India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விருந்தினரைப் பட்டினிபோடும் விருந்து

By Staff
Google Oneindia Tamil News

கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005

- டாக்டர். ஆர். ராமானுஜம்

Educational Systemஎன்னங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறதாக கேள்விப்பட்டேன், எப்படி இருக்கு புது இடம்?

அதை ஏன் கேக்கறீங்க, எவ்வளவு நாள் தாங்க முடியுமோ தெரியலே, பயங்கர கெடுபிடி, கட்டுப்பாடு

வேலை ரொம்ப கஷ்டமாயிருக்குதோ?

கஷ்டமில்லே, வெறுப்பா இருக்குதுங்க. காலையில மணியடிச்சா எல்லாம் அவங்கவங்க இடத்துக்குப் போயிரணும். ஸீட்ல உக்கார்ந்தா அக்கம்பக்கம் யாரோடயும் பேசக்கூடாது. குடுத்த வேலையைச் செய்யணும். அதையும் சூப்பர்வைசர் சொல்ற விதத்தில், அந்த வேகத்தில் செய்யணும். அதைவிட மெதுவாகவோ, வேகமாகவோ செய்ய முடியாது. வேலை புரியலேன்னா பக்கத்தில இருக்கிறவங்களை கேக்கக் கூடாது...

இதென்ன அநியாயம்...தெரியலேன்னா தெரிஞ்சவங்களைக் கேட்டுக்கறதில என்ன தப்பு?

அநியாயம் தான். கேக்கறதென்ன, அக்கம்பக்கம் திரும்பினாலோ பேசினாலோ தண்டனை கிடைக்கும். அட ஒண்ணுக்குப் போகணும்னா கூட அனுமதி கேட்கணும்னாப் பாருங்களேன்.

இப்படி ஒரு உரையாடல் யதார்த்தம் தானா? இம்மாதிரி இருவர் பேசிக்கொண்டிருப்பதை கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்...உடனே ஸ்ட்ரைக் செய்ய ..போராட்டம் நிகழ்த்தத் திட்டமிடமாட்டீர்களா?

சரி, மேலிருக்கும் வாக்கியங்களில் வேலைக்குச் சேர்ந்திருப்பது என்பதற்கு பதிலாக பள்ளியில் சேர்ந்திருப்பது என்றும் குடுத்தவேலை என்பதை கொடுத்த பயிற்சி என்றும் சூப்பர்வைஸரை ஆசிரியராகவும் மாற்றிப் படித்துப் பாருங்கள். ஏதாவதுஆச்சரியப்படும் விதத்தில் உள்ளதா? இரு மாணவர்கள் இம்மாதிரி பேசுவதை கேட்டால் அவர்களை ஸ்ட்ரைக் பண்ணச்சொல்வீர்களா?

கண்முன் நிகழும் காட்சியை நாம் ஏன் காணத் தவறுகிறோம்?. குழந்தைகளாக நாம் கண்ட அனுபவங்களை நம் குழந்தைகள்இன்னும் காணும் தினசரி யதார்த்தத்தை எப்படி மறந்து விடுகிறோம்?

நினைத்துப் பார்க்கிறேன்.. என்னுடைய பள்ளிப்பருவ நாட்களில் எனக்கு மகிழ்ச்சி தந்த நிகழ்வுகளாக இப்போதுநினைவிருப்பதெல்லாம் சகாக்களோடு விளையாடியதும் விடுமுறை நாட்களில் கொட்டமடித்ததும்தான். படிப்பில் சந்தோசம்கண்டதும் உண்டு. ஆனால் அதெல்லாம் கதைப்புத்தகம் படித்தபோதுதான். பள்ளியில் இல்லை. பகா எண்களைப் பற்றி பலவிபரங்களைக் கற்றுக்கொண்டபோது உற்சாகமாக இருந்ததும் அதேபோல் ஜியோமிதியில் சில உண்மைகள், ஆங்கிலத்தில் சிலகவிதைகள், தமிழில் சில கட்டுரைகள் என்று ஒரு சில கற்றல் அனுபவங்களும் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அவற்றில்ஒன்றில் கூட பள்ளிச்சூழல் கலந்ததாக இல்லை. பள்ளி என்றால் நினைவுக்கு வருவது கட்டிடங்கள், ஆசிரியர்கள், நண்பர்கள்,விளையாட்டுகள், மரங்கள்... நிச்சயமாக கற்றல் நினைவுகள் ஏதுமில்லை.

ஆனால் அதே நாட்களிலிருந்து ஏராளமான, தெளிவான ஞாபகங்கள், சினிமா போஸ்டர்கள் பாடல்கள், கிரிக்கெட், கால்பந்துஆட்டங்கள்...

இது ஒருபக்கமென்றால் மறுபக்கம் என்னுடைய கல்லூரி நாட்களின் நினைவுகள் வேறு விதம் என்றும் புரிகிறது. அங்குஎத்தனையோ பிற அனுபவங்களோடு சேர்ந்து, உண்மையாகக் கற்றுக் கொண்ட தருணங்களும், அதில் கண்ட பூரிப்பும் கூடவேநிழலாடுகின்றன. இதற்குக் காரணம் நான் வளர்ந்து விட்டதனாலா, அல்லது கல்லூரியில் (பள்ளியை விட) சுதந்திரமாகக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்ததனாலா?

இது என்ன ஆய்வுக் கட்டுரையா அல்லது மலரும் நினைவுகளா? என்று பதட்டப் படுகிறீர்களா? பொறுமையிழந்த வாசகரே,என் கவலை இங்கு இருவிதமாக உள்ளது. பள்ளிகளில் மேற்படி சொன்னது போல கெடுபிடியும் கட்டுப்பாடும் இருப்பது உண்மை.வயது வந்தோருக்கு அம்மாதிரி கட்டுப்பாடு ஒத்துக் கொள்ள முடியாது என்பதும் உண்மை. அப்படியென்றால், குழந்தைகளுக்குஇது சரி என்று எப்படி ஒத்துக்கொள்கிறோம்? நம் சம்மதம் இல்லையென்றால் 100க்கு 99 பள்ளிகளில் இந்நிலை நிலவுவதுஎப்படி?

இது ஒரு விதமான கவலை. இன்னொன்று ஏன் இதெல்லாம் நம் கண்ணில் படுவதில்லை? நம் குழந்தைகளைப் பற்றி பெரிதும்அக்கறை கொண்ட நமக்கு இது பொருட்டேயில்லையா? பொருட்டென்றால் செயலில் இறங்க முடியாவிட்டாலும், கதையிலும்கவிதையிலும் கட்டுரையிலும் சினிமாவிலும் என்று பல விதங்களில் ஏன் இது எதிரொலிக்கவில்லை?

தெருவில் போகும் நபரை நிறுத்திக் கேட்டுப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் எந்தப் பள்ளிக்குச் செல்கிறார்கள்? எந்த வகுப்பில்படிக்கிறார்கள்? அங்கு தற்போது என்ன கற்றுக்கொள்கிறார்கள்? இந்த வயதில் பள்ளி என்ன கற்றுத்தர வேண்டும் என்று நீங்கள்எதிர்பார்க்கிறீர்கள்?

ஆய்வு என்ற பெயரில் கண்டவரையும் இவ்வாறு துன்புறுத்திய அனுபவம் எனக்கு உண்டு. பெரும்பாலும் மாட்டிக்கொண்டஎவரும் சரளமாக விடை தந்தது கிடையாது. நடுத்தர வர்க்க மக்களில் பலருக்கு என்ன பாடங்கள் என்ற பட்டியல் தரத்தெரிந்தாலும், அதில் என்ன கற்றுத் தரப்படுகிறது என்று தெரியாது. தங்களுடைய பள்ளி நாட்களின் நினைவுகளும் மங்கலாகிவிட்டதால் என்ன கற்றுத் தர வேண்டும் என்று நிர்ணயிப்பது இன்னும் கடினமாகிவிடுகிறது. (இம்முறையில் ஒரே விதிவிலக்குநான் சந்தித்த சில பெண்கள்தான். தங்கள் குழந்தைகளின் பாடங்கள் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்ததோடு அவை எவ்வளவுகடினமாக உள்ளன என்று விமரிசனமும் தந்தார்கள்) எப்படியோ அடிப்படையில் உண்மை நிலை இதுதான்.

பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தரப்படுகிறது. எவ்விதத்தில் கற்றுத் தரப்படுகிறது என்று பெற்றோருக்குத்Educational Systemதெளிவாகத் தெரியாது.

இதை இவ்வாறு அடிக்கோடிட்டுக் கூற வேண்டிய அவசியம் என்ன? பெற்றோருக்கு இதெல்லாம் ஏன் தெரியவேண்டும்?அவரவருக்கு தங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்வதே பெரும்பாடாக உள்ளது. பாடதிட்டம், போதனாமுறை எல்லாம் உருவாக்கவல்லுனர்கள், அரசு அமைப்பு இருக்கும்போது ஏதோ சம்பளம் வாங்குவதற்காக வேலை செய்யும் அப்பாவி மனிதர்களை குறைசொல்வது நியாயமில்லையே.

உண்மைதான். கிட்டத்தட்ட எல்லாக் குடும்பங்களிலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முக்கியக் காரணம் சமூகஅந்தஸ்துதானே ஒழிய, குறிப்பிட்ட விதமான அறிவு வளச்ச்சி அல்ல. நடுத்தர வர்க்கத்தினருக்கு தெளிவான யதார்த்த நிலை சிறுவயதில் படித்தும் பாஸ் செய்யாவிட்டால் வயது வந்தபிறகு நடுத்தெருவில் நாதியற்று நிற்க வேண்டும் என்பது. ஏழை மக்களின்ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு எப்படியாவது பள்ளிக்கல்வி நிலையான சம்பளத்திற்காவது வழிவகுக்காதா என்பது. நல்ல சொத்துவைத்திருக்கும் வசதி வாய்ந்த குடும்பங்களில் கெளரவப் பிரச்சினை. பள்ளிப் படிப்பே முடிக்கவில்லை என்பது அவமானம் என்றநிலை.

இறுதியில், இவை எல்லாமே பள்ளியிறுதியில் தேர்வு பெற்றதாக கிடைக்கும் சான்றிதழை நோக்கியதாகவே உள்ளன. அதுவேஇலக்கு. அது என் பிள்ளைக்கு எவ்வளவு சுலபமாகக் கிடைக்குமோ அது மட்டுமே எனக்கு அக்கறை. அதுவரை, தயாரிப்பு என்றமுறையில் பள்ளியில் என்ன நடந்தாலும் பெரிதுபடுத்திப் பேச ஏதுமில்லை.

இந்நிலை அரசாங்கத்திற்கும் வசதியானதாக உள்ளது. கல்வி அமைப்பைப் பொறுத்தவரை, பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில்என்ன தெரிந்திருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்து, அதற்கேற்ப பத்து வருடத்திற்கான தயாரிப்புபாடத்திட்டமாக இயற்றி விடலாம். அவற்றின் வடிவம் பாடப்புத்தகங்கள், தேர்வுமுறை, அமல்படுத்தத் தேவையானஎண்ணிக்கையில் பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள். அரசு அதிகாரியின் பார்வையில் இது சீரானது. இதற்கு மேல் போதனா முறைபற்றி கவலைப்படுவதெல்லாம் வேண்டாத வேலைதான்.

பொதுவாக, சமூகத்தின் பொருளாதார ஏற்பாட்டிற்கும் இது ஒத்ததுதான். மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யபல்வேறு விதமான மனித வளம் தேவைப்படுகிறது. ஒரு தொழிலதிபர் தனக்கு வேண்டிய தொழிலாளர்கள் இத்தனைபேர்,அவர்களுக்குத் தேவையான கல்வியறிவு இது என்று மேலோட்டமாக நிர்ணயித்தால் போதுமானது. அது பற்றி ஆழமாகச்சோதனை செய்து பார்க்கத் தேவையில்லை. அரசு தரும் சான்றிதழ் குறிப்பிட்ட தேர்ச்சி நிலைக்கான உறுதியை தருகிறது. தானேதேர்வு நடத்துவதற்குப் பதிலாக, அரசு நடத்தும் தேர்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவரை பள்ளியில் என்ன நடந்தால்யாருக்கென்ன கவலை?

