• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1

By Staff
|
கலாச்சார மாத இதழ் - ஜூன் 2005

-பனைகளின் காலம்

காலபைரவன்

பாட்டி இப்போதெல்லாம் நடுஇரவில் அலறி எழுந்து ""வெட்டாதீங்கடா, வெட்டாதீங்கடா என அழுவது வழக்கமாகிவிட்டது.ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் அனைவரும் விழுந்தடித்துக் கொண்டு பாட்டியின் படுக்கையை சூழ்ந்து கொண்டு விசாரிப்போம்""என்னம்மா ஆச்சி, எங்கயாவது பயந்துட்டியா? என அப்பா விசாரிப்பார். ""ஒன்னுமில்லடா பனந்தோப்பு ஞாபகமாகவே கீதுஎன்பாள். ""நீதாம்மா தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்கிற என அப்பா நொந்து கொள்வார். ""என்னால பழச மறக்கமுடியலடா என பாட்டி கூற, ""சும்மா பேசாம படும்மா என பாட்டியை சரிகட்டப்பார்ப்பார்.

ஒரு சில நாட்கள் இரவை பொருட்படுத்தாமல் அப்பாவுக்கும் பாட்டிக்குமான பேச்சு நீண்டபடியிருக்கும். பேச்சின் இடையே சிறியஇரும்பு உரலில் வெற்றிலையைப் போட்டு ""டக்டக் என சீரான கதியில் இடித்துக்கொண்டிருப்பாள். உரல் இடிக்கும் ஓசை எங்கள்வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகி ரொம்ப வருடங்களாகிவிட்டது. எங்கள் பால்யத்தில், பாட்டிக்கு வெற்றிலை இடித்துத்தருவதில் பெரும் போட்டியே நடக்கும். அப்படி இடித்து தருபவர்கள், இரவில் பாட்டியின் பக்கத்தில் படுத்துக் கொண்டுநவநவமான கதைகளைக் கேட்கலாம். எப்படித்தான் அவ்வளவு கதைகளை தனது ஞாபக அடுக்குகளில் வைத்திருக்கிறாளோஎன அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். விடுமுறைக்கு, இப்போது வீட்டிற்கு வந்தால்கூட பாட்டியிடம் கதை கேட்ட அந்தக்கணங்கள் கண் முன் வந்து செல்கின்றன.

எங்கள் வீடு இரண்டு தெருவுக்குமாக நீண்டிருந்தது. வாசலில் இரு பெரும் திண்ணைகள். காது குத்து, மஞ்சத்தண்ணிபோன்றவைகளை செய்யக்கூடிய அளவிற்கு பெரியவை. அதைப்போன்ற திண்ணைகளை இந்த ஜில்லாவிலேயே பார்க்கமுடியாது. அவ்வளவு விஸ்தீரணம் . அதையொட்டி ரயிலோடு போட்ட சிறு கூடம். அதைத் தொடர்ந்துதான் மெத்தைக்கட்டிடம்.ஆறு அறைகள். காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்தவை. பாட்டிக்கு எந்த இடமும் வெற்றிடமாக இருப்பது பிடிக்காது.எதையாவது கொண்டு வந்து நிரப்புவாள். அதன்பொருட்டு அவளுக்கும் அப்பாவுக்கும் சண்டை வரும். சதா, பாட்டி திட்டுவாங்கிக் கொண்டே இருப்பாள். சில நேரங்களில் ""டேய் போடா, உன்னையே நாப்பது வருஷமா இந்த ஊட்ல வச்சிகினுஇருக்கல என அப்பாவை கேலி செய்வாள். அனைவரும் கொல்லென சிரிப்போம்.

விடுமுறைக் காலங்களில் வீடே திமிலோகப்படும். உறவினர்களின் வருகை எங்களை மகிழ்விப்பதாக இருக்கும். எங்களையும்,அத்தை மகன்களையும் அழைத்துக் கொண்டு சண்டைக்குப் போவதைப் போல பாட்டி பனந்தோப்புக்கு புறப்படுவாள். நாங்கள்குதூகலத்தில் திளைத்தபடி செல்வோம். கவனத்துடன் வெற்றிலைப்பையை எடுத்துக் கொள்ளவேண்டும். வெற்றிலையைப்போட்டுக்கொள்ளாத பாட்டி நிச்சயம் எங்கள் பாட்டி இல்லையென கூறிவிடலாம். நடந்து வந்த களைப்பைப் போக்கிக்கொள்ளசிறிது நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்வோம். பனந்தோப்பில் கிட்டிப்புள் எப்படி விளையாடுவது, தோற்றுவிட்டால்கெள வை எப்படி மூச்சு விடாமல் பாடிக்கொண்டே செல்வது பற்றியெல்லாம் பாட்டி நுணுக்கமாக கற்றுத்தருவாள். ஒவ்வொருநாளுக்கும் வெவ்வேறு விளையாட்டுக்களை எங்களுக்கு அறிகப்படுத்துவாள். கிளிப்பாரி, நிலாக்கும்பல், சடுகுடுஆட்டங்களை அவள் வழியாகத்தான் எங்களால் கற்றுக்கொள்ள முடிந்தது. அப்பாவிற்கு இது குறித்தெல்லாம் கவலையில்லை.கெடு தவறிய பாக்கிகளை, அசலும் வட்டியுமாக வசூலிப்பதிலேயே அவர் குறியாக இருப்பார். ஆனால் இவ்வாண்டு கோடைவிடுமுறை எங்களுக்கு உவப்பானதாக இல்லை. பனந்தோப்பையும் அதைச்சுற்றியிருந்த நிலத்தையும் அப்பா, பங்குனி மாதமேஒரு பாண்டிச்சேரி நபருக்கு விலைபேசி விற்றுவிட்ட செய்தியை மட்டும் தெரிவித்தார். உடனடியாக பாட்டியால் எதையும்கூறமுடியவில்லை. அவள் உள்ளுக்குள் துடிதுடித்தாள். முகம் இறுகியது. கண்களில் இயலாமை படர்ந்தது. ""டேய் பனந்தோப்பமட்டுமாவது விட்டு வைக்கக் கூடாதா? என்றாள். பக்கத்துல ""பனந்தோப்ப வச்சிகினு எவனாவது வீடு கட்ட இடம் வாங்கவருவானா? என எதிர்கேள்வி அப்பாவிடமிருந்து வரும்.

