""ஹிந்து என்றால் திருடன்"": கருணாநிதி மீது எப்.ஐ.ஆர். பதிவு
சென்னை:
"ஹிந்து என்றால் திருடன்" என்று பேசிய திமுக தலைவர் கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யும் படி சென்னைநீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக எழும்பூர் போலீசார் முதல் தகவல் அறிக்கையை(எப்.ஐ.ஆர்.) பதிவு செய்தனர்.
தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை அமைப்புகள்கடந்த அக்டோபர் 24ம் தேதி போராட்டம் நடத்தி சென்னையில் பொதுக் கூட்டம் ஒன்றையும் நடத்தின.
இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, ஒரு ஹிந்தி அகராதியில் "ஹிந்து" என்றால்"திருடன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.மத்தியில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.கவும் அவருடைய பேச்சைக் கண்டித்தது.
மேலும் இது தொடர்பாக கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை-மாம்பலம் மற்றும் எழும்பூர்போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான பாலசுப்பிரமணியம் என்பவர் சமீபத்தில் எழும்பூர் 14வதுபெருநகர நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
"ஹிந்து என்றால் திருடன்" என்று பேசிய கருணாநிதி ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டார் என்றும் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி பரசுராஜ், இது தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எழும்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கருணாநிதி மீது எழும்பூர் போலீசார் எப்.ஐ.ஆர். ஒன்றைப் பதிவு செய்தனர்.
-->


