For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாசகர்களே,பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான புதினங்கள் மூலம் தமிழ் வாசகர்கள்மத்தியில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் அமரர் கல்கி. இன்றைய எழுத்தாளர்கள் பலரின் ஆதர்சமாக திகழ்பவர்கல்கி. அவரது படைப்புகளை வாசகர்களாகிய நீங்கள் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பார்த்திபன்கனவு புதினத்தை வாரா வாரம் நமது இணைய தளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாக வெளியிட உள்ளோம். இதோமுதல் பாகத்தின் முதல் அத்தியாயம்.

By Staff
Google Oneindia Tamil News

இரண்டாம் பாகம்

14. "வயதான தோஷந்தான்!"

Kalkiஅந்த நாளில் தமிழகத்தில் சைவ சமயமும் வைஷ்ணவ சமயமும் புத்துயிர் பெற்றுத் தளிர்க்கத் தொடங்கியிருந்தன.இவ்விரு சமயங்களிலும் பெரியார்கள் பலர் தோன்றி, திவ்ய ஸ்தல யாத்திரை என்ற விஜயத்தில் தமிழ் நாடெங்கும்யாத்திரை செய்து, பக்திச்சுடர் விளக்கு ஏற்றி, ஞான ஒளியைப் பரப்பி வந்தார்கள். அமுதொழுகும் தமிழில் கவிதாரஸமும் இசை இன்பமும் ததும்பும் தெய்வீகப் பாடல்களை இயற்றி வந்தார்கள்.

அந்நாளில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த சைவப் பெரியார்களுக்குள்ளே திருநாவுக்கரசர் இணையற்ற மகிமையுடன்விளங்கினார். மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்திலேயே பிரசித்தி அடைந்து, தமிழகத்தின் போற்றுதலுக்குஉரியவராகிவிட்ட அப்பர் சுவாமிகள் விக்கிரமன் நாடு கடத்தப்பட்டபோது, முதிர்ந்த மூப்பின் காரணமாகஅதிகமாய் நடமாடவும் இயலாத தள்ளாமையை அடைந்திருந்தார். அந்தத் தள்ளாத பிராயத்திலும் அவர் ஸ்தலயாத்திரை சென்றிருந்து சமீபத்தில் திரும்பி வந்திருக்கும் செய்தியைக் குந்தவிதேவி அறிந்தாள். அப்பெரியாரைத்தரிசிப்பதற்காகக் காஞ்சியில் பிரசித்தி பெற்று விளங்கிய சைவ மடாலயத்துக்கு ஒருநாள் அவள் சென்றாள்.

முதிர்ந்து கனிந்த சைவப் பழமாக விளங்கிய அப்பர் சுவாமிகள், சக்கரவர்த்தியின் திருமகளை அன்புடன் வரவேற்றுஆசி கூறினார்.

அவரைப் பார்த்துக் குந்தவி, "சுவாமி! இவ்வளவு தள்ளாத நிலைமையில் எதற்காகத் தாங்கள் பிரயாணம் செய்யவேண்டும்? தாங்கள் தரிசிக்காத ஸ்தலமும் இருக்கிறதா? எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்டாள்.

அதற்கு அப்பர், "குழந்தாய்! தில்லைப்பதி வரையிலே தான் போயிருந்தேன். பொன்னம்பலத்தில் ஆடும்பெருமானை எத்தனை தடவை தரிசித்தால்தான் என்ன? இன்னுமொருமுறை கண்ணாரக் கண்டு இன்புறவேண்டுமென்ற ஆசை உண்டாகத்தான் செய்கிறது. ஆகா! அந்த ஆனந்த நடனத்தின் அற்புதத்தைதான்என்னவென்று வர்ணிப்பேன்! அந்தப் பேரானந்தத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் மீண்டும் மனிதப் பிறவிஎடுக்கலாமே!" என்று கூறிவிட்டு, பாதி மூடிய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, பின்வரும் பாசுரத்தைப்பாடினார்:-

"குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!"

பாட்டு முடிந்த பின்னர் அப்பர் சுவாமிகள் சற்று நேரம் மெய்ம்மறந்து பரவச நிலையில் இருந்தார். முன்பெல்லாம்இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் குந்தவி பக்தி பரவசமடைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கியிருப்பாள். ஆனால்இன்றைக்கு அவள் மனம் அவ்வாறு பக்தியில் ஈடுபடவில்லை.

