For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Kalkis Parthiban kanavu

By Staff
Google Oneindia Tamil News

இரண்டாம் பாகம்

25. சமய சஞ்சீவி

Kalkiதன்னைப் பின்தொடர்ந்து இரண்டு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாத பொன்னன், அரண்மனை தோட்டத்திற்குள் உற்சாகத்துடன் போய்க்கொண்டிருந்தான். இடையிடையே அவன், "வள்ளி! அதோ அந்த மாமரத்தடியில் தான் மகாராஜாவும் மகாராணியும் சாயங்கால வேளையிலே உட்காருவதுவழக்கம். அதோ பார்த்தாயா? அந்த மூலையில் ஒரு தாமரைக்குளம் இருக்கிறது. அதில்தான் முதன் முதலில் இளவரசர் நீந்தக் கற்றுக் கொண்டார்!"என்று இவ்விதம் சொல்லிக் கொண்டே போனான். வள்ளி ஒவ்வொரு தடவையும், "கொஞ்சம் மெதுவாகப் பேசு!" என்று எச்சரித்துக் கொண்டுவந்தாள்.

இவர்களுடைய பேச்சுக் குரலைக் கேட்டு மரங்களின் மீது உறங்கிக் கொண்டிருந்த பட்சிகள் சில விழித்துச் சிறகுகளை அடித்துக் கொண்டன. அப்போதுபொன்னன் கையைத் தட்டி ஓசைப்படுத்தியதுடன், "உஷ்!" என்று சத்தமிட்டான்.

"ஆமாம்! உன்னுடைய தைரியமெல்லாம் பாதி ராத்திரியில் தூங்குகிற பட்சிகளிடம்தான். எதிரியின் கையில் கத்தியைக் கண்டால் உடனே விழுந்தடித்து ஓடிவந்துவிடுவாய்!" என்று வள்ளி சொன்ன பிறகு பொன்னன் சற்று வாயை மூடினான்.

அரண்மனையின் பின்புறத்தை அவர்கள் அடைந்ததும் பொன்னன், "வள்ளி! உள்ளே போய் எல்லாம் பார்க்கலாமா அல்லது வந்த காரியத்தைப் பார்த்துக்கொண்டு திரும்புவோமா?" என்று கேட்டான்.

"விளக்கில் எண்ணெய் கூட ஆகிவிட்டது, சீக்கிரம் வந்த காரியத்தைப் பார்க்கலாம்! கோயில் எந்தப் பக்கம் இருக்கிறது?" என்று வள்ளி கேட்டாள்.

"அப்படியானால் இங்கே வா!" என்று பொன்னன் கிழக்குப் பக்கமாக அவளை அழைத்துச் சென்றான்.

பார்த்திப மகாராஜாவின் காலத்தில் ஒரு முறை நாம் அரண்மனைக் கோயிலைப் பார்த்திருக்கிறோம். அந்த அழகிய சிறு கோயிலானது அரண்மனையைச்சேர்ந்தாற் போல கீழ்ப் பாகத்தில் அமைந்திருந்தது. அதற்குள் பிரவேசிப்பதற்கு மூன்று வழிகள் இருந்தன. அரண்மனைக்குள்ளேயிருந்து நேராகக்கோயிலுக்குள் வரலாம். இதுதான் பிரதான வாசல். பின்புறத்துத் தோட்டத்திலிருந்து பிரவேசிப்பதற்கு ஒரு வாசல் இருந்தது. அபிஷேகத்திற்குக் காவேரிநீரும், அலங்காரத்திற்குப் புஷ்பமும் கொண்டு வருவதற்காக இந்த வாசல் ஏற்பட்டது. இவற்றைத் தவிர அர்ச்சகர் வெளியில் இருந்து நேரே வருவதற்காகக்கிழக்கு மதிலில் சிறு வாசல் இருந்தது. இவற்றுள் தோட்டத்திலிருந்து பிரவேசிப்பதற்குரிய வாசலைப் பொன்னன் அடைந்து, கதவின் பூட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான். அவனுடன் வள்ளியும் போனாள். மங்கிய அகல் விளக்கின் வெளிச்சத்தில் அங்கிருந்த விக்கிரகங்களின் காட்சியைக் கண்டுஇருவரும் சிறிதுநேரம் பிரமித்து நின்றார்கள். நெடுங்காலமாகப் பூசை முதலியவை ஒன்றுமில்லாமலிருந்தும், அந்த தெய்வீகச் சிலைகளின் ஜீவகளை சிறிதும்குறையவில்லை.

