India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரையான் வேட்டை

By Staff
Google Oneindia Tamil News

கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005

-க. புனிதன்

விடிந்ததும் மக்கரியில் அடைத்து வைத்திருந்த தன் செல்ல கோழிக்குஞ்சை தூக்கிக் கொண்டு சிம்பே காட்டுப் பக்கம் கரையான்வேட்டைக்காக கிளம்பியிருந்தான் வேணு.

காளியம்மன் தேருக்கு பாட்டி தந்த காசில் மிச்சம் வைத்து அந்த போந்தா (பிராய்லர்) கோழிக்குஞ்சை வாங்கியிருந்தான்.அவனுக்கு அவன் அப்பாவைப் போலவே சீக்கிரம் பணக்காரனாக வேண்டுமென ஆசையிருந்தது. அதற்கு வருடக்கணக்கில்வளரும் இந்த நாட்டுக் கோழிக்குஞ்சுகள் ஒத்துவரவில்லை. இந்த போந்தா கோழிக்குஞ்சுதான் அவனின் விரைவேக வளர்ச்சிக்குசரி வருவதாய் இருந்தது.

டிவியில் ஒருமுறை பிராய்லர் ஆடுகளை பற்றிய செய்திப் படம் ஓடியது. அதை பார்த்ததில் இருந்து அடுத்த நான்கைந்து மாதத்தில்பிராய்லர் ஆடொன்றை வாங்குவது தான் அவனின் எண்ணமாயிருந்தது. அதற்கு இந்த போந்தா குஞ்சு சீ"க்கிரம் வளர வேண்டும்.அதற்காய் என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்தான் அவன். அரிசி மூட்டையின் அளவு குறைந்து கொண்டே வருவதைஅப்பா பொத்தாம்பொதுவாய் ஒருநாள் திட்டி வைத்தார். அவன் தங்கையை தவிர யாருக்கும் தெரியாது அவன்தான் அதைத்திருடி தன் செல்லக் கோழிக்கு போட்டு வருகிறான் என்பது.

வீட்டில் போட்டுக் குடுத்துடுவேன் என அவளும் மிரட்டிப் பார்த்தாள். கோழி விற்கும் காசில் அவளுக்கும் காது தொங்கட்டான்வாங்கித் தருகிறேன் என வளைத்துப் போட்டுவிட்டான். அதற்குப் பின் அரிசி மூட்டை பக்கமே படுத்துக்கிடக்கும் அவர்கள்வளர்க்கும் கருப்புப் பூனை மட்டுமே அவன் செயலை மெளனசாட்சியாய் வெறுமனே பார்த்துக் கிடந்தது.

----------------------------

வெள்ளைப் புழுக்களும் பால் கரையான்களும் மொச்சிக் கிடக்கும் பச்சை சாணியை கிளறி கிளறி விட்டுக் கொண்டிருந்தான். தன்எஜமானை கூடிய சீக்கிரம் பணக்காரனாக்கும் அவதியில் அதை பொறுக்கிக் கொண்டிருந்தது போந்தாக்குஞ்சு.

பெருங்கரையான் ஒன்று அதன் கண்ணோரம் ஊர்ந்து கடித்து வைத்தது. கொத்துவதை விட்டு வம்பை காடெங்கும் அது தன் சின்னசிறகை அடித்துக் கொண்டு கரகரவென்று சுற்றிவருவதை கண்டதும் ஓர் நிமிடம், தன் பணக்கார கனவு நிராசையாகிவிடும்போல்தெரிந்தது.

அமுக்கிப்பிடித்து நாயுருவிமுள்போல் கண்ணோரம் பசைபிடித்து கிடக்கும் கரையானை எடுத்ததும் தான் உயிர் வந்தது. அதைநசுக்கி போந்தாவின் மூக்குக்கு நேராய் நீட்டினான். தலையை சாய்த்துக் கொண்டு தின்ன மறுத்தது. இரைக்குழியை தடவிப்பார்த்தான். ஊமைத்தங்காய் போலிருந்தது. அதற்குமேல் திங்கடித்தால் செரிமானமாகாமல் செத்துகித்து போய்விடுமோ எனும்பயத்தில் வீடு திரும்பினான். தூரத்தில் தொவரமாறி சிமிரை பிடித்துக் கொண்டு அம்மா இவன் வருகைக்காக காத்துக்கிடப்பதுதெரிந்தது.

