கைது முயற்சி: சங்கராச்சாரியார் மீது திருமாவளவன் கடும் புகார்
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியார் தூண்டிவிட்டதால் தான் என்னைக் கைது செய்து அவமானப்படுத்த முதல்வர் ஜெயலலிதா முயல்கிறார்என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளன் கூறியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் பதிவான ஒரு வழக்கில் இவரை திடீரென இப்போது கைது செய்ய அதிமுக அரசு முயன்றது. இதையடுத்துஎழும்பூர் நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜரானார். அவரை இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து திருமாவளன், கிருஷ்ணப் பறையனார் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் 4 முக்கிய பிரமுகர்கள் இன்றுநீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து வழக்கை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி முனிரத்தினம்அறிவித்தார்.
இதன் பின்னர் வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் பேசுகையில்,
நான் எந்த வழக்கைக் கண்டும் ஓடி ஒளிய மாட்டேன். ஆனால், 5 ஆண்டுக்கு முன் பதிவான வழக்கில் என் பெயரையும்வேண்டுமென்றே சேர்த்து பழிவாங்க அதிமுக அரசு முயல்கிறது. இதன் பின்னணியில் இருப்பது சங்கராச்சாரியார் தான்.
அதிலும் ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சும்மா இருந்த அதிமுக அரசு திடீரென இப்போது என்னைக் கைது செய்யமுயற்சிப்பது ஏன்?. மதவெறியைத் தூண்டும் இந்துத்துவாவை நான தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்திருப்பதால் தலித்களை ஒடுக்கச்சொல்லி ஜெயலலிதாவுக்கு சங்கராச்சாரியார் உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் மனுதர்மத்தின் அடிப்படையில் அமைந்த இந்துப் பெயர்களை நீக்கிவிட்டு தூய தமிழ்ப் பெயர்களை நான் தலித்களுக்குசூட்ட ஆரம்பித்திருப்பதால் சங்கராச்சாரியாருக்கு என் மீது ஆத்திரம் வந்திருக்கிறது. அவர் தூண்டிவிட்டதால் தான் இந்தக் கைதுமுயற்சி நடக்கிறது.
இதனால் தான் என் மீது ஜெயலலிதா பொய் வழக்குப் போட்டிருக்கிறார்.
என் மீது வழக்குப் போட்டது கூட பரவாயில்லை. ஆனால், என்னை இரண்டு நாட்களாக போலீசார் தொடர்ந்து வந்துவிட்டு நான்தலைமறைவாகிவிட்டதாக பொய் சொன்னது தான் மிகவும் மன வருத்தம் தருகிறது.
நான் இந்த வழக்கு மட்டுமல்ல, எந்த வழக்கையும் கண்டு ஓடி ஒளிய மாட்டேன். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றஒரே காரணத்துக்காகத் தான் இந்த வழக்கைப் போட்டுள்ளது அதிமுக அரசு. நான் எதையும் சந்திக்கத் தயார் என்றார்.
-->


