• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாவல் ஒரு கேள்வி

By Staff
|

கலாச்சார மாத இதழ் - ஜூன் 2005

மு. இராகவையங்காரின் உரைநடை நூல்கள்

ஆ. சிவசுப்பிரமணியன்

மு. இராகவையங்காரின் உரைநடை நூல்கள் பின்வருவன:

1. ஆராய்ச்சித் தொகுதி

2. ஆழ்வார்கள் கால நலை

3. இலக்கியக் கட்டுரைகள்

4. கட்டுரை மணிகள்

5. சேரன் செங்குட்டுவன்

6. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி

7. வேளிர் வரலாறு

இவ்வேழு நூல்கள் தவிர அவரது ஆராய்ச்சித் தொகுதி இரண்டாம் பதிப்பில் (1964:துதுது) இடம் பெற்றுள்ள பின் வாழ்க்கை வரலாறு என்றபகுதியில், அச்சிட வேண்டிய நூல்கள் என்ற தலைப்பில் ஒரு குறிப்பு இடம் பெற்றுள்ளது. அக்குறிப்பில் இடம்பெற்றுள்ளஉரைநடைநூல்கள் வருமாறு.

1. தெய்வப் புலவர் கம்பர் பற்றிய கட்டுரைகள்.

2. இலக்கிய சாஸன வழக்காறுகள் என்னும் பெயருள்ள சென்னைப் பல்கலைக்கழகச் சொற்பொழிவுகள். இவை தமிழாராய்ச்சிக்குமிகவும் பயன்படக்கூடியவை. ஏறக்குறைய 500 பக்க அளவில் அச்சில் வெளிவரும்.

3. கேரளம் தமிழிலக்கியம் கேரள நாட்டிற்கும், மலையாள மொழிக்கும் தமிழோடுள்ள தொடர்புகளை விளக்குவது.

கால அளவு கருதி இக்கட்டுரையில் மு. இராகவையங்காரது கட்டுரைத் தொகுப்புகளான ஆராய்ச்சித் தொகுதி, இலக்கியக்கட்டுரைகள், கட்டுரை மணிகள் ஆகிய மூன்று நூல்கள் மட்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

ஆராய்ச்சித் தொகுதி

ஆசிரியரின் அறுபதாம் ஆண்டு நறைவு விழாவினையொட்டி முப்பத்து எட்டு ஆண்டுகட்கும் மேலாக அவர் எழுதி வந்தகட்டுரைகளில் தேர்ந்தெடுத்த முப்பத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூலின் முதல் பதிப்பு 1938-இல் வெளியானது. இந்தஇரண்டாம் புதிப்பு 1964-ல் வெளியானது. இக்கட்டுரைகள் அவர் உதவி ஆசிரியராக இருந்த செந்தமிழ் இதழிலும் பிறஇதழ்களிலும் பல்வேறு காலகட்டங்களில் வெளியானவை. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளின் உள்ளடக்கம் குறித்து நூலின்முன்னுரையில் வையாபுரிப்பிள்ளை,

இலக்கியம், இலக்கணம், மொழிநூல், எழுத்துவரலாறு, நூற்பதிப்பு முறை, நூலாராய்ச்சி, தேசசரித்திரம், சமயம்,பண்டையாசிரியர்கள், பண்டைத் தமிழ் மக்களின் ஒழுக்கநெறி, சிலாசாசனங்கள், இடப்பெயர்கள், பண்டைக்காலத்துச்சான்றோர்கள் முதலிய பல பொருள்கள் இக்கட்டுரைத் தொகுதியிலே அடங்கியுள்ளன.

என்று குறிப்பிட்டுள்ளார். அனைத்துக் கட்டுரைகளையும் ஆராய காலம் இடம் தராமையால் மூன்று கட்டுரைகளை மட்டும் இங்குகாண்போம்.

வீரத்தாய்மார்

இத்தலைப்பிலான கட்டுரை செந்தமிழ் தொகுதி 5-இல் வெளியாகியுள்ளது. தலைப்பிற்கேற்ப இக்கட்டுரையில் பொன்முடியார்(312 பூங்கண் உத்திரை (புறம் 277) ஓக்கூர் மாசாத்தியார் (புறம் 279) காக்கை பாடினியார், நச்செள்ளையார், (புறம் 278),ஒளவையார் (புறம் 265), காவற்பெண்டு (புறம் 86) ஆகிய பெண்பாற் கவிஞர்கள் பாடிய புறநானூற்றுச் செய்யுள்களில்இடம்பெறும் வீரத்தாய்மார்களை இக்கட்டுரை திறம்பட அறிமுகப்படுத்துகிறது. இச்செய்திகளைக் கூறும் புறத்திரட்டுப்பாடல்களையும் ஆசிரியர் இக்கட்டுரையில் மேற்கோளாகக் காட்டுகிறார். இக்கட்டுரையின் இறுதியில்

தமிழ்வேந்தராகிய சேர சோழ பாண்டியரும் பிறரும் தம் பழம்பெருமை குன்றினர். முடிவில் ஆண்மையும் தியாகமுமாகியபயிற்சிகள் குறையத் தமிழர் வீரம் முற்றும் தலைகவிழ்ந்தது. இக்காலத்தவராகிய நமக்கோ, மேலே கூறிவந்த அற்புதவீரச்செயல்களெல்லாம் வெறுங்கற்பைனைக் கதைகளாகவே தோற்றும் என்பதும் திண்ணம். ஏனெனில், நம்மவரது மனநிலைஅவ்வளவு குன்றியொழிந்தது. காலசக்கரத்தின் சுழற்சியால் உலகத்தில் ஓரிடத்திற்குள்ளே உண்டாம் அற்புதமாறுதல்கள் இவை.

என்ற தொடர்கள் இடம் பெற்றுள்ளன. (மேலது 177). 1907-இல் வெளியான இக்கட்டுரையைப் படித்த பாரதி தமது இந்தியாபத்திரிக்கையில் இதை மறுவெளியீடு செய்தார். மூன்று பகுதிகளாக மூன்று வாரம் தொடர்ந்து இக்கட்டுரை இந்தியாவில்வெளிவந்தது. (பத்மநாபன் ரா.அ. 1981: 20) அத்துடன் இக்கட்டுரை குறித்து தமது இந்தியா இதழில் தலையங்கம் ஒன்றும்எழுதினார். தாயைப் போல் பிள்ளை என்று தொடங்கும் இத்தலையங்கத்தில்,

நமது தமிழ்நாட்டிலேயும் அத்தகைய பெருங்குடி (மூதில்) மாதர்கள் இருந்திருக்கிறார்களென்பதைச் செந்தமிழ்ம்ப்பத்திரிகாசிரியர் இம்மாதம் எழுதியிருக்கும் ஓர் திவ்யமான உபந்நியாசத்திலே பல அரிய திருஷ்டாந்தங்களால்விளக்கியிருக்கிறார். அவரது உபந்நியாசத்தைச் சென்ற வாரத்தில் ஒரு பகுதியும் இவ்வாரத்தில் ஒரு பகுதியுமாக நமதுபத்திரிகையிலே பிரசுரம் செய்திருக்கிறோம். இன்னும் சிறிது மிஞ்சியிருக்கின்றது. அதனை அடுத்த வாரத்தில் பிரசுரம் செய்வோம்.தமிழ்நாட்டுத் தாய்மாரைப் பற்றிச் செந்தமிழ் ஆசிரியர் எழுதியிருக்கும் உபந்நியாசத்தைப் படித்தபோது எமக்குண்டான பெருமகிழ்ச்சிக்கும் பெருந் துயரத்திற்கும் அளவில்லை. 1,800 வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள்வாய்க்கப்பெற்றிருந்த நாகரிக நாட்டிலே, இவ்வளவு உயர்வு கொண்டிருந்த பெரியோரின் சந்ததியிலே, இவர்கள் நடையிலும்செய்கைகளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியில் நாம் பிறந்திருக்கிறோமென்பதுஅரிய மகிழ்ச்சியுண்டாகிறது.