""அப்ப இங்க பயிரிடப் போவதில்லையா?

அப்பா மெளனம் சாதித்தார்.

""டேய் என்ன தாண்டா செய்யப் போறாங்க?

""நெலத்த வாங்கி, பனமரத்தல்லாம் வெட்டிட்டு, சமப்படுத்தி, வீடு கட்டப் பிளாட் போட்டு விக்கப்போறாங்கமா

""டேய் நல்லா விளையிற பூமிடா, வித்துட்டா திரும்ப வராதுடா, நீ ஆளானதே அதாலதாண்டா எனக் கூறும்போது பாட்டியின்கண்களில் இருந்து நீர் கசிந்தபடி இருக்கும். எல்லாம் இயல்பாக நடந்து கொண்டிருப்பதைப் போல, அம்மா, பாட்டிக்கும்அப்பாவிற்கும் பருக தேனீர் பருக கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றுவிடுவாள். நிலம் கைமாறுவது பற்றி யாரும் கருத்துதெரிவிக்கவில்லை. தனிநபர் இராணுவத்தைப் போல பாட்டி மட்டுமே போராடிப்பார்த்தாள். அத்தைகள், அவர்களின் பங்காகபணத்தை பெற்றுச் செல்வதிலேயே குறியாக இருந்தனர். என்ன நடக்கிறதென்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்தபடிஇருந்தோம். பாட்டி நள்ளிரவில் எழுந்து, தனியே பேசிக்கொள்ள ஆரம்பித்தாள். யாரோ தன்முன்னால் இருப்பதாகஎண்ணிக்கொண்டு வேகமாக கத்தி சண்டையிடுவாள். அழுது கண்ணீர் வடிப்பாள். யாரும் அவளை தேற்றுவதற்கு முன்வரவில்லை. நானும் எனது தங்கையும் பாட்டியை தூங்க வைக்க எவ்வளவோ முயற்சி எடுத்துக் கொள்வோம். ""நீங்க போயிதூங்குங்க எனக்கூறி எங்களை அனுப்பி விடுவாள்.

பனந்தோப்பு விரிந்து கிடந்தது. தொலைவில் இருந்து பார்ப்பதற்கு, ஓர் அணிவகுப்பைப் பார்ப்பதைப்போல இருந்தது.உயரமான, குட்டையான பனைமரங்கள், பனங்காய்கள் காய்த்துக்கிடந்தன. அனேக மரங்களில் குருவிகள் கூடு கட்டியிருந்தன.தோப்புக்கு வலப்புறம், நிலம் கரம்பாக பரந்து கிடந்தது. தாத்தா இறப்பிற்குப் பின் நிலம் உழப்படவே இல்லை. அரசியல்கூட்டங்கள் அவ்வப்போது நடக்கும். அப்போதிலிருந்தே இதை விற்றுவிடுவதில்தான் அப்பாவிற்கு ஆர்வம். காலை வெயில்சுட்டெரித்தது.

தகவல் கிடைத்து அங்கு சென்று பார்க்கும் போது, பாட்டி கைகளை வீசியபடி ஒரு பைத்தியத்தை போல அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தாள். தலை களைந்து, ஆடைகள் ஒழுங்கற்று கிடந்தன. அவள் என்ன செய்கிறாள் என என்னால் யூகிக்கமுடியவில்லை. நிலம் சமப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. வேலை செய்பவன் ஓடி வந்து, ""தம்பி இந்த ஆயா, வேல செய்யஉடமாட்டுது தம்பி, கல்ல எடுத்து அடிக்குது, வண்டிக்கு முன்னால வந்து வந்து படுத்துக்குது தம்பி என்றான். நான் பாட்டியைபார்த்தேன். ஒரு சாதுவைப் போல நடந்து கொண்டிருந்தாள். நான் அந்த வேலையாளிடம் கூறினேன்: ""பரம்பரை சொத்துஇல்லையா, நிலத்தை வித்தது அதுக்கு புடிக்கல, அதான் இப்படி செய்யுது, நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. என் பேச்சுக்குதலையாட்டிவிட்டு அவன், தன் வேலையில் மும்முரமானான்.