இத்தகைய கோணங்கள் கேலிக்காகவோ, விமரிசனத்திற்காகவோ இங்கு காட்டப்படவில்லை. நிச்சயமாக இவற்றில் யதார்த்தமானநியாயம், உண்மை பிரதிபலிக்கிறது.

ஆக நாம் முன்பு எழுப்பிய கேள்விக்கு விடை இங்குதான் இருக்கிறது. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் பள்ளியில் நிலவும்கெடுபிடி நம்மை சங்கடப்படுத்துகிறது என்றாலும், பெரும்பாலும் பள்ளிக்குள் என்ன நடக்கிறது என்பதில் நமக்குஅக்கறையில்லை. பள்ளிக்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள சந்திப்புக் களம் இறுதியில் நடத்தும் தேர்வு, அதன் முடிவுகள்.குழந்தைகள் மீதுள்ள அக்கறையை அவர்களை பள்ளிக்கு அனுப்புதல் மூலம் அதற்கான வசதி செய்து தருதல் மூலம் நாம்(பெற்றோர், அரசு) காட்டினால் போதும். ஆகவேதான், பள்ளிக்குள் என்ன நடக்கிறது என்று கதையும் சினிமாவும் கூடவிவாதிப்பதில்லை. ஒரு வங்கிக்குள்ளோ, தொழிற்சாலைக்குள்ளோ சென்று பார்க்க நமக்கு அனுமதி உண்டா என்ன? அங்குள்ளஅமைப்பை நம்புவது போல, பள்ளி என்ற அமைப்பை நம்பித்தான் பிள்ளைகளையும் நாம் அனுப்ப வேண்டும்.

ஆனால் இங்குதான் பிரச்சினை. கட்டுரையின் ஆரம்பத்திற்கு திரும்பிவிட்டோம். தொழிற்சாலையில் இது போன்ற நிலைநிலவினால் தட்டிக்கேட்க அங்கு அமைப்புகள் உண்டு. பள்ளியில் குழந்தைகள் சங்கம் அமைக்க வேண்டுமோ?

Educational Systemஇக்கட்டத்தில் இருவிதமான எதிர்ப்பொலிகள் எழுப்புவது வழக்கம். ஒன்று வயது வந்தோரையும் குழந்தைகளையும் ஒப்பிடுவதுஅபத்தமானது. தொழிலாளர்கள் ஒருவரிடம் ஒருவர் பேசக்கூடாது என்பதற்கும் குழந்தைகள் வகுப்பில் சலசலப்பில்லாது கவனம்செலுத்த வேண்டும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பெரியவர்களுக்கு அலுப்புத் தரும் பல செயல்பாடுகள்குழந்தைகளுக்குப் பிரச்சினையாக இராது. ஆகவே இம்மாதிரி ஒப்பிட்டு எழுதுவது சிறிய அதிர்ச்சி தருவதற்காக எழுத்தாளன்கையாளும் மலிவான தந்திரம் மட்டுமே.

இரண்டாவது கட்டுப்பாடு, ஒழுங்கு இவற்றைக் கற்றுத் தருவது பள்ளியின் தலையாய கடமையாகும். கவனத்தைஒருமுகப்படுத்துதல் கற்றலுக்கு இன்றியமையாதது. தன்னிச்சைப்படி எல்லாக் குழந்தைகளும் ஆங்காங்கு திரிய ஆரம்பித்தால்பள்ளி எப்படி நடக்கும்? சலசலப்பு அதிகமானால் பாடம் எப்படி சொல்லித்தர முடியும்? இதெல்லாம் வீண் விவாதம்.

