மருத்துவ மாணவர்- அரசு பேச்சில் தீர்வு ஏற்படவில்லை: டாக்டர்கள் அதிரடி டிரான்ஸ்பர்
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் அரசுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில்போராட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக மாணவர்கள் உறுதிமொழி ஏதும் அளிக்கவில்லை.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதை எதிர்த்து கடந்த 3 வாரமாக மருத்துவ, பல் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவமனைடாக்டர்களும் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தலைமைச் செயலகத்தில் அரசுத் தரப்புக்கும்மாணவர் பிரதிநிகிகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அரசு சார்பில் நலத்துறை அமைச்சர்செம்மலை, நலத்துறைச் செயலார் கிரிஜா வைத்தியநாதன், மருத்துவக் கல்வி இயக்குனர் ரவீந்திரநாத் ஆகியோர்பங்கேற்றனர்.
மருத்துவ, பல் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் அமுத கலைஞன், துணைத் தலைவர்காரல் உள்ளிட்ட 11 பேர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே முதல்வர் ஜெயலலிதாவை ஹைதராபாத்துக்கு வழியனுப்பிவைப்பதற்காக அமைச்சர் செம்மலை பாதியில் வெளியே வந்தார். ஜெயலலிதாவை வழியனுப்பிவிட்டு செம்மலைமீண்டும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றார்.
கிட்டத்தட்ட 4 மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் பின்னர் வெளியே வந்த மாணவர் பிரதிநிதிகள்நிருபர்களிடம் பேச மறுத்துவிட்டனர்.
ஆனால், அமைச்சர் செம்மலை நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:
பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி தரக் கூடாது என மாணவர்கள் திரும்பத்திரும்ப வலியுறுத்தினர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை துவங்க அனுமதிக்கும் அதிகாரம் மாநில அரசின் கையில் இல்லை என்பதைமாணவர்களிடம் தெளிவாக விளக்கி விட்டோம். தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தடுப்பது குறித்து இந்தியமருத்துவக் கவுன்சிலிடம் பேசவும் மாநில அரசு தயார். இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு மாணவர்களே கூடயோசனைகள் தரலாம். அவர்களது யோசனைகளை மருத்துவக் கவுன்சிலிடம் எடுத்துச் செல்ல அரசு தயாராகஉள்ளது.
அரசின் நிலை குறித்து மாணவர்களுடன் ஆலோசித்துவிட்டு பதில் சொல்வதாக மாணவர் பிரதிநிதிகள் கூறிவிட்டுச்சென்றனர். இனி போராட்டத்தைத் தொடர்வதும் கைவிடுவதும் அவர்கள் கையில் தான் உள்ளது.
இன்னொரு சுற்று பேச்சுவார்த்தைக்கு அவசியமே இல்லாத வகையில் அரசு தனது நிலையை மிகத் தெளிவாகமாணவர்களிடம் விளக்கிவிட்டது.
டாக்டர்கள் போராட்டம் குறித்து அரசுடன் மாணவர்கள் ஏதும் பேசவில்லை. டாக்டர்கள் சங்க நிர்வாகிகளை இடம்மாற்றியதை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எதையும் அவர்கள் முன் வைக்கவில்லை. அது வேறுவிஷயம். இது வேறு விஷயம் என்றார் செம்மலை.
அமைச்சர் செம்மலையுடன் மாணவர் பிரதிநிதிகள் நடத்தியுள்ள இரண்டாவது பேச்சுவார்த்தை இது என்பதுகுறிப்பிடத்தக்கது. முதலில் நடத்தப்பட்ட பேச்சு தோல்வியடைந்துவிட்டது. இப்போதையே பேச்சில் முடிவு ஏதும்ஏற்படவில்லை.
அதிரடி டிரான்ஸ்பர்:
இதற்கிடையே, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக ஸ்டிரைக் நடத்திய தமிழ்நாடு அரசு டாக்டர்கள்சங்கத்தின் தலைவர் டாக்டர் பிரகாசம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் 15 பேர் அதிரடியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பிரகாசம், உடனடியாக சென்னையில் உள்ளமருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் சேர வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல,டாக்டர் மோகன், டாக்டர் அசோக் குமார் (இருவரும் மாவட்ட துணைத் தலைவர்கள்), டாக்டர்ஞானசேகரன் (மாவட்டச் செயலாளர்) உள்ளிட்ட 5 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்களுக்குஇடையூறு ஏற்படுத்தியதாலும், பிற டாக்டர்களை பணிக்கு வர விடாமல் தடுத்ததாகவும் கூறி இவர்கள் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது.
மீண்டும் ஸ்டிரைக்:
இடமாற்றம் தவிர விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இன்று தனது தோழி சசிகலாவுடன்ஹைதராபாத் புறப்படும் முதல்வர் ஜெயலலிதா இதற்கான உத்தரவை நேற்றிரவில் பிறப்பித்தார்.
மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய அரசு மருத்துவர்கள் மக்கள் நலன் கருதி தங்களது ஊசிபோடா போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த டிரான்ஸ்பர்கள் செய்யப்பட்டுள்ளன.இதனால் டாக்டர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கும் என்று தெரிகிறது.
இது குறித்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் டாக்டர் பிரகாசம் தலைமையில் நாளை கூட உள்ளது.இதில் போராட்டம் குறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக மாணவர்கள், டாக்டர்கள் போராட்டம் நடந்து கொண்டுள்ளநிலையில் காஞ்சிபுரம் அருகே ஒரு கல்லூரி தொடங்க மாநில அரசின் அனுமதியுடன் மத்திய அரசு அனுமதிதந்துள்ளது.


