சாப்ட்வேர்: சீனாவின் போட்டியை சமாளிக்குமா இந்தியா?
பெங்களூர்:
சாப்ட்வேர் தொழிலில் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு சீனா மிகப் பெரிய சவாலாக விளங்கப் போகிறது என மத்திய அரசின்தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் ஆர்.ஆர். ஷா கூறினார்.
பெங்களூரில் நடந்து வரும் ஐ.டி.காம் மாநாட்டில் இன்று உரையாற்றிய அவர், சீனாவை நாம் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. சாப்ட்வேர் துறையில் நாம் மிக வேகமாக முன்னேறினால் மட்டுமே சீனாவின் போட்டியை சமாளிக்க முடியும்.
சீனாவின் ஹார்ட்வேர் உற்பத்தி இந்தியாவை விட 6 மடங்கு அதிகம். சாப்ட்வேர் துறையிலும் சீனா மிக அசுர வேகத்தில்முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆங்கில அறிவு தான் அவர்ளுக்கு இடைஞ்சலாக இருந்து வருகிறது.
இதனால் இப்போது ஆங்கிலத்தை போதிப்பதில் சீனா அதிக அக்கறை எடுத்துள்ளது. அதையும் மிக வேகமாக செயல்படுத்திவருவதை சமீபத்தில் பெய்ஜிங் சென்றிருந்தபோது என்னால் நேரில் காண முடிந்தது.
VLSI (Very Large System Integration)தொழில்நுட்பம், எம்பேடெட் தொழில்நுட்பம், மைக்ரோ எலெக்ட்ரானிக், நேனோஎலெக்ட்ரானிக், உயிரித் தொழில்நுட்பம், உயிர் கணியியல் ஆகியவற்றில் நாம் மிக வேகமான வளர்ச்சியை எட்டியாகவேண்டும்.
ஆண்டுதோறும் நாம் குறைந்தபட்சம் 3,000 VLSI டிசைன்களை உருவாக்கியாக வேண்டும்.
அதே போல வெளிநாட்டு சாப்ட்வேர் ஆர்டர்களைப் பெற இரண்டு மூன்று இந்திய நிறுவனங்கள் இணைந்து கூட்டாகசெயல்படலாம். இதனால் அனாவசியப் போட்டியைத் தவிர்ப்பதோடு வேறு நாட்டு நிறுவனங்களுக்கு அந்த ஆர்டர்கள் போய்ச்சேருவதைத் தடுக்க முடியும்.
அதே மாதிரி வெளிநாடுகளில் உள்ள சிறிய சாப்ட்வேர் நிறுவனங்களை இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் வாங்கவேண்டும். இதன் மூலம் வெளிநாடுகளில் வர்த்தக உறவை வலுப்படுத்த முடியும் என்றார்.
விப்ரோ- மைக்ரோசாப்ட் லேப்:
இதற்கிடையே விப்ரோ நிறுவனமும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்து பெங்களூரில் டாட் நெட் தொழிற் கூடத்தை (Microsoft Advanced Competency Centre- MACC for .NET) அமைத்துள்ளன. இன்று துவக்கப்பட்ட இந்ததொழிற்கூடத்தில் ஆண்டுதோறும் 100 சாப்ட்வேர் நிபுணர்களுக்கு டாட் நெட் தொழிநுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த ஆண்டில் விப்ரோவைச் சேர்ந்த 100 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள விப்ரோ மிதவை கல்வி மையத்தில் இந்தக் கல்விக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
-->