நான் பாட்டியை நோக்கி நடந்தேன். சனிமூலையில் இருந்து பெரிய கிணறு எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட பார்மண்ணால்மூடி மறைக்கப்பட்டுக் கிடந்தது. அந்த கிணற்றை மூடுவதற்கு எப்படி மனது வந்ததோ? எங்களுக்கு பாட்டி நீந்தக் கற்றுக்கொடுத்த கிணறு. வீட்டில் எல்லோருக்கும் நீந்த தெரிந்திருப்பதற்கு பாட்டியும் கிணறும் காரணமாக இருக்கலாம். இந்தக்கரையிலிருந்து அந்தக்கரைக்கு கைகளை வீசி காலை உதைத்துக்கொண்டு மிகச் சாதாரணமாக நீந்திச் செல்லும் பாட்டியின் படிமம்என் மனதில் அப்படியே தேங்கிக் கிடந்தது. எங்களுக்கு அவள் நீந்த கற்றுக் கொடுத்ததே விபத்து மாதிரிதான். கிணற்றின் மேல்நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென எங்களை கிணற்றுக்குள் பிடித்து தள்ளிவிடுவாள். மேலிருந்து விழும்போது பூமிகரகரவென சுழல்வதைப்போல இருக்கும். ""ததக் புதக் என நீந்துவோம். நிறைய தண்ணீர் குடிப்போம். நீந்துவதில் சிரமம்ஏற்பட்டால், பாட்டி வந்து எங்களைக் கரை சேர்க்கும். எங்களின் தலையை துவட்டி விட்டபடி, ""பயம் போய்டிச்சினா நீச்சல்வந்துடும்டா என்பாள். வெகு விரைவிலேயே நாங்கள் நீந்தப் பழகியிருந்தோம். மூடப்பட்டிருந்த கிணற்றின் மீது நடந்துபாட்டியை அடைந்தேன். பாட்டி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள். ""கிணத்தைப் பாத்தியாடா? என மெதுவாக கேட்டாள்.அவளின் துக்கத்தை புரிந்தவனாக ""ம் என தலையசைத்தேன். அவளை மெல்ல சீண்டி, ""இங்க வந்து இன்னா பன்றே? எனக்கேட்டேன். மெளனமாகவே இருந்தாள். மண்ணைக் கூட்டிக்கலைத்துக் கொண்டிருந்தாள். எங்கள் தலைக்கு மேலாக கழுகுகள்வட்டமடித்தபடி இருந்தன. அவளைப்பார்ப்பதற்கு சங்கடமாகயிருந்தது. ""கஷ்டபடாத பாட்டி என்று கூறி, நீர் வடியும் அவள்கண்களை மெல்ல துடைத்து விட்டேன். ""என் பேச்ச யாருடா கேக்கறா, எல்லாம் பணத்ததான பாக்குறீங்க என்றாள். வெயில்அதிகரித்துக் கொண்டிருந்தது. ""வா பாட்டி போகலாம் என்றேன்.

""எங்க

""வீட்டுக்குத்தான்

""போடா போக்கத்தவனே. இதாண்டா என் வீடு. இத வச்சிதாண்டா உன் தாத்தா அந்த வீட்ட வாங்குனாரு

""இப்ப இது நம்மளது இல்ல பாட்டி

""ஏன்?

""என்ன பாட்டி தெரியாத மாதிரி கேக்கற

""இது எங்க வூட்டு நெலம்டா. உங்க பாட்டனுக்கு எங்கப்பா லட்டு மாதிரி தந்ததுடா. அத எப்படிடா விக்க மனசு வந்தது உங்கஅப்பனுக்கு

""அதலாம் இப்ப எதுக்கு பாட்டி. நடந்தது நடந்துடுச்சி, வா போகலாம்.

""நா இங்கயே கடந்து மண்ணோட மண்ணா மக்கறேன்டா நீ போ

பாட்டியின் ஆதங்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த பனந்தோப்புக்கும் பாட்டிக்கும் இடையே நிச்சயம் ஏதோஓர் ஆழ்ந்த பிடிப்பு இருப்பதை என்னால் உணர முடிந்தது. அதை அறிந்து கொள்வதன் மூலம் பாட்டியை இயல்பு நிலைக்குமீட்டுவிட முடியுமென நினைத்துக்கொண்டேன். அதை பாட்டியிடமே கேட்டு தெரிந்துகொள்வதென முடிவு செய்து,பாட்டியை மெல்ல அணுகி, ""பாட்டி, வா அந்த மரத்து கீழ உக்காருவோம் என்றேன். அவள் முகத்தில் ஏற்பட்ட பரவசத்தைஎன்னால் அறிய முடிந்தது. என் தலையை வருடி விட்டபடி என்னுடன் நடந்து வந்தாள். நடக்கையில் புழுதி மேலெழுந்துஅடங்கியது. இருவரும் தென்புறம் இருந்த ஓர் பனை மரத்தின் கீழ் அமர்ந்தோம். பனை மட்டைகள் காய்ந்து காற்றில் சலசலத்தன.""ஏன் பாட்டி, இந்த எடத்த வித்ததுல உனக்கு இஷ்டமில்லையா? என மெதுவாக அவளிடம் கேட்டேன். அமைதியாகஅமர்ந்திருந்தாள். சில நிமிடங்கள் கண்களை மூடித்திறந்தாள். பின் இடது கை ஆட்காட்டி விரலால் தனது வலது காதை துடைத்துவிட்டுக் கொண்டே ""ஆமாண்டா என்றாள். ""ஏன் பாட்டி என்றதற்கு கண்களில் பல வித உணர்ச்சிகளைத் தேக்கியவளாக, ""அதுஒரு பெரிய கதடா என்றாள்.

