For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கற்பக விநாயகர் கோவிலுக்கு போனால் கவலைகள் நீங்கும் செல்வ வளம் பெருகும்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசனம் செய்தால் நம்முடைய கவலைகள் நீங்கும். கஷ்டங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

Google Oneindia Tamil News

சிவகங்கை: வேண்டிய வரம் தரும் வரப்பிரசாதி கற்பக விநாயகர். பிள்ளையார் பட்டியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த விநாயகரை தரிசனம் செய்தால் கவலைகளும் கஷ்டங்கும் நீங்கும். செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. திருணமத் தடை, குழந்தையின்மை, குடும்ப நலம் உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டு பின் அதற்குரிய வேலைகளைத் தொடங்கினால் நிச்சயம் உறுதியாக வெற்றியடையும் என்பதும் நம்பிக்கையாகும்.

பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயம் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான ஆலயமாகும். இந்த கோவில் ஒரு குடைவரை கோவிலாகும். இந்த வகை கோவில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் பல்லவ மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பதே இந்த கோவில் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

 Pillaiyar Patti Karpaga Vinayagar temple, you will get rid of worries and increase your wealth

இக்கோவிலின் மூலவரான விநாயகர் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகிறார். இந்தக் கோவிலில் காணப்படும் விநாயகர் உருவம், 4ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விநாயகரைப் போல, 14 சிலைகள் குடவரை சிற்பங்களாக இங்கே செதுக்கப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவில் "அர்ஜுன வன திருத்தலங்கள்" நான்கு இருக்கிறது. அதில் தமிழ் நாட்டில் மூன்றும், ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் "பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலும்" ஒன்று.

புராண காலப் பெயர்கள் என சில பெயர்கள் கல்வெட்டியியல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்று நாம் அழைக்கும் இந்த கோவிலின் புராண கால பெயர்களாக எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராச நாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் ஆகிய அந்த பெயர்கள்.

கிபி 12ம் நூற்றாண்டில் இருந்து இந்த கோவிலில் செட்டிநாட்டு நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் தெய்வ திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குன்றைக் குடைந்து சிறிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் விநாயகர் வலது கையில் லிங்கம் ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார். வலம்புரியாக சுழித்த தும்பிக்கையுடன் இவர் வலம்புரி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். கோவிலின் உட்பகுதிகள் பாண்டிய மன்னர்களால் குடைவரைக் கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நிர்மாணித்துள்ளனர்.

 Pillaiyar Patti Karpaga Vinayagar temple, you will get rid of worries and increase your wealth

கோவிலுக்குள் நுழைந்ததும் கற்பக விநாயகர் ஆறு அடி உயரத்தில் கம்பீரமாக அருட்காட்சி தருகிறார். இவருக்கு விபூதி அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த அபிஷேகம் செய்யப்படும் நேரத்தில் விநாயகரை தரிசிப்பது நல்லது.

உங்கள் தொழில் வளர்ச்சியடைந்து நீங்களும் உங்கள் தொழிலில் பெரிய நபராக ஆக வேண்டுமென்றால் இந்த கோவிலுக்கு செல்ல சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி, விநாயகருக்கு ஒரு கணபதி ஹோமமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட செல்வ வளம் பெருகும்.

இந்த கோவிலுக்கு சென்றால், உங்கள் தொழில் மட்டுமல்ல, குடும்பமும் சேர்ந்தே வளமான பாதைக்கு திரும்பும், சச்சரவுகள் தீர்ந்து, கல்வியும் செல்வமும் நிலைப் பெறும். திருமணம், குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் சில வருடங்களிலேயே முற்றிலும் தீர்ந்து வாழ்வில் வசந்தம் வீசும் என்று இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

முருகனுக்கு தான் ஆறு படை வீடுகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. அதில் இந்த பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் விநாயகரின் "ஐந்தாம்" படை வீடாக கருதப்படுகிறது. விநாயகருக்கு தேர்த்திருவிழா நடக்கும் ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று. அப்பொழுது விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தேர்கள் இழுக்கப்படுகின்றன. பிள்ளையாருக்கான தேரை இழுக்கும் போது, தேரின் ஒரு வடத்தை ஆண்களும் மற்றொரு வடத்தை பெண்களும் பிடித்து தேரை இழுக்கின்றனர். சண்டிகேஸ்வரரின் தேரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இழுக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆலயத்தில் 9 நாட்களுக்கு விழா நடத்தப்படுகிறது. ஒன்பது நாள் விழாவின் இறுதி நாளில் பிள்ளையாருக்கு 80 கிலோ சந்தனகாப்பு சாற்றப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே செய்யப்படும் இந்த அலங்கார காட்சியை காண்பதற்காகவே பக்தர்கள் பெருமளவில் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

 Pillaiyar Patti Karpaga Vinayagar temple, you will get rid of worries and increase your wealth

முக்குறுணி மோதகம் எனும் கொழுக்கட்டை இங்கு சிறப்பானது. விநாயகர் சதுர்த்தியின்போது, உச்சிகால பூஜையில் முக்குறுணி அரிசியைக் கொண்டு பெரிய அளவிலான கொழுக்கட்டை தயாரித்து நைவேத்தியமாக படைப்பார்கள். இதற்கு 18 படி அரிசி, 2 படி எள், 6 படி கடலைப்பருப்பு, 50 தேங்காய், 1 படி நெய், 100 கிராம் ஏலக்காய், 40 கிலோ வெல்லம் ஆகியவை மூலப்பொருட்கள் ஆகும்.

பிரம்மாண்ட கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும், பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. கல்விகளில் மேன்மை பெற, வறுமை நிலை மாற, குழந்தை பாக்கியம் பெறுவதற்காக பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் வழிபடுகின்றனர்.

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. கற்பக விநாயகர் கோவில் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது. பிள்ளையார் பட்டி திருப்பத்தூரில் இருந்து குன்றக்குடி செல்லும் வழியில் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் வாடகை வாகன வசதிகளும் உள்ளன. கோவில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

விநாயகர் சதுர்த்தி: கொரோனா எச்சரிக்கையை மீறி சந்தைகளில் குவிந்த மக்கள் - பூக்கள் விலை அதிகரிப்புவிநாயகர் சதுர்த்தி: கொரோனா எச்சரிக்கையை மீறி சந்தைகளில் குவிந்த மக்கள் - பூக்கள் விலை அதிகரிப்பு

English summary
Pillaiyar Patti Karpaga Vinayagar Temple see this Ganesha who gives blessings, worries and difficulties will go away. There is hope that wealth will increase. It is hoped that those who have problems including marriage ban, infertility and family well-being will definitely succeed if they come to this temple and worship Karpaga Vinayagar and then start working on it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X