பாவலரேறு ச. பாலசுந்தரம் ஐயா அவர்கள். அந்த நூலின் வழியாகக் கரந்தை (தஞ்சையைச் சார்ந்த ஊர்) என்னும் ஊரின் பெயரும் அங்கு வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்களின் தமிழ்ப்பணிகளும், கரந்தைக் கல்லூரியின் பெருமையும் அறியலுற்றேன்.

கரந்தைக்க்கோவை போலும் ஒரு கோவை அமைப்பிலான நூல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என் பிஞ்சு உள்ளத்தில் அந்த நூல் ஏற்படுத்தியது. யானோ பனசைக்குயில் கூவுகிறது என்ற தலைப்பில் சிறுநூல் ஒன்றை விடுமுறையில் எழுதிப்பார்த்தேன். கட்டளைக் கலித்துறையில்லமல் வேறுபல மரபுவடிவங்களில் எழுதிப் பார்த்தேன். அந்த நூலும் அச்சானது(1991). ஆனால் என் நூலில் இருக்கும் பிழைகளும், தவறுகளும் இப்பொழுது படிக்கும்பொழுது "எனக்கே நகைதருமாறு" உள்ளதை உணர்கின்றேன். இருப்பினும் மாணவப்பருவப் படைப்பாயிற்றே!. அந்த வழியில் நடந்திருந்தால் காப்பிய ஆசிரியனாக வளர்ந்திருப்பேன்.

பின்னாளில் கரந்தைக்கோவை ஆசிரியர் ச.பாலசுந்தரம் ஐயா அவர்களைப் பல்வேறு கருத்தரங்குகளில் சந்திக்கும் வாய்ப்பு என் வாழ்க்கையில் அமைந்தது. தொல்காப்பியப் பதிப்பு அருட்செல்வர் அவர்களின் முயற்சியால் வெளிவந்தபொழுது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பாவலரேறு ச.பாலசுந்தரம் ஐயா அவர்களை நானும் என் நெறியாளர் பேராசிரியர் முனைவர் க.இளமதி சானகிராமன்(புதுவைப் பல்கலை) அவர்களும் கண்டு உரையாடிப் பணிவிடை செய்தமை நினைவுக்கு வருகின்றது. முனைவர் இளமதி அவர்களின் தந்தையார் புலவர் கண்ணையன் ஐயா அவர்களும் பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்களும் ஒன்றாகப் படித்தவர்கள் என்று நினைக்கின்றேன். பேராசிரியர் இளமதி அவர்கள் அப்பா என்று பாலசுந்தரனாரை அன்புரிமையால் அழைத்தமை இன்றும் என் நினைவில் ஒலிக்கின்றது. ஐயா அவர்களும் தம் மகளிடம் பேசுவதுபோல்தான் உரிமையுடன் பேசினார்கள் (1995 அளவில்).

அதுபோல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நான் பணிபுரிந்தபொழுதும் சில கருத்தரங்குகளில் ஐயாவுக்குப் பணிவிடை செய்து அவர்களின் தமிழன்பைப் பெறும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்த்து.

இலக்கண இலக்கியங்களில் பேரீடுபாடுகொண்ட பாவலரேறு ச. பாலசுந்தரம் ஐயா அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த தமிழ் இலக்கண நூலாசிரியர். உரையாசிரியர், பதிப்பாசிரியர். மாணவர்களின் உளங்கொள்ளும் வகையில் பாடம் பயிற்றுவிக்கும் பேராசான். கற்சிலைகளை வடித்தெடுக்கும் மிகச்சிறந்த சிற்பி. கரந்தைக் கல்லூரியின் வரலாற்றில் ஐயாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தகுந்த பெருமைக்குரியதாகும்.

ஐயாவின் வாழ்க்கை வரலாறான "நினைவலைகள்" நூலைப் பலவாண்டுகளுக்கு முன்பே கற்றேன் எனினும் என்னுடைய பல்வேறு பணிகளுக்கு இடையே அதனை இணையத்தில் பதிந்துவைக்கும் முயற்சி கைகூடாமல் இருந்தது. ஐயாவின் திருமகனார் பேராசிரியர் பா.மதிவாணன் அவர்களை அண்மையில் மாதக் கணக்கில் கண்டு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அந்த நினைவு அடிப்படையில் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

பாவலரேறு ச. பாலசுந்தரம் ஐயா அவர்கள்18.01.1924 இல் பிறந்தவர். பெற்றோர் மு.சந்திரசேகரன் - விசயாம்பாள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகத் தமிழ் வித்துவான் (புலவர்) பட்டம் பெற்றவர்கள்.1950 முதல் 1982 வரை கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியவர். இயல், இசை, நாடகத் துறையிலும், இலக்கியம் படைத்தலிலும், கவிதை இயற்றல், சிற்பம் வடித்தலிலும் ஈடுபாடுகொண்டவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறிவழி சங்க இலக்கிய அகராதி - சங்க இலக்கியச் சொல்லடைவுத் தொகுப்புப் பணியில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியவர்( 1987-91). சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர், பாரதியார் பல்கலைக்கழகங்களில் தேர்வாளராகவும் வினாத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.

