வாஜ்பாயுடன் திமுக, மதிமுக, பாமக எம்.பிக்கள் சந்திப்பு: ஜெ. மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
டெல்லி:
ஜெயலலிதா அரசு எதிர்க் கட்சிகளை பொடா சட்டத்தைக் கொண்டு பழி வாங்கி வருவதாலும்,பத்திரிக்கைகளைக் கூட பொடாவை வைத்து மிரட்டி வருவதாலும் உடனே மத்திய அரசு இதில்தலையிட வேண்டும் என்று கோரி திமுக, மதிமுக மற்றும் பாமக எம்.பிக்கள் பிரதமர் வாஜ்பாயிடம்கோரிக்கை விடுத்தனர்.
மூன்று கட்சிகளையும் சேர்ந்த எம்.பிக்கள் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் வாஜ்பாயைநேரில் சந்தித்து இது தொடர்பாக ஒரு மனுவை அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். ராணி மேரிகல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீது பொய் வழக்குகளே சுமத்தப்பட்டுள்ளன.
பொடா சட்டத்தைக் காட்டி எதிர்க் கட்சியினர் மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர்களையும்ஜெயலலிதா அடக்க முயல்கிறார். சமீபத்தில் "நக்கீரன்" பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலைதமிழக அரசு கைது செய்துள்ளது. கோபால் மீதும் பொய்யான வழக்குகளே போடப்பட்டுள்ளன.
ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி விமர்சித்து அவர் தன் பத்திரிக்கையில் எழுதிய காரணத்துக்காகவேஅவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்களைக் கைது செய்துள்ளது தமிழக அரசு.
பொடா சட்டத்தைத் தொடர்ந்து தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. கடந்த 2ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் ஜெயலலிதாவால் கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் ஜெயலலிதா தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.ஆனால் மத்திய அரசு அனைத்தையும் கண்டும் காணாமல் நடந்து கொள்வதால் நாங்கள் மிகவும்கவலை அடைந்துள்ளோம்.
தமிழகத்தில் மக்களாட்சி முழுமையாகச் சீர்குலைந்து போய் விட்டது. மக்கள் பிரச்சனை குறித்துப்பேசும் எதிர்க் கட்சிகள் தமிழக சட்டசபையிலிருந்து குண்டுக்கட்டாய் வெளியே தூக்கிஎறியப்படுகிறார்கள். இதை சபாநாயகரும் கண்டு கொள்வதே இல்லை. அவர் ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்.
அரசே இவ்வாறு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் மத்திய அரசைநாடுவதைத் தவிர தமிழக மக்களுக்கு வேறு வழியில்லை.
மேலும் தமிழகத்தில் நிதி நிலை தொடர்பான எமர்ஜென்ஸி நிலையை அறிவிக்க வேண்டி வரும் என்றுசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூட தமிழக அரசை எச்சரித்துள்ளார்.அந்த அளவுக்குத் தமிழக நிர்வாகம் சீர்குலைந்து விட்டது.
எனவே பிரதமர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தமிழக அரசின் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அம்மனுவில்கூறப்பட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் திமுக, மதிமுக மற்றும்பாமகவைச் சேர்ந்த எம்.பிக்கள் பிரதமரிடம் இந்த மனுவை சமர்ப்பித்தனர்.
இந்த மனு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அவர்களிடம் வாஜ்பாய்உறுதி அளித்துள்ளார்.
ஆளுநரிடம் விளக்கம் கேட்கிறார்...
இந் நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும், பொடா சட்ட பயன்பாடு குறித்தும், பொது மக்களின் மன நிலை குறித்தும்ஆளுநர் ராம்மோகன் ராவிடம் பிரதமர் வாஜ்பாய் அறிக்கை கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிக்கை தாக்கலான பின்னர் தமிழக அரசின் மீது ஏதாவது நடவடிக்கை வர வாய்ப்புள்ளது. ஆனால், அதை தனதுஅரசியல் வழிகாட்டி அத்வானியின் துணையுடன் முடக்கும் முயற்சிகளில் முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.


