For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பன்முகம் கொண்ட புன்னியாமீன்!

By Staff
Google Oneindia Tamil News

Punniyameen
(இலங்கையில் வெளிவரும் முன்னணி தமிழ்ப் பத்திரிகைகளுள் ஒன்றான ஞாயிறு தினக்குரலில் இடம் பெற்ற 'தட்ஸ்தமிழின்' முன்னணி எழுத்தாளரான' நமது வாசகர்களுக்கு மிகப் பரிச்சயமான புன்னியாமீனின் பேட்டி)

நேர்காணல்: அன்புமணி- இரா.நாகலிங்கம்

மத்திய இலங்கையின் தலைநகர் கண்டியைச் சேர்ந்த பீர்மொஹம்மட் புன்னியாமீன் அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், வெளியீட்டாளரும், ஊடகவியலாளருமாவார். இவர் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றின் செய்தியாசிரியருமாவார். இலக்கியத் துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும்கூட, இவரின் தனிப்பட்ட சாதனைகளும், இவர் பற்றிய விபரங்களும் வெளியுலகிற்கு அதிகமாகத் தெரிய வரவில்லை.

அவற்றை வெளிப்படுத்திக் கொள்ள இவர் அதிகமாக விளைவதுமில்லை. “ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு என்னால் ஆற்றப்பட்டுள்ளது ஒரு சிறு துளி மாத்திரம் தான். நான் இன்னும் இலக்கியத்துக்குச் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் உண்டு" என எச்சந்தர்ப்பத்திலும் அடக்கமாகக் கூறிவரும் இவர், பழகுவதற்கு இனியவர்.

1960ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி பீர்மொஹம்மட், சைதா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த புன்னியாமீன் ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர், ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

தொழில் ரீதியாக 1983ம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன், பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார். தற்போது வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்" தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

அத்துடன், லண்டனிலிருந்து வெளிவரும் 'லண்டன் குரல்", 'உதயன்" உள்ளிட்ட பல புலம்பெயர் பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி இணையத்தளங்களில் ஒன்றான தட்ஸ்தமிழ் இணையத் தளத்தில் சர்வதேச நினைவு தினங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். இவரின் இந்த ஆக்கங்கள் சர்வதேச ரீதியில் பல இணையத்தளங்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் ஏற்பட்டு வரும் நவீனமாற்றங்களுக்கேற்ப இவர் இலத்திரனியல் ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருப்பது குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஓர் அம்சமாகும்.

மாணவப் பிராயத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை 'அரியணை ஏறிய அரசமரம்" எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ம் தேதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம், தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும், ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

இவரின் இலக்கிய சேவையைக் கருத்திற் கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்த 'தடாகம்" எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர்- டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. அதேநேரம், இலங்கையிலிருந்து நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான 'மல்லிகை" 2005 மார்ச் இதழிலும், மற்றொரு இலக்கிய சஞ்சிகையான 'ஞானம்" தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளன. மேலும், கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் 'சமாதானம்" இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும், இந்தியாவிலிருந்து வெளிவரும் 'ஏழைதாசன்" (இதழ் எண்:159) 2008 மே இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கி வெளிவந்துள்ளன.

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 11.11.1979ம் தேதி “தேவைகள்" எனும் தலைப்பில் வெளிவந்தது. முதல் புத்தகம் வெளிவந்து சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவுறும்போது 11.11.2008ல் இவரது 150வது புத்தகமான “இவர்கள் நம்மவர்கள் - தொகுதி 04" வெளிவந்துள்ளது. இவரது வெளியீட்டுப் பணியகமான சிந்தனைவட்டத்தின் மூலம் இதுவரை 300 தமிழ்மொழி மூலமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் யுத்த சூழ்நிலைகள் காணப்படும் இந்நேரத்தில் ஒரு தனிப்பட்ட எழுத்தாளன் சுயமாக 150 தமிழ்மொழி மூலமான புத்தகங்களை எழுதி வெளியிடுவது என்பது ஒரு சாதனையே. இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் கீழே இடம்பெறுகின்றது.

கேள்வி: எழுத்துத்துறையில் நீங்கள் எவ்வாறு அறிமுகமானீர்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?

பதில்: நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் (1974/1975) இளங்கதிர், இளங்காற்று, இளந்தென்றல் ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து செயற்பட்டுள்ளேன். அதனால் ஏற்பட்ட ஆர்வம் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்ற உணர்வினை என்னுள் ஏற்படுத்தியது. கையெழுத்து சஞ்சிகைகளில் எழுதி வந்த எனது எழுத்துக்கள் 1976ம் ஆண்டு தேசிய பத்திரிகையான தினகரனில் பிரசுரமாகின. அதையடுத்து ஏனைய தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி என்ற அடிப்படையில் என் எழுத்தை பரவலாக்கிக் கொண்டேன்.

கேள்வி: தங்கள் முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்ததைப் பற்றி...

பதில்: எனது முதலாவது சிறுகதைத் தொகுதி 11.11.1979ம் தேதி வெளிவந்தது. இத்தொகுதியின் தலைப்பு “தேவைகள்". இத்தொகுதியில் 14 சிறுகதைகள் இடம்பெற்றன. அக்கதைகளுள் அதிகமான கதைகள் தினகரனிலும், தினகரன் வாரமஞ்சரியிலும் பிரசுரமானவையாகும். இதனை எனது சொந்தக் கிராமத்துக்கு அண்மையில் கட்டுகஸ்தோட்டை எனும் நகரை மையமாகக் கொண்டு இயங்கிய “இஸ்லாமிய சேமநல சங்கம்" எனும் சமூக சேவையமைப்பு வெளியிட்டது. எனது பத்தொன்பதாவது பிறந்த தினத்தன்று இப்புத்தகம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கேள்வி: படைப்பிலக்கிய முயற்சிகளில் தங்களின் பங்களிப்புகள் பற்றி குறிப்பிடுங்களேன்..

பதில்: ஆரம்ப காலங்களில் சிறுகதை, கவிதை, நாடகங்கள் என படைப்பிலக்கிய முயற்சிகளிலே நான் அதிகளவில் ஈடுபட்டு வந்தேன். இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியுள்ளேன். இவை இலங்கையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தில் கூட, கலைமகள், தாமரை, தீபம், தீ போன்ற இலக்கிய சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவை “தேவைகள்", “நிழலின் அருமை", “கரு", “நெருடல்கள்", “அந்த நிலை", “யாரோ எவரோ எம்மை ஆள", “இனி இதற்குப் பிறகு". ஆரம்ப காலங்களில் காதலைப் பற்றியும், மாணவப்பராயத்து உணர்வுகள் பற்றியும் எழுதிவந்த நான் பிற்காலத்தில் நான் வாழும் சமூகத்தைப் பற்றியும், ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் பற்றியும், இலங்கையில் இன உறவுகள் பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்ப காலத்தில் என் படைப்பிலக்கியங்களில் கற்பனை வாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த போதிலும்கூட, பிற்காலத்தில் சமூக யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகமயமாக்கப்பட்ட எழுத்துகளையே முன்வைத்தேன். இதனால் பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கும் ஆளானேன். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் சமூக யதார்த்தங்களை முன்வைக்கச் சென்று பலவிதமான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட பல அனுபவங்கள் எனக்குண்டு.

கேள்வி: சிறுகதைத் துறையைப் போல நாவல் துறையில் நீங்கள் அதிக ஈடுபாடு காட்டாமைக்கான காரணம் என்ன?