நமது பத்திரிகை படிக்கும் நேயர்களனைவரும் நாம் செந்தமிழ் பத்திரிகையிலிருந்து பெயர்த்துப் பதிப்பித்திருக்கும்உபந்யாசத்தைத் தாம் பல முறை படிப்பது மட்டுமேயன்றித் தமது சுற்றத்தாருக்கும் மித்திரருக்கும் தமது வீட்டு மாதர்களுக்கும்திரும்பத் திரும்பப் படித்துக் காட்டுதல் நலமென்று கருதுகிறோம்.

என்று குறிப்பிட்டுவிட்டு, கட்டுரையில் இடம்பெற்றுள்ள புறநானூற்றுக் காட்சிகளைத் தமது நடையில் எழுதி இந்தியாவாசகர்களுக்கு அறிகப்படுத்தி உள்ளார். (பாரதி, 319- 320) இவ்வாறு தமது இந்தியா இதழில் இக்கட்டுரையினை வெளியிட்டும்தலையங்கம் எழுதியும் மகிழ்ந்த பாரதி இராகவையங்காருக்கு இக்கட்டுரை தொடர்பாக ஒரு கடிதமும் 18.10.1907-இல்எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

சென்றமுறை வெளிவந்த செந்தமிழ்ப் பத்திரிகையிலே தாங்கள் எழுதியிருக்கும் வீரத்தாய்மார்கள் என்ற அற்புத உரையைக்கண்டு மகிழ்ச்சிபூத்து அம்மகிழ்ச்சியைத் தமக்கு அறிவிக்கும் பொருட்டாக இக்கடிதம் எழுதலானேன்.

தங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும். தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும்ஸ்வதேச பக்தி என்ற புது நெருப்புக்குத்தான் நான் வணக்கம் செய்கிறேன்.

காலசக்கரம் சுழல்கிறது என்று அவ்வுபந்நயாசத்தின் இறுதியிலே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆம்! காலசக்கரம் சுழலவேசெய்கின்றது. அச்சுழற்சியிலே சிறுமைச்சேற்றில் ஆழ்ந்துகிடந்த நீச பாரதம் போய் மஹாபாரதம் பிறக்கும் தறுவாய்வந்துவிட்டதும், தாழ்நிலை என்ற இருளிலே மூழ்கிக்கிடக்கும் பாரதவாசிகளுக்கு மஹாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும்சோதிகளிலே தமது நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பு ஒன்றாகும்; அதற்கு வணக்கம் செய்கிறேன். அது வளர்க.

என்று தமது வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இராகவையங்கார், இக்கட்டுரைகளை எழுதிய காலத்தில் வாழ்ந்துவந்த பாரதி ஆகியோருடன் அவருக்குக் கடிதத் தொடர்பு இருந்துள்ளது என்பதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் வாயிலாகஅறியலாம். மேலும் மு. இராகவய்யங்கார் தாம் உதவியாசிரியராக இருந்த செந்தமிழ் பத்திரிக்கையில் பாரதியின் கவிதைநூல்கள் குறித்து விமர்சனம் ஒன்று எழுதியுள்ளார்.

இயற்கையில் இனிய கவிகள் பாடவல்ல பாரதியார் தம் சக்தியை இத்தகைய புது வழியில் திருப்பி உபயோகப்படுத்தியிருப்பதுநம்மவர்க்கு ஒரு நல்ல வழியைக் கற்பிக்கின்றது என்று 1908-இல் அவ்வாண்டு வெளியான ஸ்வதேச கீதங்கள் என்ற பாரதிகீதங்கள் முதல் தொகுப்பை வாயாரப் போற்றியவர். மறுவருஷம், 1909-இல், பாரதியார் பாடல் இரண்டாம் தொகுதியான ஜன்மபூமி என்ற நூல் வெளிவந்த சமயம். இதன் சில பகுதிகளை எம் நண்பர்கள் முன் படித்து வரும்போது, உள்ளபடியே அவைஉரோமஞ் சிலிர்க்க எம்மைப் பெரிதும் உருக்கிவிட்டன