பாட்டி பீடிகைகளுடன் அவளின் கடந்த காலத்திற்குள் பிரவேசித்தாள். அவள் கண்கள் மினுங்கின. சுவாசத்தை ஒழுங்கு செய்துகொண்டபடி கூறத்தொடங்கினாள். ""தனிக்காட்டு ராஜாவாட்டம் திரிஞ்சவர்டா எங்கப்பா. ஊர்ல அவுரு இல்லாம எந்தவிசேஷமும் நடக்காது. ஊர் முக்கியஸ்தர்கள்ல அவரும் ஒருத்தர். அவுருக்கு சரின்னு பட்டாத்தான் எதையும் செய்வார்.சரிவல்லன்னு தெரிஞ்சா ஒதுங்கிடுவாரு. ""நான் தலையை ஆட்டிக்கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு ஜோடிக்கிளிகள்வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பறந்தன. வெற்றிலையை இடித்துப்போட்டுக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தாள். ""நான்மூனாவதோ நாலாவதோ படிக்கறப்ப இங்க வந்தோம். பெரிய கீற்று வீடு. செம்மண் சுவர்தான். சும்மா ஜிலுஜிலுன்னு காத்துபிச்சிக்குனு வரும். ஒரு நாளின் முக்கால் பங்கு நேரத்தை கயிற்று கட்டிலில் அமர்ந்தபடி யாருடனாவது பேசிக்கொண்டிருப்பதில்கழிப்பார் அப்பா.

கள் இறக்குற சீசன் வந்தாக்க எங்கயும் போவமாட்டார். பனமரமெல்லாம் அவுருக்கு சர்வ சாதாரணம். சரசரன்னு ஏறிடுவார்.இருந்தாலும் கூடலூருக்கு பக்கத்திலிருந்து மரம் ஏறதுக்குனே ஒரு ஆள இட்டாந்து வச்சிருந்தார். பேரு முனியன். நேர்ல பாத்தாஅசல் மதுரவீரன் செல கணக்கா இருப்பான். காலையும் மாலையும் மரத்துல ஏறி கள்ளை சேந்திக்கொடுப்பதோட அவன் வேலமுடிஞ்சிடாது. இப்ப மாதிரி அப்பலாம் போத வர்றதுக்கு மாத்திரையை கலக்கமாட்டாங்க. நல்ல சுத்தமான தண்ணியைத்தான்கலப்பாங்க. சின்ன தூசி இருந்தாக்கூட, அப்பா அவர முறைப்பாரு. ""நல்லா வடி கட்ட வேண்டியதுதானே, அதகாட்டியும்உனக்கு அப்படியென்ன முக்கிய ஜோலி என அதட்டுவார். அவன் பின்னந்தலைய சொறிந்து கொண்டு இருப்பான்.

சாந்திரம் ஆச்சினா போதும். அவரோட சகாக்கள்லாம் ஒன்னொன்னா வந்து சேரும். பெரிய பானை நெறைய கள்ளும், தூக்கலாகாரம் போட்டு வறுத்த கருவாடும் மூக்கத்துளைக்கும். கயிற்று கட்டில்ல, இல்ல தரையில எல்லோரும் உக்காந்துகொண்டிருப்பாங்க. அவர் வயத ஒத்தவங்க, ""டேய் வினாயகம், இதுல ஊத்துடா, அந்த கருவாட்டு வட்டிய எடுடான்னுசொல்லுவாங்க. அப்பாவை விட சின்னவங்க, ""அண்ணாச்சி, அண்ணாச்சினு கூப்பிடுவாங்க. பேச்சு எங்கோ ஆரம்பிச்சி,எதிலோ போயி முடியும். அப்பா, எப்ப மொந்தய எடுக்கறாரு வைக்கறாருன்னு யாருக்கும் தெரியாது. அவ்ளோ வேகம்.இதலாம் நான் ஓரமா நின்னு பாத்துக்குனு இருப்பேன். போதை தலைக்கேறிய நிலையில் அப்பா என்ன கிட்ட கூப்பிட்டு, ""செல்லம்நீயும் சாப்பிடுடா என சொல்வார். இன்னா கள்ளா போயி சாப்பிடுன்னு சொல்றார். குடின்னுதான சொல்லனும்னுநெனச்சிக்குவேன்.

