• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடலில் ஒரு துளி

By Staff
Google Oneindia Tamil News

1.அறியமுடியாத விஷயம்

"காத்தப்போல மரணம் நம்ம சுத்திசுத்தி விளையாட்டு காட்டிகிட்டே இருக்கும். என்னைக்காவது ஒருநாளு நாம ஏமாந்த சமயம் பாத்து கீழதள்ளிவிட்டுடும்" என்று ஒருமுறை சொன்னார் பெரியப்பா. அன்று காற்றின் தழுவலை உணர்ந்த ஒவ்வொரு தருணத்திலும் மனம் உக்கிரமாக மரணத்தைநினைத்துக்கொண்டது. அந்த வாக்கியம் மிதந்து மிதந்து மனத்தின் ஆழத்தில் சென்று படிந்தபிறகே என் பதற்றம் குறையத்தொடங்கியது. ஆனாலும் எங்கள்தெருவிலோ, பயணம் செய்யும் வீதிகளிலோ, செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகளிலோ, நாடகங்களிலோ, தொலைக்காட்சிச் சித்திரங்களிலோ எதிர்பாராமல்காண நேர்ந்துவிடும் மரணக்காட்சிகள் ஒருகணமேனும் உறையவைத்துவிடும். அடுத்து என்ன செய்வது என்று எந்தவிதமான யோசனையும் மனத்தில்தோன்றிவிடாதபடி செயலிழக்கச்செய்து, ஒருவித இயலாமையின் துக்கத்துடன் நிற்கவைத்துவிடும். அந்த அதிர்ச்சியை ஒருபோதும் என்னால்தவிர்க்கமுடிந்ததில்லை.

எந்த மரணக்காட்சியும் கண்முன்னால் இல்லாவிட்டாலும் அந்த அதிர்ச்சியை என்னை உணரவைத்துவிடுபவனாக திடீரென மாறிப்போனார் ராஜா. அவர்நெருங்கிவருவதைப் பார்த்தாலே என் இதயத்துடிப்பு அதிகரித்துவிடும். பேசிக்கொண்டே இருக்கும்போது "சாகறதத் தவிர வேற ஒரு வழியும் தோணலிங்க" என்றுசர்வசாதாரணமாக சொல்வார் அவர். அடுத்த ஒரு மணிநேரத்தில் அவருடைய தற்கொலைச் செய்தி என்னை வந்தடைந்துவிடும் என்பதைப்போலதீர்மானமான குரலில் அதைத் திருப்பித்திருப்பிச் சொல்வார். அவருடைய முகமும் பேச்சும் பயன்படுத்தக்கூடிய உவமைகளும் வாக்கியங்களும்நகைச்சுவைகளும் மரணத்தை ஒட்டியதாகவே இருக்கும். இருபத்திநாலுமணிநேரமும் மரணத்தைப்பற்றியே தொடர்ந்து சிந்திப்பவரைப்போல அமைந்திருக்கும்அவர் பேச்சு. அவர் சுபாவம் முழுக்கமுழுக்க அப்படி மாறிவிட்டது.

பத்தாண்டுகளுக்கு முன்னால் எனக்கு அறிமுகமாகும்போது அவர் அப்படிப் பழகியதில்லை. இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். மாலைக்கல்லூரியில்அப்போதுதான் தமிழ்விரிவுரையாளராக வேலையில் சேர்ந்திருந்தார். சொந்த ஊர் சிதம்பரம் பக்கம். தாய், தந்தை, சகோதர சகோதரிகள் அனைவரும் ஊரில்இருந்தார்கள். லால்பாக் பக்கம் ஒரு அறையெடுத்துத் தங்கி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார். ஒரு ஞாயிறு மாலையில் முகவரியைத் தேடிவந்து அறிமுகம்செய்துகொண்டார். அந்த முதல் சந்திப்பிலேயே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பழகிய ஒருவரைப்போல நெருக்கமானார். சிறுகதைகள் அவருக்குப் பிடித்தமானதுறை. இலக்கியப் பத்திரிகைகளில் வரும் எல்லாச் சிறுகதைகளைப்பற்றியும் விவாதித்தபடியே இருப்பார். பேச்சு, சிரிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் உருவமாகஇருந்தார் ராஜா.

