• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - இன்று பட்டினத்தார் குருபூஜை

|

சென்னை: கோடி கோடியாக பணமும் பொருளும் சம்பாதித்தாலும் உலகத்தை விட்டு நீ போகும் போது உன்னுடன் காதற்ற ஊசி கூட வராது என்று உலகிற்கு உணர்த்தியவர் பட்டினத்து அடிகள். மகனாக பிறந்த ஈசன் தனக்கு உணர்த்தியதை உலகிற்கு உணர்த்த செல்வங்களை துறந்து துறவியானவர். பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டிணத்தில் பிறந்து சென்னை திருவொற்றியூரில் கடற்கரை நகரில் ஆடி உத்திராடம் நாளில் முக்தியடைந்தவர். அவரது குருபூஜை இன்று கடைபிடிக்கப்படுகிறது.

திருவொற்றியூர் தலத்தில் கரும்பின் நுனி இனிக்க திருவொற்றியூரிலேயே ஜீவ சமாதி அடைந்தார், பட்டினத்தார். அவரது ஜீவ சமாதி திருவொற்றியூரில் வங்கக்டலினை பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது.

Pattinathar guru poojai 2019 Pattinathar Temple Thiruvotriyur

இவரது குருபூஜை தினத்தில் பட்டினத்தாரின் ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்துக்கு எண்ணெய், கரும்புச் சாறு, அரிசி மாவு, கதம்பப் பொடி உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். குருபூஜை தினத்தில் பட்டினத்தாரை நினைத்து வழிபடுவதன் மூலம் மகானின் அருளைப் பெறலாம்.

பட்டினத்தார் கதை

காவிரிப் பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த நகரம். பிற்காலச் சோழர்கள் காலத்தில் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்னும் வணிகர் ஞானகலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். திருவெண்காட்டு ஈசனிடம் மிகுந்த பக்தி செலுத்திய அந்த வணிகருக்குப் பிள்ளை பிறந்த போது திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமான் என்ற பெயரையே வைத்தார். திருவெண்காடர் எனவும் அழைக்கப்பட்டார். சிவநேசர் வணிகர்களிலேயே பெரு வணிகர் என்பதோடு பெரும்பொருளும் திரட்டி மன்னர்களுக்குச் சமானமான மாளிகையில் மிகவும் வசதிகளோடும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்தார். மன்னரும் அவரை மதித்துப் போற்றி வந்தான். ஆகவே திருவெண்காடருக்கு நல்ல வசதியான வாழ்க்கை வாய்க்கப் பெறவே அவரும் மிகவும் ஆனந்தமாகவே வாழ்ந்து வந்தார். உரிய பருவத்தில் திருமணமும் ஆயிற்று. ஒரே ஒரு சகோதரி இருந்தாள். சகோதரியும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள்.

திருவெண்காடருக்கு சிவகலை என்னும் பெண்ணரசி மனைவியாக வாய்த்தாள். அவளுடன் நல்லறம் நடத்தி வந்தார். ஆனால் குழந்தைப் பேறே இல்லாமல் இருந்தது. ஆகவே அங்கிருந்து திருவிடைமருதூர் சென்று ஈசனை வணங்கி விரதம் இருந்து வந்தார். அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியருக்கு வறுமை பொறுக்க முடியாமல் இருந்து வந்தது.

Pattinathar guru poojai 2019 Pattinathar Temple Thiruvotriyur

சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், சிவசருமர் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெருவணிகராய் உள்ள திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் வறுமை தீரும் எனவும் கூறவே விழித்தெழுந்த சிவசருமர் மறுநாள் அவ்வாறே நடக்கக் குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடரிடம் கொடுக்க அவரும் ஈசன் ஆணை என அறிந்து குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவுகிறார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறார்.

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார்.

Pattinathar guru poojai 2019 Pattinathar Temple Thiruvotriyur

கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார். அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்! எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை. அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார்.

வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, "தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர். இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர்.

Pattinathar guru poojai 2019 Pattinathar Temple Thiruvotriyur

தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் "ஐயிரண்டு திங்களாய் " என தொடங்கும் பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.

துறவை மேற்கொண்ட பட்டினத்தார் அங்கேயே இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து ஊர் ஊராகச் சென்று ஈசனைத் தரிசிக்க ஆரம்பித்தார். அவ்வாறு செல்கையில் உஜ்ஜையினி மகாகாளேஸ்வரர் கோயிலில் தன் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊருக்கு வெளியே வந்த பட்டினத்தார் அங்கிருந்த காட்டுப் பிள்ளையார் கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.