பதில்: நியாயமான கேள்வி. 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியபோதிலும்கூட, இதுவரை ஒரேயொரு நாவலை மாத்திரமே எழுதி வெளியிட்டுள்ளேன். 1983ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாவலின் பெயர் “அடிவானத்து ஒளிர்வுகள்" என்பதாகும். நாவலை எழுதிய பின்பு அதனை பிரசுரத்துக்காக வேண்டி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அந்த நாவல் நிராகரிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தமட்டில் 1980களில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் நாவல்களை மாத்திரமே இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் பிரசுரித்து வந்தனர். நாவல் துறையில் அறிமுக நாவலாகக் காணப்பட்ட என்னுடைய நாவலை வாசித்துக்கூடப் பார்க்காமல் நிராகரிக்கப்பட்டதையடுத்து உண்மையிலேயே பாரிய மனத் தாங்கலுக்கு உட்பட்டேன். பின்பு 1987ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் “அல்-பாஸி பப்ளிகேஷன்" அந்த நாவலை நூலுருப்படுத்தி வெளியிட்டது. இதற்கு பக்கதுணையாக கல்ஹின்னை தமிழ்மன்ற ஸ்தாபகர் எஸ்.எம். ஹனிபா அவர்கள் இருந்தார்கள்.

“அடிவானத்து ஒளிர்வுகள்" நாவல் மூலமாக இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை நான் எடுத்துக் காட்டினேன். இந்த நாவல் எழுதும் காலகட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கென அரசியல் கட்சியொன்றிருக்கவில்லை. மறுபுறமாக இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டங்களில் இலங்கையில் வடபகுதியில் தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக ஆரம்பித்த கால கட்டமாகவும் இருந்தது. எனவே, இந்த நாவலினூடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப்பெற அதிகாரப் பகிர்வு முறை முன்வைக்கப்பட வேண்டுமென்பதையும், முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வேண்டி தனியொரு அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி எழுதினேன். நாவல் வெளிவந்த பிறகு இலக்கிய உலகிலும், அரசியல் உலகிலும் என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான ஒரு தனிக்கட்சியாக 1987ம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதன் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும், அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சுந்திரமூர்த்தி அபூபக்கர் அவர்களும் என் நாவலைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்து பாராட்டினர். இந்நாவலில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாகாண அலகுகள் பொருத்தமானது என்பதை நான் 1983ம் ஆண்டில் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் அரசியலமைப்பின் 13ம் திருத்தப் பிரகாரம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளையும் வைத்து அரசியல் தளத்தில் கூட என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது. இந்நாவலின் இரண்டாவது பதிப்பு சிந்தனைவட்டத்தின் வெளியீடாக வெளிவந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் விற்பனையாகி முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நாவல் பிற்காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில பேராசிரியர்களால் ஆய்வுசெய்யப்பட்டதுடன், இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இருப்பினும், எனது தனிப்பட்ட வாழ்வில் தொழில் நிமித்தமாக எனக்கு ஏற்பட்ட நேரநெருக்கடிகளும், தனிப்பட்ட சில பிரச்சினைகளும் நாவல் துறையில் ஈடுபடக்கூடிய அவகாசத்தை குறைத்தது. அன்று முஸ்லிம்களுக்குத் தனிக்கட்சியொன்று அவசியம் என்று இலக்கிய வடிவமாக நான் முன்வைத்த கருத்தையிட்டு இன்று மனவேதனைப் படுகின்றேன். இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கென 12 அரசியல் கட்சிகள் உள்ளன. இதுவே ஒரு சாபக்கேடாகவும் அமைந்து விட்டது. குறிப்பாக ஒரு அரசியல் தலைமைத்துவமில்லாத நிலைக்கு இலங்கை முஸ்லிம்களை மாற்றிவிட்டது. எனவே, எதிர்காலத்தில் “அடிவானத்து ஒளிர்வுகள் பாகம் 02" ஐ எழுதும் எண்ணம் உண்டு. அதில் அன்று அரசியல் ரீதியாக என்னால் கூறப்பட்ட எதிர்வுகூறல்களை இன்றைய சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி அக்கதையைத் தொடுப்பது என் எதிர்பார்க்கையாகும்.

நன்றி: ஞாயிறு தினக்குரல் (இலங்கை)

தொடர்ச்சிதொடர்ச்சி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X