பரிதிக்கு ஜாமீன் கிடைத்தது: இன்றே விடுதலையாகிறார்
சென்னை:
தமிழக அரசு அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதிக்குசென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது.
கடந்த 30ம் தேதி தமிழக சட்டசபையில் தமாகாகா எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் திமுக தலைவர்கருணாநிதியை சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்து பேசியபோது, அவரை நோக்கிச் சென்றார் பரிதி இளம்வழுதி.
இதையடுத்து குமாரதாஸை பரிதி தாக்க முயற்சித்ததாகவும், அவரைக் கொலை செய்து விடுவேன் என்றுமிரட்டியதாகவும் தமிழக சட்டமன்றச் செயலாளர் மூலம் போலீசாரிடம் அரசு புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் மறுநாள் நள்ளிரவில் பரிதி கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ஜாமீன் கோரி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பரிதி மனு தாக்கல் செய்தார். ஆனால், ஜாமீன் தரநீதிபதி மறுத்துவிட்டார்.
இதையடுத்து பரிதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி தினகர் அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
சொந்த ஜாமீனிலேயே பரிதியை விடுதலை செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்றே பரிதிவிடுதலையாவார்.
கருணாநிதி எச்சரிக்கை:
முன்னதாக நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பரிதி விஷயத்தில் சட்டரீதியில் நல்ல பலன் கிடைக்காவிட்டால் இதை அரசியல்ரீதியிலும்,போராட்ட ரீதியிலும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறிக் கொள்கிறேன் என்றார்.


