For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீதி வரை ஒரு வாழ்க்கை-அகிலோதயன்

By Staff
Google Oneindia Tamil News

கைம்பெண்ணே கவலை விடு!
கணவன் இறந்தால்
மனைவிக்குப் பெயர் விதவை
மனைவி இறந்தால்
கணவனின் பெயர் ...?
முதல் முறை மனைவியாகும்
பெண்ணின் பெயர் இரண்டாம் தாரம்!
இரண்டாம் முறை கணவனாகும்
ஆணின் பெயர் ..?

கண்ணகிகளுக்கு
கற்பு
கோவலன்களுக்கு ..?

இப்படி கரும்பலகையில்
கருப்பெழுத்தால் எழுதிய தீர்ப்பையா
கைம்பெண்ணே நீ
கண்ணாடி போட்டுப்
படித்துக் கொண்டிருக்கிறாய்..?

இங்கே முயலுக்கு
மூன்று கால் என்று
சொல்பவனே அறிவாளி!
நான்கு கால்களோடு
நடந்தே வந்தாலும்
பேசத் தெரியாத
முயல்கள் முட்டாள்களே!

ஏன் தெரியுமா?
நம் நீதி தேவதைக்கு
கண்கள் கட்டப்பட்டு விட்டது!
காதுகள் மட்டும்தான் கேட்கும்!

படைத்தவன் கேட்கிறான்
என்று
பறந்து கொண்டிருக்கும்போது ..
இறகை கொடுக்கச் சொல்லும்
இங்குள்ள பஞ்சாயத்துக்கள்!

கோயில் சாமி கூட
முதலில் கல்தானடியம்மா!
கடவுள் தந்த வாழ்க்கையே
கடைசிப் பக்கம் இல்லாத
கதையாக இருக்கையில்,
இடையில் வந்த வாழ்வுக்கா
இறுதிப் பக்கம் இருக்கும்
என நம்பினாய்?

ஒரு சூரியன்
உதிர்ந்து விட்டால்
இருளைப் போக்க வரும்
இன்னொரு சூரியனை
இங்குள்ள யாரும் எதிர்ப்பார்களா?

பிறகு ஏன்
வடமில்லாத தேரை இழுக்க
வரிசையில் வந்து நிற்கிறாய்?
தோட்டா இல்லாத
துப்பாக்கி கண்டு
தூரச் செல்கிறாய்?

எழுந்து வா பெண்ணே!
வேர் விடுக்கும் விதைதான்
பூ பூக்கும்!
விரிந்த உலகத்தில்
வீதி வரை மட்டுமே
வாழ்ந்தது போதும்!

விசிறியில் காற்றில்லை
வீசும் உன்
விரல்களில் இருக்கிறது!
சடங்குகள் நமக்கு
பன்னீர் தெளிக்க வந்தால்
பாதை விடு!
கண்ணீர் அளிக்க வந்தால்
கதவைச் சாத்து!
தீக்குச்சிகளிடம்
நெருப்பாகவே இரு!
ஏனென்றால் அவைகளுக்குப்
பஞ்சுகளின்மேல்தான்
பற்றுதல் அதிகம்!

இதோ!
நம் வீட்டுக் கோழிக்கூட்டில்
பாம்பு தீண்டியது போக
பாக்கியிருந்தது
ஒரேயொரு கோழிதான்
இன்று
ஏழெட்டு இல்லையா?
கோழியை விடவா நீ
கோழையாகி விட்டாய்?
எழுந்திரு
முகம் கழுவு
பாத்திரத்தை விளக்கினால்
பழசெல்லாம் அழுக்குகள்தான்!
மஞ்சள் பூசு!
பத்து கிராம் மஞ்சள் பூச
பல கோடி சட்டங்களா .. பலமாகச் சிரி!
பொட்டு வை பூ வை
இதில் எதை நிறுத்தினால்
இறந்த என் கணவன்
திரும்பி வருவான் என்று
கொட்டு வை!

புரிகிறதா பெண்ணே!
நம் சமுதாயம்
நகங்களின் மேல்தான்
வண்ணம் தீட்டியுள்ளது
ஆனால் ..
உள்ளே உள்ள அழுக்கோடுதான்
இன்னும்
உணவருந்திக் கொண்டிருக்கிறது!

முட்டையை
சைவம் என்று சொல்லி விட்டோம்
ஆனால்
முட்டையிடும் கோழியை
அசைவம் என்றுதான்
அட்டவணைப்படுத்தியுள்ளோம்!

பாலை பதப்படுத்துமளவு
உயர்ந்த நாம்
பால்காரன் வீட்டுக்குள் வந்தால்
தீட்டு என்று
பரிகாரம் செய்யும்
பந்தங்களோடுதான்
பழகிக் கொண்டிருக்கிறோம்!

நமது
வாழ்க்கை புதியது!
ஆனால்
வரைமுறைகள் பழையது!
காலம்
இந்தக் கரித்துண்டுகளை
யுகங்கள் வைரமாக்கும்!

ஆனால்
நமது வாழ்க்கை
வருடங்கள் வரைதானே!
யுகம் வரை
எப்படிக் காத்திருப்பது?
முந்திக் கொள்!
மூடர்களின் நாவிற்காக
நாட்களை நகர்த்தாதே!

தீர்ந்து போன
நொடிகளைக் கூட
அவர்களால
திருப்பித் தர இயலாது!
வாழும்போது
தண்ணீர் கூட தராமல்
இறக்கும்போது
பாலூற்றும் இந்த
நாகரீகத்திற்கா
இவ்வளவு நாளாய்
இளைத்துப் போனாய்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X