For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிறிஸ்துமஸும் மாளவியாவும்

By Shankar
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

பா.ஜ.க. அரசு தன் அடுத்த பணியைத் தொடங்கி விட்டது. வரும் கிறிஸ்துமஸ் அன்று மத்திய அரசுப் பள்ளிகளில் கட்டுரைப் போட்டி போன்ற சில நிகழ்வுகளை அறிவித்து, கிறிஸ்துமஸ் விழாவின் முதன்மையைக் குறைக்கச் சில முயற்சிகளை எடுத்து வருகிறது. வாஜ்பாய், மதன் மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, நல்லாட்சி தினமாக அதனை அறிவித்துள்ளது.

காந்தியார் பிறந்த நாளையும் அப்படித்தான் செய்தது மத்திய அரசு. அந்த நாளைக் குப்பை கூட்டும் நாள் என்று அறிவித்து, எல்லோரையும் அலுவலகம் வரவழைத்தது. இப்படிப்பட்ட மலிவான தந்திரங்களைக் கையில் எடுப்பது ஆட்சிக்கே நல்லதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.இருப்பினும், அவர்களின் இந்துத்துவ வெறியும், ஆர்.எஸ்.எஸ்.சின் பின்னணியும் அவர்களை இவ்வாறு செயல்படத் தூண்டுகிறது.

Christmas and Malaviya - Sybavee's spl article

வாஜ்பாய் அவர்கள் கட்சியின் தலைவர். சரி...1909, 1918 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மாளவியா மீது என்ன பாசம் - பட்டேலிடம் ஏற்பட்டது போல? வேறொன்றுமில்லை....காங்கிரஸ் கட்சியில் இருந்திருந்தாலும் இந்தத்துவாவாதிகளாகத்தான் பட்டேலும், மாளவியாவும் இருந்தனர். அதுதான் காரணம்.

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பிற்கே மூலமாகக் கருதப்படும் இந்து மகா சபையின் தலைவர்களில் ஒருவர்தான் மாளவியா. 1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளில், நாக்பூரில் ஐந்து சித்பவன் பார்ப்பனர்களால் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. ஹெட்கேவர், பி.எஸ். மூஞ்சே, எல்.வி.பாரஞ்சிபே, பி.பி.தல்கார், பாபு ராவ் சவார்க்கார் ஆகிய அந்த ஐவரில் ஹெட்கேவர் தவிர மற்ற நால்வரும் இந்து மகா சபை சார்ந்தவர்கள். ஆதலால் இந்து மகா சபையிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குள் ஊடுருவியவர்தான் மாளவியா என்பது தெளிவாகிறது.

1861 டிசம்பர் 25இல், அலஹாபாத்தில்,ஒரு பார்ப்பனக் குடும்பத்தில், சமற்கிருத அறிஞரின் மகனாகப் பிறந்த மாளவியா, தன் 5 வயது முதலே சமற்கிருதம் கற்கத் தொடங்கியவர். சமற்கிருத வழி, பார்ப்பனிய மேலாண்மைக் கருத்துகளில் இளமை தொடங்கி ஊறித் திளைத்தவர்.

Christmas and Malaviya - Sybavee's spl article

இன்றைக்கும் இவர் எவ்வாறு அறியப்படுகின்றார் என்றால், 1916ஆம் ஆண்டு வாரணாசியில், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் என்றுதான். அப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் அவர் 1919 முதல் 1938 வரை பொறுப்பில் இருந்தார். அவருக்குப் பின் அவர் துணை வேந்தராக நியமித்த டாக்டர் ராதாகிருஷ்ணன்தான் பின்னாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, லக்னோ ஒப்பந்தத்தை எதிர்த்தவரும், கிலாபத் இயக்கத்தை எதிர்த்ததவரும் மாளவியா என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது, இஸ்லாமிய எதிர்ப்பில் அவர் முதலிடம் வகித்தார்.

