ஆடிப்பூரம் விழா..ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கோலாகல கொடியேற்றம்..பக்தர்கள் தரிசனம்
ஆடிப்பூரம் திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. வரும் 1ஆம் தேதியன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிப்பூரம் கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. சைவ ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் ஆடிப்பூரம் நாளில்தான் கொண்டாடப்படும். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் நாளில் சிவ ஆலயங்களில் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவார்கள். தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.
ஆடிப்பூரம் நாளில்தான் ஆண்டாள் அவதரித்தார் என்பது நம்பிக்கை. ஆண்டாள் அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் விழா
இந்த ஆண்டு ஆடிப்பூரம் விழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியுள்ளது. 28ஆம் தேதி கருட சேவை நிகழ்ச்சியும் 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெற உள்ளது. விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வருகிற 1ஆம் தேதி நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலை ஆடிப்பூரம்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. விழாவை முன்னிட்டு விநாயகர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

அம்மனுக்கு வளைகாப்பு
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விநாயகர் பராசக்தி அம்மன் கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். 10ஆம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், அன்று இரவு உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.

விருத்தகிரீஸ்வரர் ஆலயம்
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு ஆடிப்பூர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஆடிப்பூர விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெரும் திருவிழாவில் தினமும் சாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 31ஆம் தேதியன்று தேரோட்டமும், 2ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

கடலூர் பாடலீஸ்வரர் ஆலயம்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் ஆலயத்தில் பெரியநாயகி அம்மனுக்கு ஆடிப்பூர விழா 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications