உத்தரப்பிரதேசத்தில் நிலச் சரிவுக்கு 35 பேர் பலி
டெராடூன்:
கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் 35 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள நைனிடால் மற்றும் பிடோராகார் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கிக் கிடப்பதுடன், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பிடோராகார் மாவட்டத்தில்நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 பேர் இறந்தனர்.
நைனிடால் மாவட்டத்தில் ஜீப்பில் சென்று கொண்டிருந்த 5 பேர் சாலைமுழுவதும் பல அடி உயரத்துக்கு தேங்கிக் கிடந்த வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர்.
போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
நைனிடால், அல்மோர், பகேஷ்வர், சாம்பாவாட் பகுதிகளில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஆகஸ்ட் 9 ம் தேதி கடும் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.