• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டி.ஆர்.பாலு மீது ஜெ. கடும் தாக்கு: எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு

By Staff
|

சென்னை:

ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு அங்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட விடாமல் மத்திய திமுகஅமைச்சர் டி.ஆர்.பாலு தடுப்பதாக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

மேலும் பாலுவை அவர் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். இதை எதிர்த்து காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் பேச முயன்றபோது அதற்கு சபாநாயகர் காளிமுத்துஅனுமதி மறுத்தார்.

இதையடுத்து சட்டமன்றத்தில் இருந்து எதிர்க் கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன.

சட்டமன்றத்தில் ராணி மேரிக் கல்லூரி விவகாரம் தொடர்பாக அவையின் 110வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றைதாக்கல் செய்து ஜெயலலிதா பேசியதாவது:

ராணி மேரிக் கல்லூரியின் கட்டடங்கள் மிகப் பழமையாகிவிட்டன. இதனால் தான் அதை இடித்துவிட்டுகல்லூரியை வேறிடத்தில் அமைக்கவும் அந்த இடத்தில் தலைமைச் செயலகம் அமைக்கவும் முடிவு செய்தோம்.

ஆனால், அதைத் தடுக்கும் முயற்சிகளில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். ராணி மேரிக் கல்லூரியின் ஒரு பகுதியில்மேல் தளத்தில் இருந்த அறையின் கூரை 1991ம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதில் ஒரு மாணவி கீழே விழுந்துபடுகாயமடைந்தார். இதைக் கூட எதிர்க் கட்சிகள் கருத்தில் எடுத்துத் கொள்ள மறுக்கின்றன.

புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டினால் அதனால் எனக்கு புகழும் பெயரும் கிடைத்துவிடும் என்பதால் மத்தியதிமுக அமைச்சர் டி.ஆர்.பாலு அதைக் கெடுக்கப் பார்க்கிறார். கடற்கரையோரங்களில் ரூ. 5 கோடிக்கு மேல்செலவிட்டு எந்தக் கட்டடம் கட்டுவதாக இருந்தாலும் அதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும்என்று பாலு சமீபத்தில் ஒரு உத்தரவை வெளியிட்டார்.

இது தலைமைச் செயலகம் கட்டுவதைத் தடுப்பற்காகத் தான். பாலுவின் இந்த தன்னிச்சையான, ஏதேச்சதிகாரமானஉத்தரவால் நாட்டின் கடற்கரை மாநிலங்கள் அனைத்தும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால், அந்தமாநிலங்களோடு இணைந்து மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக போராடுவேன்.

இது குறித்து பிரதமர், துணைப் பிரதமர், ஜனாதிபதியுடனும் பேசுவேன். ராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் நான்தலைமைச் செயலகம் கட்டிவிடக் கூடாது என்பதற்காக பாலு கொண்டு வந்த சட்டம் ஒரு அரசியல் பழிவாங்கும்செயல்.

நான் உயிரோடு இருக்கும் வரை ராணி மேரிக் கல்லூரியை இடிக்க விட மாட்டேன் என்று பாலு பொதுக்கூட்டத்தில் பேசினார். பேசிவிட்டுப் போன கையோடு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதற்கு மத்தியஅமைச்சரவையின் அனுமதியையும் அவர் பெறவில்லை.

பாலுவின் அறிவிப்பால் சேது சமுத்திரத் திட்டம் கூட பாதிக்கப்படும். ஒரு சட்டம் கொண்டு வரும் முன் அதனால்பாதிக்கப்படும் மாநில அரசுகளுடன் பேச வேண்டும் என்ற அடிப்படை நியதியைக் கூட பாலு பின்பற்றவில்லை.

இவர் என்ன சர்வாதிகாரியா? அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுத் தான் யாராக இருந்தாலும் நடந்து கொள்ளவேண்டும். இதை மீறிய பாலுவுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.

அரசியல் சட்டத்துக்கு எதிராக, தன்னிச்சையாக இப்படி உத்தரவு பிறப்பித்த பாலு இனியும் மத்திய அமைச்சராகபதவியில் தொடர எந்த அருகதையும் இல்லை என்றார் ஜெயலலிதா.

தனது பேச்சின் ஊடே பாலுவை ஜெயலலிதா மிகக் கடுமையான சொற்களால் தாக்கினார்.

அப்போது காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் இடைமறித்தார். அவையின் விதி 110ன்கீழ் பேசும்போது அவையில் இல்லாதவர்களைத் தாக்கிப் பேசக் கூடாது. நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு பிரச்சனைகுறித்து பேசவே கூடாது என்றார்.

ஆனால், அவரை சபாநாயகர் காளிமுத்து பேச விடவில்லை.

அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பழனிச்சாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் இந்தப்பிரச்சனையைக் கிளப்பினர். அவர்களையும் காளிமுத்து பேச அனுமதிக்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பா.ம.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும்ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

வெளியே வந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் பேசுகையில், அவையில் இல்லாத மத்தியஅமைச்சரைப் பற்றி முதல்வர் ஜெயலலிதா அவதூறகப் பேசினார். இது சட்டமன்ற விதிகளுக்கு முரணானது. இதைப்பற்றி கேள்வி கேட்கவே விடாமல் சபாநாகர் காளிமுத்து எதிர்க் கட்சிகளைத் தடுக்கிறார் என்றார்.

ஜி.கே.மணி கூறுகையில், ராணி மேரிக் கல்லூரி விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுவதே தவறானது. சட்டவிரோதமானது என்றார்.

நிருபர்களிடம் பழனிச்சாமி கூறுகையில், 110வது விதியின் கீழ் பேசுவதாகக் கூறிக் கொண்டு எதிர்க் கட்சிகளைத்திட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் ஜெயலலிதா என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X