1916 நவம்பரில், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக்கும், இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனையே லக்னோ ஒப்பந்தம் என்கிறோம். அந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு இயக்கங்களும் இணைந்து சுய ஆட்சி கோருவதென்றும், அமையக்கூடிய அரசு நிர்வாகத்தில் மூன்றில் ஒரு பங்கு இடம் இஸ்லாமியர்களுக்கு வழங்குவதென்றும் உடன்பாடானது. ஆனால் மாளவியா அதனைக் கடுமையாக எதிர்த்தார்.

கிலாபத் இயக்கம், முதல் உலகப் போர் முடிந்தவுடன் தொடங்கிய உலகு தழுவிய இஸ்லாமிய இயக்கம். ஒட்டமான் பேரரசைக் காப்போம் என்னும் முழக்கத்துடன் உலகெங்கும் பரவிய அவ்வியக்கத்தைக் காந்தியார் வெளிப்படையாக ஆதரித்தார். அதனால் அந்த இயக்கத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு உருவானது. அதனையும் கடுமையாக எதிர்த்தவர்களில் மாளவியா ஒருவர்.

Christmas and Malaviya - Sybavee's spl article

இவ்வாறு இஸ்லாமிய எதிர்ப்பாளராக இருந்த மாளவியா, இன்னொரு புறத்தில் தீவிரமான இந்துத்துவ ஆதரவாளராகவும் இருந்தார். 1924ஆம் ஆண்டு பெல்காமில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற அதே பந்தலிலேயே இந்து மகா சபை மாநாடும் நடைபெற்றது. அதற்கு மாளவியாதான் தலைமை ஏற்றார். அந்த மாநாட்டில், லக்னோ மாநாட்டிற்கு எதிர்ப்பாகத் தீர்மானம் நிறைவேறியது.

1920களின் தொடக்கத்தில், நாக்பூரில், சாவர்க்கரின் 'இந்துத்துவா' நூல் ரகசியமாக வெளியானது. அப்போது அவர் ரத்னகிரி சிறையில் இருந்தார். அந்த நூலை வெகுவாகப் பாராட்டியவர்கள் என்று லாலா லஜபதி ராய், மதன் மோகன் மாளவியா இருவரின் பெயரையும் சாவர்க்கரே பின்னாளில் கூறுகின்றார்.

பிற மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டுவரும் திட்டம் முதன்முதலாக, 1923 பனாரஸ் இந்து மகா சபைக் கூட்டத்தில்தான் முன் மொழியப்பட்டது. அதற்கு 'சுத்தி' என்று பெயர். அந்தத் திட்டத்திலும் மாளவியா முழு உடன்பாடு உடையவராக இருந்தார்.

தாழ்த்தப்பட்ட 200 பேரை, அம்மக்களின் தலைவர்களில் ஒருவராகிய ராஜ்போஜ் அவர்களையும் அழைத்துக் கொண்டு, மாளவியா கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தவில்லையா என்று கேட்கக்கூடும்.அது உண்மைதான். ஆனால், அப்போராட்டத்திற்கு முன், அவர்கள் அனைவரையும் கோதாவரி நதியில் நீராடச் சொல்லி 'சுத்தி' செய்த கொடுமையையும் சேர்த்தே நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளாது.

இறுதியாக மாளவியா காங்கிரசை விட்டு வெளியேறி, காங்கிரஸ் தேசியக் கட்சி தொடங்கி, 1934 ஆம் ஆண்டுத் தேர்தலில் 12 இடங்களிலும் வெற்றி பெற்றார். ஏன் காங்கிரசை விட்டு வெளியேறினார்? 1932 மே 16 அன்று, இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் கொண்டுவந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 'கம்யூனல் அவார்ட்' என்று அறியப்படும் இட ஒதுக்கீட்டு உரிமையை அறிவித்தார். அதனைக் காங்கிரஸ் கட்சி முனைப்புடன் எதிர்க்கவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டு. அதனால்தான் அவர் காங்கிரசையே துறந்தார்.

இப்போது புரிகிறது அல்லவா... எதனால் மாளவியாவைப் பா.ஜ.க. அரசு கொண்டாடுகிறது என்பது! சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள்.

English summary
Suba Veerapandiyan's special article on the recent announcement of union govt to give importance to Malaviya and Vajapayee on Christmas day. --
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X