தை அமாவாசை - ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய பக்தர்கள் - முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
ராமேஸ்வரம்: முன்னோர்களை வணங்கும் தை அமாவாசை தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுடைய ஆசி தங்களுடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிவ பெருமானின் 12 ஜோதிர்லிங்கத்தலங்களில் முக்கியமான தலம் ராமேஸ்வரம். ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்தும் இந்தியாவிற்கு வருகை தருவார்கள். இங்கு அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிவ பெருமானை வழிபாடுவார்கள்.

தை அமாவாசை தினமான இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திதி தர்ப்பணம் அளிக்க அக்னி தீர்த்தக்கடலில் குவிந்துள்ளனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆற்றுடன் கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் கலப்பதாக ஐதீகம். 3 ஆறுகள் சந்திக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் திதி தர்ப்பணம் அளிப்பார்கள்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவானி கூடுதுறையில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களை திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு பவானி கூடுதுறை திறக்கப்பட்டு திதி மற்றும் தர்ப்பணம் செய்யவும், புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் இன்று பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க குவிந்துள்ளனர்.
இதே போல முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, வேதாரண்யம் கடற்கரையிலும் கோடியக்கரையிலும் தமிழகம் முழுவதிலும் உள்ள புனித நீர் நிலைகளிலும் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications