Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகங்கள்

Subscribe to Oneindia Tamil

ஒரு சின்னக் காகிதத்தில் புயலாய் எழுதப்பட்டிருந்த சிலவரிகள் என் சந்தோஷப்பூக்களையெல்லாம் பறித்துக்கொண்டது. கடித முடிவில் பரத் ரங்கராஜன் என்றுகையெழுத்திட்டிருந்தது.

பள்ளிநாட்களிலிருந்தே பரத் தன் பெயரோடு தனது அப்பாவின் பெயரையும் சேர்த்துதான் எழுதுவான். நான்காவது வரை டில்லியில் படித்ததால் நிறையவடக்கத்திய வாடை பேச்சிலும் செயலிலும் தெரியும்.

எல்லாம் ஒரு வருஷம்தான் பிறகு அந்த அச்சா டீக் ஹை என்னும் பேச்சுவழக்கமும், காலை சாப்பாடு ரொட்டி சப்ஜி என இருந்ததும் அவனிடமிருந்துவிலகிக்கொண்டன.

Shylajaதமிழ் வாத்தியார் பொண்ணு புவனா. அவகிட்ட தமிழ் கத்துக்கோ என்று அப்பா எதிர் வீட்டிலிருந்த என்னிடம் அவனைத் தமிழ் படிக்க அனுப்பி வைத்தார். அந்தபத்து வயதில் நான், என்னைவிட இரண்டு வருஷம் பெரியவனான பரத்திற்கு தமிழ் கற்று கொடுத்தது புது அனுபவம்தான்.

எனக்கு பரத்தின் பணக்காரத்தனமான செய்கைகளை வேடிக்கை பார்ப்பது அப்போது மிகவும் பிடித்திருந்தது. விலை உயர்ந்த ஷூ, உடை பற்றியெல்லாம் தான்அணிந்து வந்ததைப் பற்றி மிகவும் விவரித்துப் பேசுவான். அவன் அப்பா தொழிலதிபர். அடிக்கடி வெளிநாடு போவது வழக்கம்.

சின்ன வயதிலேயெ பரத் அவருடன் அமெரிக்கா போய் அங்கு தான் பார்த்த இடங்களை சுவாரஸ்யமாகச் சொல்லுவான். நயாகரா நீர் வீழ்ச்சி முதல் டிஸ்னிலாண்ட்வரை அவன் சொல்வதை வாய்பிளந்து கேட்பேன்.

புவனா..உனக்குத்தான் எதையும் தெரிஞ்சிக்கறதுன்னா ரொம்பப் பிடிக்கும் இல்லயா அதான் நானும் உன்கிட்ட சொல்றேன் வேற யார்கிட்டயாவதுசொன்னா பெருமை அடிச்சிக்கிறேனு நினைப்பாங்க.

ஆனா உன் ஆர்வம் எனக்குத் தெரியும். அதனாலே நீ மத்தவஙகிட்டேருந்து வித்தியாசப்படறே. ஐலைக் இட்" என்றான்

நானும் பரத்தும் செஸ் ஸ்க்ராபிள் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகள் தான் அதிகம் விளையாடுவோம். அந்தப் பத்து பன்னிரண்டுவயதில் பரத்திடம் நான் கொண்ட நட்பு அன்பாய் பரிணமித்தது.

ப்ளஸ் டூ முடித்ததும் மேற்படிப்புக்கு அவனை அவன் அப்பா நாக்பூரின் என்ஜினீயரிங்காலேஜிற்கு அனுப்பிவைத்தார். அவ்வப்போது மெயில் அனுப்பினாலும் தபால்மூலம் கடிதம் போடுவதை நாங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தோம்