அவரு சகாவுலேயே சந்தன பொட்டுக்காரர்தான் அப்பாவுக்கு நெருங்கிய தோஸ்து. அவுரு பேரே அதானா இல்ல, பொட்டுவச்சிருக்கறதால அப்பிடி கூப்பிடுறாங்களான்னு தெரியாது. நெடுநெடுவென்று வளர்ந்த தேகம். அப்பாவ விட ஒரு நாலு அஞ்சுவயிசு கம்மியா இருப்பார். கட்சி விசயம் பேசறதுல ஆள் சூரன். தெனத்துக்கும் எதாவது அரசியலப்பத்தி பேசுவாரு. அப்பதான்அண்ணாதுரை கட்சி ஆரம்பிச்சிருந்தார். அண்ணாதுரை அவசரப்பட்டுட்டார்னு அப்பா அடிக்கடி சொல்லுவார். சந்தனபொட்டுக்காரருக்கும் அப்பாவுக்கும் அதவச்சி வாக்குவாதம் நீளும். ""இருந்தா காங்கிரஸ்காரனா இரு. இல்லாட்டி கம்யூனிஸ்ட்டாஇருன்னு அப்பா அவர்கிட்ட சொல்லுவார். ""கொறஞ்சது இன்னும் அம்பது வருஷமாவது காங்கிரஸ் நம்ள ஆளனும் டோய்,அப்பதான் நாடு ஒரு நெலக்கி வரும். என அப்பா கூற, ""அண்ணாச்சி நீங்க பாக்கதானே போறீங்க இன்னும் பத்து வருஷத்துலஅண்ணாதுர ஆட்சிய பிடிக்கப்போறத என சந்தனப்பொட்டுக்காரர் சவால் விடுவார். ""அப்பிடி ஒரு சாபக்கேடு நடக்காதுன்னுநெனக்கிறேன் என்று கூறிக்கொண்டே ஒரு மொந்தை கள்ளை காலி செய்து விட்டு ""தூ வென காரித்துப்புவார்.

கல் யாபாரம் நல்லா நடந்திச்சு. அது பெருக பெருக வீடு, தோட்டம், கிணறு, பம்பு செட்னு சொத்தும் பெருகிச்சு. நாங்கள்லாம் புதுவீட்டுக்கு வந்தாலும் அப்பா மட்டும் தோப்பிலேயே இருந்தார் எனக்கூறி பாட்டி வெற்றிலை வைத்திருந்த சுருக்குப்பையைஅவிழ்த்தது. விரல்களால் துழாவியபடி, காய்ந்து போயிருக்கும் ஒரு வெற்றிலையை எடுத்து, அதில் சிறிய பாக்கு துண்டைவைத்து, ஒரு நாம்பு புயலைய சேத்து உரலில் இட்டு இடிக்கத் துவங்கினாள். பாட்டி இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்து நான்பார்த்ததே இல்லை. நிலத்தை சமப்படுத்துபவர்கள் வெயிலில் தீவிரத்துடன் வேலை செய்து கொண்டிருந்தனர். பீவேல முட்கள்,ஆடுதொடா செடிகள் வெட்டிக் குவிக்கப்பட்டிருந்தன. வாய் சிவக்க, சிவக்க பாட்டி வெற்றிலையை போட்டுக்கொண்டு,கால்களை நீட்டி அமர்ந்தபோது நான் அவளிடம் கேட்டேன், ""இம்மா நேரம் சொன்னதில்ல உங்க அம்மாவைப் பத்திசொல்லலியே அவள் மெளனமாக இருந்தாள். பின் ""இப்ப எதுக்கு அந்த மூதிய பத்தி கேக்குற என்றாள். ""ஏன் பாட்டி அவங்களஅப்பிடி சொல்ற என நான் கேட்டு முடிக்குமுன், அவளது கண்கள் கோபத்தால் சிவந்தன. உடல் மெல்லநடுங்கிக்கொண்டிருப்பதை என்னால் காணமுடிந்தது. மெதுவாக அவள் பேச ஆரம்பித்தாள். ""நானா இருந்தன்னா அவசெஞ்சதுக்கு, அவ ரெண்டு காலையும் பிடிச்சி கிழிச்சி, அதுல பழுக்க ஈயத்த காய்ச்சி வூத்தியிருப்பேன். ஆனா எங்கப்பா அப்பிடிஎதுவும் செய்யல. எனக்கு பதினாறு வயசு இருக்கும். அப்ப அவ அந்த மரமேறி பயலோட ஊரவிட்டு ஓடிட்டா. ஊரார்எவ்ளோத்தரம் எடுத்துச் சொல்லிகூட அப்பா அவளை தேடிச்செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. ""பிடிக்கலைன்னுதானேபோயிட்டா, பின்ன ஏன் அவள போயி மீண்டும் தேடச்சொல்றீங்க என கோபத்துடன் கேட்டு அவர்களை திருப்திஅனுப்பிவிடுவார். ஆனால், அவர் மனசுல எவ்ளோ புழுக்கத்தோட இருந்தார்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.பாட்டி மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு, வெற்றிலைச்சாறைத் துப்பினாள். ""அவ கெடக்கறாடா நாதாறி எனக்கூறிகொண்டே,கரண்டவத்தை திறந்து இன்னும் கொஞ்சம் சுண்ணாம்பை எடுத்துப் போட்டுக்கொண்டாள்.

""ஒரு தரம் அடுக்கம் ஆஸ்பத்திரியை தெறந்து வைக்க இந்தராகாந்தி இங்க வந்தாங்க. அவங்க வந்தஹெலிகாப்டர் இறங்கறத்துக்கு எடமில்லைன்னு, அப்பாகிட்ட வந்து, ""இந்த பனந்தோப்பை பயன்படுத்திக்கிலாமா என ஜில்லாபோர்டு தலைவர் கேட்டார். அப்பாவுக்கு ஜிவ்வென கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. ""இங்கிருந்து போயிருங்கதலைவரே, எனக்கு கெட்ட கோபம் வரும், எவளோ வந்து எறங்கறத்துக்கு தோப்ப அழிக்கனுமாக்கும் என படபடவெனபொறிந்து தள்ளினார். ""காங்கிரஸ்காரனா இருந்துகினு நீயே இப்படி பேசலாமா வினாயகம் என அவர் கேட்க,""காங்கிரஸ்காரன்னா எல்லா கருமாந்திரத்தையும் செஞ்சாவனும்னு சட்டமா என்ன என்று முகத்திலடித்த மாதிரி பேசிஅனுப்பிவிட்டார். காங்கிரஸ் பிரமுகர்கள் அப்பாவை கரித்துக் கொட்டினர்.