காலையில் படிக்காமல் கோழிக்குஞ்சோடு திரிவது அதற்கு பிடிக்கவில்லை. இன்னொரு நாள் மறுக்கா பார்த்தேன் கோழிக்குஞ்சுகழுத்தை திருகிடுவேன் என மிரட்டி வைத்திருந்தது. கொன்னுகின்னு போட்டுவிடுமோ என்ற பயத்தில் அவசரமாய் அதை தன்டாயரில் போட்டுக் கொண்டான்.

எங்கேடா போயிட்டு வர

ஆயி இருக்கம்மா

அது என்னடா பொடைச்சிக்குட்டு இருக்கு

அவனுக்கு மட்டுமல்ல கோழிக்குஞ்சிற்கும் சேர்த்து அடி விழுந்தது. தங்கை வேறு சமயம் பார்த்து தன் பிரிய ரோஜா செடியின்முதல் மொக்கை அவள் அண்ணனைப் போலவே தரித்திரம் பிடித்த இந்தக் கோழிக்குஞ்சு கொத்தி தின்றுவிட்டதென புகார்செய்தாள். அதற்கும் சேர்த்து அடி கிடைத்தது.

கோழிக்குஞ்சை இறக்கிவிட்ட வேகத்தில் தன் அம்மா தன் கையிலிருந்த தொவறமாறை அதன் மீது வீசியெறிந்தது.கியாங்கியாங்கென்று கத்திக் கொண்டே அது விறகுப்பட்டறையடியில் போய் ஒளிந்து கொண்டது. அவன் எங்கும் ஒளியமுடியவில்லை. அப்பா ஓடி வந்து தடுத்தார். அவன் படிச்சா படிக்கிறான் இல்லாட்டி பண்ணையத்த பாக்கறான் விடு

ஆமாமா இப்பவே மானம் காயறகாய்ச்சலுக்கு நாளைக்கு இவனுக்கெல்லாம் பண்ணையம் ஒரு கேடு

---------------------------------

பள்ளிப் போகியும் கோழிக்குஞ்சோடேயே மனம் மேய்ந்தது. அதனால் அங்கேயும் அடியும் திட்டும் கிடைத்தது. ஆனால்,அதெல்லாம் சாயங்காலம் மணி அடிக்கும் வரைதான். கோழிக்குஞ்சுவைப் பார்க்கும் ஞாபகத்தில் வலியெல்லாம் பஞ்சாய் பறந்துபோனது. வழியெல்லாம் பாலித்தீன் கவரில் கரையான் பொறுக்கிக் கொண்டே மெதுவாய் வீடு வந்து சேர்ந்தான்.

ஊரிலிருந்து மாமா வந்திருந்தார். அது அவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. பிஸ்கெட் பாக்கெட் அவனுக்கு ஒன்று அவன்தங்கைக்கு ஒன்று என்று வாங்கி வந்திருந்தார். அப்பாவும் மாமாவும் கட்டிலில் அமர்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்.அவன் ஓடிப்போய் தன் போந்தாவைத் தூக்கிக் கொண்டு வந்து மாமாவிடம் காட்டினான். பக்கத்தில் அமர்ந்து அவன் தின்றதுபோக மிச்ச பிஸ்கெட்டை நுனுக்கி அதற்கும் போட்டான்.

பொழுது மறைய ஆரம்பித்திருந்தது. அம்மா சிறிது நேரத்தில் மாமாவிற்கு பலகாரம் செய்து எடுத்து வந்தது. அதை இருவருமேதொடவில்லை . ஏதோ ஆழ்ந்திருந்தார்கள்.

நல்லா யோசனை பண்ணுங்க மாமா. போன வருஷம் போர் போட வாங்கின கடனே அடைக்காம கிடக்கு

என்னை என்ன பண்ன சொல்ற மாப்ள, கத்திரிவெண்டையெல்லாம் இப்பத்தான் காப்பு. நெல்லு பால்பொடை. மஞ்சள்தண்ணியில்லாம இலைநோய் வந்து கிடக்கு. சரியான பக்குவத்தில போர்த் தண்ணி நின்னு போச்சு

அப்பாவின் கண்ணில் துளிர்த்த கண்ணீர் வாசலில் போட்ட லைட் வெளிச்சத்தில் மின்னியது. அது அவனுக்கு அதிசயமாயிருந்தது.

காலங்காலமா வானம் பார்த்த பூமியாவே கிடக்குதுன்னுதான் போன வருஷம் தும்ப பிடிச்சி வாலபிடிச்சு எவனெவன்காலிலேயோ விழுந்து போர் போட்டோம். ஒரு வருசத்திலேயே நின்னுபோனா நாங்க எத தாங்குவோங்கண்ணா?

அம்மாவும் தன் முறைக்கு வாயில் துணியை பந்தாய் சுருட்டி வைத்துக் கொண்டு விம்மியது. அவன் வாய்க்கு கொண்டு போனஇனிப்பு போண்டாவை போந்தாவிற்குப் போட்டுவிட்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கவனிக்க ஆரம்பித்தான்.

பேசாம காட்டையே வித்திடலான்னா இந்த மனுசந்தான் கேட்க மாட்டீங்குது

நீ கொஞ்சம் செத்த சும்மாயிருக்கியா? நான் எதுவோ பண்ணி எலவெடுத்துக்கிறேன் . அப்பா ஒரே பேச்சில் அம்மாவைஅடக்கிவிட்டார். அதுவும் வீட்டிற்குள்போய் ஒடுங்கிவிட்டது. அது போன திசையே வெறித்திருந்துவிட்டு மாமாவின் பக்கம்திரும்பி பேச ஆரம்பித்துவிட்டார் அப்பா.

இந்த ஒரு முறை தயவுகாட்டு மாப்ளே. நாமக்கல் மூலையா நல்ல பாயிண்ட் ஓண்ணுயிருக்கு. போர அழுத்திப் பாத்திட்றேன்.எல்லா ஊத்துக்காரனும் அடியில் வத்தாத சமுத்திரமே இருக்குன்னு சொல்றான். ரெண்டு வருச வெள்ளாமைதான் மாப்ளே .கண்களில் பிரகாசம் காட்டினார்.

அதுக்கில்ல மாமா. உங்க காடு பத்திரமே அடமானம் கிடக்கு. அதுயில்லாம எனது வேற.. பூனையின் பிரசவமாய் முக்கி முக்கிவந்தது மாமாவின் வார்த்தை.

இங்க பாருங்க மாப்ளே. நான் மானஸ்தன். அப்படியே ஒன்னுமில்லாம போனாலும் என் உசிர் தந்தாவது உன் பத்திரத்தைமீட்பேன். இதுக்குமேல நம்பிக்கையில்லைன்னா நீயும் உங்கொக்கா மாதிரியே...

கட்டிலில் குறுக்குவாட்டில் பிணைத்திருந்த கயிறை தள்ளிவிட்டு கொண்டே பேசினார் மாமா. சரி, அதுக்கு மேலே உங்கவிருப்பங்க மாமா கட்டில் கயிற்றிடையே மூட்டைப் பூச்சியொன்று நசுங்கிக் கிடந்தது.

அவர் சம்மதம் தெரிவித்த மகிழ்வில் சாப்பாடு போடு என அப்பா அம்மாவிடம் சப்தம் எழுப்பினார்.

லைட் வெளிச்சத்தில் பூச்சி பொறுக்கிக் கிடந்த போந்தாவை அடைத்துவிட்டு அவனும் சாப்பிடப் போனான். போந்தாவைப்போலவே ஏனோ அவனுக்கும் அன்று தின்னத் தின்ன பசி அடங்க மறுத்தது.

--------------------------------------------------

அடுத்த பதினோராவது நாளில் வெண்டைச் செடிக் காட்டில் போர்வண்டி வந்து நின்றது.

உய்ய்ய்ங்ங்ங்கென்று அது ஆரம்பித்த பிளிறலில் ஊர் உலகத்துக்கே தன் கர்ஜனை கேட்பது போல் அப்பா உணர்ந்தார். அதன்சப்தத்தில் அம்மாவின் பய சுருதியும் சேர்ந்துகொண்டது. இவனும் தங்கையும் காதுகளை அடைத்துக் கொண்டு மாமாவின்கால்களை அணைத்தவாறு இருந்தார்கள். போந்தா மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் வெண்டைப் பூச்சியை பறந்து பறந்துகொத்தியபடியே கிடந்தது.

பொழுதாகியும் போர்வண்டிச் சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.