கடிதங்கள் ஒவ்வோன்றும் ஒரு பொக்கிஷம். கையெழுத்தும் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகம். எழுத்தில் உருவமேத் தெரிவதுபோன்ற பிரமையைஉண்டாக்கும். தொலைவிலிருந்தாலும் கடிதம் கைக்கு வரும்போது அருகில் வந்துவிட்ட உணர்வை ஏர்படுத்துபவை கடிதங்கள் மட்டுமே அதனால்தான்அந்தப் பழக்கத்தை நானும் பரத்தும் நிறுத்தக்கூடாது என முன்பே பேசி வைத்திருந்தோம்

நாக்பூரில் பரத் தன் மாமா வீட்டில் தங்கிப் படித்து வந்தான். விடுமுறைக்கு ஊருக்கு வந்துகொண்டிருந்தான். முதலில் மாதம் ஒருமுறை பிறகு வருடத்தில் இரண்டுதடவை என ஊருக்கு வருவது குறைந்து போனது. படிப்பு அதிகமிருக்குமே?

எனது கல்லூரி விடுமுறை நாட்கள் வந்தப்போது உல்லாசப்பயணத்திற்கு வடக்கே சில இடஙகள் செல்ல நேர்ந்தது அதில் நாக்பூரும் ஒன்று.

"புவனா நாக்பூரில் பரத்தை பார்த்து விட்டு வாஎன்றார் அவன் அப்பா ரங்கராஜன்.

கண்டிப்பா போறேன் அங்கிள்"

நாக்பூரில் நான் தங்கியிருந்த ஹோட்டல் அருகில்தான் அவனது மாமா வீடு இருந்தது. வீடு வெளித்தோற்றத்திலேயே வசதியாய் தெரிந்தது. க்ரானைட்பளபளத்தது. மாளிகை போல பெரியதாய் கண்னை அடைத்தது

திருச்சி ஆண்டார் தெருவில் ஒரு சிறுவாடகை வீட்டில் வசிக்கும் பள்ளி ஆசிரியரின் மகளான எனக்கு பரத்தைதவிர மற்ற பணக்கார முகங்களிடம் பழகவும்அச்சம்தான் .பழைய சோறில் முந்திரி தாளித்த மாதிரி பொருத்தமில்லாத சங்கடம்.

"கோன்? என வாசலிலியே ஒரு குரல் அதட்டியது, வீட்டுகூர்க்கா போலும். அவனது உடை அதை ஊர்ஜிதம் செய்தது. போன் செய்துவிட்டுவந்திருக்கனுமோ? ரங்கராஜன் "அப்படியெல்லாம் இல்லை எப்போது வேண்டுமானாலும் போகலாம்" என்பதுபோலத்தான் சொல்லி அனுப்பி இருந்தார்

"புவனா வந்திருப்பதாய் உள்ளே பரத் என்பவரிடம் சொல்?" என்று ஹிந்தியில் அவனிடம் கூறினேன்.

அச்சாஜி

அவன் வேகமாய் உள்ளே சென்று திரும்பிவரும்போது உடன் பரத்தும் வந்துவிட்டான்,

ஒரு வருஷமிருக்குமா அவனைப்பார்த்து? இருக்கும். ஊர்ப்பகக்ம அவன் ஒரு வருஷமாய்த்தான் வரவில்லை. நீண்ட நாள் கழித்துப் பார்க்கையில் அவனது உருவமாறுதலை உணரமுடிந்தது. நன்றாக ஒரு சுற்று பருத்துவிட்டான்

அதனாலேயெ ஏற்கனவே சிவந்த அவன் நிறம் மேலும் சிவந்துவிட்டிருந்தது. மீசை ஆண்களுக்கு அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது என்று நான்சொல்லியிருக்கிறேன் அவனிடம்.

அதற்காகவொ என்னவோ இப்போதும் ட்ரிம் செய்த மீசையுடன் காட்சி அளித்தான்.