இரண்டு விவாதங்களிலுமே ஒரளவு உண்மை இருந்தாலும் ஆழமில்லை. குழந்தைகள் பெரியவர்கள் போல் இல்லைதான்.ஆனால் கல்வியின் முக்கிய நோக்கமே பெரியவர்களின் உலகிற்கு குழந்தைகளைத் தயார் செய்வதுதான். அதோடு குழந்தைகள்இந்நிலைக்கு ஒத்துப் போவதாகத் தெரிவது அவர்களுக்கு வேறு வழியில்லாமையால்தான். சென்ற நூற்றாண்டில் எழுதிய பலஅமெரிக்கர்கள், அடிமைக்கறுப்பர்களின் உரிமை பற்றி பலர் எழுதுவது முட்டாள்தனம், அவர்கள் நம்மைப் போன்றவர் இல்லை,அவர்களுடைய உடல் மற்றும் மூளை அமைப்பே வேறு என்று வாதிட்டதை நாம் மறந்து விடக்கூடாது. அது போலவே,கட்டுப்பாடு கற்றுத் தருவது முக்கியமென்றாலும் அதற்கு இது மட்டுமே வழியா என்ன? தவிர, தீவிர கெடுபிடி அல்லது முற்றிலும்குழப்பமான ஒழுங்கின்மை என்று இரு துருவங்கள்தான் உண்டா என்ன?

இப்படி விவாதங்களை நீட்டிக்கொண்டே போகலாம். என்னைப்பொறுத்தவரை, பள்ளியில் காணும் அடக்குமுறையைக் கூட நாம்ஒப்புக் கொண்டு விடலாம் உண்மையான கற்றல் அங்கு நிகழும் பட்சத்தில்.

பிரச்சினையே இங்குதான். நம் பள்ளிகளில் அப்படிப்பட்ட உண்மையான கற்றல் நிகழ்கிறதா? கெடுபிடிச் சூழலில் இதுசாத்தியமா?

இன்னமும் பள்ளிக்கு வெளியே நின்று இதெல்லாம் பேசுவது சரியில்லை. உள்ளே சென்றுதான் பார்க்க வேண்டும்.

ஒரு வாய் பல காதுகள்.

இதுவே நம் வகுப்பறையை ரத்தினச் சுருக்கமாய்ச் சித்திரிக்கும் வர்ணனை. ஆதர்ச வகுப்பறையின் அடையாளம்.

உற்று நோக்கினால், காதுகளோடு துறுதுறுக்கும் கை கால்கள் பல விஷயங்கள் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.அண்டையில் சீட்டுப் பரிமாற்றம், சீண்டுதல் என சிறுசிறு எதிர்ப்புகள். ஒன்றுமில்லையானால் ஜன்னலுக்கு வெளியே பார்வை.அதுவுமில்லாமல் உடல் மட்டும் இங்கே, உள்ளம் கனவுலகில் என்ற போதிநிலை.

சிறிய புள்ளி விவரம். கிட்டத்தட்ட 90% மாணவர்கள் வகுப்பு நேரங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான நேரம் மட்டுமேதாங்கள் கவனித்துக் கேட்பதாகச் சொல்கின்றனர்.

இவ்விவரம் முற்றிலும் உண்மையா என்று தெரியாது. இருப்பினும் வகுப்பறையில் காணும் மயான அமைதி கவனத்தைஒருமுகப்படுத்துதல் என்ற போர்வையில் நிலவ முடியாது. பங்கேற்பு என்பது மிகக் குறைந்த அளவில் உள்ளது என்பது மறுக்கஇயலாத உண்மை.

அப்படியென்றால் பாடம் நடத்தி என்ன லாபம்? குறைந்த எண்ணிக்கையில் பங்கு பெறும் கவனித்துக் கேட்கும்மாணவர்களுக்காக மட்டும்தானா? இது தெரிந்தும் பாடம் நடத்த ஆசிரியரை உந்துவது எது? அவருக்கும் தெரியும். தேர்வு என்றுவரும்போது தானாக குழந்தைகளின் கவனம் ஈர்க்கப்படும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று. மாணவருக்கும் தெரியும்.இப்போது வகுப்பு எப்படி நடந்தாலும் சரி. தேர்வுக்குக் கவனித்துப் படித்தால் போதும் என்று.