அவர் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது அவர் திருமணம். அவரிடம் பயின்ற கல்லூரி மாணவியையே விரும்பித் திருமணம் செய்துகொண்டார்.தொடக்கம் நன்றாகவே இருந்தது. பிறகுதான் என்னென்னமோ பிரச்சனைகள் உருவாகத் தொடங்கின. திடீரென ஒருநாள் மாலை என் அலுவலகத்துக்குதொலைபேசி செய்தார் அவர் மனைவி.

"நான் ராஜா மனைவி பேசறேன். இப்ப வீட்டுல நான் இல்ல. ஒரு ஹாஸ்டலுக்கு வந்துட்டேன். ஒங்க நண்பர்கிட்ட சொல்லிடுங்க."

ஹாஸ்டல் முகவரியைக் குறித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மேற்கொண்டு விளக்கங்கள் எதுவும் கொடுக்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டார். எனக்கு ஒருபக்கம் அதிர்ச்சி. மறுபக்கம் அச்சம். மணியைப் பார்த்தேன். மாலைவகுப்புகள் தொடங்கும் நேரம்தான். அலுவலகம் முடிந்ததும் வண்டிபிடித்து அவர் கல்லூரிக்குச்சென்றேன். அவர் வகுப்பில் இருந்தார். ஒருமணிநேரத்துக்குப் பிறகுதான் வந்தார்.

"என்ன எழுத்தாளரே, காலேஜ் வரைக்கும் வந்துட்டீங்க? "

நம்பமுடியாமல் என்னைப் பார்த்தார். அவர் முகத்தில் சிறுநகை தெரிந்தது. மனைவியின் செய்கை பற்றி எதையும் அவர் முகத்தில் காணக்கிடைக்கவில்லை.ஒருகணம் என்னுடன் பேசியது இவர் மனைவியே இல்லையோ என்று தோன்றியது. எச்சிலைக்கூட்டி விழுங்கியபடி அவரைத் தேநீர்க்கடைக்கு அழைத்துச்சென்றேன். தேநீர் பருகியபடி தொலைபேசி அழைப்பின் விவரத்தைச் சொன்னேன். அவர் முகம் மெல்ல மெல்ல இருளடையத் தொடங்கியது. தம்ளரில் இருந்ததண்ணீரில் விரல் நனைத்து மேசையில் அவர் பெயரை எழுதி எழுதி அழித்தபடி சில கணங்களைப் போக்கினார். நிமிர்ந்து பார்த்தபோது அவர் கண்களில் கண்ணீர்தளும்பியபடி இருந்தது.

"என்னங்க நடந்தது ராஜா?" நான் மெதுவாகக் கேட்டேன். உடனே அவர் உடைந்து அஷீத் தொடங்கிவிட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாகசொல்லத் தொடங்கினார். ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டார்களே தவிர இருவருக்கும் மனம் ஒத்துப்போகவில்லை. எதைப் பேசினாலும் ஏட்டிக்குப்போட்டியாகப் பேசிக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொண்டனர். எல்லா உரையாடல்களும் கோபத்தில் முடிவடையத் தொடங்கின. எந்தக்கட்டத்திலும் இருவருடைய ரசனையும் ஒத்துப் போகவில்லை. அப்போதுதான் அவர் முதன்முதலாக "சாகறதத் தவிர வேற ஒரு வழியும் தோணலிங்க" என்றுசொன்னார்.

ஒருகணம் நான் ஆடிப்போனேன். "இதுக்கெல்லாம் ஒரொருத்தங்களும் சாகணும்னு முடிவெடுத்தா உலகத்தில எல்லாருமே செத்துத்தான் போவணும் ராஜா.பிரச்சனை நமக்கு மட்டுமில்ல ராஜா. பொறந்தவங்க எல்லாருக்குமே ஏதோ ஒரு விதத்தில ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.இதுக்கெல்லாம் தற்கொலை அது இதுன்னு பேசலாமா? மொதல்ல போயி வீட்டுக்காரம்மாவ கூப்பிட்டுவாங்க."

"அதெல்லாம் வேணாங்க. அவ அங்கயே இருக்கட்டும். அதுதான் அவளுக்கும் நிம்மதி. எனக்கும் நிம்மதி."