அதே காலகட்டத்துலதான் அவர் ஊர் ஊரா செல்ல ஆரம்பித்திருந்தார். சந்த குத்துவ, சாராய குத்துவ ஏலம் எங்க நடந்தாலும்போய் ஏலம் எடுப்பார். சங்கீத மங்களம், அனந்தபுரம், மணலூர்ப்பேட்டை, திருக்கோயிலூர், கையூர் என அஞ்சி ஆறு ஊர்லசாராயக் கட எடுத்து நடத்த ஆரம்பித்தார். ஒவ்வொரு ஊர்லயும் ஆட்களை போட்டு நடத்தனதுல ஏகப்பட்ட நஷ்டம். அவரோடபிடிவாதத்தால யார் சொல்றதையும் கேக்காம மேல மேல ஏலம் எடுத்துக்கினே இருந்தார். ஊர் ஊரா சுத்த ஆரம்பிச்ச அதேவேகத்துல பணம் கரைய ஆரம்பிச்சது. அமைதியான முகம் மாறி எந்நேரமும் உர்ரென்று முகத்தை வச்சிக்கொண்டிருக்கும்அப்பா எனக்கு வித்தியாசமாக தெரிஞ்சார். சாப்பாட்டுல உப்பு கொஞ்சம் கொறச்சலா இருக்கும். அதுக்குப் போயி சட்டிய தூக்கிபோட்டு ஒடைப்பாரு. எனக்கு அவரப்பாக்க பாவமா இருக்கும். எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரேன்னு தோனும்.நானும் அவர்கிட்ட கேட்காமலில்லை. அதுக்கு அவுரு, ""எல்லாம் நா பாத்து சம்பாதிச்சதுதானே எனக் கூறுவார். பாட்டத்தெருவுல இருந்த வூடும், இருள பாளையத்து கிட்ட இருந்த அஞ்சி காணி நெலத்தையும் சந்தன பொட்டுக்காரர் பாக்கிக்கு நேர்செய்து விடும்படியான இக்கட்டு வந்ததும், அவர்களுக்கே அதை எழுதிக் கொடுத்துவிட்டார்.

அப்பதான் 1967 பொது எலக்ஷன் வந்திச்சு. அப்பா காங்கிரசுக்காக கையூர் தொகுதி முழுக்க பம்பரமா சுத்தி வேல செஞ்சார்.நாகூட அவர்ட்ட கேட்டேன். ""நாடே அண்ணாதுர பின்னாடி நிக்குது. நீங்க என்னான்னா காங்கிரச கட்டிக்குனுமாரடிக்கிறீங்களே. அவர் என்னிடம், ""ஒனக்கு அதுலாம் புரியாதும்மா. திமு க காரனுக்கு மேடையில நல்லா வயனமாபேசத்தான் தெரியும். அவுங்களால மக்களுக்கு எதுவும் செஞ்சிட முடியாதும்மா. மொழிய வச்சி எத்தினி நாளக்கிமா மக்களஏமாத்திகினு இருக்க முடியும் என கேட்பார். அப்பலாம் அவர் சொல்றது எனக்கு அவ்வளவா புரியாது. தேர்தல் நடந்தது.திமுக ஜெயிச்சி அண்ணாதுர முதல்வரா ஆனார். நம்ப தொகுதியில ஜெயிச்ச கோவிந்தசாமி கூட மந்திரியானார். ஜீவானந்தம்,பெரியாரு அப்புறம் காமராஜரைத்தான் கடேசி வரைக்கும் அப்பா தலைவரா நெனச்சிகினு இருந்தார். ""தமிழ்நாட்டுலதலைவர்னா அந்த மூனு பேருதாமா, வேற யாரையாவது நாம தலைவருன்னு சொன்னா அந்த மூனுபேரையும்அசிங்கப்படுத்தரதா அர்த்தமாயிடும் என என்னிடம் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார். அண்ணாதுர முதல்வரான பெறவு அவர்யார்கூடயும் அரசியல பத்தி பேசவேயில்லை.

