• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முத்தான 30 கதைகளின் சங்கமம் - சென்னையில் நடைபெறும் நாடகத் திருவிழா!

|

சென்னை: சினிமா மீதான மோகம் என்னதான் அதிகரித்திருந்தாலும் "தியேட்டர் டிராமா" என்னும் குறு நாடகங்களுக்கான வரவேற்பும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.

அதற்கு உதாரணமாகத்தான் சென்னை அலையன்ஸ் பிரான்காய்ஸில் நடைபெற்று வரும் "டாப் 30" என்னும் முத்தான முப்பது குறுங்கதைகளின் நேரடி பங்கேற்பு நாடகங்கள்.

இம்மாத வார இறுதி நாட்களில் நடைபெற்று வரும் இந்த "ஸார்ட் அண்ட் சுவீட்" நாடகங்களைக் காணவும் ஒரு ரசிகர் கூட்டமே திரள்கின்றது.

நாடகத் திருவிழா:

பிரகர்தி ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெற்று வரும் இந்த நாடகத் திருவிழா கிட்டதட்ட பல ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றதாம்.

முத்தான முப்பது:

அந்த முத்தான முப்பது நாடகங்களில் இந்த வாரம் இடம்பெற்ற 10 குறுங்கதைகளைப் பற்றித்தான் இப்போது படித்து, ரசிக்கப் போகின்றோம்.

சாகித்யா:

முதலாவது கதை சாகித்யா...! ஒரு பாம்பிற்கும், மனிதனுக்கும் இடையேயான மெல்லிய இழையோடிய அன்பை அழகாக விளக்கி இருப்பார் அந்தக் கலைஞர். வெறும் ஒற்றை ஆளாக விளக்குகளின் ஒளியில் அவருடைய பாவனைகளும், ஆங்கில உச்சரிப்புகளும் மனதை கவர்ந்திழுத்தது உண்மைதான்.

Short and Sweet drama festival in chennai…

ஐடி:

வயிற்றிலும் சிரிப்பை வரவழைத்த கதை. ரயிலுக்காக செல்லும் ஒருவன், கழிவறை செல்ல படும்பாட்டை குலுங்கக் குலுங்க சிரிக்கும் வகையில் தந்துள்ளனர். வைகை எக்ஸ்பிரசினை பிடிக்கச் செல்லும் அவர், கழிப்பறை செல்ல முயலும் போது, அங்கு இருக்கும் ஹிந்தி வாலா காவலாளி பார்ம் பூர்த்தி செய்யச் சொல்லி, ஐடியெல்லாம் கேட்கின்றார். கடைசியில் இந்த அக்கப்போரின் முடிவை நகைச்சுவையாக சொல்லி சிரிக்க வைத்திருந்தனர்.

ஓப்சி:

கொஞ்சம் ஒரு மாதிரியான கதைதான். ஆனால், ஆல்கஹாலின் விளைவினை நன்றாக விளக்கி இருக்கின்றார்கள். இரண்டு தோழிகளில் ஒருவர் கர்ப்பமாக இருக்கின்றார்.

ஆல்கஹாலின் மாயம்:

அதற்கு காரணமானவர் இருவருக்குமே நண்பர். ஒரு பார்ட்டியில் ஆல்கஹால் அதிகமானதன் விளைவுதான் இந்த கர்ப்பம். ஆனால், அந்த நபர் யாருக்கு இதற்காக போன் செய்கின்றார் என்பதுதான் இதன் செம கிளைமாக்ஸ்.

கிச்சடி லைப்:

ஒரு பெண்மணியின் சிறுவயது நண்பரைப் பற்றிய நினைவுகளும், காலமாற்றத்தால் தன்னுடைய சுயத்தை இழந்தாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள அவர் நினைப்பதும், அந்த நண்பரின் திடீர் சந்திப்பும்தான் கிச்சடி லைப்பின் சுருக்கக் கதை.

சாத்தூர் சந்திப்பு:

ஹப்பப்பா.....சிரித்து, சிரித்து நெஞ்சுவலியை வரவழைத்த கதை. இரண்டு புதுமனிதர்கள் ரயிலில் சந்தித்துக் கொள்கின்றனர். அந்தப் பெட்டியில் மூன்றாவதாக ஒரு பிணமும் இருக்கின்றது. கொலை செய்யப்பட்ட அந்தப் பிணத்தை சாத்தூர் சந்திப்பில் ஒப்படைத்தால் பணமும் கிடைக்கும் என்ற குறிப்பும் உள்ளது.

போர்ட்டருக்கு ஜாக்பாட்:

அந்த பிணத்தை டிடியிடம் இருந்து மறைக்க அவர்கள் படும்பாடும், சாத்தூர் சந்திப்பில் இறக்கி வைத்து பணம் கிடைக்காமல் அவர்கள் இருவரும் எஸ்கேப் ஆவதும், கடைசியில் போர்ட்டர் ஒருவர் கையில் பணம் கிடைப்பதும்தான் கதை.

வயிற்றைப் புண்ணாக்கிய வசனங்கள்:

இதற்கு நடுவில் இருவருமாக சேர்ந்து தண்ணீ அடிப்பதும், என் பொண்டாட்டி ஏபிசிடி 26 எழுத்திலும் கெட்ட வார்த்தையில் திட்றா, அதில் இசட்க்கு என்ன வார்த்தை சார், முதுகுவலி மூட்டைப் பிளக்குது போன்ற வசனங்களும் அனைவரது வயிற்றையும் சிரிப்பால் புண்ணாக்கியது என்னவோ உண்மை.