" வாட் எ க்ரேட் சர்ப்ரைஸ். வா புவனா வா வா.....மெயில்ல லெட்டர்ல எழுதல, அப்பாகூட சஸ்பென்ஸா வச்சிட்டார். போன்ல நேத்துகூடஅப்பாகிட்டபேசினேன். தெரிவிக்கவே இல்ல. "

சும்மா உன்னை திகைப்படையவைக்கலாம்னுதான் இரண்டுபேருமா திட்டம் போட்டு வச்சோம்"

பரத் தனது மாமியிடம் என்னை அழைத்துக்கொண்டுபோய், புவனா.என் ஸ்னேஹிதி.

அறிவுஜீவி. சதா ஏதாவது படித்துகொண்டிருப்பாள். பாட்டு படம் வரைவது என எல்லா கலைகளிலும் கெட்டிக்காரி. என் சின்னவயது தமிழ்ஆசான்...ஹிப்போக்ரஸி இல்லாத யதார்த்தப் பெண். இந்த காலத்து இளம் பெண்களில் புவனா கொஞ்சம் வித்தியாசமானவள். அதனலேயே எங்கள் நட்புஇன்னமும் பலமாக இருக்கு" என்றதும் அவர்கள் வியப்புடன் என்னைப் பார்த்தது சங்கடமாயிருந்தது,

பரத் இன்னும் என்னவோ புகழ்ந்து தள்ளினான். நான் போதும் பரத்ப்ளீஸ் என்றேன் வெட்கத்துடன்.

புவனா தங்கிட்டு போம்மா, பரத் நம்ம வீட்டை சுத்திக்காட்டுப்பா புவனாக்கு.. நாங்க ஒரு மீட்டிங் போகணும் வரோம்மா..

அவர்கள் போனதும் பரத் என்னிடம் புவன் கொஞ்ச முன்னடிதான் நான் உன்னை நினைச்சேன் ஒரு போர்ட்ரெய்ட் வரையும்போது கலர் காம்பினேஷனில்குளறுபடியாச்சு. நீ இருந்தால் கரெக்டா சொல்லித்தருவேன்னு நினைச்சேன் தெரியுமா?"

அதெப்படி பரத், மனசும் கண்ணும் ஒரே திக்கில் இருந்தா குழப்பம் வருமா என்ன?

கண்ணு ஒரே இடத்துலதான் இருந்தது. ஆனா மனசுதான்...குறும்பாய் சொல்லிவிட்டு பரத் சிரிக்கவும் என் மனசு எங்கோ பறக்க ஆரம்பித்தது.

என்ன இது.... இதுதான் காதலா? அன்பின் விளிம்பில் நிலைகுலைந்து சரியும்போது அது காதலாகிவிட சாத்தியம் உண்டா? இருக்காது.... இருக்கவும்வேண்டாம் ஏனெனில் அன்பில் முழுமை இருக்கும். அது அற்ப சந்தேகங்களில் ஆட்டம் காணாது. ஆனால் காதல் அப்படி அல்ல. அந்த உணர்வு வந்ததுமேபொஸஸிவ்னெஸ் வந்துவிடும்.

நட்பைக் கொச்சைபடுத்தும் நிலையாகக் காதல் குறுக்கிடுமானால் அது தேவையே இல்லையென்று பரத்திடம் பேசும்போது சொல்லிவிடவேண்டும்.ஏதோ நினைத்தபடிஇயந்திரம்போல அவன் பின்னேயே வீட்டை சுற்றிப்பார்த்தபடி நடந்தேன்.

திடீரென பரத் என்னிடம்,புவன்.. அன்பு வேறு காதல் வேறா நீ சொல்லேன் ப்ளீஸ்?

இப்படி அவன் கேட்டதும் அதிர்ந்தேன். சற்றுமுன் என்னை ஆக்கிரமித்த கேள்வி விஸ்வரூபமெடுத்தது.