ஒரு பரிசோதனை. வகுப்பறையில் யார் கண்ணிலும் படாமல் ஒரு மூலையில் ஒரு டேப் ரிக்கார்டரை ஒளித்து வைத்து, நான் பூராஅங்கு நடப்பதை ஒலிப்பதிவு செய்யுங்கள். மாலை அதை இயக்கிக் கேட்கும்போது அதில் எத்தனை கேள்விகள் பதிவாகிஇருக்கும்?

Educational System5? 15? 200?

இவற்றில் மாணவர் கேட்கும் கேள்விகள் எத்தனை? ஆசிரியர் கேட்கும் கேள்விகள் எத்தனை?

பரிசோதனை ஏதும் செய்யாமலே நம் அனைவருக்கும் தெரியும். மிகச் சில கேள்விகளே பதிவாகும். அவற்றில் பெரும்பாலானவைஆசிரியர் குழந்தைகளைக் கேட்கும் கேள்விகள். தமக்கு தெரிந்த விடை மாணவருக்குத் தெரியுமா என்று சோதிப்பதற்காகஎழுப்பப்பட்ட கேள்விகள்.

ஓ... இது மயான அமைதிதான்.

தெரியாதவர் தெரியாதவற்றை தெரிந்து கொள்வதற்காக வினாவாக எழுப்புதல் இயற்கை. அதுவே மொழியில் இலக்கணம்,தெரிந்தவர் மற்றவருக்கும் தெரியுமா என்று காண மட்டுமே வினாவாக எழுப்புவது வக்கிரம், செயற்கை. மற்றவருக்குத்தெரியாதென்று தான் உணர்ந்த பின்னும் கேள்வி கேட்பது கொடூரம்.

டேய் எந்திருடா, கேட்ட கேள்விக்கு பதில் சொல்

கேட்கும்போதே இரு தரப்பினருக்கும் தெளிவு இதற்கான விடை அவனுக்குத் தெரியாது என்ற உண்மை. பக்கத்தில்அமர்ந்திருப்பவனுக்குத் தெரியும் என்று எல்லோருக்கும் தெரிந்த போதிலும் அவன் சற்றுத்திரும்பினால்,

என்னடா கண் எங்கே போவுது? இங்க பாருடா என்ற அதட்டல். தெரியாதவர் தெரிந்தவரின் உதவியை நாடுதல் ஏன் தவறு?

எது சுலபம்? கேள்வி கேட்பதா? கேட்ட கேள்விக்குப் பதில் தருவதா? நேர்மையானவர்களுக்கு பதிலளிப்பதே சுலபம். தெரிந்தால்விடை தரலாம். இல்லையென்றால் தெரியாது என்று ஒத்துக்கொண்டு விடலாம். ஆனால் வினா எழுப்ப சிந்தனை அவசியம்.பொருள் பற்றி சிந்தித்து, எது புரிகிறது, எது புரியவில்லை என உணர்ந்து, பொருத்தமான கேள்வியாக தெரியாதவற்றிற்கு உருதருவது கடினம்தான். அம்மாதிரி கேள்வி கேட்க, கவனம் சிதறாது ஒரு முனைப்படுதல் மிக அவசியம்.

ஆனால் அடக்குமுறைச் சூழலில் பதிலளிப்பது கடினம். தெரியாது என்று ஒப்புக்கொள்ள இயலாத போது, கேள்விகளை தடைசெய்வதே சுலபம்.

தவிர வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு விடை கிடையாது. அல்லது உண்டு. ஆனால் தெளிவான விடையில்லை. துன்பத்தைக்குறைக்க என்ன வழி? மன அமைதி காண என்ன செய்ய? தெளிவான விடை இருப்பினும் விளக்கம் கடினமாக இருக்கலாம்.பூமி ஏன் சூரியனைச் சுற்றுகிறது?