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ஆத்திரத்துல கிழிச்சிக்கிற காதை அப்பறமா எதக்கொண்டும் ஒட்டமுடியாது. ஆம்பள பொம்பள உறவும்அப்படித்தான். "

"என் கஷ்டம் ஒங்களுக்குப் புரியாதுஙக. வேற ஒரு ஆளா இருந்தா இந்நேரம் அவன் செத்து பொதைச்ச எடத்துல புல்லு மொளச்சிருக்கும். நானா இருப்பதாலஏதோ காலத்த கடத்திட்டேன். இருந்தாலும் சாகறதத் தவிற வேற ஒருவழியும் தோணல."

அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னேன். தைரியப்படுத்தி அவர் மனைவி தங்கியிருக்கும் ஹாஸ்டல் முகவரியைக் கொடுத்து உடனே சென்று அழைத்துவரும்படிஅனுப்பிவைத்தேன்.

Manநாளடைவில், அவர் எண்ணங்கள் மாறவும் அவர் சக்தியை ஒருமுகப்படுத்திக்கொள்ளவும் பாதியிலேயே நிறுத்திவிட்ட ஆய்வுப்பணியை முடிக்குமாறு வலியுறுத்திச்சொன்னேன். அவர் கல்வித் தகுதி கூடுதலாகும்போது வேறு நல்ல வாய்ப்புகள் கண்டிப்பாகக் கிட்டும் என்று நம்பிக்கை ஊட்டினேன். இப்படிச் சொன்னதும்வேகவேகமாக இதைமுடித்துவிட்டுத்தான் மறுவேலை என்பதுபோல நாலுநாள் கஷ்டப்பட்டு வேலை செய்வார். அதற்கிடையே என்ன நேருமோ தெரியாது,மீண்டும் உள்சுருங்கிவிடுவார். மறுபடியும் சாகும் எண்ணங்கள் வந்து அவரை அலைக்கழிக்கத் தொடங்கிவிடும்.

ஐந்தாறு ஆண்டுகள் கழிந்தன. ஒரு குழந்தை பிறந்தது. நிலைமை சீராவதற்கு மாறாக மேலும் மேலும் மோசமானது. ராஜா மதுவுக்குஅடிமையானார். மதுவின் போதையில் மட்டுமே நிம்மதியாக உறங்கமுடிவதாகச் சொன்னார். இதனால் அவர் தன் மனைவியாலேயே வீட்டைவிட்டுவெளியேற்றப்பட்டார். இவருக்குத் தெரியாமலேயே பலமுறை வீடுகள் மாறினார்கள். எப்படியோ கண்டறிந்து அவர் வீட்டுக்குள் நுழைந்தார்.வாய்ச்சண்டை கைச்சண்டையானது. மனைவியின் சகோதரர்கள் துணைக்கு வந்தார்கள். போதையில் இருப்பவரை சக்கையாக அடித்து பாதையோரமாகத்தள்ளிவிட்டுச் சென்றார்கள். பழையபடி வாடகைக்கு தனியறை பார்த்துத் தங்கி வேலைக்குப் போனார் ராஜா. மதுவுக்காக வாங்கிய கடன்கள்மலைபோல இருந்தன.

கடன்காரர்கள் கல்லூரிக்கே வந்து சம்பளப்பணத்தைப் பிடுங்கிக்கொண்டார்கள். வாடகை தராததால் வீட்டுக்குச் சொந்தக்காரன் வீட்டைவிட்டுவெளியேற்றிவிட்டான். பலவந்தமாக பூட்டை உடைத்து உள்ளே நுழையப்போனபோது காவல்துறை வந்து அழைத்துச்சென்று விசாரிக்கவேண்டியதாயிற்று.

ஒருநாள் இரவில் படுக்கப்போகிற நேரத்தில் திடீரென அழுக்கு உடையுடன் வந்தார். அவர் தோற்றம் அச்சமும் துக்கமும் தருவதாக இருந்தது. எதையும்விசாரிக்காமல் "உள்ள வாங்க" என்றேன். விளக்கைப் போட்டேன். உள்ளே வந்தவர் நாற்காலியில் அமர்ந்து தலைகுனிந்து குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினார். என்ன நடந்திருக்கக்கூடும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. குழப்பமாக இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அவரேதெளிந்து "ரொம்ப பசிக்குது" என்றார். என் மனைவி அமுதா உடனடியாக சமையலறைக்குச் சென்று இருப்பதைப் போட்டுவந்து கொடுத்தார்.வேகவேகமாக அவர் அள்ளி அள்ளிச் சாப்பிடுவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது.