பரத் தொடர்ந்தான்.புவன் உன்னிடம் என் மாமா பெண் ராதிகாவைப் பத்தி சொல்லிஇருக்கேனோ? இல்லைன்னு நினைக்கிறேன் இப்போ சொல்றென்கேளு. அவளுக்கு உன் வயசிருக்கும் ஜாதிக் குதிரைமாதிரி இருக்கா. இப்போதான் அமெரிக்காலேந்து படிப்பு முடிச்சி வந்திருக்கா.

அவளைப் பார்க்கிறப்போ எனக்கே ஒரு பயம்தான் ...உன்னிடம் இருக்கிற அடகக்ம் அமைதி பணிவு எதுவுமே அவகிட்ட இல்ல. என்னவோ பிறந்துவளர்ந்ததே அமெரிக்காபோல பேசறா. படிக்கநாலுவருஷம்தான் போனா. அதுக்கே இவ்ளோ அலட்டல். புத்திசாலித்தனமும் போதாது படம் வரைவதுபாடறதுன்னு எதுவும் தெரியாது. எப்போப் பாத்தாலும் டேட்டீங்க் பத்தியே பேசறா... இப்போ கூட ஏதோ பாய்ஃப்ரண்ட்கூட சுத்தப்போயிருக்கா அந்தராதிகா. அதெல்லாம்

நியாயப்படுத்தறா...ஐ ஹேட் ஹர் புவனா

நீ அவகிட்ட மனம் விட்டுப் பேசினியா இல்லையா?

இல்லை நான் பிடிக்கலேன்னா மெளனமா விலகிடுவேன்"

அதுதப்பு பரத். மெளனம் எப்போதும் சரிஅல்ல, நம்முடைய சொற்களும் செய்கைகளும்தான் நம்முடைய பலம். அதை அவ்வப்போது பிரயோகப்படுத்தத் தான்வேணும்

இல்லை புவனா ஏதாவ்து சொல்லி மாட்டிக்கறதைவிட மெளனம் தேவலை இல்லயா?

எப்படி பரத். அது சுயநலம் ஆகாதா? வெளிப்படையான மனசுடன் பேசும் பேச்சும் செயல்களும் நம்மைச் செம்மைப்படுத்தும். மனசிலேயே போட்டுஉழலும்போது அது எதிராளிக்கு யூகங்களையும் கற்பனைகளையும் வளர்த்துக்கொள்ள சாதகமாகிவிடும்

"அப்படியா சொல்றே புவனா ...?"

இல்லயா பின்ன? பேசிய வார்த்தைக்கு ஒரு அர்த்தம்தான். பேசாத மெளனத்துக்குப் பல அர்த்தம்

"உண்மைதான்....நீ சொன்னதை நான் யோசிக்கணும்... அப்புறம் புவனா இந்த தடவையும் நான் ஊர் வரமுடியாது. பரிட்சை சமயம் படிக்கணும். கடைசி செமெஸ்டர்முடிச்சி ஒருவழியா ஊர்வந்துடப் போறேன். வந்ததும் நாம் வழக்கம்போல செஸ் விளையாடணும்...மனம் விட்டுப்பேசணும்..படித்த புக் பத்தி...அதில் பதிஞ்சகருத்துக்களைப்பத்தி...".

"சரி பரத்...அதுவரை லெட்டர் அல்லது மெயில் கூட நேரமிருந்தால் அனுப்பு. சொல்ல மறந்துட்டேனே பரத்... சமீபத்துல நான் ஒரு கன்னட நாவல்மொழிபெயற்பில் கதை படிச்சேன் அதில் முன்னுரையில் கதாசிரியர் அந்த நாவல்பத்தி எழுத நேரில் சில இடங்களுக்குச் சென்றபோது தனக்கு ஏற்பட்டஅனுபவங்களைச் சொல்கிறார்

அது ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தது. எப்போதுமே நாடக நடிகர்களிடம் கேட்டால் மேடை அனுபவத்தைவிட ஒத்திகையின் நினைவுகளை அவர்கள்மகிழ்ச்சியாகச் சொல்வார்கள்.அதுமாதிரி இவரும் தனது அனுபவத்தை சிறப்பா எழுதியிருந்தார் முன்னுரைலை....ரியலி அற்புதம் அது.. ஊருக்கு நீ வரப்போஅதுபத்தி இன்னும் பேசலாம்"

"என்னமாய்ப் பேசறே நீ ? ரியலி ஐயாம் ப்ரவ்ட் ஆஃப் யூ மை ஃப்ரண்ட்!"