நாலஞ்சி மாசம் கழிஞ்சிருக்கும். அப்போ ஒரு பெருஞ்சோதனையை சந்திக்க வேண்டியிருந்தது. அன்னக்கி ஊர்ல பங்குனிஉத்திரம். காவடியும் கரகம் ஊர சுத்திவருது. வேல் எடுத்துக்குனு கரகத்துக்கு முன்னாடி அப்பா நடந்துபோயிக்குனுயிருந்தார். அப்ப தோப்புல வேல செய்ற காத்தத்து ஓடியாந்து, ""கள்ளுல யாரோ வெஷத்தை கலக்கிட்டாங்க, அதக்குடிச்ச ஏழெட்டு பேரு ரொம்ப சீரிசா கெடக்காங்க என சொன்னதுதான் தாமதம். அப்பா வேல யார்ட்டயோ கொடுத்திட்டுதலைதெறிக்க தோப்ப நோக்கி ஓடினார். அதுக்குள்ள ஊருக்குள்ள சேதி பரவி கூட்டம் கூடிடுச்சி. நான் மண்ல உழுந்து புரண்டேன்.அப்பா பிரம்ம புடிச்ச மாதிரி உக்கார்ந்துட்டாரு. மணி ஆவ ஆவ பயம் கூடிக்கினே இருந்துச்சு. ஏழு, ஒம்பது, ஒம்பதிலிருந்துபதிமூனா ஆச்சி செத்தவங்க எண்ணிக்கை. அரகண்டநல்லூர்ல இருந்து போலீஸ் வந்துச்சி. அப்பாவையும் காத்தமுத்துவையும்கூட்டுகினு போயி ஜெயில்ல அடச்சாங்க. நான் யார் யார்கிட்டயோ நடந்து பார்த்தேன். அவுங்க கூட்டாளிங்க யாரும் எதுவும்செய்யல. சந்தன பொட்டுக்காரர், ""உங்க அப்பன் பொழைக்கத் தெரியாதவன் மா என்றார். அண்ணாச்சி, அண்ணாச்சினுகொழையரவர், அவன் இவன்னு பேசினது எனக்கு கஷ்டமா இருந்துச்சி. கள்ளக்குறிச்சி கோர்ட்லதான் கேஸ் நடந்துச்சி.பனந்தோப்ப தவிர எல்லாத்த வித்து, கேச நடத்தியும் அப்பாவ வெளிய கொண்டார முடியல. ஏழு வருஷம் தீர்ப்பாச்சி. வேலூர்ஜெயில்ல போட்டாங்க. எத்தன ராத்திரி அழுதிருப்பேன் தெரியுமா? என பாட்டி சொல்லும் போது அவளது கண்களில் இருந்துகண்ணீர் தாரைதாரையாக வந்தது.அவளது கைகள் மெல்ல நடுங்கின. குரலில் தடுமாற்றம். என்னால் அவளின் துயரத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ""அப்புறம், தாத்தா எப்ப பாட்டி வெளியில வந்தாரு என நான் கேட்டேன். ""ஏழு வருஷம் கழிச்சுதான்என்றவள், எடை எடையில நா போயி பார்ப்பேன். அப்படி போயி பாத்தப்ப ஒருதட அவரு கிட்ட, ஏம்பா, அந்த பனமரங்களவெட்டிடவானு கேட்டேன். ""எவனோ செஞ்ச தப்புக்கு அந்த மரங்கள ஏம்மா வெட்டனும்? என என்னயே திருப்பிக் கேட்டார்.பாட்டி மரத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். உதட்டைக் குவித்து வெற்றிலைச் சாறை துப்பினாள். அவளிடம் கேட்டேன். ""எப்பபாட்டி உனக்கு கல்யாணம் ஆச்சி?, இனிமே நீ தனியா இருக்கக்கூடாதும்மானு சொல்லி அவர் ஜெயில்ல இருக்கறப்பவேகல்யாணத்த நடத்தி வெச்சார். யாரயும் கூப்பிடல. சாதாரணமா திருணாமலைக்குப் போயி கல்யாணம் செஞ்சிக்கிட்டோம்.அப்பவே அந்த நெலத்தயும் தோப்பையும் எங்க பேருக்கு மாத்தி எழுதிட்டார். ""எம் பொண்ணு கல்யாணத்த எப்படி எப்படியோநடத்துனும்னு நெனச்சேன். எதுவும் முடியாம போச்சு. அவள கடசி வரைக்கும் கண் கலங்காம பாத்துக்குப்பா என்றார்.ஜெயில்ல இருந்து வெளியே வந்தவர் நடபிணமா வாழ்ந்தார். பனந்தோப்பிலேயே எந்நேரம் இருப்பார். யாருடனும் எதுவும்பேசமாட்டார். அவ்வப்போது சாப்பாடு மட்டும் கொடுத்தனுப்புவேன். உடம்பு சொகமில்லாம கொஞ்ச நாள்ல இறந்திட்டாரு எனசொல்லி பாட்டி கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவளது கண்களில் இன்னும் சொல்லப்படாத துக்கங்களின் அதிர்வுகள்மிதந்தபடியே இருந்தன. காய்ந்து தொங்கிய பனை மட்டைகள் அதிக சத்தத்தை ஏற்படுத்தின. வெயில் உக்கிரமாக இருந்தது.தகிக்கும் அனலில் ஆட்கள் நிலத்தை சமப்படுத்திக் கொண்டிருந்தனர். நான் பாட்டியிடம், ""பாட்டி, பனந்தோப்ப எதுவும் பன்னாமநான் பாத்துக்கறேன், வா வீட்டுக்கு போலாம் என்றேன். என்னால் எதுவும் செய்துவிடமுடியாது என்பது எனக்கு தெரிந்தேஇருந்தது. இருந்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னை ஊடுருவிப் பார்த்தவள், ""நெஜமாவா சொல்ற என்றாள்.""ஆமாம் என தலையசைத்தேன். அவளின் துக்கத்தை பகிர்ந்து கொண்டவன் என்ற முறையில், என் மேல் அவளுக்கு ஓரளவுநம்பிக்கை ஏற்பட்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. என்கையைப் பற்றியபடி எழுந்து நின்றவள், ஒரு முறை சுற்றுமுற்றுபார்த்தாள், ""நம்ம கைல என்ன கீது. எல்லாம் அவன் கைல கீது எனக்கூறி என்னுடன் நடக்கத் தொடங்கினாள். அவள்காதிலிருந்த சிவப்புக்கல் அரக்குத் தோடு அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தது.