கைகழுவிக்கொண்டபிறகு மேசையில் கிடந்த சிறுபத்திரிகை ஒன்றைப் புரட்டினார். புதிய புத்தகங்களின் பெயர்களையெல்லாம் படித்தார். "நெறயா புதுசுபுதுசாபுத்தகங்க வந்திருக்குதுபோல. வாங்கிப் படிக்கணும்" என்று சொன்னார். சட்டென ஒருகணத்தில் நிறுத்தி குடும்ப நிலைகளைத் துக்கம் தோய்ந்த குரலில் சொல்லத்தொடங்கினார். இறுதியில் "நான் செத்தாதான் இந்த பிரச்சனை தீரும்போல" என்று கசப்புடன் சிரித்தார். ஏதோ தற்கொலை முடிவை மனத்துக்குள்சுமந்திருப்பவர்போலத் தோன்றவைத்தது அச்சிரிப்பு. நான் திகைப்பில் பேச்சே எழாமல் நின்றேன். மாணவ நண்பர் ஒருவருடைய வீட்டுக்குச் செல்வதாகச்சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.

"நீங்களே ஒருதரம் அந்த அம்மாவ பாத்துப் பேசிப்பாருங்களேன்." அமுதா என்னைத் தூண்டினாள். அந்த முயற்சியையும் செய்துபார்த்துவிடுவது என்று நானும்விரும்பினேன். என்னால் அவர்கள் தங்கி இருக்கக்கூடிய முகவரியைக் கண்டுபிடிக்க இயலாததால் என் எண்ணத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது.

எதிர்பாராத தருணங்களில் அப்படி திடீர் திடீரென வாசலருகே வந்து நிற்பார். கொடுப்பதைச் சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார். ஒருமுறை இரவுநடைக்குச் சென்றுதிரும்பும் தருணத்தில் அவர் எங்கள் வீட்டருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். விசாரித்தபொழுது வீட்டுக்குத்தான் வரநினைத்ததாகவும் ஏதோ கூச்சம் காரணமாக தயக்கத்தில் நின்றுவிட்டதாகவும் சொன்னார். பிறகு, அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று சாப்பிடவைத்துஅனுப்பினேன்.

ஒருமுறை மணவிலக்குப் பத்திரத்தைத் தயார் செய்து வந்து சரிபார்த்துத் தருமாறு சொன்னார். மிகவும் கொதிப்பேறிய மனநிலையில் பேசினார். அவர் உதடுகள்கிழிந்திருந்தன. தையல் போட்டிருந்தார்கள். அவரை எதுவும் கேட்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. எல்லாமே புரிந்தது. கிட்டத்தட்டஅரைமணிநேரம் அவருடன் பேசி அமைதிப்படுத்தினேன். அவரை அம்முயற்சியிலிருந்து பின்வாங்குமாறு செய்ய படாதபாடு படவேண்டியிருந்தது.

"சட்டப்படி டைவர்ஸ் பண்ணிட்டுத்தான் பிரிஞ்சி வாழணுமா? தனியா இருந்துட்டுப்போங்க. அதுல என்ன பிரச்சனை?"

"சட்டப்படி அவளுக்குப் புருஷனா நான் வாழக்கூடாதுங்க. அதவிட நான் செத்துப்போகலாம்."

மீண்டும் அதே பேச்சு. அது ஒரு விடுமுறைக் காலம். இடம்மாறி இருந்தால் ஒருவேளை அவர் ஆறுதலாக இருக்கக்கூடும் என்று தோன்றியது.

"ஒரு காரியம் செய்யுங்க. நான் கொஞ்சம் பணம் தரேன். பேசாம சிதம்பரம் போங்க. ரெண்டு முணுவாரம் ஊருல இருங்க. மனசு மாறும். அப்பறமாஅம்மாவயாவது யாரயாவது தொணைக்கு கூப்பிட்டுக்கிட்டு வாங்க. சின்னதா இங்கயே ஒரு வீடு வாடகைக்குப் பாத்து இருங்க. சாவறேன் சாவறேன்னுசொல்லறதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்ல பாத்துக்குங்க."

