தமிழக வறட்சி நிலை: அலட்சியம் செய்யும் மத்திய அரசு அதிகாரிகள்
டெல்லி:
தமிழக வறட்சிப் பகுதிகளைப் பார்வையிட்ட மத்தியக் குழுவினர் டெல்லி திரும்பி 2 வாரங்களாகி விட்டநிலையிலும் இன்னும் தங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவில்லை.
தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்து விட்டதாலும் குறுவை,சம்பா சாகுபடிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இதுவரை 20 விவசாயிகள் வரை தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும்உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையைப் போக்குவதற்காக உரிய நிவாரணம் வழங்க வேண்டும்என்று ஜனவரி 13ம் தேதி பிரதமர் வாஜ்பாயிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். வறட்சிநிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ.400 கோடியும், 2 லட்சம் டன் தானியங்களையும் மத்திய அரசு ஒதுக்கவேண்டும் என்று அப்போது ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
அதன்படி மத்திய வேளாண்மைத் துறை இணைச் செயலாளர் ஆஷிஷ் பகுகுணா தலைமையில் நான்கு பேர்அடங்கிய மத்தியக் குழுவினர் தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.
சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை முதலில் பார்வையிட்ட மத்தியக் குழுவினர், பின்னர் சம்பா பயிர்கள்கருகிக் கிடந்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகியமாவட்டங்களையும் பார்வையிட்டனர்.
கடந்த ஜனவரி 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வுநடத்திய மத்தியக் குழுவினர், பின்னர் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
அப்போது மத்தியக் குழுவினரிடம் ஜெயலலிதா கூடுதல் நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்தார். ரூ.2,027.53கோடி நிதியும், 9 லட்சம் டன் தானியங்களும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தஜெயலலிதா, அது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் மத்தியக் குழுவினரிடம் சமர்ப்பித்தார்.
இதையடுத்து மறுநாளே மத்திய அரசிடம் தமிழக வறட்சி நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்வோம் என்றுகூறி மத்தியக் குழுவினர் டெல்லிக்குத் திரும்பினார்கள்.
ஆனால் 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மத்தியக் குழுவினர் இன்னும் தங்கள் அறிக்கையைத் தாக்கல்செய்யவில்லை. இதனால் வறட்சி நிவாரணம் தொடர்பாக நேற்று டெல்லியில் கூடிய மத்திய உயர் நிலைக் குழுவின்கூட்டத்தில், தமிழக வறட்சி நிலை குறித்து பரிசீலிக்கப்படவில்லை.
துணைப் பிரதமர் அத்வானி தலைமையில் கூடிய இந்தக் குழு, ராஜஸ்தானுக்கு 21 லட்சம் டன் கோதுமையும்,மகாராஷ்டிரத்துக்கு 1.15 லட்சம் டன் மற்றும் இமாசலப் பிரதேசத்திற்கு 75 ஆயிரம் டன் உணவு தானியங்களும்வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக வறட்சி நிலை குறித்து மத்திய அதிகாரிகள் இன்னும் அறிக்கை தாக்கல் செய்திருந்தால், தமிழகத்திற்குக்கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளும் நேற்றே அறிவிக்கப்பட்டிருக்கும்.
மத்திய வேளாண்துறை அமைச்சரான அஜித் சிங் வெளிநாட்டிற்குச் செல்லவிருப்பதால், இரண்டு வாரங்களுக்குப்பின்னரே அடுத்த உயர் நிலைக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
எனவே தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் ஒதுக்குவதற்கான அறிவிப்பே அடுத்த மாதத் துவக்கத்தில்தான்வெளியாகும் என்று தெரிகிறது.
ஏற்கனவே சம்பா பயிர்கள் கருகிப் போனதால் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகள், அதற்குஉரிய நிவாரணமும் கிடைக்காமல் தொடர்ந்து சிரமப்பட்டுக் கொண்டிருப்பது பெரும் சோகம்தான்.


