• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடத்தில் இட்ட தீபங்கள்

By Staff
|

நேரடித் தொடர் வண்டிகள்,பேருந்துகள் அனைத்தும் புறப்பட்டுப் போய்விட்ட அகால வேளையில் சென்னையில் உறவினர்ஒருவரின் பிரிவுச் செய்தி கிடைக்கிறது. உடனே புறப்படுகிறேன்.

தென்காசி, செங்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரை, மணப்பாறை, திருச்சி, உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம்,விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம், தாம்பரம் என்று குறுக்கு வெட்டாக தமிழ்நாட்டின் ஒரு கணிசமான பகுதி வழியாக 22மணி நேரம் தொடர்ந்து பிரயாணம் செய்கிறேன். தமிழ் நாட்டின் உணர்வுகளைக் கொஞ்சம் நேரிடையாகவே நாடிப் பிடித்துப்பார்க்க இது உதவுகிறது.

முதலில் கண்ணையும், கருத்தையும் கவர்வது கடைகள்தோறும் கட்டித் தொங்க விடப்பட்டுள்ள தமிழ் சஞ்சிகைகள்.. இவைஅநேகமாக வாரம்தோறும் வியாழன், வெள்ளி தினங்களில்தான் வெளிவரும்..பெரும்பாலான பத்திரிக்கைகளில் அட்டைப்படக்கதையாக இடம் பெற்றிருப்பது இலங்கைப் பிரச்னைதான். அதுவும் ஈழம்..குறிப்பாக, பரபரப்பான செய்திகளை வெளியிடும்நக்கீரன், நந்தன், நெற்றிக்கண், தராசு, தாகம் சஞ்சிகைகள்தான் இதில் முன்னணியில் நின்றன.

ஒன்று, "யாழ் வெற்றியைத் தொடர்ந்து தனி ஈழம் உருவாகிறது" என்றது.. மற்றொன்று,"தனி ஈழம் அமைவதால் இந்தியாவுக்குஆபத்தா?" என்று கேட்டிருந்தது. மற்றொன்று "மகா ஈழம் உருவான கதை" என்று தலைப்பிட்டிருந்தது.தெரிந்த செய்திகள்தான்எனினும், புதிய கோணங்களில் பரபரப்பையும் சேர்த்திருந்தன பத்திரிக்கைகள். இதன் பொருள் தமிழக வாசகர்களின் கவனம்முழுவதும் இலங்கைப் பிரச்னையிலேயே இருக்கிறது..அந்த தாகத்துக்கு தண்ணீர் வார்க்கிறார்கள் இவர்கள்.

கவனத்தை ஈர்த்த இன்னொரு விஷயம் வழிநெடுக சுவர்கள் தோறும் மின்னிய வண்ணச் சுவரொட்டி. - அது புதிய தமிழகம் கட்சிஇலங்கைத் தமிழர் ஆதரவு பேரணிக்கு மக்களுக்கு விடுத்த அழைப்பு. இலங்கை வரைபடத்துக்குள்ளே நின்று கொண்டுஅழைப்பது போல இந்த வண்ணச் சுவரொட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது..ஆனால், ராஜபாளையத்தில்?!.......

விடுதலைப் புலிகளின் இராணுவ உடை தரித்த ஒரு கம்பீரமான உருவம் கட்-அவுட்டாக வைக்கப்பட்டிருந்தது. தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைவருக்குத் தமிழ் நாட்டில் கட் -அவுட்டா என்றெண்னி அருகே சென்றுபார்த்தபோதுதான் அது வைகோ-வின் உருவத் தோற்றமென்று நமக்குப் புரிகிறது..கடல் கடந்து வாழும் தமிழர்களின் கலங்கரைவிளக்கே" என்கிற வாசகமும் அடியில் எழுதப்பட்டிருக்கிறது.