சிறிதுநேர யோசனைக்குப் பிறகு அப்படியே செய்வதாகச் சொன்னார். பணம் கொடுத்து பேருந்தில் ஏற்றிவிட்டேன். அதற்கப்புறம் அவரைச் சந்தித்ததுஒருமாதம் கழித்தபிறகுதான். கல்லூரிக்கு அருகிலேயே கட்டண விருந்தாளியாக ஒரு வீட்டில் தங்கியிருப்பதாகவும் ஊரில் அறுவடை முடிந்தபிறகு அம்மாஅப்பாவை அழைத்துக்கொண்டு வர இருப்பதாகவும் சொன்னார். எங்கள் குடியிருப்பிலேயே குறைந்த வாடகையில் ஒரு வீட்டைப் பார்த்துத் தருமாறுகேட்டுக்கொண்டார். பேச்சில் தெளிவும் நிதானமும் இருந்தன. முகத்திலும் சற்றே தெளிவு கூடிவந்திருப்பதைக் காண ஆறுதலாக இருந்தது.

பத்து நாட்கள் கழிந்தபிறகு ஒரு ஞாயிறு காலையில் அவர் வீட்டுக்கு வந்தார். இன்னொரு நண்பரைக் காண்பதற்காக நான் தயாராகிக்கொண்டிருந்தேன்.பத்திலிருந்து பத்தரைக்குள் பார்க்க வருவதாக வாக்களித்திருந்தேன். அப்போதே ஒன்பதரையைத் தொட்டுக்கொண்டிருந்தது நேரம்.

"போன வாரம் வந்தன். வீடு பூட்டியிருந்திச்சி" வாசலுக்கு அந்தப்பக்கம் நின்றபடியே பேசினார். செருப்பைக்கூட கழற்றவில்லை.

"ஆமாம். நாலு நாள் ஊருக்குப் போவறமாதிரி ஆயிடுச்சி. எங்க பெரியப்பா செத்துப்போயிட்டாரு. போன் வந்ததும் ஒடனே கெளம்பிப் போயிட்டம்."

"பாவம், வயசானவரா?"

"எண்பது, எண்பத்திரண்டு இருக்கும்."

"உலகத்துல எல்லாருக்கும் சாவு வருது. எனக்குத்தான் வரமாட்டுது."

"மறுபடியும் ஒங்க பழைய பல்லவிய ஆரம்பிச்சிட்டிங்களா? இருக்கறவரிக்கும் ஒழுங்கா வாழற வழிய பாருங்க ராஜா."

அவர் சிரித்தார்.

"சரி, உள்ள வாங்க, சாப்படறிங்களா?" தயக்கத்துடன் கேட்டேன்.

"இல்லங்க. வேணாம். ஓட்டல்ல இப்ப சாப்புட்டுத்தான் வரேன்."

"எதாவது பணம் வேணுமா? "

"அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீங்க கெளம்புங்க. எங்கயோ போக தயாரானமாதிரி இருக்கறிங்க."

"ஆமா. பத்துமணிக்கு வரேன்னு சொல்லியிருக்கேன். அதான் அவசரமா கெளம்பறேன்."

"கெளம்புங்க. கெளம்புங்க. நான் சும்மா பாத்துட்டு போகலாம்ன்னுதான் வந்தேன்."

"சொல்லுங்க ராஜா? எந்த விஷயமாவது சொல்லணுமா?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க. சும்மா பாக்கணும்ன்னு தோணிச்சி. அதான் கெளம்பிவந்தேன்."

"ஏதாவது பிரச்சனையா?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க. நீங்க கெளம்புங்க."

"ராத்திரிக்கு ஓய்வா இருக்கும்போது வேணும்னா வாங்க. பேசலாம்."

இருவருமாக வீட்டைவிட்டு கிளம்பினோம். அவர் வழியில் தென்பட்ட பேருந்து நிறுத்தத்தில் நின்றுவிட்டார். அவருடன் தேநீராவது அருந்தினால் நல்லதுஎன்று தோன்றியது.

"ஒரு டீயாவது குடிக்கறீங்களா ராஜா?"

"எல்லாம் ஆச்சிங்க. நான் சும்மா பாக்கத்தான் வந்தன். நீங்க கெளம்புங்க. ராத்திரி ஒங்களுக்கு போன் பண்றேன்."

