தமிழகத்தில் இன்று
ராமேஸ்வரம்:
இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் மண்டபம் அகதிகளிடம் சில ஏஜென்டுகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் தொடர்ந்து வந்தவண்ணமிருக்க, மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த நான்குபேர் கள்ளத்தனமாகஇலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்தபொழுது பிடிபட்டனர்.
அகதிகளான, ராமச்சந்திரன், ராமஜெயரத்தினம், ஹமீம், ராதிகா ஆகிய நான்கு பேரும்முகாமில் உள்ள ஏஜண்ட் செபஸ்தியான் என்பவரை அணுகியுள்ளனர்.அவரிடம் இலங்கையில் சண்டை நடந்தாலும் கூட தங்களது உறவினர்களை பார்க்க யாழ்ப்பாணம் செல்லவேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு செபஸ்தியான்,ஒருவருக்கு 5000 ரூபாய் செலவாகும் என்று பேரம் பேசியுள்ளார்.
அப்போது அவர்களுடன் ராமேஸ்வரம் வேர்கோட்டையைச் சேர்ந்த நாதன். கணேசன் ஆகிய இருவரும் இருந்துள்ளனர். அகதிகள் 4 பேரும் பேசியபடிஇருபதாயிரம் ரூபாய் ஏஜென்டிடம் கொடுத்துவிட்டு காத்திருந்தனர். ஏஜன்ட் அவர்களை, இரவு 12 மணிக்கு மண்டபம் முகாமில் இருந்து அழைத்து வந்துராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகில் ஏற்றிவிட்டுச் சென்றுவிட்டார் செபஸ்தியான்.
அதிகாலை மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்கள் படகுக்கு வந்தபொழுது அங்கு அகதிகள் 4 பேரும் இருந்துள்ளனர். அகதிகளை விசாரித்த மீனவர் சங்க தலைவர்போஸ் மற்றும் அந்தோனி ஆகியோர், அவர்களை ராமேஸ்வரம் கோயில் போலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை விசாரித்த ராமேஸ்வரம்டி.எஸ்.பி.ரவீந்திரன் மறுபடியும் அவர்களை மண்டபம் முகாம்கே திருப்பி அனுப்பிவிட்டார்.
முகாமில் உள்ள அகதிகள் இவ்வாறு ரகசியமாக இலங்கை செல்வதும் அல்லது பணம் வசூலிக்கப்பட்டு பின்னர் ஏமாற்றப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகின்றன. ஆனால் முகாமில் உள்ள இந்த ஏஜென்ட்கள் மீதும், கள்ளத்தனமாக படகில் ஏற்றிவிடும் அவர்களது கூட்டாளிகள் மீதும் இதுவரைஎந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை.
மண்டபம் முகாமில் 24 மணிநேர தீவிர கண்காணிப்பு உள்ளதாகவும், பத்திரிகையாளர்கள் உள்பட வெளிநபர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்று கூறும்அதிகாரிகள், பேரம் பேசி ஆட்களை கடத்தி அனுப்பும் ஏஜென்ட்களை கண்டுகொள்ளாததின் பின்னனி என்னவென்று தெரியவில்லை.
மண்டபம் முகாம் அதிகாரிகளும், போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் அகதிகள் விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தாதவரை இலங்கை,இந்தியா இடையிலான முகைறயற்ற ஊடுருவல்களையும், விரும்பத்தகாத சம்பவங்களையும் தடுக்கமுடியாது.