அப்பர் ஒருவாறு சுய உணர்வு அடைந்தபோது குந்தவி அவரை நோக்கி "சுவாமி, சோழ நாட்டில் யாரோ ஒருசிவனடியார் புதிதாகத் தோன்றி ராஜரீகக் காரியங்களிலெல்லாம் தலையிடுகிறாராமே, தங்களுக்கு அவரைத்தெரியுமா?" என்று வினவினாள்.

அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகவே கேட்ட அப்பெரியார், "என்ன குழந்தாய்! சோழ நாட்டில்தோன்றியிருக்கும் சிவனடியாரைப் பற்றிக் கேட்கிறாயா? ஆகா அவரைப் பார்க்கத்தானே, அம்மா நான்முக்கியமாக யாத்திரை கிளம்பினேன்? நான் அவரைப் பார்க்க வருகிறேன் என்று தெரிந்ததும் அவரே என்னைத்தேடிக் கொண்டு புறப்பட்டார். தில்லைப் பதியிலே நாங்கள் சந்தித்தோம். ஆகா! அந்தப் பிள்ளைக்குஞானசம்பந்தன் என்ற பெயர் எவ்வளவு பொருத்தம்! பால் மணம் மாறாத அந்தப் பாலகருக்கு, எப்படித்தான்இவ்வளவு சிவஞானச் செல்வம் சித்தியாயிற்று? என்ன அருள் வாக்கு! அவர் தாய்ப் பால் குடித்து வளர்ந்த பிள்ளைஇல்லை, அம்மா! ஞானப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை! - இல்லாவிட்டால் முகத்தில் மீசை முளைப்பதற்குள்ளேஇப்படிப்பட்ட தெய்வீகப் பாடல்களையெல்லாம் பொழிய முடியுமா?" என்றெல்லாம் அப்பர் பெருமான்வர்ணித்துக் கொண்டே போனார்.

குந்தவி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். கடைசியில் குறுக்கிட்டு, "சுவாமி! நான் ஒருவரைப் பற்றிக் கேட்கிறேன்.தாங்கள் இன்னொருவரைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். நான் சொல்லும் சிவனடியார், முகத்தில் மீசைமுளைக்காதவரல்ல; ஜடா மகுடதாரி; புலித்தோல் போர்த்தவர்" என்றாள்.

"குழந்தாய்! நீ யாரைப்பற்றிக் கேட்கிறாயோ எனக்குத் தெரியாது! ஜடாமகுடத்துடன் புலித்தோல் தரித்தசிவனடியார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த மடாலயத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். வேறுஏதாவது அடையாளம் உண்டானால் சொல்லு!" என்றார் நாவுக்கரசர்.

"நான் சொல்லுகிற சிவனடியார் ராஜரீக விஷயங்களில் எல்லாம் தலையிடுவாராம். என்னுடைய தந்தைக்குவிரோதமாகக் கலகங்களை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறாராம்..."

"என்ன சொன்னாய், அம்மா! அதிசயமாயிருக்கிறதே! அப்படிப்பட்ட சிவனடியார் யாரையும் எனக்குத் தெரியாது.சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இரு கண்களைப் போல் காத்து வளர்த்து வருகிறவராயிற்றே உன் தந்தை!நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் சிவனடியார்கள் எதற்காக ராஜரீகக் காரியங்களில் ஈடுபட வேண்டும்?அதுவும் உன் தந்தைக்கு விரோதமாகக் கலகத்தைக் கிளப்புவதா? வேடிக்கைதான்! அப்படி யாராவது இருந்தால்,அவன் சைவனாகவோ, வைஷ்ணவனாகவோ இருக்க மாட்டான். பாஷாண்ட சமயத்தான் யாராவது செய்தால்தான்செய்யலாம்."

"நான் போய் வருகிறேன் சுவாமி!" என்று குந்தவி அவருக்கு நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

பல்லக்கில் ஏறி அரண்மனைக்குப் போகும் போது அவள் பின்வருமாறு எண்ணமிட்டாள்:-

"முதுமை வந்து விட்டால் எவ்வளவு பெரியவர்களாயிருந்தாலும் இப்படி ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது. பேசஆரம்பித்தால் நிறுத்தாமல் வளவளவென்று பேசிக் கொண்டே போகிறார்! கேட்டதற்கு மறுமொழி உண்டாஎன்றால், அதுதான் கிடையாது! எல்லாம் வயதான தோஷந்தான்!"

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X