ராகு கேது பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்கு ஜாக்பாட்.. பணம், திருமண யோகம் தேடி வருமா?
ராகு கேது பெயர்ச்சி பலன் 2026: நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேதுவின் பெயர்ச்சியானது நவம்பர் 13 ஆம் தேதி (ஐப்பசி 27) மாலை 5.14 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் வழிபாடுகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
சர்ப்ப கிரகங்களில் ராகுவும் கேதுவும் சமசப்தம கிரகங்களாகும். 210 டிகிரிக்குள் இந்த கிரகங்களின் பார்வை இருக்கும். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்கள் 18 மாதங்களுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவது வழக்கம். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் அவிட்டம் மூன்றாம் பாதம், கும்பத்தில் இருந்து அவிட்டம் 2 பதமான மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

கேது பகவான் மகம் 1 ஆம் பாதம் சிம்ம ராசியில் இருந்து, ஆயில்யம் 4 பாதமான கடக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த சமயத்தில் கடகத்தில் குரு, மீனத்தில் சனி உள்ளனர். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசியினருக்கு தொழில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். மலக்குடல், கழிவுப் பாதை, வயிறு போன்ற பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் அதிகரிக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் பெரிய பெயர், புகழுடன் இருப்பீர்கள்.
உறவுகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. மேஷ ராசி பெண்கள் ஹார்மோன் குறைபாடுகள், கர்ப்பப்பை பிரச்சனைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். சித்திரை மாதம் முடியும் போது பெரும் வெற்றிகளும், சந்தோஷங்களும், அதிர்ஷ்டமும் ஏற்படும். ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் உடற்பயிற்சி மிக அவசியம்.
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, குடும்பம் என அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. புதிய குழந்தைகள் வரவு உண்டாகும். பிள்ளைகளின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். பிள்ளைகளைப் பற்றிய தவறான எண்ணங்கள் அனைத்தும் மாறும். உறவுகளுடன் தகராறுகள் வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷபம் ராசியினருக்கு திருப்பதி திருமலையில் ஓரிரவு தங்கி வழிபாடு செல்வது ஏற்றத்தைத் தரும். முதுகு, கழுத்து தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நன்மைகளை ஏற்படுத்தும். சுப விரயங்கள் அடுத்தடுத்து செய்வீர்கள். பெரிய பொறுப்புகளுக்கு வருவீர்கள்.
எதிரிகள் பலம் இழந்து போவார்கள். எதிரிகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தெய்வமே கிடையாது என்று சொன்னவர்கள் கூட மாலை போடும் அளவுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆச்சரியமான முன்னேற்றங்கள் காணப்படும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும்.
மன அழுத்தங்கள் தீரும். தொழில் ரீதியாக பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். அப்பா, அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். சனிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும். அரிசி, கோதுமை, காய்கறிகள் உணவாகக் கொடுக்கலாம். தடைகள் தவிடு பொடியாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். முருகர் வழிபாடு சகலவித நன்மைகளையும் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம்.
மிதுனம்
மிதுனம் ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்ம் ஏற்படும். எல்லா விதத்திலும் ஏற்றங்கள் காணப்பட்டாலும் வேறு ஊருக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக செல்வது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிரிகளை நினைத்து கவலைப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது ஏற்றத்தைத் தரும். உடல் ரீதியாக மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டமும், பெரும் வெற்றியும், புகழும் கிடைக்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, இறக்குமதி, டிரேடிங், வாங்கி விற்பது போன்றவற்றால் பெரும் அதிர்ஷ்டம் ஏற்படும். கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகத்திலும், தொழிலிலும் எதிர்பார்க்காத பலவித நன்மைகள் ஏற்படும். திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் தீரும். திருமணத்தில் பாதிப்பு இருந்து மறுமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு மறுமணம் நடக்கும் அமைப்பு உள்ளது.
உத்தியோகத்தில் பிரச்சனை இருப்பவர்கள் அவசரப்பட்டு வேலையை விடுவதை தவிர்ப்பது நல்லது.வண்டிகளில் செல்லும்போது விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது. பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகள், வளர்ப்புப் பிராணிகளிடம் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பைரவர் காயத்ரியை தினந்தோறும் படிப்பது, கேட்பது நன்மை பயக்கும். தெருநாய்களுக்கு உணவளிப்பது நல்லது.


Click it and Unblock the Notifications