பக்கத்தில் ஒரு குரல் "என்ன அப்படி அதிசயமாகப் பார்க்கிறீர்கள்? தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்தின் உடையில் இவ்வளவுதைரியமாக இப்படி ஒரு கட்- அவுட் என்றா?" உண்மைதான். இத்தடைச் சட்டம் வந்ததும் ஏதேனும் ஒரு சரத்தின் கீழ் எப்படியாவதுஉள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயம் வந்து பலர் அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், எங்க தலைவர்துணிஞ்சுட்டார். புலிகளை ஆதரித்தால் கூடிக் கூடிப் போனால் என்ன தண்டனை தருவீர்கள்? என்ன தூக்குதண்டனையா?அதனால் என்ன நடக்கும். உயிர் போகும் அவ்வளவுதானே? அதற்கு மேல் ஒன்றும் நடக்காதே? உயிர் ஒருமுறைதான் போகும். அது ஒரு நல்ல இலட்சியத்துக்காகப் போகட்டும் என்று துணிந்து விட்டால்..? சரி. அப்படியே சாவதுஎன்றாலும் நாங்கள் சும்மா சாக மாட்டோம்" என்றவரை இடைமறித்தேன்.

"உங்கள் கடைசி வரிகளைத்தான் தீவிரவாதம் என்கிறார்கள்..அதனால்தான் தடை செய்திருக்கிறார்கள்"

பதிலாக அவர்,"காலிஸ்தான், காஷ்மீர், அஸ்ஸாம், நாகாலந்து, திரிபுரா என்று இடத்துக்கு இடம் தீவிரவாத இயக்கங்கள்இருக்கின்றன. இவற்றுள் எதைத் தடை செய்திருக்கிறீர்கள்? சாதி,சமயங்களின் பெயரால் எத்த்னை தீவிரவாத இயக்கங்கள்?இவற்றின் நிலை என்ன?"

gunsநான் சொன்னேன். "அவற்றில் எவையுமே ஒரு நாட்டின் பிரதமரைக் கொலை செய்யவில்லை என்று சொல்கிறார்களே?"

"அதனால்தான் தடையா? அப்படியானால், மகாத்மாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்சை ஏன் தடை செய்யவில்லை? இந்திராகாந்தியைச் சுட்டுக் கொன்ற அகாலிதளத்திற்கு ஏன் தடை விதிக்கவில்லை? செய்தார்கள்.. ஆர்.எஸ்.எஸ் சை மூன்று முறைசெய்தார்கள். பிறகு அரசே அவற்றை வாபஸ் பெற்றது. மூன்றாவது முறை அவர்களே நீதிமன்றம் சென்று தடையைஉடைத்தார்கள்."

"நாதுராம் கோட்ஸே என்ற தனிமனிதரை நீங்கள் எப்படி ஆர்.எஸ்,எஸ் என்ற இயக்கத்தோடு முடிச்சுப் போட முடியும்?" இது நான்

"நாங்க முடிச்சுப் போடலய்யா.."மே நாதுராம் கோட்ஸே போல்தீ ஹூம்" என்று அவர்களே நாடகம்

போட்டு முடிச்சைப் போட்டுக் கொண்டார்கள். இந்திரா காந்தியைக் கொன்றது சீக்கியர்.. அவரை அகாலிதளத்தோடு முடிச்சுப்போடுவது சரியில்லைதான்.. ஆனால், கைநாட்டுக் கூடப் போடத் தெரியாத அவர் மனைவியைத் தன் கட்சி சார்பாக நாடாளுமன்றதேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெறவும் வைத்ததன் மூலம் தானாகவே முடிச்சுப் போட்டுக் கொள்கிறதே அகாலிதளம்!!ஆக, அவர்களையெல்லாம் விட்டு விட்டார்கள். விடுதலைப்புலிகளை பிடித்துக் கொண்டார்கள். ஏன்னா, தமிழன் மட்டும்தான்இளிச்சவாயன்.. நாங்க என்ன பாவம் செய்தோம்..தப்பு செய்தவங்களுக்குத் தண்டனை கொடு.. ஆனால், தவிக்கும் தமிழர்கள்என்ன பாவம் செய்தார்கள்? அடிபட்டவன் தமிழன்.. மிதிப்ட்டவன் தமிழன்...சொத்து, -சுகம், -வருவாய்-, வசதி ஏன்,வாழ்க்கையையே தொலைத்து விட்டவன் தமிழன். அவனைக் காப்பாற்றச் சென்ற ராணுவம் அவனையே அடித்துக் கொன்றகொடுமை வேறெங்காவது நிகழ்ந்ததுண்டா?"