ஒரு வாரம் கடந்திருக்கும். அந்தி சாயும் நேரம். நானும் பாட்டியும் திண்ணையில் அமர்ந்துகொண்டிருந்தோம். மேய்ச்சலுக்குச்சென்ற மாடுகள் திரும்பிக் கொண்டிருந்தன. புது வீட்டு அஞ்சலை புல்கட்டை சுமந்தபடி எங்களைக் கடந்து சென்றாள். அப்போதுஅதிக ஒலி எழுப்பிக் கொண்டு மூன்று லாரிகள் எங்கள் வீட்டு சந்து பக்கம் திரும்பின. நான் ஓடிச்சென்று சந்தை அடைத்திருந்தபடலை அகற்றி லாரிகளுக்கு வழியேற்படுத்திக் கொடுத்தேன். என்னைக் கடந்து அவை தோட்டத்திற்குள் செல்லும் போதுகவனித்தேன். லாரி முழுக்க நன்கு மழிக்கப்பட்ட கரிய பனைமரங்கள் அடுக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு மரமாக இறக்கி,மாட்டு கொட்டகையின் ஓரத்தில் அடுக்கிக்கொண்டிருந்தனர். இதற்குள் பாட்டியும் அங்கு வந்துவிட்டாள். மரங்கள்அடுக்கப்படுவதை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்து விடாதபடிக்கு தலையை அந்தப் பக்கம்திருப்பிக் கொண்டேன். மரங்களை அடுக்கிவிட்டு லாரிகள் திரும்பின. பாட்டி என் அருகில் வந்து ""நீயுமா? என்றாள். அவள்வார்த்தைகளை சுலபத்தில் என்னால் உள்வாங்கிக் கொள்ள டியவில்லை. தலைகுனிந்து நின்றேன். அவளிடம் பேச நாஎழவில்லை. என்னை அலட்சியத்துடன் பார்த்தபடி அவள் மெல்ல நடந்து சென்றாள்.

நீண்ட நேரமாகியும் அன்றிரவு அவள் சாப்பிட வரவில்லை. அப்பா சென்று கூப்பிட்டதற்கு, ""எனக்கு வேண்டாம்டா என்றுகூறிவிட்டாள். அம்மா என்னைப் போய் பாட்டியை கூப்பிடச் சொன்னாள். அவளிடம் எந்த முகத்துடன் செல்வது என்ற தயக்கம்என்னை ஆட்டிப்படைத்தது. பின் மெல்ல அவளருகில் சென்று ""பாட்டி, வா சாப்பிடலாம் என்றேன். அவளிடமிருந்து எந்தபதிலும் வரவில்லை. வீதியைப் பார்த்தபடி அமர்ந்து, கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்தாள். என்னை பார்க்க கூட அவள்விரும்பவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. உள்ளிருந்து அம்மா சாப்பிட அழைத்தாள். விடிந்தால் இயல்பாகி விடுவாள்என நினைத்தபடி, நான் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றேன். நெடுநேரம் எனக்கு உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டுபடுத்தேன். எப்போது தூங்கினேன் என தெரியவில்லை.

""டேய் எழுந்திருடா, எழுந்திருடா என்று எழுப்பி, ""பாட்டி செத்துருச்சிடா என அம்மா கூறியபோது என்னுள் மின்சாரம்பாய்ந்ததைப் போன்று இருந்தது. மெல்ல உடல் நடுங்க ஆரம்பித்தது. கண்கள் இருண்டன. என்னையுமறியாமல் மெல்ல நடந்துஅவளின் அறையை அடைந்தேன். சுற்றி அப்பா, தங்கை இன்னும் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவில்கைகளை பக்கவாட்டில் நீட்டியபடி, புயற்காற்றில் வேரோடு பிடிங்கி எறியப்பட்ட பனைமரத்தைப்போல பாட்டி இறந்துகிடந்தாள். அவள் தலை மாட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் சுடர் காற்றின் திசையில் ஆடிக்கொண்டிருந்தது.

காலபைரவன்

இயற்பெயர் விஜயகுமார். ஆசிரியராக பணிபுரிகிறார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கிறார். இதுவரை சிலசிறுகதைகள், கவிதைகள், மற்றும் சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. விரைவில் சிறுகதை தொகுப்பு வெளிவரவிருக்கிறது.விளிம்புநிலை மக்களின் வாழ்வு சார்ந்த நுண் அரசியலையும், சிதைந்து வரும் கிராமங்களின் முகங்களையும் எழுதிப்பார்ப்பதுஇவரது விருப்பம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

வட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வாக்காளர்கள்
Electors
14,68,523
 • ஆண்கள்
  7,20,133
  ஆண்கள்
 • பெண்கள்
  7,47,943
  பெண்கள்
 • மூன்றாம் பாலினத்தவர்
  447
  மூன்றாம் பாலினத்தவர்

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more