டான்சி வழக்கு: ஜெ., சசிக்கு நோட்டீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் டான்சி நிறுவன முன்னாள் நிர்வாகஇயக்குநர் சீனிவாசன் ஆகியோருக்கு சென்னை உயர் நீதி மன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

டான்சி வழக்கில், அரசு சொத்தை அரசு ஊழியர்கள் வாங்கும் சட்டப்பிரிவின்படி ஜெயலலிதா, சசிகலா, சீனிவாசன் ஆகியோரை விடுதலை செய்ததை எதிர்த்து,சிபிசிஐடியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து இந்த நோட்டீசை சென்னை உயர் நீதி மன்றம் இவர்களுக்கு அனுப்பியுள்ளது.

இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் பாஷா கதிரி, டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் விடுதலையடைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா,சசிகலா, சீனிவாசன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இந்த நோட்டீசுக்கு 8 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா முன்னாள் டான்சி நிர்வாக இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்ட 6 பேருக்கும் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதித்து தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் தீர்ப்பளித்தார்.

சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக டான்சி வாங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப் தவிர மற்ற 5 பேருக்கும் 2 ஆண்டுகடுங்காவல் தண்டைனையும் வழங்கப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளிலும் இந்திய தண்டனைச் சட்டம் 169-வது (அரசு ஊழியர் அரசு சொத்தை வாங்குவதற்கு தடை) பிரிவின் கீழ் இருந்தகுற்றச்சாட்டிலிருந்து ஜெயலலிதாவும், இந்திய தண்டனைச் சட்டம் 109-ன் கீழ் (குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்) சசிகலாவும், வழக்கில்தொடர்புடைய இன்னொருவர் சீனிவாசனும் விடுவிக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து சிபிசிஐடியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவில் டான்சி வழக்கில் ஜெயலலிதா,சசிகலா மற்றும் சீனிவாசனை விடுதலை செய்தது தவறு. அவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

டான்சி வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 409-வது பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா 169 பிரிவின் கீழும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.அந்த சட்டப்பிரிவின் கீழ் ஜெயலலிதாவை விடுவித்ததற்கு நீதிபதி கூறிய காரணங்கள் வலுவில்லாததாக இருக்கிறது.

அரசு சொத்தை ஜெயலலிதா வாங்கியதற்கு மற்றவர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் அரசு சொத்தை வாங்குவதற்கு தடைவிதிக்கும் 169-வது சட்டப்பிரிவு இந்த வழக்குக்கு பொருந்தும்.

இதை நீதிமன்றம் கவனிக்கவில்லை. எனவே 169 பிரிவின் கீழ் ஜெயலலிதாவை விடுதலை செய்ததும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக 109பிரிவின் கீழ் சசிகலாவையும், சீனிவாசனையும் விடுவித்தது செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற