For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் - 24

Google Oneindia Tamil News

மதுரை: மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
மார்கழி மாதம் 24வது நாளில் மகாவிஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் நிகழ்த்தப்பட்ட சாதனையை பெருமை பொங்க கூறுகிறார் ஆண்டாள் நாச்சியார். திருப்பாவையின் 24வது பாசுரத்தையும் திருப்பள்ளியெழுச்சி 4வது பாடலையும் பாடலாம்.

Margazhi Month Special Prayers Tirupavai, Tirupalliyeluchi songs 24 6-01-2023

இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை "போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள். திருபெருந்துறையில் உறையும் இறைவனுக்காக, மாணிக்கவாசகர் பாடியருளிய 10 திருப்பள்ளியெழுச்சி பாடல்களில் இன்று நான்காவது பாசுரத்தை பாடலாம்.

திருப்பாவை பாடல் 24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பொருள்:

மகாபலி இந்த உலகத்தை ஆண்ட காலத்தில், வாமன அவதாரம் எடுத்து தனது மூன்றடிகளால் மூவுலகையும் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம். பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம் என்று அந்த கண்ணனின் வீரச்செயல்களை போற்றி பாடுகின்றனர் பெண்கள்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

விளக்கம்:

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்; ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்; ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்; ஒரு பக்கம், தொழுவார்களும், அன்பின் மிகுதியால் அழுபவர்களும் விடாது அழுது துவண்ட கைகளை உடையவர்களும் ;ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள் திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே ! என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க ! என்று பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

English summary
Margazhi Month Special Prayers Tirupavai, Tirupalliyeluchi songs 24 5-01-2023
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X