• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாவல் ஒரு கேள்வி

By Staff
|

கலாச்சார மாத இதழ் - ஜூன் 2005

நாத்திகம்: அயோத்திதாசரை முன்வைத்து

அ.ஜெகந்நாதன்

நமது தேச சீர்கேட்டிற்கும் ஒற்றுமெய்க் கேட்டிற்கும் மூலம்

சாதிப்பிரிவுகளும் சமயப்பிரிவுகளுமே

- க. அயோத்திதாசர்

உழைப்பின் அறிவும் மதத்தின் அறிவும் எதிரெதிர் தன்மையுடைத்தது. உழைப்பு படைப்புத்திறன் மிக்கது. படைப்பாக்க வழியில் நின்று அவைபொருளைத்தேடும். இங்கு பொருள் என்பதை பொருளாதாரம் என்பதற்குள் சுருக்கக்கூடாது. மாறாக பண்பாட்டு பொருளடைவை அல்லது பண்பாட்டுவிரிவாக்கத்தை உழைப்பின் அறிவு சுட்டும். மதஅறிவு படைப்பை முதன்மைப்படுத்தும். இந்தப்படைப்பு என்பது அருவமான ஒரு கருத்திலிருந்து துவங்குகிறது.கடவுள் உலகைப் படைத்தான். மனிதனைப் படைத்தான். அவன் இவ்வுலகம் கடந்த அருவமான இடத்தில் உள்ளான் என ஏறக்குறைய எல்லாமதங்களும் சுட்டும்.

இந்தியச் சூழலோ இதற்கு நேரெதிரானது. இங்கு உழைப்பு என்பது பெரும்பான்மையாக இருந்தபோதும் அதை அடக்கும் சக்தி மதத்திற்கு இருந்தது.அதனாலேயே உழைப்பின் வழிநின்ற படைப்பு அல்லது பண்பாடு இங்கு முன்னெழவில்லை. இதற்கு இந்திய வைதீகம் கண்டுபிடித்த தீட்டு முக்கியகாரணியாக இருந்தது. உலக மதங்கள் கடவுளை முதன்மைப்படுத்தும். இந்திய மதமோ கடவுளுக்கு நிகராகத் தீட்டை முதன்மைப்படுத்தும். இதனாலேயேபல்கியிருந்த மனித உழைப்பு பேசாப் பொருளாக்கப்பட்டு உழைப்பே அற்ற கடவுள் என்ற ஒன்று பேசும் பொருளானது. இந்திய வைதீகம் உழைப்பைதீட்டாக்கியது போன்று மனித அறவியலையும் தீட்டாக்கியது. சோம, சுரா பானம், உயிர்ப்பலி, சமனற்ற நீதி என்பதான கொள்கையைகொண்டிருந்தது. இவ் அறவியல்தீட்டின் எதிர்வடிவமாக பெளத்தம் உருவானது. பெளத்தம் கடவுளை நிராகரித்ததன் மூலம் தீட்டை நிராகரித்தது. கடவுளின்சூதியான ஆன்மாவை நிராகரித்ததன் மூலம் மதத்தின் உட்சக்தியையும் அது நிராகரித்தது. வைதீகம் நிராகரித்த அறம் பெளத்தத்தின் உட்பொருளாகமாறியது. ஆனால் அயோத்திதாசருக்குள் உழைப்பும் அறம் உட்பொருளாக இருந்தன என்பதில் இருந்து இக்கட்டுரை துவங்குகிறது.

1. அயோத்திதாசர் இருவழியில் ஒரே சீராக பயணப்படுவார். அவற்றில் நிலம் குறித்த மதிப்பீடு சற்று தூக்கலாகவே காணப்படும். தேசம் சீரடையவேண்டுமெனில் 1. உழவிடல் வேண்டும் 2. கைத்தொழில் பேண வேண்டும். 3. கல்வி விருத்தியாக வேண்டும் ( 521/I) எனப் பண்டிதர்கூறுவார். இத்தோடன்றி வித்தை விருத்தி, புத்தி விருத்தியால் தேசம் சீர்பெறுமா?சாதி விருத்தி மத விருத்தியால் தேசம் சீர் பெறுமா? எனக் கேள்வியெழுப்பி மதக்கடைகளைப் பரப்பி அதனால் வயிறு பிழைக்கும் பெரும் சோம்பேறிகளே மலியும்விருத்தி பெற்று நாளுக்குநாள் தென்னிந்தியம் சீர்கெட்டு வருவதுடன் மக்களும்அறிவு மயங்கி பாழடைந்து போகிறார்கள் (518/ I) என்பார் பண்டிதர். நிலத்தின்மீதும் மனித உழைப்பின் அறிவுமீதும் இருந்த பார்வையின் உச்சக்கட்ட மதிப்பீடாகஇதனை, இங்கு நாம் சுட்டலாம்.