என்று ரா. அ. பத்மநாபன் (1981: 223) எழுதியுள்ளார். இந்த இடத்தில் தமிழறிஞர் உ.வே.சா.வின் வாழ்வில் நிகழ்ந்த ஒருநிகழ்ச்சியை நினைத்துப் பார்ப்பது தவிர்க்க இயலாதது. வ.உ.சி. கோவைச் சிறையில் இருந்த காலத்தில் (9 ஜுலை 1908: டிசம்பர்முதல் வாரம் 1910) திருக்குறள் குறித்து தமக்கு ஏற்பட்ட ஐயங்களைப் போக்கிக் கொள்ளும் வழிமுறையாக உ.வே.சாவுக்குக்கடிதம் எழுதினார். இது குறித்து உ.வே.ச. (1942: 20) எழுதியுள்ள செய்தி வருமாறு:

காலஞ்சென்ற தூத்துக்குடி வ.உ. சிதம்பரம்பிள்ளை சிறையிலிருந்து திருக்குறளில் சில சந்தேகங்களை எனக்கு எழுதி அனுப்பிவிடை எழுத விரும்பினார். சிறையிலுள்ள அவருக்கு நான் கடிதம் எழுதுவது உசிதமாக இருக்குமா என்று ஸ்டோன்துரையைக்கேட்டேன். அவசியம் எழுத வேண்டும். சிறைச்சாலைக்குள் ஒருவருடைய பழக்கமும் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நாம்உதவி செய்வது அவசியம். ஆனால், கடிதத்தை நீங்கள் நேரே அனுப்ப வேண்டாம். எழுதி என்னிடம் கொடுங்கள். நான் சிறைஅதிகாரி மூலம் அவருக்கு அனுப்பிவிடுகிறேன் என்றார். நான் அவ்வண்ணமே செய்தேன்.

ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த இவ்விரு தமிழறிஞர்களுக்குமிடையே தேசிய இயக்கத் தலைவர்கள் குறித்து ஒன்றுக்கொன்றுமாறுபட்ட அணுகுமுறை இருந்ததை இச்செய்திகள் உணர்த்துகின்றன. இராகவையங்காரிடம் இருந்த புதியன வரவேற்கும்மனப்பான்மையினால்தான் பழைய தடத்திலிருந்து விலகி நின்று அவரால் ஆய்வு மேற்கொள்ள முடிந்தது.

பண்டைக் கைத்தொழில் வியாபாரங்கள்

இத்தலைப்பில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரை செந்தமிழ் இதழின் 7-ம் தொகுப்பில் வெளியாகியுள்ளது. இந்திய நாட்டிற்குக்கருமபூமி என்ற பெயர் உண்டு. கருமபூமி என்ற சொல்லுக்குச் வைதீகக் கருமங்கள் செய்யப்படும் பூமி என்றும் நல்வினைதீவினைகள் செய்யப்படும் இடம் என்றும் சனாதனிகள் விளக்கமளிப்பர். ஆனால் இராகவையங்கார் (1964:145)இவ்விளக்கத்திலிருந்து மாறுபட்டு பின்வரும் விளக்கத்தை அளிக்கிறார்.

கர்மம் என்பதை வைதிகக் கர்மமொன்றற்கே கொண்டு பொருளைக் குறுக்கியும் நற்கருமத்துடன் தீக்கருமம் செய்தற்குரிய இடம்என ஒன்றைக் கூட்டியும் கூறாமல், உயர்ந்த தொழில்களையே செய்தற்குரிய பூமி என்பதே முன்னோர் கருத்து என்க. அஃதாவது -அவ்வவ் வருணத்தார் ஜீவனோபாயத்துக்குரிய நற்கருமங்களை முறைப்படி செய்துவந்த பூமி இப்பரத கண்ட மாதலின் இதுகர்மபூமி எனப்பட்ட தென்பதாம்.

இக்கருத்தே பண்டைத்தமிழ் மக்களது கருத்து என்று கூறும் நூலாசிரியர், அதற்குச் சான்றாக,

உழவு தொழிலே வரைவு வாணிபம்

வித்தை சிற்ப மென் றித்திறத் தறுதொழில்

சற்கும் நடையது கருமபூமி

என்ற திவாகர நகண்டு நூற்பாவை மேற்கோளாகக் காட்டுகிறார். இதை மேலும் வலியுறுத்தும் வகையில் பகவான் ஜனங்கட்குஜீவனோபாயமாக உழவு, தொழில், வரைவு, வாணிபம், வித்யா, சில்பமென்னும் ஷட்கர்மங்களையும் உபதேசித்தருளி என்றபுராணத் தொடரை மேற்கோளாகக் காட்டுகிறார். (மேலது, 1976)

பின்னர் உழவு வணிகம், நெசவு,கடலியல் அறிவு போன்ற செய்திகளைத் தமிழ் இலக்கியம், இலக்கணம், நிகண்டுகள், உரைகள்,வரலாற்றுத் தரவுகள் ஆகியனவற்றின் துணையுடன் விரிவாக எடுத்துரைக்கிறார். இன்று இச்செய்திகள் ஓரளவு பரவலாகஅறியப்பட்டவை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுமே தமிழ் இலக்கியம்பயின்று வரப்பட்ட சூழலில் உரைநடை வாயிலாக நமது பண்டைய கைத்தொழில் வாணிபம் குறித்த இக்கட்டுரை வெளியானதுமிகுந்த சிறப்புடையது.

இக்கட்டுரையின் மற்றொரு சிறப்பு, பண்டையப் பெருமையைக் கூறுவதுடன் நின்றுவிடாமல் நிகழ்காலப் பிரச்சனைகளுடன்அவற்றை இணைத்துப் பார்ப்பதாகும். நூல் நூற்றலில் பெண்கள் குறிப்பாக, கைம்பெண்கள் ஈடுபட்டிருந்ததை, நன்னூல்,இறையனார் களவியல் உரை< ஆகியனவற்றின் துணையுடன் நிறுவும் ஆசிரியர்

நம் தேசத்தில் கைம்பெண்களின் தொகை மிகுதிப்பட்டு வருதலால் அவர்கள் வருத்தமின்றிச் சீவிப்பதற்கு இராட்டினமாகிய சக்ராவேலை இன்றியமையாதது என்று நம் நாட்டுத் தலைவர்கள் கூறியுள்ளதை பலரும் அறிவர்

என்று கூறிச் செல்கிறார். தொழில்நிலை, பொருளாதார நிலைகளை அறிதற்கு வேண்டிய கருவி நூல்கள் தமிழ்மொழியில்மலிந்திருந்தன என்பதை சான்றுகளுடன் நிறுவும் ஆசிரியர் (மேலது: 152)

இந்நூல்களெல்லாம் இப்போது எங்கேயுள்ளன? இங்ஙனம் முற்காலத்தில் ஆடைக்குப் பேர்போன நாடாய் விளங்கி, பிறநாடுகளின் மானத்தைக் காத்து வந்த நம் பரத கண்டம் நம் காலத்தில் ஏறக்குறைய அப்பெயர் போனதேயாம், தன்மானத்தைக்காத்தற்குப் பிறர்கையை அபேக்ஷPadma_vowelsn_Iப்பதாக மாறிவிட்டது. இது நம்மவர்க்குப் பெரிதும் துக்கம் வெட்கந் தரத்தக்க தன்றோ?

