ஓஸ்லோ மாநாடு: இந்திய நிலைக்கு ரணில் ஆதரவு
கொழும்பு:
சட்டப் பிரச்சனைகள் காரணமாகத் தான் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த இலங்கை தமிழர் பகுதி சீரமைப்புக்கான நிதிதிரட்டும் மாநாட்டில் இந்தியாவால் பங்கேற்க முடியவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக நடந்த விவாதத்தில் இந்தியா ஏன் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லைஎன்று எதிர்க் கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். சிங்கள தீவிரவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் எம்.பி. விமல்வீரவன்சா பேசுகையில்,
அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை. எனவே, இந்த அரசின் அமைதிப் பேச்சுவார்த்தைகளை இந்தியாஅங்கீகரிக்கவில்லை என்பது தான் உண்மை என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில், இந்தியாவின் சார்பில் தூதர் ஒருவரும் பங்கேற்றார். (மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியில்பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த இந்திய அதிகாரி) ஆனால், இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பதால் அவர்கள் பங்கேற்ற மாநாட்டில் அந்த நாட்டினால் கலந்து கொள்ள முடியவில்லை. இது சட்டரீதியில்பிரச்சனைய உருவாக்கும்.
அதே நேரத்தில் புலிகளைத் தடை செய்துள்ள அமெரிக்காவும் இங்கிலாந்தும் அதையும் மீறிக் கலந்து கொண்டன.
ஓஸ்லோவின் நடந்த மாநாட்டில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து இந்தியாவுக்கு விளக்க அமைச்சர் மிலிந்த மொரகொடா இன்றுடெல்லி செல்கிறார் என்றார் ரணில் விக்கிரமசிங்கே.
இந்தியாவுக்கு பாராட்டு:
இதற்கிடையே இலங்கையின் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தி வரும் ஜி.எல். பெரிஸ் கூறுகையில்,
ஓஸ்லோ மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவில்லை. அதில் கலந்து கொள்ளாததால் அமைதி முயற்சிகளை இந்தியா எதிர்ப்பதாகஅர்த்தமாகாது. ஓஸ்லோவில் அனைத்து நாடுகளும் சேர்ந்து தரச் சம்மதித்துள்ள நிதியை விட அதிக நிதியை இலங்கைக்கு இந்தியாதந்துள்ளது. தந்து வருகிறது என்றார்.