Short and Sweet drama festival in chennai…

தி இன்னர் பயர்:

ஒவ்வொரு கோப்பை காப்பிக்குப் பின்னரும் ஒரு கதை இழையோடுகின்றது என்பதுதான் இந்தக் கதை. ஒரு இளைஞனும், அவனுடைய வீட்டில் வேலை செய்யும் அம்புஜம் மாமியையும் பற்றிய நெஞ்சை உருக்கும் ஒரு கதை. மன்னிப்பு என்ற ஒருவார்த்தையை ஏன் நம்மால் கேட்க முடியவில்லை என்பதை உணர்த்தும் கதை.

எக்ஸ்டர்னலி யுவர்ஸ்:

ராஜாவானாலும் சரி, கூஜாவானலும் சரி பொண்டாட்டிக்கு பயந்துதான் ஆக வேண்டியுள்ளது என்பதை சிரிக்க, சிரிக்க கூறியுள்ள கதை. ஒரு ராணி இறக்கும் தருவாயில், அவரது கணவரான ராஜா அவரை கட்டிக் கொண்டு காதல் வசனங்களுடன் அழுகின்றார்.

விடுதலை கிடைச்சிருச்சு:

திடீரென்று ராணி பிழைத்து விடுகின்றார், கடைசியில்தான் தெரிகின்றது அவர் தொல்லை தாங்காமல் ராஜாதான் ஒயினில் விஷம் கலந்துள்ளார். பேச்சு முற்றிப் போய், தாங்கமுடியாமல் ராஜா அந்த ஒயினைக் குடித்துவிட்டு "கடைசியில் எனக்கு விடுதலை" என்று இறந்து விடுகின்றார்.

சொர்க்கத்திலும் தொல்லை:

ஆத்திரத்துடன் ஆப்பிள் சாப்பிடும் ராணியும் அதில் உள்ள விஷத்தால் இறக்கின்றார். சொர்க்கத்திற்கு செல்லும் ராஜா இதுதான் சொர்க்கமா என்று வியப்பதற்குள் அங்கு ராணியும் வந்து விடுகின்றார். சாவில் கூடவா என்ற ராஜாவின் ரியாக்‌ஷனுடன் முடிகின்றது இக்கதை.

தி மேன் ஹூ வாஸ் மீயூசிக்:

ஆடம் என்னும் புகழ்பெற்ற வயலினிஸ்ட் தன்னுடைய வாழ்க்கையை நெறிப்படுத்திய ஒரு வயலின் கலைஞர் பற்றி பகிர்ந்துக் கொள்ளும் அழகான நினைவலைகளின் கதை. தன்னுடைய கடைசி வயலின் கச்சேரியின்போது பகிர்ந்து கொள்ளும் நினைவுகள்தான் இதன் சாரம்சம்.

வெயிட்டிங் பார் ஹிம்:

ஆணாதிக்க சமூகத்தினைப் பற்றி நகைச்சுவையாக விளக்கிய ஒரு குறுங்கதை. ஒரு ஆணும், பெண்ணும் இறந்து மேல் லோகம் செல்கின்றனர். அவர்களுக்குள் காதல் மலர்கின்றது. இருவரும் நரகத்தில் காத்திருக்கும் போது கடவுள் வருகின்றார்.

கும்பிடும் கடவுள் ஒரு பெண்:

கடவுள் ஒரு பெண். பெண்ணா என்று வியக்கும் அவர்களுக்கு பெண் என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று அவரவர் மொழிகளில் பேசுகின்றார் கடவுள். வசனங்களும், நடித்தவர்களின் முகபாவனைகளும் நம்மை விடாமல் சிரிக்க வைக்கின்றது.

டெத் ஆப் துரோணா:

மகாபாரத்தினை சார்ந்த ஒரு கிளைக்கதையாக விளங்கியுள்ளது இக்கதை. துரோணரின் மகனான அஸ்வத்தாமன் பீமனால் கொல்லப்பட்டார் என்பதை அறிந்த அவரின் மனநிலைதான் இந்த கவிதை நடை நாடகம். பின்னால் ஒலிக்கும் பெண்ணின் கணீர் குரலும், துரோணராக ராதாகிருஷ்ணனின் பாவங்களும் நம்மை காவிய உலகிற்கே அழைத்துச் செல்கின்றன.

மனதை குளிரவைத்த நாடக அணிவகுப்பு:

மொத்ததில், 2 மணி நேர சினிமாக்களில் சிக்கித் தவிக்காமல் மனதுக்கு இதமான இந்த சில நிமிட நாடகங்களால் உள்ளம் பூரித்ததென்னவோ உண்மைதான்.

அடுத்த வாரமும் உண்டு:

இதன் மூன்றாவது வார அடுத்த பத்து நாடகங்கள் வரும் 23 ஆம் தேதி தொடங்கி 26 வரையில் நடைபெற உள்ளது. கண்டிப்பா பாருங்க பிடிக்கும் உங்களுக்கும்.

 
 
 
English summary
Prakriti foundation’s short and sweet “Top 30” skits held in Alliance Francaise of Madras.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X