முதலில் திகைப்பு நீங்கியவனான பொன்னன், "வள்ளி! நிற்க நேரமில்லை" என்று சொல்லி, மகாவிஷ்ணு விக்கிரகத்தின் சமீபம் சென்று, விஷ்ணு பாதத்தின்அடியிலிருந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நீளவாட்டான மரப்பெட்டியை எடுத்துக் கொண்டான்.

"சோழ குலத்தின் விலையில்லாப் பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள் இருக்கிறது. வள்ளி! நல்ல வேளை, இது அந்த நரசிம்ம சக்கரவர்த்தியின் கண்ணில்படவில்லை; பட்டிருந்தால், இதற்குள் காஞ்சிக்குக் கட்டாயம் போயிருக்கும்!" என்று சொல்லிக் கொண்டே கோயிலிலிருந்து வெளியேறினான்.

அவனைப் பின்தொடர்ந்து வெளியே வந்த வள்ளி, "ஐயையோ! விளக்கு அணைந்துவிட்டதே!" என்றாள். "நல்ல வேளை! காரியம் ஆனபிறகு அணைந்தது!போனால் போகட்டும். இப்போது எப்படிப் போகலாம், தோட்டத்தின் வழியாக இருட்டில் போவது கஷ்டம்? கிழக்கு மதில் வாசல் வழியாகவேணுமானால் போய் விடலாமா? வா! கதவு திறக்கிறதா, பார்ப்போம்" என்று சொல்லிப் பொன்னன் தோட்டத்தின் கிழக்கு மதிலை நோக்கிவிரைந்து சென்றான். அங்கிருந்து வாசற்படியருகில் இருவரும் போனதும், மதிலுக்கு வெளியில் பேச்சுக் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். பின்வரும்சம்பாஷனை அவர்கள் காதில் லேசாக விழுந்தது.

"மாரப்ப பூபதியின் பேச்சை நம்பியா இந்தக் கத்தியை உருவிக் கொண்டு நிற்கிறாய்? அரண்மனையிலாவது, திருடன் நுழையவாவது?"

"திருடன் நுழைகிறதைக் கண்ணாலே பார்த்தேன் என்று மாரப்பபூபதி சொல்லும்போது எப்படி அதை நம்பாமலிருப்பது?"

"தப்பிப் போவதற்கு இதுதான் வழியா? வேறு வழியில்லையா?"

"திருடன் அரண்மனை வாசல் வழியாகத் துணிந்து கிளம்பமாட்டான். இந்த வாசலுக்கு வராவிட்டால், தோட்டத்தின் வழியாகக் காவேரியில் போய்இறங்க வேண்டியது தான். அதற்குள்ளாக... அதோ பார்."

"என்ன அங்கே? ஏக தீவர்த்தி வெளிச்சமாகத் தெரிகிறதே!"

"மாரப்ப பூபதி ஆட்களைத் திரட்டிக் கொண்டு வருகிறார்."

இந்தப் பேச்சைக் கேட்டதும் பொன்னனுக்கு உடம்பு வெலவெலத்துப் போய்விட்டது. ஒரு கண நேரத்தில் அவனுடைய உள்ளம் என்னவெல்லாமோ கற்பனைசெய்துவிட்டது. தன்னைப் பெட்டியுடன் மாரப்ப பூபதி கைப்பிடியாகப் பிடித்து சக்கரவர்த்தியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவது போலவும், சக்கரவர்த்திதன்னைப் பார்த்து, "வெகு யோக்கியன் போல் நடித்தாயே? திருடனா நீ?" என்று கேட்பது போலவும் அவனுடைய மனக்கண் முன் தோன்றியது. உடனே,வள்ளியையும் ஒரு கையினால் பற்றி இழுத்துக் கொண்டு தோட்டத்தில் புகுந்து வட திசையை நோக்கி ஓடினான். மரங்களில் முட்டிக் கொண்டும் செடி, கொடிகளின்மேல் விழுந்தும் அவர்கள் விரைந்து சென்று கடைசியில் தோட்டத்தின் கொல்லைப்புற மதிற்சுவரை அடைந்தார்கள். கதவருகில் சிறிது நின்று ஏதாவதுவெளியில் சத்தம் கேட்கிறதா என்று உற்றுக் கேட்டார்கள்; சத்தம் ஒன்றும் இல்லை. மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்கள்.அவசரமாகக் காவேரியில் இறங்கிப் பார்க்கும்போது, அங்கே அவர்கள் கட்டிவிட்டுப் போயிருந்த படகைக் காணோம்!

பொன்னனுக்கும் வள்ளிக்கும் ஒரு கணம் மூச்சே நின்று விட்டது! தூரத்தில் தீவர்த்திகளின் வெளிச்சம் தெரிந்தது. ஆட்கள் ஓடிவரும் ஆரவாரமும் கேட்டது.இன்னது செய்வதென்று தெரியாமல் சிறிது திகைத்து நின்ற பிறகு, "வள்ளி படகு ஒருவேளை ஆற்றோடு மிதந்து போய்க் கிழக்கே எங்கேயாவதுதங்கியிருக்கும், வா, பார்க்கலாம்" என்றாள். இருவரும் நதிக்கரையோடு கிழக்கு நோக்கி ஓடினார்கள். அரண்மனை மதிலுக்குப் பக்கத்தில் தெற்கேஇருந்து வந்த சாலை வழியாகத் தீவர்த்திகளுடன் ஒரு கும்பல் வருவது தெரிந்தது. "அதோ ஓடுகிறார்கள்!" என்ற சத்தமும் கேட்டது.

பொன்னனும் வள்ளியும் இன்னும் விரைவாக ஓடினார்கள். கொஞ்சதூரம் போனதும் ஒரு மரத்தின் வேரில் தங்களுடைய படகு இழுத்துக் கட்டப்பட்டிருப்பதைப்பார்த்து அவர்களுக்கு பரம ஆச்சரியமாய்ப் போய்விட்டது. ஆனால் ஆச்சரியப்பட்டுக்கொண்டு நிற்பதற்கு அதுவா தருணம்? அதற்குள், தீவர்த்திகளுடன்வந்த கும்பலும் காவேரிக் கரையை நெருங்கி விட்டது. "ஐயோ! அவர்களிடம் பெட்டியுடன் சிக்கிக் கொள்ளப் போகிறோமே!" என்று பொன்னன்பதைபதைத்தான். அதே சமயத்தில் படகு கட்டியிருந்த மரத்துக்குப் பின்னாலிருந்து ஒரு உருவம் வெளிவந்தது! அது சிவனடியாருடைய உருவம் என்பதை அறிந்ததும்வள்ளி, "சுவாமி! நீங்களா!" என்று ஆச்சரியமும், மகிழ்ச்சியும் பொங்கக் கூச்சலிட்டாள்.

"உஷ்" என்று அடக்கினார் சிவனடியார், "பொன்னா! இது பேசிக் கொண்டிருக்கும் சமயமில்லை. பெட்டியை இப்படிக் கொடு! நான் காப்பாற்றி உன்னிடம்ஒப்புவிக்கிறேன். இல்லாவிட்டால், அகப்பட்டுக் கொள்வாய்!" என்றார்.

"கொடு! கொடு!" என்று வள்ளி பொன்னனைத் தூண்டினாள்.

பொன்னன் சிவனடியாரிடம் பெட்டியைத் தயக்கத்துடன் தூக்கிக் கொடுத்தான்.

சிவனடியார், "வள்ளி! நீ ஒரு சமயம் மாரப்பனிடமிருந்து என்னைத் தப்புவித்தாய். அதற்குப் பிரதியாக இன்று உங்களை அதே மாரப்பனிடமிருந்து தப்புவிக்கிறேன்!"என்றார்.

அடுத்த நிமிஷம் சிவனடியாரைக் காணோம். மர நிழலில் மறைந்து மாயமாய்ப் போய்விட்டார்.

பொன்னன் படகை அவசரமாக அவிழ்த்துவிட்டு, வள்ளியை அதில் ஏற்றித் தானும் ஏறிக் கொண்டான்.

அதே சமயத்தில் மாரப்பனும் அவனுடைய ஆட்களும் காவேரிக் கரையை அடைந்து படகு இருந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடிவரத் தொடங்கினார்கள்.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X