• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூறக் கூற நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும்.. வாஜ்பாய் கவிதைகள்!

|

-ராஜாளி

எப்படி ஒரு யுகத்தை பாரதி கவிதைகளால் கட்டி ஆண்டானோ, எப்படி பாரதி என்னும் பெரும்புலவன் தலைவன் ஆனானோ அதுபோல கவிஞன் ஒருவன் பிரதமரான கவிதை இது. ஒரு படைப்பாளியின் வெற்றி, தான் காண்பவற்றை, ரசித்தவற்றை, படித்தவற்றை, யோசித்தவற்றை அப்படியே வாசிப்பவனுக்கு கடத்துவது. இந்த வித்தையில் வித்தகனாக இருந்தார் வாஜ்பாய்.

கார்கில் போரில் பெரு வெற்றி கண்ட வாஜ்பாயின் மனசாட்சி போரற்ற ஒரு பூமி வேண்டும் என்பதை இப்படி பேசுகிறது.

Vajpayees poems

"நானிலம் இனி ஒருபொழுதும்
குருதியின் துளிகளைத் தாங்காது
விளை நிலங்கள் ஏதும் இனி
மரணத்தை அறுவடை செய்யாது
இனி ஒருபொழுதும்
வானம் தீ மழை பொழியாது

பொழிவது அமெரிக்கக் குண்டுகளோ
அன்றி ரஷ்ய வகையினதோ
சிந்தும் ரத்தம் ஓன்றே ஆம்
போரின் துயரம் நாம் பட்டோம்
அதன் விதியினின்றும்
நம் சந்ததியைக் காப்போம்
நாம் இனி-
போர் நிகழ விடமாட்டோம்."

போரில்லா ஒரு பூமி வேண்டும் என்பதை எழுத்தில் வடித்த அந்த கலைஞன், யதார்த்தத்தில் தன் நாட்டு குடிகாக்க தன் சொந்த விருப்பு வெறுப்புகளை தாண்டி எந்த எல்லைக்கும் செல்வேன் என்று எடுத்துக்காட்டிய தினமே கார்கில்லில் வெற்றி கொண்ட தினம்.

மொரார்ஜி தேசாயின் ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர், ஜனசங்கத்தின் தலைவர் பின்னர் பிரதமர் என்றெல்லாம் சிகரங்களை தொட்டாலும் கவிஞர் வாஜ்பாயின் உள்ளம் ஏனோ கடைகோடியில் இருக்கும் தொண்டனிடமும் விளிம்பு நிலை மக்களிடமுமே இருப்பதை தெள்ளென காட்டுகிறது இந்த கவிதை.

நெடிதுயரத்தில் என்னை ஏற்றி வைக்காதீர்
"நெடிதுயர்ந்த ஒரு மலையில்
மரங்கள் வேர் கொள்ளா
செடி கொடிகள் வளரா
புல்லும் கூடப் பிளைத்திராது

உயரே செல்லச் செல்ல
ஒரு மனிதனின் தனிமை கடுகும்
அவன் தனது சுமைகளைத்
தானே தாங்கி நிற்கிறான்"

உயரம் தனக்கு சிரமம் என்று என்று எடுத்துரைக்கிறார் அந்த மக்களின் கவிஞர்

பனிக்கால கர்ப்பத்தினின்று
கிளம்பிவரும் குழவிச் சூரியன்
கிழக்கின் மடியில்
தவழத் தொடங்கும் போது
என் தோட்டத்தில்
ஒவ்வொரு இலையிலும்
பொன்னொளி சுடர்விடுகிறது.

சூரியன் ஒரு நிதர்சனம்.
அவனை இல்லை என்ன முடியாது.
ஆனால் பனித்துளியும்
ஒரு சத்தியம் தானே.

கணநேர சத்தியம்
என்பது வேறு விஷயம்.
அந்தக் கணங்களை நுகரவே
நான் ஏன் வாழக்கூடாது?

சூரியன் மீண்டும் எழுவான்
வெய்யிலோ மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில்
பனித்துளிகள்
எல்லாப் பருவங்களிலும்
காண இயலாது."

இந்த நிமிடம் நிதர்சனம் என்பதையும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அழகானது, கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து செல்வோம் என்ற வாழ்வியலின் தத்துவத்தை அழகியலோடு கலந்து சொல்கிறார் கவிஞர் வாஜ்பாய்.

மரணத்திடம் கம்பீரம்
"மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.

வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
ஏன் பயம் கொள்ள வேண்டும்?

மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரிட்சித்துப் பார்."

மரணம் மறுக்கமுடியாத இயற்கையின் கொடை. அதைக் கண்டுதான் எத்தனைபேருக்கு அச்சம். அந்த மரணத்தைக் கூட மரணமே நேரில் வா என்று நெஞ்சுரத்தோடு அழைக்கிறார். வாழ்வின் நிறைவே மரணம்தான் என்றுரைக்கிறார் கவிஞர்.

இப்படி கவிஞர் வாஜ்பாயின் கவிதைகளை கூறக் கூற நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும்.

(வாஜ்பாய் மறைந்து 16 நாட்களாகி விட்டன)

English summary
Former PM Vajpayee has written number of poems and here is a look on them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X