நோய் பாதிப்பில் இருந்து காக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு - மரண பயம் நீக்கும் காலபைரவர்
தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. நாளைய தினம் புதாஷ்டமி சதாசிவாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது.
மதுரை : தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஆபத்திலிருந்து காக்கும் வழிபாடு ஆகும். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. நாளைய தினம் புதாஷ்டமி சதாசிவாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா கொடுந்தொற்று காலத்தில் மரண பயம் நோய் பயம் நீங்க காலபைரவரை வணங்கலாம்.
Recommended Video
சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சம். ஸ்ரீ மஹா கால பைரவர் காக்கும் கடவும். அவரை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள்.

அஷ்ட பைரவரை வணங்கினால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும்,

ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.
முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும்.
பைரவர் உக்கிரமான தேவராக விளங்கினாலும் பெருங்கருணை மிக்கராவார். சிவாலயங்களில் பைரவர் வழிபாடு ஓர் அங்கமாக உள்ளது. வேத, இதிகாச, சைவ, சாக்த, கவுமார, சவுர மார்க்கங்களிலும் ஜைனம், பவுத்தம் முதலான பிற மார்க்கங்களிலும் பைரவரை சிறப்புடன் போற்றுகின்றனர். பைரவர் மந்திர யந்திர தந்திர நாயகராவார். பூத வேதாள பிரேத பிசாசுக் கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை உடையவர். கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சவுபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாகும்.
அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து,வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.
பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.
வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீசொர்ணகால பைரவருக்கு தனி பைரவர் பீடம், அஷ்ட பைரவர், கால பைரவருடன் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது எனலாம். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோலம் கொண்டு அருள் புரிகிறார்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சொர்ணாகர்ஷண பைரவருக்கு வரும் தேய்பிறை அஷ்டமியில் காலையில் நடைபெறும் சொர்ண பைரவர் யாகத்தில் கலந்து கொண்டால் சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர் அருள் கிடைக்கும். தன்வந்திரி பகவான், அஷ்ட பைரவர்கள் மற்றும் சொர்ண கால பைரவர் அருள் பெற்று நீண்ட ஆயுள், நிலையான செல்வம் பெறலாம்.
மக்களையும் காய்ந்து போன விவசாயத்தையும் முடங்கி போன குடும்பத்தையும் குறைந்து போன செல்வத்தையும் சீராக்கும் தேய்பிறை அஷ்டமி யாகம் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறுகிறது நேரில் செல்ல முடியாதவர்கள் மனதார பைரவரை வணங்கி வழிபடலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் வைரவன்பட்டியில் உள்ள பைரவரை வணங்க நோய் பயம் நீங்கும் எம பயம் போகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆலயத்தில் பைரவரே மூலவராகவும் இருக்கிறார் என்பது சிறப்பு. இன்றைய ஊரடங்கு கால கட்டத்தில் மக்கள் அனைவருக்காகவும் காலபைரவரை மனதார நினைத்து வணங்கலாம்.
12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால், இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம்.
காலத்தின் கடவுளான கால பைரவர், நம் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் எல்லா வளங்களும் பெறலாம். தீராத பிணிகளும் தீரும். கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.












Click it and Unblock the Notifications