அவ்வூரில் பத்திரகிரியார் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அரண்மனையில் செல்வம் மிகுந்திருந்தது; இது காட்டின் கொள்ளையர்களைக் கவர்ந்தது. அவர்கள் அரண்மனைக்குக் கொள்ளையடிக்கச் சென்றனர். செல்கையில் கொள்ளை வெற்றிகரமாய் முடிந்தால் காட்டுப் பிள்ளையாருக்குக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டு சென்றனர். அவ்விதமே கொள்ளை வெற்றியாய் முடியவே அவ்வழியே சென்ற கொள்ளையர் பிள்ளையாருக்கென ஒரு விலை உயர்ந்த முத்துமாலையைக் காணிக்கைக்கென எடுத்துக் கோயிலில் பிள்ளையார் சந்நிதி முன் வீசிவிட்டுச் சென்றனர். அந்த முத்துமாலை அங்கே தியானம் செய்து கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் போய் அழகாய் அமர்ந்து கொண்டது.

கொள்ளையரைத் துரத்தி வந்த அரண்மனைக் காவலர் பிள்ளையார் கோயிலில் கழுத்தில் முத்து மாலையுடன் வீற்றிருந்த பட்டினத்தாரிடம் இது எப்படிக் கிடைத்தது என வினவ, நடந்தது எதையும் அறியாத பட்டினத்தார் பதில் சொல்ல முடியாமல் தவிக்க, காவலர்களோ, இவரே கொள்ளைக் கூட்டத் தலைவர்; இப்போது ஏதும் அறியாதது போல் வேஷமிடுகிறார் என நினைத்து அரசரிடம் சென்று நடந்ததைச் சொல்கின்றனர்.

மன்னனும் விசாரிக்கப் பட்டினத்தார் எதுவும் சொல்லவில்லை. உடனே மன்னனுக்குக் கோபம் வந்து, "கள்வனைக் கழுவில் ஏற்றுக!" என்று ஆணையிட்டார். கழுமரம் தயார் செய்யப் பட்டது, பட்டினத்தாரும் கழுவில் ஏற்றப் பட்டார். கழுவில் ஏற்றப்பட்ட நிலையிலும் மனம் தளராது, "விதியின் வலிமையை எண்ணி என் செயலாவது யாதொன்றுமில்லை, இனி தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்" எனத் தொடங்கும் பாடலைப் பாடக் கழுமரம் பற்றி எரிந்தது. இதை அறிந்த அரசன் பட்டினத்தாரின் மகிமையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.

அரசனைக் கண்ட பட்டினத்தாருக்கு அவனும் ஞான வழியில் செல்லப் பக்குவம் அடைந்திருப்பதும், அவன் மனைவி அவனை ஏமாற்றுவதும் தெரியவரவே அதை மன்னனுக்குச் சூசகமாக உணர்த்தினார். மன்னனும் மனைவியைச் சோதித்துப் பார்த்து அவள் தன்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, அரச வாழ்க்கையைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக மாறி அவரைப் பின் தொடர்ந்தார். ராணியோ இறந்துவிடுகிறாள். அவள் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து ராஜா பத்திரகிரியாரையைச் சுற்றிச் சுற்றி வருகிறாள்.

பட்டினத்தாரும் பத்திரகிரியாரும், திருவிடைமருதூர் வந்தடைகின்றனர். அங்கே கோபுர வாசலில் பிச்சை எடுத்து பத்திரகிரியார் தாமும் உண்டு தம் குருவுக்கும் உணவு கொடுத்து வருகிறார். தம்மைச் சுற்றி வந்த நாய்க்கும் பத்திரகிரியார் உணவிட்டு வந்தார். அப்போது ஒரு நாள் பட்டினத்தாரிடம் ஒரு சித்தர் வந்து பிக்ஷை கேட்க, பட்டினத்தார் சிரித்த வண்ணம், "நானோ சந்நியாசி, என்னிடம் கொடுக்க ஏதுமில்லை. அதோ இருக்கிறானே என் சீடன். சம்சாரி. சோற்றுச் சட்டி மட்டுமில்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனைக் கேளுங்கள்." என்று கை காட்டி விடுகிறார்.