பேராசிரியர் ச.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பிய நூலின் மூன்று அதிகாரங்களுக்கும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சிக் காண்டிகையுரை வரைந்த பெருமைக்குரியவர். இவர்தம் தொல்காப்பிய உரையினை அண்மையில் பெரியார் பல்கலைக்கழகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் ச.பாலசுந்தரம் ஐயா அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி, பாவலரேறு (பனசை- பாவலர் மன்றம், திருப்பனந்தாள்), கவிஞர்கோ, தொல்காப்பியப் பேரறிஞர் (கரந்தைத் தமிழ்ச்சங்கம்), தொல்காப்பியப் பேரொளி, தொல்காப்பியச் சுடர், தொல்காப்பியச் செம்மல் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்), இலக்கணப் பேரொளி, செந்தமிழ்ச் செம்மல், குறள்நெறிச் செம்மல், தமிழ்ப்பேரவைச் செம்மல் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), பாரதிதாசன் விருது (தமிழக அரசு) செஞ்சொற் கவிவளவன், தொல்காப்பியர் விருது, மாமன்னர் இராசராசன் விருது, இலங்கைப் பேராசிரியர் செல்வநாயகம் நினைவு விருது உள்ளிட்ட பல விருதுகள் பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன.

பாவலரேறு ச. பாலசுந்தரம் ஐயா அவர்களின் தமிழ்க்கொடை:

1. கரந்தைக் கோவை

2. புலவருள்ளம்

3. புரவலருள்ளம்

4. ஆதிமந்தி

5. மழலைத்தேன் - மூன்று பகுதிகள்

6. யான் கண்ட அண்ணா

7. கலைஞர் வாழ்க

8. புதிய ராகங்கள்

9. சிவமும் செந்தமிழும்

10. வேள் எவ்வி

11. சங்க இலக்கியத் தனிச்சொல் தொகுப்பு நிரல்

12. செய்யுள் இலக்கணம்

13. தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரை - ஐந்து பாகங்கள்

14. தென்னூல் - எழுத்து சொல் படலங்கள்

15. தென்னூல் - இலக்கியப் படலம்

16. எழுத்திலக்கணக் கலைச்சொற்பொருள் விளக்க அகராதி

17. சொல்லிலக்கணக் கலைச்சொற்பொருள் விளக்க அகராதி

18. யாப்பிலக்கணக் கலைச்சொற் பொருள் விளக்க அகராதி

19. அகப்பொருளிலக்கணக் கலைச்சொற் பொருள் அகராதி

20. புறப்பொருளிலக்கணக் கலைச்சொற்பொருள்துறை அகராதி

21. மடைமாறிய தமிழ் இலக்கண நூல்கள்

22. மொழியாக்க நெறி மரபிலக்கணம்

23. மொட்டும் மலரும் மூன்று தொகுதிகள்

24. மொழி இலக்கண வரலாற்றுச் சிந்தனை

25. இரு பெருங்கவிஞர்கள்

26. அருட்புலவோரும் அரும்பெறல் கவிஞரும்

27. புகழ்பெற்ற தலைவர்கள்

28. தமிழிலக்கண நுண்மைகள்

29. நன்னூல் திறனாய்வுரை

30. செய்யுள் இலக்கணம்

31. இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழ் இலக்கணம்

32. திருக்குறள் தெளிவுரை

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திற்கான சுவடிகளை ஆராய்ந்து பின்வரும் நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

1. தனிப்பாடல் திரட்டு - இரண்டு பகுதிகள்

2. திருப்பெருந்துறைப் புராணம்

3. திருநல்லூர்ப் புராணம்

4. நீதித்திரட்டு

5. சீர்காழி அருணாசலக் கவிராயர் இராமநாடகக் கீர்த்தனை கம்பராமாயண ஒப்புப் பகுதிகளுடன் கூடிய ஆராய்ச்சிப் பதிப்பு

தமிழகத்தின் இலக்கிய ஏடுகளான தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, தெளிதமிழ் முதலியவற்றில் தரமான கட்டுரைகளை வழங்கியவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் சொற்பொழிவு, கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவைகளில் கலந்துகொண்டு சொற்பெருக்காற்றிய பெருமைக்குரியவர்.

தமிழக அரசின் புதிய தமிழ் இலக்கணநூல் ஆக்கக் குழுவில் உறுப்பினராக விளங்கியவர்.

தமிழ் வாழ்வு வாழ்ந்த பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள் 01.08.2007 இல் தம் தமிழ்ப்பணியை நிறைவுசெய்தவராய், இயற்கை எய்தினார்.

நன்றி:http://muelangovan.blogspot.in

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
Here is a writeup on Pavalareru S.Balasundaram by Dr Mu Elangovan.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more