ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி - டிச.25ல் சொர்க்கவாசல் திறப்பு
சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 25ஆம் தேதி அதிகாலையில் நடைபெற உள்ளது. 14ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்குகிறது.
மார்கழி மாதம் பெருமாள் கோவில் நடைபெறும் மகத்துவமான விழா வைகுண்ட ஏகாதசி திருவிழா. 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய அம்சமே சொர்க்கவாசல் திறப்புதான். பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் இறைவனைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்சவமாக சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நிதி திறப்பு விழா நடைபெறும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது.
இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் 'எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் எல்லா பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்' என்று வேண்டினார். பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்போர், தசமி நாளான இன்று பகல் வேளையில் மட்டும் சாப்பிட வேண்டும், இரவில் பழங்களை மட்டும் உண்ண வேண்டும். அப்பொழுது தான் விரதம் இருக்கும்பொழுது, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் விரைவில் வெளியேறிவிடும்.
ஏகாதசி நாளன்று அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, பூஜை செய்து, பகவான் மஹாவிஷ்ணுவின் மந்திரங்களை சொல்லி விரதம் இருந்து வரவேண்டும். பகல் வேளையிலும் தூங்காமல் விழித்திருந்து விரதமிருக்க வேண்டும். ஏகாதசி நாளன்று, முடிந்தவரை, முழுமையாக விரதமிருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் குடித்து வரலாம். பசி உணர்வு ஏற்பட்டால் ஏழு முறை துளசி இலையை சாப்பிட்டு வரலாம்.
ஏகாதசி விரதத்தை எப்படி முறைப்படி தொடங்குகிறோமோ அதே போல் விரதத்தை முறைப்படி தான் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏகாதசி விரதம் இருந்ததற்கான பலன் கிடைக்காமல் போய்விடும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 14ஆம் தேதி முதல் 2021, ஜனவரி 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
டிசம்பர் 14ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் விழா தொடங்குகிறது. டிசம்பர் 14 முதல் 24 வரை பகல் பத்து திருவிழாக்கள் நடைபெறும். டிசம்பர் 24ஆம் தேதி நாச்சியார் திருக்கோலமும் நடைபெறும். முக்கிய விழாவான பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 25ஆம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் நடைபெறும்.
டிசம்பர் 31ஆம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவையும், ஜனவரி 1ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடபரி விழாவும், ஜனவரி 3ஆம் தேதி தீர்த்தவாரியும், ஜனவரி 4ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும்.