இதை அந்தச் சித்தர் வாயிலாக அறிந்த பத்திரகிரியார் ஆஹா, சந்நியாசியாக மாறிய எனக்கு இந்தச் சோற்றுச் சட்டியும், நாயும் அல்லவோ சம்சாரியாக்கிவிட்டது." அடுத்த கணம் சோற்றுச் சட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார் பத்திரகிரியார். அதன் ஒரு துண்டு நாயின் தலையில் வேகமாய்ப் படவே நாய் இறந்து விடுகிறது. அதைக் கண்ட பத்திரகிரியார் திகைத்து நிற்க பட்டினத்தார் தெளிவு படுத்துகிறார்.

பத்திரகிரியாரின் மனைவியே அந்த நாய் எனவும், இப்போது அவள் பாவம் தீர்ந்துவிட்டதென்றும், அடுத்த பிறவியில் நல்லதொரு அரசகுடும்பத்தில் பிறந்து மீண்டும் உன்னை நாடி வருவாள்." என்று சொல்கிறார்.

அதன்படியே அந்தப் பெண் தன் தவறை உணர்ந்து வருந்தியதாலும் நாய்ப் பிறவி எடுத்ததாலும் காசிராஜனுக்கு மகளாய்ப் பிறக்கிறாள். பேரழகு வாய்ந்த பெண்ணாள் வளர்கிறாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்களும், இளவரசர்களும் போட்டி போட்டனர். காசிராஜனும் மகளுக்கு மணமகன் தேடவேண்டிச் சுயம்வரம் நடத்த ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ சுயம்வரத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்தாள். தான் வேறொருவருக்குச் சொந்தமானவள் என்றாள்.

திருவிடைமருதூர் குறித்துக் கூறி அங்கே ஈசனோடு ஐக்கியமாகி இருக்கும் பத்திரகிரியாரைக் குறித்துச் சொல்லி அவரிடம் தன்னைச் சேர்ப்பிக்கச் சொல்கிறாள். மன்னன் மகளை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் வந்து சேர்கிறான். பத்திரகிரியாரைத் தேடிக் கண்டு பிடிக்கிறான். தன் பெண்ணை அவரிடம் ஒப்படைத்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான்.

காசிராஜன் மகளும் தங்களின் அடிமையாகிய இந்த நாய் மீண்டும் தங்கள் திருவடி தேடி வந்திருக்கிறது என்று அவர் பாதம் பணிந்தாள். அவளுக்குத் தன் பூர்வ ஜன்ம நினைவுகள் மறையவே இல்லை என்பதைக் கண்டார் பத்திரகிரியார். பத்திரகிரியாரோ சிவஞானத்தில் பரிபூரணமாக ஐக்கியமாகிவிட்டார். அவர் இது என்ன புதுத் தொல்லை என நினைத்த வண்ணம் தன் குருநாதரான பட்டினத்தாரைப் போய்ப் பார்த்து, "குருவே, இது என்ன?? நாய்க்குப் பிறவி ஞானம் வரலாமா? மங்கையாய்ப் பிறப்பெடுத்து வந்திருக்கிறதே, " என வினவ, "இதுவும் ஈசன் செயல்," என்று புரிந்து கொண்ட பட்டினத்தார், ஈசன் திருவருளை நினைந்து வேண்ட, அப்போது தோன்றிய பெரும் ஜோதியில், அந்தப் பெண் மட்டுமில்லாமல் பத்திரகிரியாரும் சேர்ந்து மறைந்தார். இருவரும் சிவஞானப் பெரும் ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள்.

தன் சீடனுக்கு விரைவில் முக்தி கிடைத்ததை நினைத்து பட்டினத்தார் தனக்கும் முக்தி கொடுக்குமாறு ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் ஒரு கரும்பைக் கொடுத்தார். அதன் நுனி இனிக்கும் இடத்தில் அவருக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறினார். அந்தக் கரும்பை எடுத்துக் கொண்டு பட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு, சீர்காழி போன்ற பல தலங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை. பின்னர் அவர் திருவொற்றியூர் வந்தார். அங்கே தான் கரும்பு இனித்தது.

திருவொற்றியூரில்தான் தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள். மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார். முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். பட்டினத்தார் முக்தியடைந்த ஆடி உத்திராடம் குருபூஜை விழாவாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Saint Pattinathar Guru Puja is devotionally celebrated on the Uthiradam star day following the full moon day in the month of Aadi. August 13, 2019. Saint Pattinathar Temple in Thiruvotriyur.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more