அகப்பட்டுக் கொண்ட 40,000 படைதான் இவர்கள் கண்களுக்கு தெரிகிறது. ஐந்து லட்சம் மக்களைப் பற்றி யார்கவலைப்படுகிறார்கள்? இலங்கைப் படை புலிகளை அழித்தொழிக்கச் சென்றது. அதன் பலன்களை அவர்களே அனுபவிக்கட்டும்என்று விட்டுவிடுவதுதான் நல்லது.. ஆனால், எந்தப் பாவமும் செய்யாத அப்பாவித் தமிழர்களின் உயிர் காப்பாற்றப் படவேண்டாமா? இவர்களுக்குத் தேவையான உணவு வகைகள் முறையாக விநியோகம் செய்யப்படுவதாக இலங்கை அமைச்சர்அனுதினமும் சொல்கிறார். காதில் பூச்சுற்றவும் ஒரு அளவில்லையா? ஐயா, உன் படைக்குத் தேவையானஉணவையும்,மருந்தையுமே உன்னால் விநியோகிக்க வக்கில்லை. அப்பாவித் தமிழர்களைப் பத்தி நீ எங்கேகவலைப்படப்போறே? இங்கேதான் இந்தியா தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று நாங்க சொல்கிறோம்"

"சரி,அப்படியே வைத்துக் கொண்டாலும் ஒரு அண்டை நாட்டின் உள்விவகாரங்களில் அவர்கள் சம்மதமில்லாமல் நாம் எப்படித்தலையிட முடியும்?"

"பங்களாதேஷ் நம் உள்நாட்டு விவகாரமா? பாகிஸ்தானிய உள்விவகாரம்தானே? நாம் தலையிட்டு,அந்த நாட்டைத் துண்டாடிதனி நாடே அமைத்துக் கொடுக்கவில்லையா? அவர்கள் என்ன மேற்கு வங்கத்தில் உள்ள வங்காளிகளையும் சேர்த்து என்ன மகாபங்களாதேஷா அமைத்து விட்டார்கள்? தனி ஈழம் வந்து விட்டால் மட்டும் அது தமிழ்நாட்டுடன் சேர்ந்து மகா ஈழமாக மாறும்என்று ஏன் கற்பனை செய்கிறீர்கள்? அன்று நாம் நடவடிக்கை எடுக்க முக்கிய காரணம் அங்கிருந்து இங்கு வந்த அகதிகளதானே?!அந்த பாரத்தை மேலும் தாங்க இயலாது என்றுதானே அன்று இந்தியா காரணம் சொன்னது? இன்றும் நிலைமை அதுதானே?அகதிகள் வந்து குவிந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.. இலங்கையை ஆள்பவன்பாகிஸ்தான்காரன் என்று வையுங்கள்.. ஈழம் என்றோ ஏற்பட்டிருக்கும். ஏற்பட இந்தியா உதவி இருக்கும்.

ஆனால், ஆள்பவன் சிங்கள ஆரியன். முன்னை நாள் இந்திய டுடே ஆசிரியர் இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரையில்,"உதவி செய்ய தமிழர்கள் நமது உறவுக்காரர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் தமிழர்கள்தான்அங்குள்ள பழங்குடிகள். அவர்களுக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று குடியேறியவர்கள்தான்சிங்களவர்கள். ஆகவே அவர்கள்தான் நமக்கு first cousins" என்கிற அர்த்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் கூட ஈழஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டு அணிகள் இருக்கின்றன. திராவிட இயக்கங்கள் ஆதரிக்கின்றன. ஆரிய பத்திரிக்கைகள்எதிர்க்கின்றன"

நான் கேட்டேன். "இந்தியர்கள் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் இருக்கட்டும். சந்திரிகாவே தமிழர்கள் எங்கள் எதிரிகளல்லர்.சகோதரர்கள்தான் என்று சொல்லியிருக்கிறாரே"

பதில் பளீரென வந்தது. "நாங்கள் மட்டும் என்ன மாத்தியா சொல்றோம்? நங்களும் அதையேதான் சொல்றோம். இதில் நினைப்புமட்டும் போதாது.செயலும் வேண்டும். ஆனால், இவர்களது செயல் எங்களை அடிமையாக்குவதாகத்தானேஇருந்தது?அங்குதானே பிரச்னை ஆரம்பித்தது? வாழு,வாழ விடு என்கிற தத்துவம் இலங்கையை எவ்வளவோமுன்னேற்றியிருக்குமே!!. நான் மட்டுமே வாழுவேன்.. நீ எக்கேடோ கெட்டுப் போ என்று சொன்னதால்தானே பிணக்கு, பிரச்னைஎல்லாமே.."

"அஹிம்சையை விரும்பும் பெளத்தர்களும், "லோக சுகினோ பவுந்து" என்கிற தத்துவத்தில் ஊறிய இந்துக்களும் ஒன்றுபட்டுஒற்றுமையாக வாழ்ந்திருக்க வேண்டுமே? எங்கே தவறு நிகழ்ந்தது?" இது நான்.

"பெளத்த சாமியார்களுக்கு ஆன்மீகத்தை விட அரசியலில் அதிக ஆசை..அஹிம்சையைக் கடைப்பிடித்தார்களோ இல்லையோவன்முறையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தார்கள். பிரச்சாரம் செய்தார்கள். பண்டார நாயக்கவைக் கொன்றதே ஒரு பெளத்தசாமியார்தான்.அந்த வழக்கில் முதல் குற்றவாளி ஒரு பிரபலமான பெளத்த மடத்தின் பெரிய சாமியார். 58-இல் நடந்த வகுப்புக்கலவரங்களுக்கு மூல காரணமும் முழுமுதல் காரணமும் இவர்கள்தாம். கதிர்காமம் போகும் வழியில் "கருத்துனா" என்னுமிடத்தில்ஒரு முருகன் கோவில் இருக்கிறது. அதன் பூசாரி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். அந்த இடத்தை மட்டும் இன்னமும்வெள்ளையடிக்காமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.

"பறதெமனோ" என்று இழித்துரைக்கப்பட்டபோதும் அமைதி காத்தவர்கள்தான் தமிழர்கள். இனியும் தாங்க முடியாதுஎன்றபோதுதான் ஆயுதங்களைக் கையில் எடுத்தார்கள். வலுக்கட்டாய்மாக அவர்கள் கைகளில் ஆயுதங்களைத் திணித்து விட்டுஅவர்களைத் தீவிரவாதிகள் என்பது என்ன நியாயம்? இருப்பதை இவனுடன் பங்கு போட்டுக் கொள்வதா என்றுதான்சிங்களவர்கள் தமிழர்களை ஒதுக்குகிறார்கள். ஆனால், இதனை விட எத்தனையோ பங்கு உற்பத்தி செய்யலாமே, எல்லோரும்ஒற்றுமையாக,சந்தோஷமாக வாழலாமே என்று அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். மதிநுட்பத்திலும்,புத்திக் கூர்மையிலும் இங்குள்ள பிராமண சகோதரர்களை உயர்வாகச் சொல்வார்கள். ஆனால், இவர்களை விடஇலங்கைத் தமிழர்கள் ஒருபடி மேல். இன்று அகதிகளாக உலகெங்கும் பரவி வாழும் இவர்கள் கெளரவம் மிக்க இலங்கைப்பிரஜைகளாக உலகெங்கும் சென்று பொருளீட்டி இலங்கையை ஒரு குபேர பூமியாக்கி விட்டிருப்பார்கள். சிங்களவர்களின் குறுகியமனப்போக்கு அதைச் செய்ய விடாமல் தடுத்து விட்டது."

அவர் தொடர்ந்தார்." இன்று துப்பாக்கிக்கும்,தோட்டாவுக்கும் இலங்கை அரசு செலவழிக்கும் பணத்தை நாட்டின் மேம்பாட்டுதிட்டங்களில் செலவழித்திருந்தால் தமிழர்கள் கேட்டது மட்டுமில்லாமல் அதற்கும் மேலாகவே கொடுத்திருக்கலாம். இப்போதுபட்ஜெட்டில் பாதி படைக்காகப் பயன்படுகிறது. அது போக 175 மில்லியன் டாலர்கள் அதிகம் செலவு செய்யப் போகிறார்களாம்.அன்றாட உபயோகப் பண்டங்கள் அத்தனைக்கும் வரிக்கு மேல் வரி.. நாட்டின் உணவுக்காக ஓரு ஆண்டு முழுவதும்தேவைப்படும் தொகை போரில் வீணானால் எந்த நாட்டால், எத்தனை காலம் தாக்குப் பிடிக்க இயலும்? இந்த நிலை குறித்து,எங்கள் நாடு இப்படி சிதைந்து சின்னாபின்னமாகிறதே என்று கண்ணீர் வடிக்காத இலங்கைத் தமிழர்கள் யாரேனும்இருப்பார்களா?"

"சரி.. இவ்வளவுக்குப் பிறகும் சர்வ தேச நாடுகளீன் ஆதரவு இலங்கைக்குத்தானே இருக்கிறது?"

"இருக்காதா பின்னே. இலங்கை அரசுக்கு ராஜ தந்திர தூதுவராலயங்கள் உலகெங்கும் இருக்கின்றன. இலங்கைத்தமிழர்களுக்கென்று யார் இருக்கிறார்கள்? மேலும் ஊடகங்கள் மேற்கத்திய நாடுகளின் கைகளில்..அமெரிக்கா சீனாவுடனானஆதிக்கப் போட்டியில் இலங்கையை அரவணைத்துப் போகிறது. அதுவும் நேரிடையாக இல்லாமல் தன் சிஷ்யப்பிள்ளை இஸ்ரேல்மூலம்..நேரிடையாகத் தலையிட்டுப் பார்க்கட்டும். இன்று இலங்கை அரசின் பக்கம் இருக்கும் சீனா இலங்கைத் தமிழர் பக்கம்திரும்பும். மேலும் ஒரு நாட்டின் இறையாணமை என்ற விஷயம் பல நாடுகளைக் குழப்புகிறது. ஆனால், மீறப்படும் மனிதஉரிமைகளை இதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சாயம் வெளுத்து விடும். விடுதலைப் புலிகளின் சொல்லையும் செயலையும்தீவிரவாதம் என்று விமர்சிப்பவர்கள் சிங்கள வீரவிதானை அமைப்பின் ஒரு மேடைப் பேச்சையாவது கேட்கட்டும். பிறகுசொல்லட்டும். எது தீவிரவாதமென்று? அடிப்பவன் அடிபடுபவனை தீவிரவாதி என்றால் என்ன சொல்வது?

"சரி, கலைஞரே உங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லையே?"

"இலங்கைத் தமிழர் ஆதரவில் இன்று முதலிடம் வைகோவுக்கு. இரண்டாமிடம் டாக்டர் ராமதாஸ். மூன்றாமிடம் புதிய தமிழகம்கிருஷ்ணசாமி. நான்காவது இடத்தில் இருக்கக் கலைஞருக்கு விருப்பமில்லை. எனவே, முழு தமிழர் ஆதரவு- புலிகள் எதிர்ப்புஎன்றொரு வினோத நிலை. அறிஞர் அண்ணா மூதறிஞர் ராஜாஜியை குல்லுகப்பட்டர்" என்றார்.. இன்று ராஜாஜி இருந்திருந்தால்அந்தப் பட்டம் கலைஞருக்குத்தான் பொருந்தும் என்று சொல்லியிருப்பார். மாநிலத்தில் தமிழர் ஆதரவு கொட்டில் ஒர் தட்டு..மத்தியில் புலிகள் எதிர்ப்பு ஜால்ராவில் ஒரு தட்டு என்று சாணக்கிய அரசியல் நடத்துகிறார் அவர்"

"சரி,உங்கள் பெயரென்ன? உங்கள் கருத்துக்கள் தெளிவானதாகவும்,தீவிரமானதாகவும் இருக்கிறதே?"

"அது முக்கியமல்ல. மேலும் நான் சொன்ன கருத்துக்கள் எல்லாம் எனது ஏக போக சிந்தனையின் விளைவு அல்ல. தமிழகத்தில்வாழும் லட்சக்கணக்கான மக்களின் ஒட்டு மொத்தக் கருத்துக்கள்தான். ஆகவே, என் கருத்தென்று வேண்டாம்"

"இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன்..நீங்கள் என்ன பத்திரிக்கையாளரா?"

"இல்லை"..

"நம்ப முடியவில்லை" - இது நான்.

"நம்ப முடியாது. ஏனெனில், இங்குள்ள பத்திரிக்கைகள் தங்கள் எஜமானர்களின் உத்தரவின் பேரில், தங்களுக்கு இனிக்கும்,தாங்கள் திணிக்கும் கருத்துக்கள்தாம் தமிழகத்தின் கருத்து போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். எனவே,இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கூட தமிழகத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகிறது. நீங்கள் யாரோ எனக்குத் தெரியாது.என் கருத்துக்கள் முழுவதையும் நீங்கள் ஏற்க வேண்டும் என்றோ பிரசுரிக்க வேண்டுமென்றோ நான் கோரவில்லை. ஆகவேதான்,என் பெயரைக் கூட நான் சொல்லவில்லை. நன்கு சிந்தியுங்கள்.. உங்களுக்கு எது நியாயம் என்று படுகிறதோ அதைவெளியிடுங்கள். எதைச் செய்தாலும் தங்கள் சொந்த நாட்டிலேயே கைவிடப்பட்ட, அண்டை நாட்டாலும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத, மேலைத் தோல் ஊடகங்களால் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய காரணங்களால் திட்டமிட்டுப்பழிவாங்கப்படும், தினம் தினம் கண்ணீரையும் , செந்நீரையும் சிந்தும் லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழ் மக்களின்பரிதாப நிலையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்து எதையும் செய்யுங்கள்.

தர்மத்தைச் சூது கவ்வும். ஆனால் தர்மம்தான் வெல்லும். விடை தாருங்கள் நண்பரே! உங்களை தமிழ் வெறியராக இருக்கச்சொல்லவில்லை. மனித நேயம் உள்ளவராக இருங்கள். அது போதும். வணக்கம்

அன்று நியாயம் கேட்டு கண்ணகி எரித்த கூடல் மாநகர் - அதுதான் மதுரை - வருகிறது. விடைபெற்றுச் செல்கிறார் நண்பர். ஆனால்,அவர் சொல்லிச் சென்றவை இன்னமும் என் சிந்தையில் நிற்கின்றன.

எத்தனைக் குடத்தில் இட்ட தீபங்கள் ஐயா இந்த நாட்டிலே?!!!

எழுத்தாக்கம் - ஆஷிப் மீரான்(aj@emirates.net.ae)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more