அப்பாவும் மாமாவும் போர்வண்டியையே சுற்றிச் சுற்றி வந்தவாறு இருந்தார்கள். அவர்கள் பின்னாலேயே நடந்து கால் வலித்தது.இரவானதும் அம்மா இவனையும் தங்கையையும் சாப்பிட வைத்து படுக்கையில் போட்டது. அம்மா அரைமணி நேரத்திற்குஒருமுறை வருவதும், சாமி படத்துக்கு முன் சூடமேற்றுவதும், கண்ணீர் மல்க பிரார்த்திப்பதும் விநோத செயலாய்ப்பட்டது.

எப்போது உறங்கினானோ.. விடிந்து பார்த்ததும் போர்வண்டியை கழட்டிக் கொண்டு போயிருந்தார்கள். வீட்டில் யாருமில்லை.எல்லோரும் வயலில் இருந்தார்கள். தண்ணீர் வந்திருக்குமோ? ஓடிப்போய் பார்த்தான்.

சாம்பல் திட்டாய் குவிந்திருந்த மண்ணை போந்தா கிளறிக் கொண்டிருந்தது. அதில் துளி கூட ஈரப்பசை தெரியவில்லை.அம்மாவின் வேண்டுதல் புகையாகவே போயிருப்பது தெரிந்தது.

தலையாலயடிச்சி தண்ணிகுடிச்சேன், இந்த மனுசந்தான் கேட்கலே . அம்மா ஆத்மா தோய்ந்த குரலில் அரற்றியது. அப்பாவைக்காணவில்லை. மாமா வரப்பில் உட்கார்ந்து கொண்டு பத்திரம் போனதற்காய் வருந்துவதா? இல்லை இவர்கள் வேதனைக்குசமாதானம் சொல்வதாயென கைப்பிசைந்திருந்தார்.

இவனைக் கண்டதும் உங்கொப்பன் வீட்ல என்ன செய்யிராருடா? என அம்மா கேட்டது.

நான் காண்கிலேயே

போயி அரை மணி நேரம் ஆகுது என்ன செய்யும்?

வீட்டு அட்டாலியின்மேல் சம்மணம் போட்டு உட்கார்ந்து தவம் செய்வது போலிருந்தது அப்பாவின் முதுகு. மாடு கட்டும்தாம்புக்கயிறு அவர் கழுத்தில் பாசக்கயிறாய் மாறியிருந்தது.

நாலு பக்கம் கடன் வாங்கி நம்மள நட்டாத்துல விட்டுப்புட்டு வேறெங்கோ சீமையாள போயிருக்கான் உங்கப்பன்

அப்பா செத்தபின் கடன்காரர்கள் அம்மாவை கரையானாய் அரிக்க ஆரம்பித்ததும் அப்பாவை அது வாய்விட்டு சபித்தது.இனிமேல் நீதான் பெரியவனென்று இடுப்பில் லுங்கியை சுற்றிவிட்டார்கள்.

சிறுவனாய் அவன் கரையான் பொறுக்கித் திரிந்த இந்த குறுநிலப்பரப்பை இனி அவன் தான் ஆள வேண்டும் என்றார்கள். அதுதான் அவனுக்கு விளங்கவில்லை. ஆனால், இந்த போந்தாக் கோழியை வைத்துக் கொண்டு அப்பாவிட்டுப் போனகடனையெல்லாம் அடைக்க முடியாது என்பது மட்டும் நன்கு புரிந்தது. அத்தோடு அவன் தன் போந்தாவிற்கு இரை தேடுவதைநிறுத்திக் கொண்டான்.

ஆனால், அவனது காய்ந்த வயல்களில் பயிர்கள் மீது மண்சமாதி கட்டியிருந்த கரையான்களை கொத்தி கொத்தி தின்று தானாகவேவளர ஆரம்பித்திருந்தது அது. இந்த நிலத்தின் மீது உண்மையில் தனக்குத்தான் உரிமையிருக்கிறது என்பது போலிருந்தது அதன்செயல்.

முதன்முதலாய் எதிரியாய் நோக்க ஆரம்பித்தான் அதனை. நெல்பதர்களை கொத்திக் கிடந்த அதன்மீது வெறியோடு கல்எறிந்தான்.

அவனிடமிருந்து தப்பிப்பதற்காய் சிறிது தூரம் இறக்கையடித்து பறந்தோடிய அது அவன் கண்ணுக்கு ராட்சச கழுகாய் தெரிந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X