2. கடவுள் என்ற ஒன்றை அப்படியே நிராகரிப்பதற்கு பண்டிதர் விளக்க தருக்கத்தைமேற்கொள்கிறார். பிற மதங்கள் கடவுளை மனிதத்தன்மைக்கு அப்பாலையில் நிறுத்தும்.கடவுள் உன்னதமானவர், புனிதமானவர் என ஒளிவட்டம் கட்டும். பண்டிதர்இவ்ஒளிவட்டத்தை அதன் தொடக்க வடிவிலேயே நிராகரிப்பார். கடவுள் இல்லைஎனும் தலைப்பில் புத்தபிரான் காலத்தில் கடவுள் எனும் மொழி தோன்றியதுகிடையாது( 36/III) எனப் பண்டிதர் தனது முதல் கவிழ்ப்பை துவங்குவார். புத்தர்இவ்வுலகில் அவதரிக்கவில்லை. அவர் சாதாரண மனிதராகப் பிறந்து நிர்வாணமுற்றுபுத்தரானார் எனப் பண்டிதர் கூறுவார். நிர்வாணமுற்ற புத்தர் இறந்தபின் அவரைகடவுள் என அழைத்தனர் எனவும் கூறுவார். புத்தர் காலத்தில் கடவுள் என்ற சொல்லேஇல்லை என்பதை இதன் மூலம் அறியலாம். கடவுள் என்ற சொல்லே இல்லாதபோதுபடைப்பு, ஆதி, சூதி என்பதெல்லாம் தடைபட்டுப் போகிறது என்பதை மட்டும் இங்குகவனத்தில் நிறுத்துவோம்.

கடவுள் என்ற சொல்லை நிராகரித்தது போன்று அதற்கு வேறொரு விளக்கமும்தருவார். கடவுள் என்ற சொல்லிற்கு நன்மை என்று (26,167/II) பொருள்கொள்வார். நன்மை அறவியலை உற்பத்தி செய்யும் என்பதை மட்டும் இங்குகவனத்தில் நிறுத்துவோம். இந்நன்மை செய்தவன் கடவுள். அதாவது மனிதன் தன்வாழ்நாளில் நன்மையே செய்தால் அவனை கடவுள் என அழைக்கலாம்.அந்நன்மையை செய்த தல் மனிதன் புத்தர். எனவே அவனே ஆதி கடவுள் எனப்பண்டிதர் தொடர்ந்து கூறுவார். இங்கு வைதீகத்தின் கடவுலப்பாலையை பண்டிதர் மிகலகுவாக நிராகரிப்பதை அவதானிக்கலாம். அந்நிராகரித்தலின் மூலம் வைதீகத்தின்அறம் சார்ந்த தீட்டையும் நிராகரித்து அதனைத் தனதொன்றாக மாற்றுவது இங்குநோக்கத்தக்கது.

உலகத் தோற்றம் என்பது ஒரு மதத்தின் க்கியப் பாத்திரமாகும். கடவுள் நீரின் மீதுஅசைவாடிக் கொண்டிருந்தார். பொழுது போகவில்லை. யோசித்தார். வானத்தையும்பூமியையும் படைத்தார். நீரில் இருந்து நிலத்தை பிரியச் செய்தார் என்பதிலிருந்துஇறுதியாக மனிதனைப் படைத்தார் எனப் பைபிள் கூறும். பண்டிதர் தனதுஆதிவேதத்தில் எக்காலுள்ள பூத பெளதீகங்களின்று சூரியன் தோன்றி ஆதிவாரம்உண்டாகி, சந்திரன் தோன்றி சோமவாரம் உண்டாகி, பூமி தோன்றி மங்களவாரம்உண்டாகி, நீர் தோன்றி பூதவாரண்டாகி, காற்று தோன்றி குருவாரம் உண்டாகி,ஆகாய விரிவாகும் வெளி தோன்றி சுக்கிரவாரம் உண்டாகி இருள் தோன்றி சனிவாரம்உண்டாகி வாரங்கிழமை யென்னும் நற்பல தோற்ற உலகமாய் விரிவதியல்பாம் (193/II) என உலகத் தோற்றத்தை பண்டிதர் விவரிப்பார். பண்டிதரின்தோற்றக்கொள்கை சரியா தவறா என்பதல்ல இங்கு க்கியம். மதங்கள் தனதுதோற்றத்தை அநாதியில் இருந்து அதாவது கருத்தமைவில் இருந்து உற்பத்தி செய்யும்.பண்டிதர் பொருளமைவில் இருந்து உற்பத்தி செய்திருக்கிறார் என்பது மட்டும் இங்குபோதுமானது.

