For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் - 27

Google Oneindia Tamil News

மதுரை: மார்கழியில் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். மார்கழி மாதம் 27வது நாளில் திருப்பாவையின் 27வது பாசுரத்தை பாடலாம். கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது.
திருபெருந்துறையில் உறையும் இறைவனுக்காக, மாணிக்கவாசகர் பாடியருளிய 10 திருப்பள்ளியெழுச்சி பாடல்களில் இன்று ஏழாவது பாசுரத்தை பாடலாம்.

Margazhi Pavai Nonbu Tirupavai, Tirupalliyeluchi songs 27

திருப்பாவை பாடல் 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
நெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால் சோறு உண்போம். விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பாடல் விளக்கம்:

அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது, அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, மிகவும் எளியது என அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை என்கிறார் மாணிக்கவாசகர். அப்படிப்பட்ட தாங்கள், இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம். இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று கூறத்தக்க எளியமுறையில், எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர்! தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே! திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை? அதன்படியே நடப்போம்! எம்பெருமானே ! நீவிர் பள்ளி எழுந்தருள்க என்று இறைவனை போற்றி பாடுகிறார் மாணிக்கவாசகர் !

English summary
Margazhi Pavai nonbu Tirupavai, Tiruvempavai songs 27 January 10,2023 Margazhi 27th day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X