பரத் பிரமிப்புடன் சொல்லும்போதே விடை பெற்று வெளியே வந்தேன். பதினோருமாதம் கழித்து ஊர் வந்தான் பரத் . முதல் நாளே அவன் அப்பா என்னிடம்பரத் நாளை இங்கே வரப்போகிறான் என்று சொல்லியிருந்தார். போன் செய்துவிட்டுப்போகலாமா? எதற்கு அதெல்லாம். அவனுக்கும் பிடிக்காது.எனக்கும் பிடிக்காது.

பரத் மாறி இருந்தான். தோற்றத்தில் ஒட்டடைக்குச்சி மாதிரி உயரமாய் மெலிந்து....கதுப்புக் கன்னமெல்லாம் காணாமல்போய்..."என்னாச்சு பரத்படிப்பில் அத்தனை மும்முரமா? சாப்பிடவும் டைம் இல்லையா என்ன? உடம்பு கரைந்து போயிருக்கே?"

"இல்லையே ஐயாம் ஒக்கே!" தோள்களைக் குலுக்கினான்

"ஓ ,எங்க போச்சு அந்த மீசை. எனக்கு ரொம்பபிடிச்ச அந்த மீசை?"

"எடுத்துட்டேன்... டைமே இல்ல ட்ரிம் பண்ணிக்கக்கூட"

"அப்படியா? பரத்! ஒரு குட் நியூஸ்! எனக்கு மைக்ரோபயாலஜிக்கு மேலபடிக்க அமெரிக்கா யுனிவர்சிடியிலேந்து அழைப்பு வந்திருக்கு!"

"அச்சா?"

"என்ன மறுபடி ஹிந்தி தொத்திக்கொண்டாச்சா உனக்கு?"

பரத் அசடுவழிந்தான்

சரிசரி ..டேஞ்சூர் பெயிண்டிங்க் வரைஞ்சிருக்கேன் வந்து பாக்றியா? உன் ஐடியா அதுல கொஞ்சம் வேணும் பரத்"

" நோ..யார்..எனக்கு வேற வேலையிருக்கு விட்டேற்றியாய்ப் பேசியவனை வியப்புடன் பார்த்தேன்.

"பரவால்லை பரத்...இப்போ நீ என் வீடு வர்ல்லேங்கறதுனால உன் மேல எனக்கு உள்ள அன்பு குறைஞ்சிடாது. டேக் கேர் சீ யூ லேட்டர்" என்றேன்.கையசைத்து களிப்புடனே வெளியேறினேன்

அவ்வளவுதான்.

மறுநாளே இதோ...

இந்தகடிதம் எழுதி வேலைக்காரச் சிறுமியிடம் கொடுத்தனுப்பி இருக்கிறான். கடிதத்தை மறுபடி படிக்கிறேன்

புவனா.. நீ முன்பு சொன்ன மாதிரி மெளனமாயிருந்து நான் உன் கற்பனைகளை வளர்க்கப் பிரியப்படவில்லை. உனக்கு என் மேல் உள்ள அன்பு காதலாய்மாறிவிட்டிருக்கிறது எனத் தெரிகிறது.. தயவுசெய்து அதை மாற்றிக்கொள்

இப்படிக்கு

பரத் ரங்கராஜன்.

