For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகுண்ட ஏகாதசி..உண்ணாமல் உறங்காமல் விரதம்..மோட்சத்திற்கு வழிகாட்டும் மகாவிஷ்ணு

Google Oneindia Tamil News

மதுரை: வைகுண்ட ஏகாதசி நாளில் எதுவும் சாப்பிடாமல் கண் விழித்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து மோட்சத்துக்கு வழிகாட்டுகிறார் பகவான் மகாவிஷ்ணு. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இது மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனிச்சிறப்பு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் என்ற பரமபதவாசல் திறக்கப்பட உள்ளது.

ஏகாதசி என்பதற்கு 11 ஆம் நாள் என்பது பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து அதாவது வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசியின் தத்துவமாகும். இப்படி உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றி உபவாசம் இருப்பதையே ஏகாதசி புண்ணிய தினம் வலியுறுத்துகிறது.

 Vaikunta Ekadasi Sorgavasal Tirappu Purana Story Tamil

மாதத்திற்கு 2 ஏகாதசி என ஆண்டிற்கு 24 ஏகாதசி விரதம் இருந்தாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமைக்குரியது. இந்த நாளில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை பாடி பெருமாளை பின் தொடர்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். அந்த நாளில் மகாவிஷ்ணுவை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு எதுவும் சாப்பிடாமல் இரவில் கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்காக சொர்க்க வாசலை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் இறைவன்.

வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டும் சொர்க்க வாசல் திறப்பது ஏன் பிற நாளில் சொர்க்க வாசலை மூடியிருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை. இந்த கதைக்கு செல்லும் முன்பு ஏகாதசியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். முரன் என்ற அசுரனை அழிக்க விஷ்ணுவிடம் இருந்து சக்தியாக அவதரித்தவள் ஏகாதசி. அசுரனை அழித்த உன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பேன் என்று வரம் அளித்தார் பெருமாள்.

ஸ்ரீமகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டதால் பரமபத பாக்கியம் பெற்றவர்கள் மது-கைடபர் என்ற அரக்கர்கள். தங்களுக்குக் கிடைத்த வைகுண்டப் பேறு உலக மாந்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று இந்த அசுரர்கள் விரும்பினர். எனவே வைகுண்ட ஏகாதசி அன்று, ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் வழியாக உற்சவ மூர்த்தியாக தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசித்து பின்தொடரும் பக்தர்களது பாவங்களை நீக்கி முக்தி அளிக்க வேண்டும் என்று பெருமாளிடம் பிரார்த்தித்தனர். அப்படியே அருள் செய்தார் பெருமாள். இதன்பொருட்டே, சொர்க்க வாசலைத் திறந்து மோட்சத்துக்கு வழிகாட்டுகிறார் திருமால்! ஸ்ரீரங்கம் உள்பட நாடுமுழுவதும் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்க வாசல் இன்றும் திறக்கப்படுகிறது.

ஏகாதசி பற்றி மற்றொரு புராண கதை உள்ளது. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகுந்த தொல்லைகள் கொடுத்து வந்தான் முரன் எனும் அசுரன். இதனால் துன்பம் அடைந்த தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களை திருமாலிடம் அனுப்பிவைத்தார் சிவன். உடனே பெருமாளும் தேவர்களை காக்க அசுரனுடன் போரிட்டார். ஆயிரம் ஆண்டுகள் நீடித்த போர் முடிவுக்கு வரவில்லை. பெருமாளோ அசுரனுக்கு பயந்தது போல நடித்து சிம்ஹாவதி என்னும் குகையில் போய் உறங்கி விட்டார். அப்போது திருமாலின் உடம்பில் இருந்து ஒரு சக்தி பெண் வடிவில் வெளிப்பட்டது.

அப்போது அங்கேயும் தேடி வந்து பெருமாளை போருக்கு கூப்பிட்டான் முரன். பெண் சக்தியை அழிக்க அசுரன் நெருங்கும் போது, அந்த பெண்ணிடம் இருந்து 'ஹும்' என்ற சத்தம் மட்டுமே எழுந்தது அதுவே அந்த அசுரனை எரித்து சாம்பலாக்கியது. உறக்கத்தில் இருந்து எழுந்த பெருமாள், 'ஏகாதசி' என்று அந்தப் பெண் சக்திக்கு பெயரிட்டார், அதோடு உன்னை வழிபடுபவர் களுக்கு வைகுண்டம் அளிப்பேன் என்றும் வரம் தந்தார். இந்த நாள் முதல் ஏகாதசி விரதம் ஆரம்பமானது மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி' என்று போற்றுகிறோம்.

மார்கழி மாதம் மட்டுமின்றி மாதம்தோறும் வரும் ஏகாதசிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனிப் பெயரும், சிறப்பும் உண்டு. இந்த 24 ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்கலாம். ஏகாதசிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனிப் பெயரும், சிறப்பும் உண்டு. இந்த 24 ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்கலாம். அதிசயமாக 25வது ஏகாதசி வரும் அதற்கு கமலா ஏகாதசி என்று பெயர்.சித்திரை மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி பாபமோசனிகா என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை காமதா என்கிறார்கள். வைகாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி வருதிநீ எனப்படும். வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியை, மோஞனீ என்பார்கள்.

ஆனி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வருவது அபரா ஏகாதசியாகும். ஆனி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி நிர்ஜலா என்றழைக்கப்படும். ஆடி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வருவது யோகினி ஏகாதசியாகும். ஆடி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி சயனி என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியை காமிகா என்பார்கள். ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வருவது புத்ரஜா ஏகாதசியாகும்.

புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி அஜா எனப்படும்.புரட்டாசி மாதம் சுக்லபட்சத்தில் வருவது பத்மநாபா ஏகாதசியாக உள்ளது. ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் சுக்லபட்சத்தில் வருவது பாபங்குசா ஏகாதசியாகும். கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி ரமா ஏகாதசி எனப்படும்.கார்த்திகை மாதம் சுக்லபட்சத்தில் வருவது ப்ரபோதினி ஏகாதசியாகும்.

மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியை உற்பத்தி என்றழைப்பார்கள். மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வருவது மோட்ச ஏகாதசி எனப்படுகிறது. தை மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியானது ஸபலா எனப்படும். தை மாதம் சுக்லபட்சத்தில் வருவது புத்ரதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. மாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியை ஷட்திலா எனவும் மாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியானது ஜயா எனவும் அழைக்கப்படுகிறது. பங்குனி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வருவது விஜயா ஏகாதசி என்றழைக்கப்படும். பங்குனி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி ஆமலதி எனவும் அழைக்கப்படுகிறது.

24 ஏகாதசிகளில் மார்கழி மாத ஏகாதசி மட்டுமே மோட்ச ஏகாதசி அல்லது வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் கண் விழித்து விரதம் இருப்பவர்கள் பரமபத விளையாட்டு விளையாடுவார்கள். அந்த விளையாட்டில் பாம்பும், ஏணியும் முக்கியத்துவம் பெருகிறது. ஏணியில் ஏறி செல்லும் போது பாம்பு கொத்தி கீழே இறக்கி விட்டு விடும் ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துகிறது. பாம்பின் வாயில் கடிபடாமல் தப்பித்தால் பரமபதவாசலை அதாவது சொர்க்கத்தை அடையலாம் என்கிறது இந்த விளையாட்டின் தத்துவம். இந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்வோம்.

English summary
Vaikunta Ekadasi Sorgavasal Tirappu Purana Story Tamil: Lord Mahavishnu opens the sorgavasal to the devotees who fast without eating anything on the day of Vaikunta Ekadasi and guides them to moksha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X