4.மத வெற்றியின் அடிப்படை அலகே அதன் வெகுஜன மனோபாவம்தான். மதம்தனது உறுப்பினர்களை புதுப்பித்துக் கொள்வதற்காக பண்டிகைகளைவெகுசனப்படுத்தும். இவ்வெகுசனம் மனித இருப்பின் கூடலை காண்பிக்கிறதுஎன்றெல்லாம் சமூகவியல் ஆய்வு கூறினாலும் மனிதனின் மதப்புனிதத்தை சோதிக்கும்வடிவமே பண்டிகைகளாகும். இந்தியச் சமூகத்தின் வைதீகம் மத உயிர்ப்போடு சாதியஉயிர்ப்பையும் சுட்டி நிற்கும். இச்சுட்டி நற்பின் வெகுசன வடிவத்தின் பண்பாட்டுவடிவம் அருவருப்பாக இருக்கும். தீபாவளியின் உற்பத்தி வடிவம் படுகொலை.அய்யப்ப உற்பத்தி றைகளற்ற கூடல். இவை தாண்டிய இந்திய வைதீக கடவுள்வெகுசன உற்பத்தி படுகொலைகளோடும் ஏற்கமுடியாக் கூறுகளோடும் பின்னிக்கிடக்கும்.

பண்டிதர் வெகுசன உற்பத்தியை தொழில்படுத்துவார். தீபாவளியை --தீபவதி ஸ்னானவிவரம் ( 45/II ) எனப் பெயரிடுவார். நல்லெண்ணெய் கண்டுபிடித்த நாளையேதீபவதி நாள் எனப் பண்டிதர் சுட்டிச் செல்வார். கார்த்திகை தீபத்தை கார்த்துல தீபவிவரம் ( 47 /II ) எனப் பெயரிட்டு ஆமணக்கு நெய் கண்டுபிடித்த நாளை கார்த்துலதீபநாள் எனச் சுட்டுவார். இதைப்போன்று அம்மன் வழிபாட்டை மருத்துவத்தோடுதொடர்புபடுத்துவார். பிடாரி எனும் அம்மன் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்துஅம்மை நோய்க்கான மருந்தைக் கொடுத்தாள். அவள் இறந்த பின் அவளை நினைவுகூறும் தன்மையுடன் அம்மன் வழிபாடு நடத்தப்படுவதாக ( 36/II) பண்டிதர்சுட்டுவார்.

மதவகை வெகுசன உருவாக்கம் தீட்டோடும் சடங்கோடும் புதுப்பிக்கப்படுகிறது.இதற்கான உற்பத்தியோ அருவருப்பின் இறுதி வடிவமாய் திகழ்கிறது. பண்டிதரின்வெகுசன உருவாக்கம் தொழில், குணப்படுத்தல், நினைவு கூர்தல் என்பதைமீட்டுவதாக இருக்கிறது என்பது மட்டும் இங்கு போதுமானது.

5. வழிபாடுகளையும் பண்டிதர் பகுத்தறிவுக்கு உட்படுத்துவார். பலிபூசை ( 105/II),கற்பூரம் கொளுத்துதல் ( 150 /II) தலியவற்றிற்கும் பண்டிதர் விளக்கம் கொடுப்பார்.இங்கு பலி இடுதலை மட்டுமே நோக்குவோம். பலி இடுதல் என்பது தற்போதுஉயிர்ப்பலியோடு தொடர்பு கொண்டிருக்கிறது. இவ்உயிர்ப்பலி தெய்வ சாந்திக்குப்பயன்படுகிறது. தெய்வத்தை சாந்தப்படுத்துதல் என்பது இங்கு பேயைசாந்தப்படுத்துவது எனப் பொருளாகிறது- இத்தோடு வைதீக கடவுளுக்குபடைக்கப்படும் படையல், அதாவது நெய்யாபிஷேகம், பாலாபிஷேகம் என்பதையும்நோக்க வேண்டும்- பண்டிதர் பலி என்பதன் பொருள் சோறு எனக் கூறிவிட்டு புத்தசங்கத்தோருக்கு பெளத்த குடிகள் கொண்டு வந்தளிக்கும் சோறு என விளக்கம்கொடுப்பார். மனிதனுக்கு உணவிடுதலை பலி என அர்த்தப்படுத்தும்போதுவைதீகத்தின் படையலும், நாட்டுப்புறத்தின் தெய்வம் பேய் வரையறுத்தலும்கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