நான் ஆட்டோ பிடித்துப் பயணத்தைத் தொடர்ந்தேன். அன்று இரவு அவர் திரும்பவும் வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அல்லதுதொலைபேசியிலாவது அழைப்பு வருமென நினைத்திருந்தேன். எதைச் சொல்ல வந்தாரோ, தெரியவில்லையே என்று அமுதாவிடம் திரும்பத்திரும்பச்சொல்லிக்கொண்டிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக என் மனத்தில் ஒருவித அமைதியின்மை படர்ந்தது. பாதித்தூக்கத்தில் பலமுறை அவரை நினைத்து நினைத்துவிழித்துக்கொண்டேன்.

அடுத்த வாரம். மனஅடுக்குகளிடையே அச்சம்பவம் பின்னகர்ந்து தேய்ந்தது. காலை நேரம். அதிகாலை நடையை முடித்துக்கொண்டு திரும்பிய சமயம். தேநீரைஅருந்தியபடி செய்தித்தாளைப் புரட்டினேன். இரண்டாவது பக்கத்தில் வந்திருந்த செய்தியைப் படித்ததும் நம்ப முடியாமல் அலறிவிட்டேன். அமுதா ஓடிவந்தாள்.செய்தியை இருவருமாக மீண்டும் படித்தோம். நகரில் மாலைக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த ராஜா நெஞ்சுவலியால் மரணமடைந்ததாகவும்ஆசிரியர்கள் சங்கம் கூடி அஞ்சலி செலுத்தியதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருசில கணங்களுக்கு மீளமுடியாத திகைப்பில் ஆழ்ந்துபோனேன். மறுகணமே துக்கத்தில் மூழ்கியது மனம். "சாகறத தவிர எனக்கு வேற வழியேஇல்லிங்க" என்று அவர் அடிக்கடி சொல்லக்கூடிய வாக்கியம் நினைவில் மிதந்து வந்தது. பார்க்கவந்து எதையுமே சொல்லாமல் போன கடந்தவாரச்சம்பவம் நெஞ்சில் முட்டியது. என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அம்மரணச்செய்தி அவரைப் பற்றியதாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன்.எனக்குத் தெரிந்த இன்னொரு கல்லூரிப் பேராசிரியருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன். சுருக்கமாக அவர் அம்மரணச்செய்தியைஉறுதிப்படுத்தினார். அறைக்குள் இருந்த சமயத்தில் திடீரென நெஞ்சுவலி வந்து அவஸ்தைப்பட்டதாகவும் அக்கம்பக்கத்தவர்கள் பார்த்து மருத்துவமனைக்குஅழைத்துவர ஏற்பாடு செய்வதற்குள் மரணம் நேர்ந்துவிட்டதாகவும் சொன்னார்.

"என்னைக்கு நடந்தது? எனக்கு விஷயமே தெரியாம போச்சே."

"போன ஞாயித்துக்கெழமை சாய்ங்காலமாம். எனக்கும் அடுத்த நாள்தான் தெரிஞ்சுது. நானும் போவலை. பாவம், குடும்பத்தில ஏதோ பிரச்சனைபோலிருக்கு. "

அக்கணத்தில் என் துக்கம் பலமடங்கானது. கடந்த வாரம் எதையோ சொல்லவோ, பகிர்ந்துகொள்ளவோ வந்ததைப்போல வந்து சொல்லாமல் என்அவசரப் புறப்பாட்டைக் கண்டு உடனடியாகக் கிளம்பிப்போன அன்றுதான் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இனி ஒருபோதும் அறியமுடியாத அந்தவிஷயத்துக்கான ஏக்கம் என் மனத்தைக் கனக்கவைத்தது. அவருடைய தொலைபேசி அழைப்பு ஒருநாளும் இனி வரப்போவதில்லை என்னும் உண்மை என்தொண்டையை அடைத்தது. பல கணங்கள் உறைந்தநிலையில் உட்கார்ந்திருந்தேன். நிதான நிலைக்குத் திரும்பியபோது அவர் அடிக்கடி உச்சரித்துக்கொண்டிருந்ததற்கொலை முயற்சியில் இறங்காததையும் இயற்கைமரணத்தாலேயே உயிர் துறந்ததையும் நினைத்தபோது சற்றே ஆறுதலாக இருந்தது.

- பாவண்ணன்( paavannan@hotmail.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X