For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாசகர்களே,பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான புதினங்கள் மூலம் தமிழ் வாசகர்கள்மத்தியில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் அமரர் கல்கி. இன்றைய எழுத்தாளர்கள் பலரின் ஆதர்சமாக திகழ்பவர்கல்கி. அவரது படைப்புகளை வாசகர்களாகிய நீங்கள் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பார்த்திபன்கனவு புதினத்தை வாரா வாரம் நமது இணைய தளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாக வெளியிட உள்ளோம். இதோமுதல் பாகத்தின் முதல் அத்தியாயம்.

By Staff
Google Oneindia Tamil News

முதல் பாகம்

3. பல்லவ தூதர்கள்

Kalkiபொன்னனும் வள்ளியும் தங்கள் குடிசையின் கதவைப் பூட்டிக் கொண்டு உறையூரை நோக்கிக் கிளம்பினார்கள்.அவர்கள் வசித்த தோணித் துறையிலிருந்து உறையூர் மேற்கே ஒரு காத தூரத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் -அதாவது சுமார் ஆயிரத்தி முந்நூறு வருஷங்களுக்கு முன்பு - செந்தமிழ் நாட்டில் ரயில் பாதைகளும் ரயில்வண்டிகளும் இல்லை; மோட்டார் வண்டிகளும் தார் ரோடுகளும் இல்லை. (இவையெல்லாம் அந்த நாளில் உலகில்எந்த நாட்டிலுமே கிடையாது) அரசர்களும் பிரபுக்களும் குதிரைகள் மீதும் யானைகள் மீதும் ஆரோகணித்துச்சென்றனர்.

குதிரை பூட்டிய ரதங்களிலும் சென்றனர். மற்ற சாதாரண மக்கள் நாட்டு மாட்டு வண்டிகளில் பிரயாணம்செய்தார்கள். இந்த வாகனங்களெல்லாம் போவதற்காக விஸ்தாரமான சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. குளிர்ந்தநிழல் தரும் மரங்கள் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த அழகான சாலைகளுக்குச் சோழவள நாடு அந்தக் காலத்திலேபெயர் போனதாயிருந்தது. அந்தச் சாலைகளுக்குள்ளே காவேரி நதியின் தென்கரையோரமாகச் சென்ற,ராஜபாட்டை மிகப் பிரசித்தி பெற்றிருந்தது.

இந்த ராஜபாட்டை வழியாகத்தான் பொன்னனும் வள்ளியும் சோழ நாட்டின் தலைநகரமான உறையூருக்குப்புறப்பட்டுச் சென்றார்கள்.

சோழநாடு அந்த நாளில் தன்னுடைய புராதனப் பெருமையை இழந்து ஒரு சிற்றரசாகத்தான் இருந்தது. தெற்கேபாண்டியர்களும் வடக்கே புதிதாகப் பெருமையடைந்திருந்த பல்லவர்களும் சோழ நாட்டை நெருக்கி அதன்பெருமையைக் குன்றச் செய்திருந்தார்கள். ஆனால், சோழ நாட்டின் வளத்தையும் வண்மையையும் அவர்களால்ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த வளத்துக்குக் காரணமாயிருந்த காவேரி நதியையும் அவர்களால் கொள்ளைகொண்டு போக முடியவில்லை. உறையூர் ராஜபாட்டையின் இருபுறமும் பார்த்தால் சோழ நாட்டு நீர் வளத்தின்பெருமையை ஒருவாறு அறிந்து கொள்ளும் படியிருந்தது.