என்று வருந்துகிறார். (மேலது, 153). கைத்தொழிலைப் போற்றி வளர்த்த நம்நாட்டில் அவை சிதைந்து விட்ட நிலை குறித்து,

இடைக்காலத்தில், அத்தொழிற்பெருமையை அறிஞர்கள் அறியாது கைநெகிழ விட்டமையாலேயே, நம் தேசம் உண்டுஉடுப்பதற்கும் கண்டு களிப்பதற்கும் பெருக்கி மெழுகுவதற்கும் ஊர்ந்து உலாவுவதற்கும் அந்நியச் செயற்கைப் பொருள்களையேஎதிர்பார்க்கும்படி நேர்ந்துவிட்டது. இவ்வாறு அந்நயநாட்டுக் கைத்தொழில் வியாபாரிகட்கு நாம் அடிமைப்பட்டிருப்பதைநிவர்த்தித்து, உலகத்து நாகரிக மக்கள் முன்பு நம்மைக் காட்டிக் கொள்ள வேண்டுமாயின், எல்லா மேல்வகுப்பாரும் நல்லறிஞரும்நாகரிகம் படைத்த செல்வர்களும் தேசவிருத்திக்கு இன்றியமையாத தொழிற்றுறைகளிற் புகுவது அவசியமாகும்.

அதே நேரத்தில் பண்டையப் பெருமையில் மூழ்கிவிடாமல் பிறரிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியன உண்டு என்பதை,

அந்நிய நாட்டாரெல்லாம் மிலேச்சர் என்னும் எண்ணம் சில காலமாக இருந்ததாயினும், இப்போது, அவர்கள் உலகியல்விஷயங்களில் பெரிதும் உயர்ந்தவரென்றும், அன்னாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளற்குரியவை எத்தனையோஉள்ளனவென்றும் நம்மவர் மனத்தில் உதித்து வருகின்றன என்று குறிப்பிடுகிறார். (மேலது 166). இக்கட்டுரை எழுதிய காலம்சுதேசி இயக்கம் தழைத்திருந்த காலமாகும் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். எனவே தான் தமிழ்நாட்டில் சுதேசிஇயக்கத்தைப் பரப்பியதில் முக்கியப் பங்கு வகித்தவரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினருமான வ.உ.சி. செய்யுள் வடிவில்கடிதமொன்று 26.10.1977-ல் . இராகவையங்காருக்கு எழுதினார். அக்கடிதத்தில் இக்கட்டுரையைப் பின்வருமாறுபாராட்டியுள்ளார்.

பாரத வருடத்தின் பழைய கைத்தொழில்

வியாபா ரங்களை விரித்து வரைந்தநன்

வியாச மதனை விருப்பொடு படித்தேன்

முற்றொழில் நிலைமையை முற்றுற மொழிந்த

கற்றநன் வாசகங் கண்டுளங் களித்தேன்

செற்றுநந் தொழில்கள் சிறுமை யுற்றுநாம்

மற்றவர் சகிக்கா வறுமையின் மூழ்கி

வருந்தின வியல்பினை வரைந்தன வுணர்ந்து

பெருந்துய ருழந்து பெருக்கினேன் கண்ணீர்

தற்கால நிலையினைச் சாற்றிய படித்து

நற்காலப் பிறப்பினை நன்கறிந் தாறினேன்

முக்கால நிலையினை முன்னுற மொழிந்த

தக்கோ னெனத்தகுந் தண்ணளி யாள

இலக்கியக் கட்டுரைகள்

ஓண நன்னாள் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடும் ஓண விழாவும் மதுரையில் நடந்ததாகக் களவியல் உரைகாரர் குறிப்பிடும்ஆவணி அவிட்டம் ஒன்றே என்பது ஆசிரியரின் கருத்தாகும். மன்னராட்சிக் காலத்தில் திருவிதாங்கூரில் நிகழ்ந்தஓணக்கொண்டாட்டத்துடன் சங்க இலக்கியம் குறிப்பிடும் ஓண விழா குறித்த செய்திகளை ஆசிரியர் ஒப்பிடுகிறார். சேரி மாறுபாடு(சேரிப்போர்) என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுவதை வேலக்களி என்று கேரளத்தில் குறிப்பிடப்படுவதாக அவர் கூறுகிறார்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்தினி வணக்கம், செந்தமிழ் நாடு யாது? ஆகிய கட்டுரைகள் ஆசிரியரின் ஆழ்ந்தஇலக்கியப் புலமையையும், வரலாற்றுப் புலமையையும் ஒரு சேர எடுத்துரைக்கின்றன.

