குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ.10 ஆக்க வேண்டுமாம்!
சென்னை:
குறைந்தபட்ச ஆட்டோக் கட்டணத்தை ரூ.10 ஆக நிர்ணயிக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆட்டோ டிரைவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக குட்வில் ஆட்டோ டிரைவர்கள் சங்கத் தலைவர் கே. குமார் முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில்,கடந்த பல ஆண்டுகளாகவே ஆட்டோக்களில் குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்படாமலேயே உள்ளது.
தற்போது குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.7 உள்ளது. இதை மாற்றி குறைந்த கட்டணமாக ரூ.10 வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.
ஆட்டோ டிரைவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர் போலீஸார். இதுபோல பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று அந்தக் கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் கூறினாலும், சென்னை நகரில் மீட்டர் போடுவதையே ஆட்டோ டிரைவர்கள் மறந்து விட்டார்கள்.
மீட்டர் போட்டாலும் அது தாறுமாறாக ஓடுவதால் பொதுமக்களும் மீட்டர் போடும் ஆட்டோக்களில் ஏற மறுத்து வருகிரார்கள். பேரம் பேசியே பொதுமக்கள் ஆட்டோவில் செல்லும் நிலை தான் தற்போது உள்ளது.
அதிலும் குறைந்தபட்சம் ரூ.15 அளவுக்கு இப்போது ஆட்டோ டிரைவர்கள் வசூலித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் போது குறைந்த பட்சக் கட்டணத்தை ரூ.10ஆக அதிகரிக்க வேண்டும் என்று இவர்கள் கோரியிருப்பது வேடிக்கையாக உள்ளது. எப்படியும் மக்களிடமிருந்து குறைந்த பட்சம் ரூ.20 வரை "கறக்க" வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும்!
-->


