அதிகார விளக்கம்: காதலரின் செயலால் ஏற்பட்ட ஊடலையும் மனக்கசப்பையும் தலைவி தனது நெஞ்சுடன் உரையாடி வெளிப்படுத்துகிறாள். கோபம் இருந்தாலும் அன்பு குறையாததால், மனம் காதலரையே மீண்டும் நாடும் நிலை இங்கே வெளிப்படுகிறது.
| எண் | குறள் |
|---|---|
| 1291 |
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது பொருள்: நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?
|
| 1292 |
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு பொருள்: என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!
|
| 1293 |
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல் பொருள்: நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?
|
| 1294 |
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று பொருள்: நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.
|
| 1295 |
பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு பொருள்: என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.
|
| 1296 |
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு பொருள்: காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
|
| 1297 |
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு பொருள்: தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.
|
| 1298 |
எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு பொருள்: உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.
|
| 1299 |
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி பொருள்: ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?
|
| 1300 |
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி பொருள்: நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
|