ஒரு புறத்தில் கரையை முட்டி அலை மோதிக்கொண்டு கம்பீரமாய்ச் சென்ற காவேரியின் பிரவாகம்; ஆற்றுக்குஅக்கரையில் நீல வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடர்த்தியான தென்னை மரத் தோப்புகளின் காட்சி;இந்தப் புறம் பார்த்தாலோ கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை, பசுமை, பசுமைதான். கழனிகளெல்லாம் பெரும்பாலும்நடவு ஆகியிருந்தன. இளம் நெற்பயிர்கள் மரகதப் பச்சை நிறம் மாறிக் கரும் பசுமை அடைந்து கொண்டிருந்தகாலம். குளு குளு சத்தத்துடன் ஜலம் பாய்ந்து கொண்டிருந்த மடைகளில் ஒற்றைக் காலால் தவம் செய்துகொண்டிருந்த வெள்ளை நாரைகள் இளம் பயிர்களின் பசுமை நிறத்தை இன்னும் நன்றாய் எடுத்துக்காட்டின. நெல்வயல்களுக்கு மத்தியில் ஆங்காங்கே சில வாழைத் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும் கரும்புக்கொல்லைகளும் காணப்பட்டன.

இத்தகைய வளங்கொழிக்கும் அழகிய நாட்டின் அமைதியைக் குலைப்பதற்கு யுத்தம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. இதனால் சோழ நாட்டுக் குடிகளின் உள்ளம் எவ்வளவு தூரம் பரபரப்புஅடைந்திருந்ததென்பதைப் பொன்னனும் வள்ளியும் உறையூர்ப் பிரயாணத்தின் போது நன்கு கண்டார்கள்.பக்கத்துக் கழனிகளில் வேலை செய்து கொண்டிருந்த உழவர்களும், பயிர்களுக்குக் களைபிடுங்கிக் கொண்டிருந்தஸ்திரீகளும், பொன்னனையும் வள்ளியையும் கண்டதும் கைவேலையைப் போட்டுவிட்டு ஓடோடியும் வந்தார்கள்.

"பொன்னா! என்ன சேதி?" என்று சிலர் ஆவலுடன் கேட்டார்கள். "சண்டை நிச்சயந்தானா?" என்று சிலர்விசாரித்தார்கள். "தூதர்கள் வந்த சமாசாரம் ஏதாவது தெரியுமா?" என்று வினவினார்கள். பொன்னன்ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாய்ப் பதில் சொன்னான். "சண்டையைப் பற்றிச் சந்தேகம் என்ன, நமதுமகாராஜா ஒரு நாளும் கப்பம் கட்டப் போவதில்லை. எல்லாரும் அவரவர்கள் வாளையும் வேலையும் தீட்டிக்கொண்டு வந்து சேருங்கள்" என்று சிலரிடம் சொன்னான். வேறு சிலரிடம் "எனக்கு என்ன தெரியும்? உங்களுக்குத்தெரிந்ததுதான் எனக்கும் தெரியும்?" என்றான்.

அவர்கள் நன்றாயிருக்கிறது, பொன்னா! உனக்குத் தெரியாமலிருக்குமா? சோழ நாட்டுக்கே இப்போது முக்கியமந்திரி நீதானே? உனக்குத் தெரியாத ராஜ ரகசியம் ஏது?" என்றார்கள். அப்போது வள்ளி அடைந்த பெருமையைச்சொல்லி முடியாது.

ஆனால், வேறு சிலர் "பொன்னா! மகாராஜா யுத்தத்துக்குப் போனால் நீயும் போவாயோ, இல்லையோ?" என்றுகேட்டபோது வள்ளிக்கு ரொம்ப எரிச்சலாயிருந்தது. அவர்களுக்கு "அது என் இஷ்டமா? மகாராஜாவின் இஷ்டம்!"என்றான் பொன்னன். அவர்கள் போன பிறகு வள்ளியிடம், "பார்த்தாயா வள்ளி! நான் யுத்தத்துக்குப்போகாமலிருந்தால் நன்றாயிருக்குமா? நாலு பேர் சிரிக்கமாட்டார்களா?" என்றான். அதற்கு வள்ளி "உன்னை யார்போக வேண்டாமென்று சொன்னார்கள்? மகாராஜா உத்தரவு கொடுத்தால் போ, என்னையும் அழைத்துக் கொண்டுபோ என்று தானே சொல்லுகிறேன்" என்றாள்.

இப்படி வழியெல்லாம் பொன்னன் நின்று நின்று, கேட்டவர்களுக்கு மறுமொழி சொல்லிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது. உறையூர்க் கோட்டை வாசலை அணுகியபோது, அஸ்தமிக்கும் நேரம் ஆகிவிட்டது.அவர்கள் வந்து சேர்ந்த அதே சமயத்தில் கோட்டை வாசல் திறந்தது, உள்ளிருந்து சில குதிரை வீரர்கள் வெளியேவந்து கொண்டிருந்தார்கள். முதலில் வந்த வீரன் கையில் சிங்கக் கொடியைப் பார்த்ததும், அவர்கள் தாம்மத்தியானம் உறையூருக்குச் சென்ற பல்லவ தூதர்கள் என்பது பொன்னனுக்குத் தெரிந்துவிட்டது. இருவரும் சிறிதுஒதுங்கி நின்றார்கள். கோட்டை வாசல் தாண்டியதும் குதிரைகள் காற்றிலும் கடிய வேகத்துடன் பறக்கத் தொடங்கின.அவற்றின் காற்குளம்பின் புழுதி மறையும் வரையில் அவை சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு,பொன்னனும் வள்ளியும் கோட்டை வாசல் வழியாகப் புகுந்து சென்று நகருக்குள் பிரவேசித்தார்கள்.

நகரின் வீதிகளில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக ஜனங்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கும்பலின்ஓரத்தில் பொன்னனும் வள்ளியும் போய் நின்றனர். பல்லவ தூதர்கள் வந்தபோது ராஜ சபையில் நடந்தசம்பவங்களை ஒருவன் வர்ணித்துக் கொண்டிருந்தான்: "ஆகா! அந்தக் காட்சியை நான் என்னவென்று சொல்லப்போகிறேன்! மகாராஜா சிங்காதனத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். இளவரசரும் மந்திரி, சேனாதிபதிஎல்லாரும் அவரவர்களின் இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். எள் போட்டால் எள் விழுகிற சத்தம் கேட்கும்; அந்தமாதிரி நிசப்தம் சபையில் குடி கொண்டிருந்தது. "தூதர்களை அழைத்து வாருங்கள்!" என்று மகாராஜா சொன்னார்.அவருடைய குரலில் எவ்வளவு வேகம் ததும்பிற்று இன்றைக்கு? தூதர்கள் வந்தார்கள், அவர்களுடைய தலைவன்முன்னால் வந்து நின்று மகாராஜாவுக்கு வந்தனம் செலுத்தினான்.

"தூதரே! என்ன சேதி?" என்று கேட்டார்.

"அந்தக் குரலின் கம்பீரத்திலேயே தூதன் நடுங்கிப் போய்விட்டான். அவனுக்குப் பேசவே முடியவில்லை. தட்டுத்தடுமாறிக் கொண்டே திரிலோக சக்கரவர்த்தி காஞ்சி மண்டலாதிபதி சத்ரு சம்ஹாரி நரசிம்மவர்மபல்லவராயருடைய தூதர்கள் நாங்கள்...." என்று அவன் ஆரம்பிக்கும் போது நம்முடைய அரண்மனை விதூஷகன்குறுக்கிட்டான். "தூதரே! நிறுத்தும்! எந்தத் திரிலோகத்துக்குச் சக்கரவர்த்தி! அதல ஸுதல பாதாளமா? இந்திரலோக,சந்திரலோக, யமலோகமா?" என்றான். சபையில் எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

தூதன் பாடு திண்டாட்டமாய்ப் போய்விட்டது. அவனுடைய உடம்பு நடுங்கிற்று; நா குழறிற்று. மெதுவாகச்சமாளித்துக்கொண்டு தங்கள் பாட்டனார் காலம் முதல் ஆண்டுதோறும் கட்டிவந்த கப்பத்தைச் சென்ற ஆறுவருஷமாய் மகாராஜா கட்டவில்லையாம். அதற்கு முகாந்திரம் கேட்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளைஎன்றான். ஆகா! அப்போது நமது மகாராஜாவின் தோற்றத்தைப் பார்க்கவேணுமே? தூதரே! உங்கள் சக்கரவர்த்திகேட்டிருக்கும் முகாந்திரத்தைப் போர் முனையிலே தெரிவிப்பதாகப் போய்ச் சொல்லும் என்றார். எனக்குஅப்போது உடல் சிலிர்த்து விட்டது...."

இவ்விதம் வர்ணித்து வந்தவன் சற்றே நிறுத்தியதும் பல பேர் ஏக காலத்தில் "அப்புறம் என்ன நடந்தது?" என்றுஆவலுடன் கேட்டார்கள்.

"அந்தத் தூதன் சற்று நேரம் திகைத்து நின்றான். பிறகு, "அப்படியானால், யுத்தத்துக்குச் சித்தமாகும்படி சக்கரவர்த்திதெரிவிக்கச் சொன்னார்கள். இதற்குள்ளே பல்லவ சைன்யம் காஞ்சியிலிருந்து கிளம்பியிருக்கும். போர்க்களமும்யுத்த ஆரம்ப தினமும் நீங்களே குறிப்பிடலாமென்று தெரியப்படுத்தச் சொன்னார்கள் என்றான். அதற்கு நம்மகாராஜா, புரட்டாசிப் பெளர்ணமியில் வெண்ணாற்றங் கரையில் சந்திப்போம் என்று விடையளித்தார். உடனேசபையோர் அனைவரும், "வெற்றிவேல்! வீரவேல்! என்று வீர கர்ஜனை புரிந்தார்கள்..."

இதைக் கேட்டதும் அந்தக் கும்பலில் இருந்தவர்களும் "வெற்றிவேல்! வீரவேல்!" என்று முழங்கினார்கள்.பொன்னனும் உரத்த குரலில் அம்மாதிரி வீர முழக்கம் செய்து விட்டு வள்ளியை அழைத்துக் கொண்டு மேலேசென்றான்.

இதற்குள் இருட்டிவிட்டது. வெண் மேகங்களால் திரையிடப்பட்ட சந்திரன் மங்கலாய்ப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீதி மூலையிலும் நாட்டியிருந்த கல்தூணின் மேல் பெரிய அகல் விளக்குகள்இருந்தன. அவை ஒவ்வொன்றாய்க் கொளுத்தப்பட்டதும் புகை விட்டுக் கொண்டு எரிய ஆரம்பித்தன.

திடீரென்று எங்கேயோ உயரமான இடத்திலிருந்து பேரிகை முழக்கம் கேட்கத் தொடங்கியது. தம்ம்ம் தம்ம்ம்என்ற அந்தக் கம்பீரமான சத்தம் வான வெளியில் எட்டுத் திக்கிலும் பரவி அதம்ம்ம் அதம்ம்ம் என்ற பிரதித்தொனியை உண்டாக்கிற்று. உறையூரின் மண்டபங்களும், மாடமாளிகைகளும், கோபுரங்களும் கோட்டைவாசல்களும் சேர்ந்து ஏககாலத்தில் அதம்ம்ம் அதம்ம்ம் என்று எதிரொலி செய்தன. சற்று நேரத்துக்கெல்லாம்அந்தச் சப்தம் யுத்தம்ம் யுத்தம்ம் என்றே கேட்கத் தொடங்கியது.

இடி முழக்கம் போன்ற அந்தப் பேரிகை ஒலியைக் கேட்டதும் பொன்னனுடைய உடம்பில் மயிர்க் கூச்சம்உண்டாயிற்று. அவனுடைய ரத்தம் கொதித்தது. நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டன. வள்ளியோ நடுங்கிப்போனாள்.

"இது என்ன இது? இம்மாதிரி ஓசை இதுவரையில் நான் கேட்டதேயில்லை!" என்றாள்.

"யுத்த பேரிகை முழங்குகிறது" என்றான் பொன்னன். அவனுடைய குரலைக் கேட்டுத் திடுக்கிட்ட வள்ளி, "ஐயோ,உனக்கு என்ன?" என்று கேட்டாள்.

"ஒன்றுமில்லை, வள்ளி! எனக்கு ஒன்றுமில்லை" என்றான் பொன்னன். சற்றுப் பொறுத்து "வள்ளி! யுத்தத்துக்கு நான்கட்டாயம் போக வேண்டும்!" என்றான்.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X