முடிவுரை

இன்று தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சி பெற்ற நிலையில் பல்துறை சங்கம ஆய்வு குறித்துப் பேசியும், எழுதியும் வருகிறோம். ஆனால்தமிழ் ஆராய்ச்சி, தளர் நடையிட்டு வளர்ந்த காலத்தில் இராகவையங்கார் பல அறிவுத் துறைகளை இணைத்து ஆய்வு செய்யும்போக்கை மேற்கொண்டிருந்தார். அவர் கட்டுரைகளை எழுதிய காலம் இந்தியா அடிமைப்பட்டிருந்த காலம். அரசியல் உணர்வுமேலோங்கி இருந்த காலம். நாட்டு விடுதலைக்காக இந்திய தேசியம் பேசிய பலரும் மொழி அடிப்படையில் தமிழ்த் தேசியத்தைநினைத்துப் பார்க்காதவர்கள். மற்றொரு பக்கம் மொழி ஆய்விலும் இலக்கிய ஆய்விலும் ஈடுபட்டவர்கள் நாட்டு விடுதலையைஎண்ணிப் பாராதவர்கள். இத்தகைய சமூகச்சூழலில் அவருடைய உரைநடையில் இலக்கியச்சான்றுகளும் கல்வெட்டுச்சான்றுகளும் பின்னிப் பிணைந்திருந்தன. இதனால் தான் அவரது ஆராய்ச்சித் தொகுதியின் முதற்பதிப்பிற்கு வையாபுரிப்பிள்ளைஎழுதிய முன்னுரையில்

சிலாசாசனப் பயிற்சி * சரித நிர்மாணத்திற்கு மாத்திரம் பயன்படுவதோடு அமைந்துவிடுவதன்று. இலக்கிய உணர்ச்சிக்கும்பயன்படுவதாகும். சிலாசாஸன வழக்காறுகளுக்கும் இலக்கிய வழக்காறுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இதனை நன்குதெரிந்து, இலக்கியங்களை உணர வேண்டுமாயின் சிலாசாஸனங்களில் தக்க பயிற்சி வேண்டுமென்பதையும், அவ்வாறேசிலாசாஸனங்களையுணர வேண்டுமாயின் இலக்கியப் பயிற்சி மிகுதியும் உளதாதல் வேண்டுமென்பதையும் தாம் எழுதி வந்தஆராய்ச்சியுரைகளால் தன் முதல் நிறுவியவர்கள் இவ்வாசிரியரேயென்று கூறுதல் வேண்டும் என்று பொருத்தமாகமதிப்பிட்டுள்ளார்.

பயன்பட்ட நூல்கள்

இராகவையங்கார்,மு ., 1954, இலக்கியக் கட்டுரைகள், இராமநாதபுரம்.

இராகவையங்கார், மு., 1964, ஆராய்ச்சித் தொகுதி, சென்னை.

இராகவையங்கார், மு., 1974, கட்டுரை மணிகள், நாகர்கோவில்,

சாமிநாதய்யர், உ.வே., 1942, நனைவு மஞ்சரி, இரண்டாம் பாகம், சென்னை.

பத்மநாபன், இரா.அ., 1982, பாரதியின் கடிதங்கள், சென்னை.

பாரதி, 1977, பாரதியார் கட்டுரைகள், சென்னை.

* சிலாசாசனப் பயிற்சி - கல்வெட்டுப் பயிற்சி

a.sivasubramanian@gmail.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் சென்னை செய்திகள்View All

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more