ஆனால் பள்ளியில் எழும் கேள்விகள் இவ்வகையில்லை. அவை எல்லாவற்றிற்கும் ஒரு விடை, ஒரு சிறிய தெளிவான விடைஉண்டு. ஒரே விடைதான். அது ஆசிரியருக்கு தெரிந்த விடை.

ஒரு நல்ல மாணவர் யார்?

ஆய்வுகளில் இம்மாதிரி கேட்டபோது பெரும்பாலான ஆசிரியர்கள் அளித்த பதில் கேட்ட கேள்விக்கு உடனேயே டக்டக்கென்றுபதில் சொல்லும் மாணவன்... கேள்வி கேட்கும் மாணவன் இல்லை.

ஒருமுறை எட்டு பள்ளிகளில் நியூட்டனின் விதிகள் வகுப்பில் கற்பிக்கப்படும்போது அமர்ந்து கவனித்தேன். நானூறு மாணவமாணவிகளில் ஒருவர் கூட இவ்விதிகளை நான் ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும்? இது உண்மை என்பதற்கு என்ன நிரூபணம்?என்று கேட்கவில்லை. கேட்டிருந்தால் புத்தகத்தில் தரப்பட்டுள்ள பதில் போதவே போதாது என்பது வேறு விஷயம்.

அதைவிட இன்னும் வருத்தம் தந்தது, ஆறு பள்ளிகளில் வரலாற்றுப் பாடம் கண்ட அனுபவம். மகாத்மா காந்தி கொலையுண்டசம்பவம் பற்றிய பாடம். ஒரு வகுப்பிலோ, அல்லது தேர்விலோ கூட கேட்கப்படாத கேள்வி, கோட்ஸே காந்தியை ஏன்கொன்றார்?

சரி, புலம்பியது போதும். விஷயத்துக்கு வா என்ற சலிப்பு எனக்குக் கேட்கிறது. மன்னிக்கவும். இவ்விஷயத்தை பேசஆரம்பித்து விட்டால் நான் ஓயாமல் ஓடிக்கொண்டிருப்பேன்.

விஷயத்திற்கு வந்தாகி விட்டது. எத்தகைய சூழலில் கேள்வி இயற்கையாக எழும்பும்? இதற்கு விடை தேட ஆய்வுகள்தேவையில்லை. குழந்தைகளைக் கவனித்தால் போதும். வீட்டில் நம்மைத் துளைத்து எடுக்கும் சுட்டிகள், சுதந்திரமாகஉணரும்போதுதான், விடை கிடைக்காவிட்டாலும், தன் கேள்வி காது கொடுத்துக் கேட்கப்படும் என்ற நம்பிக்கைஇருக்கும்போதுதான் கேட்கின்றனர். எங்கு உண்மையான ஆர்வம், தேடல் உள்ளதோ, அதோடு கேள்வி கேட்கும் சுதந்திரம்கிடைக்கிறதோ, அங்குதான் கேள்விகள் எழும்.

இப்போது புரிகிறதா? ஏன் பள்ளிச் சூழலின் கெடுபிடி குறித்து அவ்வளவு கவலைப்பட வேண்டும் என்று? நம்முடையவகுப்பறைகளில் ஆசிரியர் ஒரு புறம் மாணவர்களெல்லாம் மறுபுறம் என்ற சூழ்நிலையில், தேடலுக்கு வழியில்லாத நிலையில்,சுதந்திரமாக நிலவ, பேச, இயங்க இயலாத வழிமுறையில் மாணவர்கள் கேள்விகளே கேட்பதில்லை என்றால் அதில் ஆச்சரியப்படஏதுமில்லை. மாறாக, அதிகாரத்திற்கு அடிபணியும் மனப்பான்மை மட்டுமே அதிகரிக்கிறது. கடவுளின் பத்துக் கட்டளைகள்போல் நியூட்டனின் விதிகளும் வேத வாக்காகவே உட்புகுகிறது. எங்கும் எச்சூழலிலும் நிமிர்ந்து நின்று விமரிசிக்கும்தன்னம்பிக்கை முளையிலேயே கிள்ளப்படுகிறது.

சிந்தித்துச் சந்தேகங்கள் தெளியக் கேள்விகள் கேட்கவில்லை என்றாலும், விமரிசனப் பார்வையோடு கேள்விகள் எழுப்பவில்லைஎன்றாலும், குறைந்தபட்சம் சார் எனக்கு எதுவுமே புரியவில்லை, மறுபடி விளக்கிச் சொல்லுங்கள் என்ற குரலாவது நம் டேப்ரிக்கார்டரில் பதிவாகிறதா? அதுவுமில்லை. அப்படியானால் எல்லாருக்கும் எல்லாம் புரிந்து விட்டதா? நிச்சயமாக இல்லை.இவ்வாறு சொல்ல சுதந்திர உணர்வு தேவை. அது இல்லாமல் இம்மாதிரி கேட்பது சாத்தியமில்லை.

நான் முற்றிலும் எதிர்மறையாகப் பேச விரும்பவில்லை. அதன் மறுபக்கத்தையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் எங்குஉண்மையான தேடல் சாத்தியமோ, எங்கு முழுமையான பங்கேற்பு, கலகலப்பான உரையாடல், காரசாரமான விவாதம், அம்புக்கணைகளாய்க் கேள்விகள் என்று குரல்கள் ஒலிக்கின்றனவோ அங்குதான் கற்றல் எத்தனை இனிமையான ஒன்று!.

நமக்கே தெரியும். குழந்தைகளுக்கு கற்றல் இயல்பானது என்று. அதோடு அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வேகமாகக் கற்றுக்கொள்வதையும், செய்து பார்த்துக் கற்றுக் கொள்வதையும் விளையாட்டுச் சூழலில் நாம் காண்கிறோம். அதே முறைகளை பள்ளிப்பாடங்களிலும் பயன்படுத்தும்போது, பள்ளி விழாத்தலமாகிறது. கல்வி என்பது சுவாரசியமான ஒன்றாக மாறுகிறது.

இதெல்லாம் வகுப்புச் சூழல் பற்றி, போதனா முறை பற்றி, பாடத்திட்டம் வேறு என்றல்ல. சிந்தனையைக் கிளறும் கேள்வி எழுப்பும்வழிமுறையில் பாடத்திட்டம் தானாகவே உருப்பெறும். அறிவுத் தாகத்தைத் தணிக்க பல திசைகளில் தேடல் பாடங்களைக்காண்பிக்கும்.

இயற்கை வெகு அழகானது, நேர்த்தியான கட்டமைப்பு கொண்டது. சமூகம் நுணுக்கமான தன்மைகள் கொண்டது.தொழில்நுட்பம் நம் ஆர்வத்தைத் தூண்டுவது. மொழி நம்மைக் கிறங்க வைப்பது. அனைத்துமே கற்பவருக்கு ஆனந்தம் தரும்சுவை படைத்த நல்விருந்து.

ஆனால் இவ்விருந்தை ருசிக்க ஒரே நிபந்தனை பங்கேற்பு அவசியம். சீரிய சிந்தனை, கருத்துப் பரிமாற்றம், விவாதம், தேடல்அவசியம். இவையில்லாவிடில், வெறும் தேர்வுக்கான தயாரிப்பு என்ற அணுகுமுறையைக் கையாண்டால், விருந்தைஒதுக்கிவிட்டு, அரை வயிற்றுக் கஞ்சிதான் கிடைக்கும். விருந்தினரைப் பட்டினி போடும் விருந்து நம் கல்விக்கூடங்களில்தினந்தோறும் படைக்கப்படுகிறது.

டாக்டர். ஆர். ராமானுஜம் சென்னையில் இந்திய கணித அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாடுஅறிவியல் இயக்க மாநிலத்தலைவர் கணக்கும் இனிக்கும்,சந்திரன் மேலே காலை வைச்ச... போன்ற பல எளிய அறிவியல்நூல்களை படைத்தவர்,துளிர் சிறுவர் அறிவியல் இதழ் ஆசிரியர் குழுவில் ஒருவர்.

(புதுவிசை ஜூலை 99 இதழிலிருந்து...)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X