குழந்தை நீதி கதைகள்: தாகத்தை தீர்த்த பிரபுவிற்கு கிடைத்தது என்ன தெரியுமா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எல்லோரும் என்ன பண்றீங்க. தீபாவளிக்காக இப்போவே தயாராகிட்டு இருக்கீங்களா? சரி உங்க வாழ்க்கையில் எந்த விஷயத்தை நீங்க சரியாக திட்டமிட்டு செய்து முடிச்சிருக்கீங்க? கதைக்கும் இந்த கேள்விக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இந்த கேள்வி உங்கள நீங்களே கேட்டு பாருங்க. சரி இப்போ வாங்க கதைக்கு போகலாம்.

வெயில் கொளுத்தும் பாதை சுட்டெரிக்க ஒரு வயதானவர் நடக்க முடியாமல், சோர்வாகி விழும் நிலையில் அவர் கண்களுக்கு ஒரு பெஞ்ச் தெரிந்தது. அவரிடம் இருந்த மொத்த வலுவையும் கொண்டு அந்த பெஞ்சில் அமர்ந்தார். அந்த ஊரில் மழை என்பது பொழிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் வெயிலின் தாக்கம் அந்த ஊரில் மிகவும் அதிகம். தூரத்தில் ஒரு குளத்தில் மட்டுமே நீர் இருந்தது. மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு நடந்து சென்று நீர் எடுத்து வருவார்கள்.
சரி அந்த வயதானவர் வந்து அமர்ந்த இடம் பிரபுவின் சிறிய கடை. அவரால் நிமிர்ந்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சோர்வாகி இருந்தார். பிரபு வித்தியாசமாக ஒருவர் அமர்ந்திருந்ததை கண்டு அருகில் வந்தான். அவர் வாயில் இருந்து தண்ணீர் என்ற வார்த்தை மட்டும் கேட்டது. பிரபு உடனடியாக அவன் வைத்திருந்த பானையில் இருந்த தண்ணீரை ஒரு டம்பளரில் கொடுத்தான். அவருக்கு தாகம் தீரவில்லை. டம்பளரில் குடித்த நீரின் தெம்பில் அவன் கடைக்கு சென்று அந்த பானை தண்ணீரை மொத்தமாக குடித்தார்.
பிரபுவின் அன்றைய மொத்த தண்ணீரும் அந்த பானைதான். அதுவும் தற்போது காலியாகிவிட்டது. பிரபு அவரை கடிந்து கொள்ளாமல் கனிவுடன் தாகம் தீர்ந்ததா அய்யா என்றான். அவரும் புன் முறுவலுடன் உன் கனிவான இந்த நடவடிக்கைக்காக உன்னை ஆசிர்வதிக்கிறேன். உன்னை எல்லாரும் ஆசிர்வதிப்பார்கள் இந்த பழக்கத்தை விட்டு விடாதே என்றார். அங்கிருந்து நடந்து அவன் கண்ணை விட்டு மறைந்தார்.
கொஞ்ச நேரம் கழித்து பிரபுவிற்கு பயங்கரமாக தாகம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அவன் மண்டையை பிளக்க பானையில் ஒரு சொட்டு தண்ணீராவது இருக்காதா? என எண்ணி பானையை தூக்கி கொட்டினான். பானையில் மொத்தமாக இருந்த தண்ணீர் அவன் முகம் வாய் என கொட்டியது. அவன் தலைவலியும் போக தாகமும் அடங்க, தண்ணீரின் ருசி முன்பை விட மிகவும் அருமையாக இருந்தது.
அவன் அதிர்ச்சி மீளாமல் இருந்தான். அப்போது ரஹீம் முன்பொரு விபத்தில் நடக்க முடியாமல் போனவன், பிரபுவின் கடைக்கு வந்தான். அவன் கடையில் பருப்பு மற்றும் அரிசி வாங்கி கொண்டிருக்கும்போது தாகம் எடுக்க பிரபுவிடம் தண்ணீர் கேட்டான். பிரபு அவன் கொடுத்த லிஸ்டில் இருந்த பொருட்களை எடுத்து வைத்து கொண்டே பானையில் தண்ணீர் இல்லை என்பதை எப்படி சொல்வது என யோசித்து கொண்டே நீங்களே எடுத்து குடித்து கொள்ளுங்கள் என்றான்.
ரஹீம் அவன் ஊன்றுகோலின் உதவியுடன் பானையை நோக்கி நடந்து வந்து குடித்தான். குடித்தவன் ஊன்றுகோலை கீழே போட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தான். அந்த நீரை பருகியதால் தான் இந்த மாதிரி குணமாகியதாக பிரபுவிடம் கூறிவிட்டு அவனது பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றான். பிரபுவிற்கு இன்னும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் அவன் அந்த வயதானவரால் தான் என எண்ணினான்.
ரஹீம் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினான். அவனது தங்கைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. உடனடியாக அவளை பிரபுவின் கடைக்கு அழைத்து சென்றான் பானையில் இருந்து தண்ணீரை எடுத்து அவன் தங்கைக்கு கொடுத்தான். அவளும் உடனடியாக சரி ஆனாள். இதை பார்த்ததும் பிரபு மகிழ்ந்தான். பதிலுக்கு அவர்களிடம் இருந்து அவன் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த விஷயம் ஊருக்குள் காட்டு தீயை போல பரவியது.

ஊரில் உள்ள நோயாளிகள் அனைவரும் பிரபுவின் கடைக்கு வந்து அந்த நீரை குடித்தனர். ஒவ்வொரு நாளும் அந்த பானையில் நீர் நிரம்பியது. பிரபுவின் கடைக்கு அருகில் உள்ள ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்தனர். அவர்கள் மகிழ்வாக திரும்பி செல்வதை பார்த்த பிரபு மனதிற்குள் இந்த மக்களுக்கு தன்னால் முடிந்தது என சந்தோஷப்பட்டான். பிரபுவை பலரும் ஆசிர்வதித்து சென்றார்கள். அப்போதுதான் அந்த வயதானவர் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications