For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kalkis Parthiban kanavu

By Staff
Google Oneindia Tamil News

இரண்டாம் பாகம்

27. கண்ணீர்ப் பெருக்கு

Kalkiவள்ளியும் பொன்னனும் குடிசைக்கு வெளியில் வந்த போது பார்த்திப மகாராஜாவின் காலத்திற்குப் பிறகு அவர்கள் பார்த்திராத அதிசயமான காட்சியைக்கண்டார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து காவேரிக் கரைச் சாலை வழியாக அரச பரிவாரங்கள் வந்து கொண்டிருந்தன. குதிரை வீரர்களும், காலாட்படைகளும், கொடி, பரிவட்டம் அலங்கரித்த உயர்ஜாதிப் புரவிகளும், இராஜ ஸ்திரீகளுக்குரிய முத்து விதானம் கட்டிய தந்தப் பல்லக்குகளும் வந்துகொண்டிருந்தன.

இந்த இராஜ பரிவாரமெல்லாம் தோணித் துறைத்தோப்பில் வந்து இறங்கத் தொடங்கியபோது, ஓடக்காரப் பொன்னனும், அவன் மனைவியும் ஆச்சரியக்கடலில் மூழ்கினார்கள்.

இதோடு ஆச்சரியம் முடிந்தபாடில்லை. காவேரி நதியில் அதே சமயத்தில் ஒரு விந்தைக் காட்சி காணப்பட்டது.

உறையூர்ப் பக்கத்திலிருந்து அலங்கரித்த பல படகுகள் அன்னப் பட்சிகளைப் போல் மிதந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தன.

அவற்றின் நடுவில் சிங்கக்கொடி பறந்த அழகிய படகைப் பார்த்ததும், சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களுந்தான் வருகிறார்கள் என்பதுபொன்னனுக்குத் தெரிந்து போயிற்று.

ஒரு வேளை அந்தப் படகுகள் எல்லாம் இந்தத் தோணித் துறைக்குத்தான் வருமோ என்று பொன்னன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே, படகுகளின்திசைப்போக்கு மாறியது! காவேரியைக் குறுக்கே கடந்து, வசந்தத் தீவை நோக்கி அவை செல்லத் தொடங்கின. "ஓகோ! சக்கரவர்த்தி வசந்தத் தீவுக்குஏன் போகிறார்? ஒருவேளை மகாராணியைப் பார்க்கப் போகிறாரோ?" என்று பொன்னன் நினைத்தான். உடனே, தோப்பில் வந்து இறங்கியவீரர்களிடம் நெருங்கிப்போய் விசாரித்தான். அவன் எண்ணியது உண்மையென்று தெரிந்தது. சக்கரவர்த்தியுடன், குந்தவி தேவி, சிறுத்தொண்டர், அவருடைய பத்தினிமுதலியோர் அருள்மொழி ராணியைப் பார்க்க வசந்தத் தீவுக்குப் போகிறார்களென்று அறிந்தான். மேலும், விசாரித்து அவர்கள் அங்கிருந்து திரும்பி இந்தத்தோணித் துறைக்கு வருவார்களென்றும் இங்கிருந்து சிறுத்தொண்டர் கீழச் சோழநாட்டுக்கு யாத்திரை போகிறார் என்றும் சக்கரவர்த்தியும் குந்தவிதேவியும்உறையூருக்குத் திரும்புகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டான்.

அந்தச் சமயம் வசந்தத் தீவில் தானும் இருக்கவேண்டும் என்றும், என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பொன்னனுக்கு உள்ளம்துடித்தது. ஆனால், அந்த வலை வள்ளியிடம் தெரிவித்தபோது அவள் "நன்றாயிருக்கிறது! சக்கரவர்த்தி அங்கே போயிருக்கும் போது, அவருடையகட்டளையில்லாமல் நீ ஏன் அங்கே போக வேண்டும்? என்ன நடக்கிறதென்று தானே தெரிகிறது. அவசரம் என்ன?" என்றாள்.

எனவே, பொன்னன் துடிதுடித்துக் கொண்டு இக்கரையிலேயே இருந்தான். ஒரு முகூர்த்த காலம் ஆயிற்று. வசந்தத்தீவின் தோணித் துறையில் கலகலப்பு ஏற்பட்டது.பலர் அங்கே கும்பலாக வந்தார்கள். படகுகளிலும் ஏறினார்கள் படகுகள் இக்கரையை நோக்கி வரத்தொடங்கின.