என்ன..எதற்கு இப்படி ஒரு திடீர்க்கடிதம். ஒவ்வொர் எழுத்தும் வெறுப்பை உமிழ்வது போல.. எதனால் இப்படி எழுத நேர்ந்தது? அன்பு காதலாய்மாறிவிட்டதாக நான் என்றைக்குமே சொல்லவில்லையே? அவனாகவே ஏதாவது கற்பனை செய்து கொள்வது என்ன நியாயம்?

கேள்விக்கு பதில்கிடைத்தபிறகுதான் மதிப்பெண்கள்போடவேண்டும். நீயோ கேள்வியே கேட்காமல் இல்லாத பதிலுக்கு மதிப்பெண் போடுகிறாய்.யூகத்தை சாதகமாக்கிக் கொள்வது சரி அல்ல, பரத்.

நட்பு உன்னதமான உணர்வு. அதை ஏதாவது காரணம் சொல்லி விலக்கிவிடாதே. விலகவா உன்னிடம் பழகினேன் பரத்? அவனிடம் நேரில் மனம்விட்டுப்பேசிவர நினைக்கிறேன்.

மனதிற்குள்ளேயே புலம்பிக்கொள்ள இயலாது நகக்கணுவில் ஏறிய சிராய்ப்பின் உறுத்தலாய் நெஞ்சு குறுகுறுத்தது. சிறுவயதில் என்னோடு செஸ்விளையாடும்போதெல்லாம் மிகக் கவனமாய் காயின்ஸ்களை நகர்த்தி ஆட்டத்தில் வெற்றிகாண்பான் பரத். வாழ்க்கை விளையாட்டில் சட்டெனஅவசரப்பட்டுவிட்டான்.

பரத்தின் வீடு திறந்தே கிடந்தது. ஹாலில் யாருமே காணோம். ஹாலைக்கடந்து உள்ளே அறை நோக்கி நடக்கும்போது மாடியில் சிரிப்புச் சத்தம் கேட்கவும்படிகளில் ஏறினேன். மாடியில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது.

பரத் வாடா ஊர் சுத்திட்டு வரலாம் இது பெண்குரல்.

நோ யா! இது என்ன நாக்பூரா? . ட்ரிச்சி அதில இந்த இடம் ரொம்ப பழைய காலத்து இடம். இங்கெல்லாம் அப்பஐ போயிட முடியாது.. உன்னொட சேர்ந்துநடந்தா கதை கட்டிடுவாங்க இங்க...".இது பரத்

அப்படியா கதையல்ல் நிஜம்னு ஆக்கிடலமா கல்யாணம் கட்டிகிட்டு?

நோ நோ எனக்கு டேட்டிங்க்லதான் நம்பிக்கை. கல்யாணத்துல இல்லை

அப்படின்னா நாக்பூர் போயித்தான் வழக்கம்போல இருப்போம்ன்னு சொல்லு?"

"ஹேய் யூ யூ...நாட்டிகேர்ள்

சிரிப்பு தொடர்ந்து வந்து பிறகு நின்றதும் கதவைத்தட்டிவிட்டு உள்ளே போகிறேன். அங்கே ஜீன்ஸில் டீ ஷர்ட்டில் இளமை ததும்ப ஒரு பெண் பரத்தின் அருகில்உட்கார்ந்திருந்தாள். என்னை எதிர்பார்க்காத பரத் முகம் திடுக்கிட பு..புவ புவனா என்றான்.

நான் முகத்தில் உணர்ச்சியே காட்டாமல். லெட்டர் கிடைச்சிது பரத். அது பத்தி பேசத்தான் இங்க உடனே வந்தேன். கீழ யாரையும் காணோம். மேல சத்தம்கேக்கவும் இங்க வந்தேன். ஆமா யாரிந்தப்பெண்?" என்றேன்.

பரத் முதலில் தயங்கிப் பிறகு"ராதிகா" என்றான்.

- ஷைலஜா([email protected])

இவரது முந்தைய படைப்பு:

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+