6. மதம் என்பதின் தொடர்புடைய அனைத்து சொற்பிரயோகங்களையும் பண்டிதர்தலைகீழாக்குவார். கடவுள், கோயில், ஆஸ்த்திகம், விதி, சமயம், கர்மாமுதலானவற்றிற்கு நவீன விளக்கம் கொடுப்பார். கடவுள் என்றால் நன்மை என்பதைமுன்னமேயே குறிப்பிட்டோம். அதைப்போன்று சமயம் என்றால் காலம்எனப்பொருள் ( 121/II ) கொள்வார். கோயில் என்பதை அரசனின் வீடு( 91/II )கர்மா என்பதை கன்மமாக்கி கன்மன் என்பதின் பொருள் செய்கை எனப்படும் (144/II ) எனப் பொருள்படுத்தி அவனவன் செய்யும் கன்மபலனை அவனவனேஅநுபவித்து தீரல் வேண்டுமேயன்றி ஓரணுவேயேனும் மற்றவர்களால் அகற்றலாகாது(115/II ) என விளக்குவார் பண்டிதர்.

மதத்தோடு தொடர்புடைய கோயில்,சமயம், கர்மா, விதி என்பதை இங்கு நாம் மனதில்நிறுத்தி பண்டிதரின் விளக்கத்தை நோக்கும்போது மதச் சொல்லாடல்கள் கீழறுந்துவீழ்கின்றன என்பதை மட்டும் இங்கு கோடிட்டுக் காட்டலாம்.

7. மத எதிர்ப்பு, நாத்திகம் என்பதை உக்கிரப்படுத்தியது மார்க்சியம். மார்க்சியத்தின்மதம் மனிதனை மயக்கும் மது என்பது மனித குலத்திற்கு அதிர்வைக் கொடுத்தது.அதைப்போன்று 20ம் நூற்றாண்டில் தோன்றி கடவுள் இல்லை கடவுள் இல்லை எனச்சொன்ன பெரியாரியமும் தமிழுக்கு மிகப் பெரும் அதிர்வைக் கொடுத்தது.மார்க்சியம் தமிழ்த் தளத்தில் அறிமுகமாகும் முன்பே பண்டிதர் மத அதிர்வைஉண்டுசெய்தார். மதத்தை கடைகள் என்றார். பலவகைப் பொய்யைச் சொல்லிஅறிவிலிகளை வஞ்சித்து பொருள் சேர்த்து தங்கள் தேசத்திற்கு அனுப்புவதும்தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் சுகமாக உண்டு உடுத்தி உலாவுவதுமாகியசெயல்கள் குறித்த இடங்களே மதக் கடைகளென்றும், பொய்யைக் கூறிப்பொருள் பறித்து சீவிப்போரே மதக்கடை வியாபாரிகள் என்றும் கூறப்படும்(152/II) என நிறுவனமான மதங்களை விமர்சனத்திற்கு உட்படுத்துவார்.மனிதர்கள்தான் லஞ்சம் வாங்கிக் கொண்டு உதவிபுரிகின்றார்கள். சாமியும்லஞ்சம் வாங்கிக்கொண்டு வியாதியை நீக்குமாவென்று பகுத்தறியான் (153/II)என சாமிகளையும் நக்கலிப்பார். பண்டிதரின் சாமி நக்கலும் மத எதிர்ப்பும் அதன்உச்சகட்டத்தை அடையும் தருவாயில் கீழ்குறித்த சொல்லாடல் வெளிக்கிளம்பும்.கள்ளுக்கடை அறிவை மயக்கி கேட்டுக்கு கொண்டுபோகும் பாதகமாகும்.கடவுள்கடை தாங்கள் கேளாததும் காணாததுமான பொய்யைச்சொல்லி பொருள்பறிக்கும் பாதகமாகும். (211/I) என பண்டிதர் கூறுவார். மார்க்சியம் தமிழ்ச்சூழலுக்கு வரும் ன்பே மதத்தை பண்டிதர் மதுவுடன் இணைத்திருக்கிறார் என்பதுமட்டும் இங்கு போதுமானது.

8. இறுதியாக ஒன்றை மட்டும் இங்கு சொல்லிச் செல்வோம். பெளத்தம் அறவியலைதனது உட்பொருளாகக் கொண்டு வெளிக்கிளம்பியது. ஒருவிதத்தில் இதுகூட ஒரு விதநாத்திக செயல்பாடுதான். ஆனால் பண்டிதரின் நாத்திகம் உழைப்பு, அறவியல் என்றஇரண்டையும் உற்பத்தி செய்கிறது. பெளத்தம் விட்ட இடத்தை பண்டிதரின் நாத்திகம்இணைத்துச் செல்கிறது என்பதை மட்டும் இங்கு முக்கியப்படுத்துவோம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் சென்னை செய்திகள்View All

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more