வருகிற படகுகளை மிகவும் ஆவலுடன் வள்ளியும் பொன்னனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்க நெருங்கப் படகுகளில் இருந்தவர்கள் கண்ணுக்குத்தெரிய ஆரம்பித்தார்கள். சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்த படகிலே சக்கரவர்த்தியும், ஒரு மொட்டைச் சாமியாரும் இருந்தார்கள்.

இதற்குள் அவர்களுடைய பார்வை இன்னொரு படகின் மேல் சென்றது. அதில் மூன்று பெண்மணிகள் இருந்தார்கள்? அருள்மொழித் தேவி போல் அல்லவாஇருக்கிறது?

ஆமாம். அருள்மொழித் தேவிதான். படகு கரையை அடைந்து எல்லாரும் இறங்கியபோது, பொன்னனும் வள்ளியும் வேறு யாரையும் பார்க்கவுமில்லை;கவனிக்கவுமில்லை. அருள்மொழித் தேவியின் காலில் விழுந்து எழுந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள்.

அருள்மொழித்தேவி அவர்களை நோக்கித் தழுதழுத்த குரலில் கூறினாள்:- "பொன்னா! வள்ளி! என்னால் இங்கே தனியாகக் காலங் கழிக்க முடியவில்லை.நான் திவ்ய ஸ்தல யாத்திரை போகிறேன். நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இந்தத் தோணித் துறையிலேயே இருந்து கொண்டிருங்கள். ஒருவேளைஎப்போதாவது மறுபடியும் திரும்பி வந்தால்..."

இச்சமயம் பொன்னன் - வள்ளி இவர்கள் கண்களில் கண்ணீர் பெருகுவதை அருள்மொழித்தேவி கண்டதும், அவளுக்கும் கண்களில் நீர் துளித்தது. பேச முடியாமல்தொண்டையை அடைத்தது. பக்கத்திலிருந்த சிவவிரதையின் கரத்தைப் பிடித்துக் கொண்டு மேலே நடக்கத் தொடங்கினாள்.

அன்றைய தினம் அந்தக் காவேரிக்கரைத் தோணித்துறையிலே கண்ணீர்ப் பிரவாகம் ஏராளமாய்ப் பெருகித் தண்ணீர்ப் பிரவாகத்துடன் போட்டியிட்டது.

சக்கரவர்த்தியும் சிறுத்தொண்டரும் பிரிந்தபோது, அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று.

சிறுத்தொண்டரின் பத்தினியிடமும், அருள்மொழித் தேவியிடமும் குந்தவி விடை பெற்றுக் கொண்ட சமயம், அவர்கள் எல்லாருடைய கண்களிலிருந்தும் கண்ணீர்ஆறாய்ப் பெருகிற்று.

கிழக்குத்திசை போகிறவர்கள் முதலில் கிளம்பினார்கள். சிறுத்தொண்டர் தனியாக ஒரு பல்லக்கில் ஏறி அமர்ந்தார். அவர் பத்தினியும் அருள்மொழித்தேவியும் இன்னொரு பல்லக்கில் அமர்ந்தார்கள். சேடிகளும் பரிவாரங்களும் தொடர்ந்துவர, குதிரை வீரர்கள் முன்னும் பின்னும் காவல் புரிந்துவர,சிவிகைகள் புறப்பட்டன.

சிவிகைகள் சற்றுத் தூரம் போனபிறகு, பொன்னனுக்குத் திடீரென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அவன் ஓட்டமாய் ஓடி அருள்மொழி இருந்த பல்லக்கைநெருங்கினான், தேவியும் சிவிகையை நிறுத்தச் சொல்லி, "பொன்னா! என்ன? இவ்வளவு படபடப்பு ஏன்?" என்றாள்.

"தேவி!" என்று பொன்னன் மேலே பேச நாவெழாமல் திகைத்தான்.

"ஏதோ சொல்ல விரும்புகிறாய் போலிருக்கிறது. பயப்படாமல் சொல்லு. இந்த அம்மையார் இருப்பதினால் பாதகமில்லை" என்றாள் ராணி.

"தேவி! பெட்டியைப் பற்றிச் சொன்னீர்களல்லவா?"

"என்ன? கிடைத்து விட்டதா?" என்று ராணி ஆவலுடன் கேட்டாள்.

"ஆமாம்; இல்லை. சீக்கிரம் கிடைத்துவிடும். அதை...." என்று தடுமாறினான் பொன்னன்.

அருள்மொழி சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, "பொன்னா! பெட்டியை நீதான் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். முன்னமே, உன்னிடம்ஒப்புவிப்பதாகத்தான் இருந்தேன். ஒரு வேளை, ஒரு வேளை.... நான் இல்லாத சமயத்தில்... அவன் வந்தால்..." ராணி மேலே பேசமுடியாமல், விம்மத்தொடங்கினாள்.

பொன்னன், "கட்டும், அம்மா! இளவரசரிடம் பத்திரமாய் ஒப்புவித்து விடுகிறேன்" என்று அழுது கொண்டே சொன்னான்.

சிவிகை மேலே சென்றது.

பொன்னன் திரும்பி வந்தபோது, சாலையில் பல்லக்கின் அருகில் நின்று குந்தவி தேவி கண்ணீர் விடுவதையும், சக்கரவர்த்தி அவளைத் தேற்றுவதையும் கண்டான்.

"எனக்குத் தாயார் கிடைத்ததாக எண்ணி மனமகிழ்ந்தேன். அப்பா! அதற்குக் கொடுத்து வைக்கவில்லை!" என்று குந்தவி சொன்னது பொன்னன் காதில்விழுந்தது.

குந்தவி சிவிகையில் ஏறினாள். சக்கரவர்த்தி குதிரை மீது ஆரோகணித்தார். உறையூரை நோக்கி அவர்கள் கிளம்பினார்கள்.

பொன்னன் குடிசைக்குள் நுழைந்ததும் வள்ளி கண்ணீர் பெருக்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.

"ஐயோ! எனக்கு முன்னமே தெரியாமல் போச்சே! தெரிந்திருந்தால் மகாராணியுடன் நானும் வருவதாகச் சொல்லியிருப்பேனே! எனக்கு மட்டும் இங்கேஎன்ன வேலை!" என்று வள்ளி புலம்பினாள்.

பொன்னன் சிறிது தைரியப்படுத்திக் கொண்டு, "கடைசியில் பெண் பிள்ளை என்பதைக் காட்டி விட்டாயல்லவா?" பிரமாத வீரமெல்லாம் பேசினாயே!"என்றான்.

அச்சமயத்தில் மறுபடியும் வெளியில் குதிரையின் காலடிச் சத்தம் கேட்கவே, இருவரும் ஓடி வந்து பார்த்தார்கள். சக்கரவர்த்தி மட்டும் குதிரைமேல்தனியாகத் திரும்பி வந்தார்.

"பொன்னா! நீ இந்தத் தோணித் துறையில்தானே இருக்கப் போகிறாய்? எங்கேயும் போய்விடமாட்டாயே?" என்று கேட்டார்.

"இங்கேதான் இருப்பேன், பிரபோ! எங்கும் போகமாட்டேன்" என்றான் பொன்னன்.

"அதோபார்! அரண்மனைப் படகை இங்கேயே விட்டுவைக்கச் சொல்லியிருக்கிறேன். குந்தவி தேவி ஒரு வேளை வசந்த மாளிகையில் வந்து இருக்கஆசைப்படலாம். அப்போது நீதான் படகு ஓட்ட வேண்டும்...."

"காத்திருக்கிறேன், பிரபோ!"

"இன்னொரு சமாசாரம்; சிவனடியார் ஒருவர் - என் சிநேகிதர் உன்னிடம் ஒப்புவிக்கும்படி ஒரு பெட்டியைக் கொடுத்தார். அது அந்தப் படகின் அடியில்இருக்கிறது. பார்த்து எடுத்துக்கொள்."

இவ்விதம் சொல்லிவிட்டு, சக்கரவர்த்தி வள்ளியை நோக்கினார். அதுவரையில் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த வள்ளி சட்டென்று தலையைக்குனிந்தாள். அவளுடைய முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகை உண்டாயிற்று.

அடுத்த கணத்தில், சக்கரவர்த்தியின் குதிரை காற்றாய்ப் பறந்து சென்றது.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X