For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக பொம்மலாட்ட தினம்

By Siva
Google Oneindia Tamil News

Puppet Festival
- புனியமீன்

உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம் என்பது பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் ஒருவித கலையாகும். இது 'கூத்து' வகையைச் சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப் புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப்பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.

தென்னிந்தியாவில் மரபுவழியாக வளர்ச்சியடைந்த இக்கலை பின்னர் இலங்கை, ஜாவா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பொம்மலாட்டக்கலையில் சீன, மலேசிய, ஜப்பானிய நாடுகளின் பாதிப்புகளும் 20வது நூற்றாண்டு காலத்தில் ஜெர்மனி, இத்தாலி, செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகளின் பாதிப்புகளும் காணப்பட்டிருப்பினும் கூட பாரம்பரிய பொம்மலாட்டக் கலை தென்னிந்திய குறிகளுடனே இன்னும் நடைப்பெற்று வருவதை அவதானிக்கலாம்.

தமிழ்நாட்டில் பொம்மலாட்டம், ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் சூத்ரதா கொம்பயேட்டா எனவும், ஒரிசாவில் கோபலீலா எனவும், மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும், அசாமில் புதலா நாச் எனவும், ராஜஸ்தானில் காத்புட்லி எனவும், மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி பஹுல்யா எனவும் அழைக்கப்படுகின்றது. பொம்மலாட்டம் என்பதை ஆங்கிலத்தில் ‘Puppet’ என அழைக்கப்படுவதோடு இலங்கையில் ‘ரூகட’ என அழைக்கப்படுகின்றது. சிங்கள மொழியில் ரூகட என்பது அறை உருவம் என்று விளங்குவதோடு உருவத்தின் மீதி அறைக்கான பங்களிப்பை பொம்மலாட்ட கலைஞனால் வழங்கப்படும். பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். தற்போது அரசியல் விஷயங்களும் முக்கியம் பெறுகின்றன.

பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை பெரும்பாலும் முள் முருங்கை மரத்தில் இருந்து செய்கிறார்கள். இந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்துப் பின் உலர வைத்து தலை, கால், கை என பொம்மையின் உருவங்களை தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள். இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும். இந்த பொம்மைகள் 45 செ.மீ. முதல் 90 செ.மீ. வரை உயரமுடையதாக இருக்கும்.

பல வகையான பொம்மைகளைக் காணலாம். இதனை உற்பத்தி செய்கின்ற பொருள் மற்றும் பொம்மையை இயக்குகின்ற முறைக்கமைய பொம்மைகள் வகைப்படுத்தப்படும். நூல் பொம்மை, கோள் பொம்மை, நிழல் பொம்மை, கைபொம்மை, விரல் பொம்மை என்றும், தோற்றத்தின்படி இருகோண, முக்கோண வடிவத்தில் நிர்மாணிக்கப்படும். பொம்மைகளின் படைப்பாளர்களின் திறமைக்கேற்றப்படி பொம்மை வகைகளை நிர்மாணிக்கின்றபோது அதில் ஒரு நிலையான தரத்தை காணலாம்.

உடல் உறுப்புகளின் அசையக்கூடிய இடங்களை பெரும்பாலும் மாதிரிக்கமைவாகவே நிர்மாணித்து அவற்றிற்கு துணி மணிகளை அணியவைத்து இயக்கும் பலகைகளில் பொருத்திக்கொள்ளப்படும். ஒவ்வொரு பாத்திரங்களின் தராதரம், தகைமைக்கு அமைய அந்தந்த கலைஞனால் தொடர்புப்பட்ட பொம்மையை நடிக்க வைக்கின்றபோது பொம்மலாட்ட கலையின் ஒப்பனை, ஒலி அமைப்பு, உரை, இசை, மேடை அலங்காரம் எனும் மேலும் பல துறைகள் ஒன்றிணைவதை காணலாம்.

ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்தலுக்கு பயன்படுத்தப்படும். தற்போது சிலர் எலக்ட்ரானிக்ஸ் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபு ரீதியாக இந்த கலை நிகழ்த்தப்படும். தென்னிந்தியாவில் எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில் கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபாகப் பேணப்படுகின்றது.

அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்புறத்தில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும். பொம்மலாட்டத்தில் பொதுவாக 9 கலைஞர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்குவார்கள். மற்ற 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார்.

இலங்கையில் பொம்மலாட்டக் கலை ஒரு நாட்டுப்புற கலையாக ஆரம்ப காலத்தில் இருந்து வந்துள்ளது. ஆயினும் இது ஒரு நாடகக் கலையாக பிரபல்யமடைந்தமை சுமார் இதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரென கருதப்படுகின்றது. இந்திய பொம்மலாட்ட நாடகத்தின் பாதிப்பு காரணமாக இக்கலை இந்நாட்டுக்கு கிடைத்திருப்பதோடு நாடகம் எனும் நாடக கலைக்கு பின்னர் பிரபல்யம் அடைந்திருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

இலங்கையின் பாரம்பரிய பொம்மலாட்டக் கலை அம்பலாங்கொடை மற்றும் பலபிட்டியா பிரதேசங்களில் இன்றும் பரலவாக காணக் கிடைப்பதோடு இப்பிரதேசங்களின் முன்னோடியான பொம்மலாட்ட வித்துவனாக கந்தெகொட பிரதேசத்தில் வாழ்ந்து வந்த திரு. பொடிசிரினா என்ற கலைஞரே கருதப்படுகின்றார். இவரது பிற்கால சந்ததியினர் சார்ந்த பல குடும்பங்கள் தற்போதும் இப்பாரம்பரிய பொம்மலாட்ட கலையை ஆடி வருகின்றனர். இக்குடும்பங்களைச் சார்ந்த உறவினர்கள் இலங்கையில் பல பாகங்களிலும் குடியேறியதனால் கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களிலும் இக்கலை காணக்கூடியதாக உள்ளது.

இந்நாட்டில் பாரம்பரியமற்ற பொம்மலாட்ட கலை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆசிய மற்றும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் பாதிப்பிற்கு உட்படடிருந்தது. பல்கலைக்கழக அறிஞர்களின் ஒத்துழைப்பு கிடைத்ததினால் இத்துறை பல நவீன பரிணாமங்களை இன்று அடைந்துள்ளது. அனைவரும் ஒன்றாக ரசிக்கக் கூடிய ஒரு கலை துறையான பொம்மலாட்ட நாடகக் கலையை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்குவது கலைஞர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

English summary
World puppetry day is celebrated on march 21. Puppetry is a form of theatre in which the artists manipulate the puppets. The art which originated 3,000 years ago is performed in various parts of Sri Lanka even today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X